5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 16 telangana elections brs party anti incumbency worries
மோகன ரூபன்
ஐந்து மாநில சட்டமன்றத்தேர்தல் அரிபரியாக இருக்கும் இந்த நேரத்தில், தேர்தலை சந்திக்க தெம்பாகத் தயாராகி வருகிறது தெலங்கானா மாநிலம். வரும் 30-ஆம் தேதி அங்கே ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.
தெலங்கானா மாநிலம் தோன்றியது முதலே, அங்கு முதல்வர் சந்திரசேகர் ராவின் ஆட்சிதான். இருமுறை ஆட்சியைக் கைப்பற்றிய முதல்வர் சந்திரசேகர் ராவின், பாரத ராஷ்ட்டிர சமிதி இந்தமுறை ஹாட் டிரிக் அடிக்கும் ஆர்வத்துடன் இருக்கிறது.
119 தொகுதிகள் கொண்ட தெலங்கானா தேர்தலில், பி.ஆர்.எஸ் எனப்படும் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தான் நேரடிப் போட்டியே. 79 தொகுதிகளில் பி.ஆர்.எஸ் – காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையில் இரு முனைப் போட்டி நிலவுகிறது.
பாரதிய ஜனதா, 8 தொகுதிகளை நடிகர் பவ கல்யாண் தலைமையிலான ஜன சேனாவுக்கு ஒதுக்கிவிட்டு, 111 இடங்களில் போட்டியிடுகிறது. பகுஜன் சமாஜ் கட்சி 107 தொகுதிகளிலும், மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி 19 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. ஓவைசியின் மஜ்லிஸ் கட்சி 9 இடங்களில் மல்லுகட்டுகிறது.
தெலங்கானாவில் இருமுனைப் போட்டிதான் என்றாலும், வட தெலங்கானா, ஐதராபாத், அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் பாரதிய ஜனதா பலமாகக் காட்சி அளிக்கிறது. நிஜாமாபாத், கரீம்நகர், அடிலாபாத், கிரேட்டர் ஐதராபாத், மகபூப் நகர், வாரங்கல் போன்ற பகுதிகளில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகம் இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலத்தையொட்டி, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் இந்தப் பகுதிகளில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு அதிகம் இருப்பது ஒரு நகை முரண். குறிப்பாக, ரங்காரெட்டி தொகுதியில் 12% முஸ்லீம்களும், அடிலாபாத்தில் 10% முஸ்லீம்களும் உள்ளனர்.
ஆக, வட தெலங்கானா, ஐதராபாத் பகுதிகளில் மும்முனைப் போட்டி நிலவுகிறது. அதாவது, தெலங்கானாவில் மூன்றில் ஒரு பகுதியில் மும்முனைப் போட்டி.
தெலங்கானா முதல்வரும் பி.ஆர்.எஸ். கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ், இரண்டு தொகுதிகளில் போட்டியிடுவது தெரிந்ததே.
கஜ்வேல் தொகுதியில், முதல்வர் கே.சி.ஆரை எதிர்த்து களம் இறங்கியிருக்கும் எடேலா ராஜேந்தர், அசுராபாத் தொகுதியின் நடப்பு எம்.ஏல்.ஏ. தற்போது அதே தொகுதியிலும் அவர் போட்டியிடுகிறார்.
முதல்வர் கே.சி.ஆர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான காமரெட்டியில், அவரை எதிர்த்து மல்லுகட்டுபவர், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவரான ரேவந்த் ரெட்டி. போதாக்குறைக்கு பாரதிய ஜனதா சார்பாக நிற்கும் கட்டிப்பள்ளி வெங்கடரமண ரெட்டியும் கூட வலுவான வேட்பாளர் தான். ஆக முதல்வர் போட்டியிடும் ஒரு தொகுதியில் கூட கிட்டத்தட்ட மும்முனைப் போட்டிதான்.
அனல் பறக்கும் பிரச்சாரம்
தெலங்கானா தேர்தலைப் பொறுத்தவரை பி.ஆர்.எஸ் கட்சியும், ஓவைசியின் மஜ்லிஸ் கட்சியும், ககூட்ஸ் எனப்படும் ரகசியப் பங்காளிகள் என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இவர்கள் இருவரையும் பாரதிய ஜனதா மறைமுகமாக ஆட்டி வைப்பதாகவும் கூட குற்றச்சாட்டு உண்டு.
மாறாக, ‘காங்கிரஸ் கட்சி, பி.ஆர்.எஸ். கட்சியின் சி டீம்’ என்ற குற்றச்சாட்டை பாரதிய ஜனதா முன்வைத்து வருகிறது. ஆக, தெலங்கானாவில் யார் உண்மையில் யாருடன் உறவு என்பது தொலைக்காட்சிகளில் வரும் குடும்பத் தொடர்களை விட மிகவும் குழப்பமானது.
தெலங்கானா தேர்தல் பரப்புரையின் போது காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி வாத்ரா, ‘தெலங்கானாவில் பி.ஆர்.எஸ். கட்சிக்கு ஆதரவு அளிக்கும் ஓவைசி கட்சி ஏன் 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது? (அங்கும் ஆதரவு வழங்க வேண்டியது தானே?)’ என்று கேட்டிருக்கிறார்.
‘காலேஸ்வரம் பாசனத் திட்டத்தில் ஊழல், முறைகேடு என்றால் பி.ஆர்.எஸ் கட்சிக்காரர்களின் வீடுகளில்தானே அமலாக்கத் துறை சோதனை நடத்த வேண்டும்? ஏன் காங்கிரஸ் கட்சிக்காரர்களின் வீடுகளில் சோதனை நடக்கிறது?’ என்றும் பிரியங்கா கேட்டிருக்கிறார்.
‘பா.ஜக.வின் நட்சத்திர பிரச்சார பீரங்கியே அமலாக்கத் துறைதான்’ என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஏற்கெனவே இதுபற்றி ஒருமுறை குத்தலாகப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்கானா தேர்தல் பிரசாரத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஓர் அதிரடியைக் கொடுத்திருக்கிறார்.
‘பி.ஆர்.எஸ் கட்சியின் சின்னம் கார். ஆனால் அந்த காரின் ஸ்டீரிங் வீல் ஓவைசியின் கைகளில் தான் இருக்கிறது. தெலங்கானாவில் பரம்பரை அரசியல் தலைவிரித்தாடுகிறது. 2ஜி என்பது முதல்வர் கே.சி.ஆர் அவரது மகன், மகளும். 3ஜி என்பது ஓவையின் தாத்தா, அப்பா, ஓவைசியைக் குறிக்கிறது. 4ஜி என்பது நேரு, இந்திரா, ராஜீவ், ராகுல்’ என்று கிண்டல் செய்திருக்கிறார் அமித்ஷா.
தெலங்கானா முதல்வர் கே.சி.ஆர். அவர் பங்குக்கு தேர்தல் பரப்புரையில்,‘ தெலங்கானாவில் ஒரு மருத்துவக் கல்லூரிக்கு கூட பா.ஜ.க அனுமதி தரவில்லை.. பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதும் ஒன்றுதான், அந்த வாக்கை சாக்கடையில் போடுவதும் ஒன்றுதான்’ என்றிருக்கிறார்.
‘இந்திராம்மா ராஜ்ஜியம் (இந்திரா காந்தி ஆட்சி) நடந்தபோது தெலங்கானாவில் பசி, பஞ்சம், பட்டினி, ஊழல், நக்சல், கொலை, கொள்ளை, என்கவுண்டர் என இருந்தது. பி.ஆர்.எஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தெலங்கானாவில் மின்சாரம் இருக்காது.
கரண்ட் கட் ஆகும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். தெலங்கானா தனிமாநிலம் உருவானபோது அது மின்சாரம் இல்லாத மாநிலம் என்று சீமாந்திரா தலைவர்கள் குறை கூறினார்கள். அந்த சீமாந்திரா தலைவர்கள் போலத்தான் இப்போது இவர்கள் பேசுகிறார்கள்’ என கே.சி.ஆர் கூறியிருந்தார்.
பாரதிய ஜனதா தெலங்கானாவில் ஆட்சிக்கு வந்தால் ஓ.பி.சி ஒருவரை முதல்வராக்குவோம் என்கிறார்கள். ஓ.பி.சி கணக்கெடுப்பு நடத்தவே தயாராக இல்லாத இவர்கள் எப்படி ஓர் ஓ.பி.சி.யை முதல்வராக்குவார்கள்? பாரதிய ஜனதா ஆளும் 10 மாநிலங்களில் ஒரேயொரு ஓ.பி.சி முதல்வர் தான் இருக்கிறார்’ என்றும் கே.சி.ஆர் பேசியிருக்கிறார்.
‘பி.ஆர்.எஸ் ஆட்சிக்கு வந்தால் தலித் பந்து, ரிது பந்து, 24 மணிநேர மின்சாரம், குடிநீர் விநியோகம் எல்லாம் தொடரும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.
முஸ்லீம் வாக்கு வங்கியை குறிவைக்கும் கட்சிகள்
சரி. இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். ‘தெலங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால், இஸ்லாமியர்களுக்கான, மதரீதியிலான 4 சதவிகித இடஒதுக் கீட்டை ரத்து செய்வோம். அதை எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சிக்குப் பகிர்ந்து அளிப்போம்’ என்று அமித்ஷா அவரது தேர்தல் பரப்புரையில் அறைகூவல் விடுத்தார். அந்த அறைகூவலின் பரபரப்பு இன்னும் அடங்கவில்லை.
தெலங்கானாவில் 1961ஆம் ஆண்டு கணக்கின்படி மக்கள் தொகை 1.27 கோடி. அதில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 13 லட்சம். 2011ல் தெலங்கானா மக்கள் தொகை 3.50 கோடி. இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 44 லட்சம் (12.68 சதவிகிதம்)
தெலங்கானா மாநிலம் உருவான காலம் தொட்டு 9 ஆண்டுகாலமாக முஸ்லீம்கள் 10 முதல் 12 சதவிகித இடஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறார்கள். 2014 தேர்தலில், ‘பி.ஆர்.எஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம்களுக்கு 12% இட ஒதுக்கீடு’ என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் அறிவித்தார். ஆனால், அந்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவே இல்லை.
2017-ல் முஸ்லீம்களின் இடஒதுக்கீட்டுக்கான சட்டமுன்வரைவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. நடப்பு சட்டமன்றத் தேர்தலில் பி.ஆர்.எஸ் கட்சியினர் மறந்து விட்டார்களோ என்னவோ? அவர்களது தேர்தல் வாக்குறுதியில் முஸ்லீம்களின் இட ஒதுக்கீடு என்ற அம்சமே இல்லை.
இதனால் கடுப்பாகிப்போன தெலங்கானா முஸ்லீம் அமைப்புகளின் கூட்டு நடவடிக்கைக் குழு, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இது ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்குப் பின்னடைவாகவும், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வாய்ப்பாகவும் கருதப்படுகிறது.
தெலங்கானா தேர்தலில் கூட இந்தமுறை பி.ஆர்.எஸ் கட்சி வெறும் 3 முஸ்லீம்களைத் தான் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அசாரூதீன் உள்பட 6 முஸ்லீம்களை நிறுத்தியுள்ளது. ஓவைசியின் மஜ்லீஸ் கட்சியின் 9 வேட்பாளர்களில், 8 பேர் முஸ்லீம்கள்.
நெருக்கடியில் கே.சி.ஆர் telangana elections brs party anti incumbency worries
அது என்னவோ தெரியவில்லை? 2018 தேர்தலில் 88 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்த பி.ஆர்.எஸ்.கட்சி இந்தமுறை பழைய பளபளப்பில் இல்லை.
40 ஆயிரம் கோடி காலேசுவரம் பாசனத்திட்ட ஊழல், மிஷன் காகத்தியா போலி பில்கள், ரிங் ரோடு குத்தகை மோசடி, மியாபூர் நிலப்பேர மோசடி என பல முறைகேடு புகார்களை ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி எதிர்கொண்டுள்ளது.
இதேவேளையில் தமிழகத்தின் திமுக கட்சி, ‘தெலங்கானாவில் காங்கிரஸ் வெற்றிக்கு உறுதுணையாக இருப்போம்’ என ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் வெற்றி வாய்ப்பு தெலங்கானாவில் பிரகாசமாக இருப்பதாகத் தெரிகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்று, காங்கிரசுக்கு 69 முதல் 72 இடங்கள், பி.ஆர்.எஸ் கட்சிக்கு 36 முதல் 39 இடங்கள், ஓவையிசின் மஜ்லிஸ் கட்சிக்கு 5 முதல் 6 இடங்கள், பாரதிய ஜனதாவுக்கு 2 முதல் 3 இடங்கள் எனக் கணித்திருக்கிறது.
சதவிகிதக் கணக்கின்படி காங்கிரசுக்கு 43 முதல் 46%, பி.ஆர்.எஸ் கட்சிக்கு 38 முதல் 41%, பாரதிய ஜனதாவுக்கு 7 முதல் 10%, ஓவையிசின் மஜ்லிஸ் கட்சிக்கு 4 முதல் 6% என மற்றொரு கருத்துக்கணிப்பு கூறுகிறது.
தேர்தல் நெருங்கி வரும்நிலையில் தெலங்கானா மக்கள் தரப்போகும் தீர்ப்பு என்ன? தீராத ஆர்வத்துடன் காத்திருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
ஓட்டுக் கேட்ட ஆளுநர்… சிறுகட்சிகள் கையில் லகான்! க்ளைமேக்ஸை நோக்கி ராஜஸ்தான்-15
பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா -14
மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? 13
ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்! 12
கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11
மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10
ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9
சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8
மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6
மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5
தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!-1