பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா

அரசியல் சிறப்புக் கட்டுரை

5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 14 BJP plans to make Telangana a political laboratory

மோகன ரூபன் 

தேர்தல் பரபரப்பில் ஆடும் தெலங்கானா

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் மிசோரம், சத்தீஷ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களில் வாக்குப்பதிவு நடந்து முடிந்து விட்டது. ஆக, இப்போது எஞ்சியிருப்பவை இரண்டே மாநிலங்கள்தான். ஒன்று. ராஜஸ்தான். இன்னொன்று தெலங்கானா.

ராஜஸ்தான் வரும் 25-ஆம்தேதியும், தெலங்கானா வரும் 30-ஆம்தேதியும் தேர்தலைச் சந்திக்கின்றன.

தெலங்கானாவில் தேர்தல் பரப்புரை திமிலோகப்பட்டு வருகிறது. தெலங்கானாவில் மொத்தம் உள்ள 119 தொகுதிகளில் ஆளும் பாரத ராஷ்ட்டிரிய சமிதி அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

காங்கிரஸ் கட்சி கோத்தாகோடா என்ற ஒரேயொரு தொகுதியை மட்டும் சி.பி.ஐ.க்கு ஒதுக்கிவிட்டு, மீதமுள்ள 118 தொகுதிகளில் போட்டிபோடுகிறது.

பாரதிய ஜனதா, 9 தொகுதிகளை ஜன சேனா (ஜே.எஸ்.பி.) கட்சிக்கு ஒதுக்கி விட்டு 111 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது.

ஓவைசியின் அனைத்திந்திய மஜ்லிஸ்-இ-இதேஹாதுல் முஸ்லிமீன் கட்சி 9 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மற்ற தொகுதிகளில் அது ஆளும் பி.ஆர்.எஸ். கட்சிக்கு ஆதரவு என அறிவித்திருக்கிறது.

தெலங்கானாவின் 119 தொகுதிகளிலும், மொத்தம் 4,798 வேட்பாளர்கள் நிற்கிறார்கள். முதல்வர் சந்திரசேகர் ராவ் போட்டியிடும் கஜ்வேல், காமரெட்டி என்ற 2 தொகுதிகளிலும் அதிக அளவில் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அங்கே கடும் போட்டி நிலவுகிறது.

தெலங்கானாவில் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி. சில இடங்களில் மும்முனைப்போட்டி நிலவுகிறது. தேர்தல் வெற்றிக்குத் தடையாக நின்ற போட்டி வேட்பாளர்கள் பலரை பி.ஆர்.எஸ், காங்கிரஸ் ஆகிய இரு கட்சியினரும், மிகத்திறமையாக களத்தில் இருந்து விலகச் செய்திருக்கிறார்கள்.

‘தெலங்கானாவில் இப்போது நடந்து வரும் சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, வரப்போகும் 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் பி.ஆர்.எஸ் கட்சி கூட்டணி சேராது’ என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், அழுத்தம் திருத்தமாக அறிவித்து விட்டார்.

அடிலாபாத், நரசாபூர் பகுதிகளில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில், ‘வாக்காளர்களே உங்களுக்கு ரிது பந்து (பி.ஆர்.எஸ். கட்சியின் விவசாய நண்பன் திட்டம்) வேண்டுமா? அல்லது ராபந்துஸ் (கழுகுகள்) வேண்டுமா? ‘என்று அவர் கேட்டது அருமை.

சரி. இப்போது தெலங்கானாவின் லேட்டஸ்ட் திருப்பங்களுக்கு வருவோம். நடிகை விஜயசாந்தி பலரும் எதிர்பார்த்தபடியே பாரதிய ஜனதாவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்து விட்டார். அதுபோல காங்கிரஸ் கட்சி, அருமையான சில தேர்தல் வாக்குறுதிகளை தெலங்கானாவில் தெறிக்க விட்டிருக்கிறது.

‘புதிதாக திருமணம் முடிக்கும் பெண்களுக்கு 10 கிராம் தங்கம் கூடவே ஒரு லட்சம் ரூபாய் பணம், தகுதியான பெண்களுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர், விவசாயப் பணிகளுக்கு 24 மணிநேர இலவச மின்சாரம், தெலங்கானா தியாகிகளுக்கு மாதம் 25 ஆயிரம் ஓய்வூதியம், 2 லட்சம் அரசு காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும், பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும், பிரஜா தர்பார், காலேசுவரம் பாசனத் திட்டத்தில் நடந்த குளறுபடிகளை விசாரணை செய்ய உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவரின் தலைமையில் ஆணையம்.. இந்த மாதிரி போகிறது  காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள்.

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கனி பறிக்க உதவியாக இருந்தது தேர்தல் வாக்குறுதிகள்தான். இந்தமுறை தெலங்கானாவிலும் அந்த தேர்தல் வாக்குறுதி செப்படி வித்தை செல்லுபடியாகும் என்று காங்கிரஸ் நம்புகிறது.

அதேப்போல, தெலங்கானாவில் ஐதராபாத் நகரம் உள்பட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சி வைத்த பதாகைகள் ஒருபக்கம் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறன.

கே.சி.ஆர் என அழைக்கப்படும் முதல்வர் சந்திரசேகர் ராவ், மஜ்லிஸ் கட்சியின் தலைவரான ஓவைசி ஆகிய இருவரும் பாரதிய ஜனதாவின் கைப்பாவைகள் என சித்தரிக்கிற பதாகைகள் அவை. கே.சி.ஆர், ஓவைசி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் கைகளில் நூல் பாவைகளாக ஆடுவதுபோல அந்த பதாகைகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓவைசியைப் பொறுத்தவரை பாரதிய ஜனதாவுடன் அவருக்கு ஒரு மறைமுக புரிதல் உண்டு என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. இந்தநிலையில் முதல்வர் கே.சி.ஆரும் இந்தக்குற்றச்சாட்டில் இணைக்கப்பட்டிருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி இப்படி கே.சி.ஆர், ஓவைசி மீது குற்றச்சாட்டை முன்  வைத்திருக்கும் நிலையில், ‘காங்கிரஸ் கட்சி, பி.ஆர்.எஸ்.சின் சி டீம்’ என்ற குற்றச்சாட்டை பாரதிய ஜனதா முன்வைத்து வருகிறது.

இதனிடையே, கர்நாடகத் தேர்தலில் வெற்றி வாய்ப்பை பறிகொடுத்து விட்ட பாரதிய ஜனதா ‘மிஷன் சவுத்’ என்ற தனது தெற்குத் திட்டத்தின்படி, தெலங்கானாவில் இந்தமுறை வெற்றி பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது. அதற்காக பாரதிய ஜனதா கையில் எடுத்திருக்கும் ஆயுதம் ஓ.பி.சி.+ தலித்துகள் என்ற ஆயுதம்.

தெலங்கானாவில் இதர பிற்பட்ட மக்களின் எண்ணிக்கை 51 சதவிகிதம் . தலித்துகளின் எண்ணிக்கை 17 சதவிகிதம். இந்த இரண்டு சமூகங்களையும் சேர்த்தால் மொத்தம் 68 சதவிகிதம். தெலங்கானாவை அரசியல் ஆய்வகமாக்கி, இந்த இரண்டு சமூகங்களையும் வைத்து சடுகுடு ஆட பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு கட்டமாக, ‘பி.ஆர்.எஸ்., காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே ஓ.பி.சி.களுக்கு எதிரானவை’ என  பா.ஜ.க சித்தரித்து வருகிறது. ‘பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் ஓ.பி.சி. பிரிவைச் சேர்ந்த ஒருவரை முதல்வர் ஆக்குவோம், நாடு தழுவிய விதத்தில் ஓ.பி.சி. கணக்கெடுப்பு நடத்துவோம், காங்கிரஸ் கட்சி வெறும் 23 ஓ.பி.சி. வேட்பாளர்களைத்தான் நிறுத்தியுள்ளது’  இந்தமாதிரியான பரப்புரையை பாரதிய ஜனதா முன்னெடுத்து வருகிறது.

தெலங்கானா தலித்துகளில் 60 சதவிகிதம் பேர் மாதிகா என்ற பிரிவினர். தெலங்கானாவின் மொத்த மக்கள் தொகையில் இவர்கள் 12 சதவிகிதம். தெலங்கானாவின் 24 சட்டமன்றத் தொகுதிகளில் வெற்றி தோல்வியை முடிவு செய்யக்கூடியவர்கள் இந்த மாதிகா மக்கள் தான். இந்த மாதிகா மக்களின் மீது பா.ஜ.க தனிக்கவனம் செலுத்தி வருகிறது.

‘மாதிகா மக்கள் 30 ஆண்டுகாலமாக உள் ஒதுக்கீடு கேட்டு போராடி வருகிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மாதிகா மக்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்’ என்று  பாரதிய ஜனதா கூறிவருகிறது.

ஐதராபாத்தில் நடந்த பாரதிய ஜனதா தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, ‘மாதிகா மக்களை பட்டியலிடப்பட்ட வகுப்பினருக்குள் உட்பிரிவு செய்வது பற்றி பரிசீலிக்க குழு அமைப்போம்’ என அறிவிக்க, மேடையில் இருந்த மாதிகா இடஒதுக்கீட்டு போராட்ட சமிதியின் தலைவர் மந்த கிருஷ்ண மாதிகா, மேடையிலேயே கண்ணீர் விட்டு கசிந்துருகிய காட்சி பலரையும் கவர்ந்தது.

மாதிகா பிரச்சினையைக் கையில் எடுத்துள்ள பாரதிய ஜனதா கூடவே முதல்வர் சந்திரசேகர் ராவையும் சீண்டி வருகிறது.

‘2014ஆம் ஆண்டு தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி வெற்றி பெற்றால் தலித் முதல்வர் என கே.சி.ஆர். அறிவித்தார். அது என்ன ஆச்சு? ஏன் தலித் முதல்வர் பதவியேற்க வில்லை? தலித்களுக்கு 3 ஏக்கர் நிலம் என்றாரே கே.சி.ஆர். அது என்ன ஆச்சு? கே.சி.ஆரின், தலித் பந்து திட்டம் அவருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் தானா?’ BJP plans to make Telangana a political laboratory

இப்படி கே.சி.ஆரையும் அவரது பி.ஆர்.எஸ். கட்சியையும் சீண்டி உள்ளது பாரதிய ஜனதா.

பதிலுக்கு பி.ஆர்.எஸ். கட்சி, ‘மாதிகா மக்கள் மீது அவ்வளவு அன்பிருந்தால் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மாதிகா மக்களுக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் நிறைவேற்றுங்களேன்’ என்கிறது. தெலங்கானா தேர்தல் களம் இப்படி பரபரப்பாக போய்க் கொண்டு இருக்கிறது.

நவம்பர் 30ஆம்தேதி வாக்குப்பதிவு என்றநிலையில், தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் பரப்புரையின் இறுதிக்கட்டத்தில் ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா போன்றவர்களை களம் இறக்கிவிட காங்கிரஸ் தலைமை திட்டமிட்டுள்ளதாம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

BJP plans to make Telangana a political laboratory by Mohana Ruban

மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? 13

ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்! 12

கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11

மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9

சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8

மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5

தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு!  5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4

சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3

ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2

5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?  அலசல் மினி தொடர்!-1

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *