5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 10
மோகன ரூபன்
சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் ஒன்று மிசோரம். இந்த ஐந்து மாநிலங்களில் குட்டியூண்டு மாநிலம் மிசோரம்தான். மொத்தம் 40 சட்ட மன்றத் தொகுதிகள். Election situation climax report
நாளை (நவம்பர் 7) தேர்தலைச் சந்திக்கிறது இந்த வடகிழக்கு மாநிலம். மிசோரத்தில் ஐந்து முறை முதல்வராக இருந்தவர் லால் தன்ஃகாவ்லா. முதல்வர் பதவி வகித்த எண்ணிக்கையின் அடிப்படையில் சொல்ல வேண்டுமானால் மிசோரத்தின் கலைஞர் என்று சொல்லலாம். 81 வயதான அவரது பங்கேற்பு எதுவும் இல்லாமல் நடக்கப் போகும் முதல் தேர்தல் இது.
மும்முனைப் போட்டி!
மிசோரத்தின் ஆளும் கட்சி, மிசோரம் தேசிய முன்னணி (எம்.என்.எஃப்.). முதல்வர் சோரம் தங்கா. எதிர்க்கட்சி சோரம் மக்கள் இயக்கம். இதுபோக களத்தில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளும் இருக்கிறன. ஆனால் இந்த தேர்தலில் முதலில் சொன்ன மூன்று கட்சிகளுக்கும் இடையில்தான் போட்டி. அதாவது மும்முனைப் போட்டி!
எம்.என்.எஃப் கட்சி, பாரதிய ஜனதாவின் கூட்டணியில் இருந்தாலும், 23 தொகுதிகளில், இந்த இரு கட்சிகளும் நேருக்கு நேர் மோத இருக்கின்றன. ‘பாரதிய ஜனதா எங்களுக்கு எதிரியும் இல்லை. நண்பனும் இல்லை. பிரச்சினை அடிப்படை யில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு. அவ்வளவுதான்’ என்று முதல்வர் சோரம் தங்கா ஏற்கெனவே தெள்ளத்தெளிவாகக் கூறிவிட்டார்.
எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கம், இந்தமுறை ஏகப்பட்ட கனவுகளுடன் களத்தில் இருக்கிறது. வெறும் ஐந்து வயது கட்சி இது. 79 வயதான முதல்வர் சோரம் தங்காவுக்கு எதிராக, லால்தூஹோமா என்ற 74 வயது முதல்வர் வேட்பாளரை சோரம் மக்கள் இயக்கம் நிறுத்தியுள்ளது.
லால்தூஹோமா முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி. இந்திரா காந்தியின் பாதுகாப்பு அதிகாரியாக இருந்தவர். கட்சித்தாவல் தடை சட்டத்தின்கீழ் நாட்டில் முதன்முறையாகப் பதவியை இழந்த ‘பெருமைக்குரிய’ எம்.பி. இவர்.
‘நாங்கள் இளமை துள்ளும் புதுமைக் கட்சி. எங்கள் கட்சியின் 40 வேட்பாளர்களில் 33 பேர் புதுமுகங்கள். காங்கிரஸ் கட்சியையும், எம்.என்.எஃப் கட்சியையும் மிசோரம் மக்கள், ஏற்கெனவே பரிசோதித்துப் பார்த்து விட்டார்கள். ஆகவே, இந்தமுறை எங்களுக்கே வாய்ப்பு. மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். நாங்களே மாற்று’ என்கிறார்கள் சோரம் மக்கள் இயக்கத்தினர்.
‘ஊழலற்ற அரசு’ என்பது சோரம் மக்கள் இயக்கத்தின் முழக்கம். மாற்றம் நடக்கும் என்று மிக உறுதியாக நம்புகிறது சோரம் மக்கள் இயக்கம்.
காங்கிரஸ் எச்சரிக்கை!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
மிசோரத்தில், இந்த இரு முன்னணிக் கட்சிகள் மீதும் கடும் காட்டத்தில் இருக்கிறது காங்கிரஸ்.
‘எம்என்எஃப், சோரம் மக்கள் இயக்கம் இரண்டுமே ஒருவகையில் பா.ஜ.க.வின் மறைமுக கூட்டணிக் கட்சிகள்தான். இந்த இரு கட்சிகளில் எந்தக் கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் அது பாஜகவின் மறைமுக ஆட்சி வந்ததற்கு சமம். மிசோரம் இன்னொரு மணிப்பூர் ஆகிவிடும்’ என்று எச்சரித்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
‘சோரம் மக்கள் இயக்கம் பா.ஜ.க.வுக்கான நுழைவுப்புள்ளி’ என்று ராகுல் காந்தி குற்றம் சாட்ட, ‘எம்.என்.எஃப், சோரம் மக்கள் இயக்கம் இரண்டும் பாரதிய ஜனதாவுக்கான நுழைவாயில்கள்தான். மிசோரம் வாக்காளர்களே! பரிசோதனை செய்ய இது நேரமில்லை’ என்று கூறியிருக்கிறார் சோனியா காந்தி.
பாஜகவுடன் மறைமுகக் கூட்டு?
இந்த குற்றச்சாட்டு குறித்து இரு கட்சிகளும் கூறுவது என்ன?
‘கிறிஸ்துவ மாநிலமான மிசோரத்தை, பாஜகவுடன் சேர்ந்து நான் இந்துத்துவ மாநிலமாக மாற்ற நினைக்கிறேன் என்பது பொய். நான் என்.டி.ஏ கூட்டணியின் நிறுவனர்களில் ஒருவன். அனைவருக்கும் ஒரே சட்டம் என்ற யூனிபார்ம் சிவில் கோடை எதிர்த்தவன் நான். என்னிடம் பா.ஜ.க அதன் செல்வாக்கை செலுத்த முடியாது’ என்றிருக்கிறார் முதல்வர் சோரம் தங்கா.
‘எங்கள் அடையாளத்தையும் சுதந்திரத்தையும் இழக்க மாட்டோம். டெல்லியில் இருந்து யாரும் எங்களை டிக்டேட் செய்ய முடியாது’ என்று கூறியிருக்கிறது சோரம் மக்கள் இயக்கம்.
மிசோரம் தேர்தலில் பாரதிய ஜனதாவும் அதிக நம்பிக்கையுடன் காத்திருக்கிறது. பாரதிய ஜனதாவைப் பொறுத்தவரை பாரதத் திருநாட்டில் அதன் கடைசி எல்லைப் புறமாக இருப்பது மிசோரம்தான். அங்கே காலூன்ற வேண்டும் என்ற கனா நீண்ட காலமாக பாரதிய ஜனதாவுக்கு இருக்கிறது. Election situation climax report
‘மிசோரம் மக்கள் எங்களது குடும்ப உறுப்பினர்களைப் போல. மிசோரத்தில் அதிக சாலைவழிகளை ஏற்படுத்தியவர்கள் நாங்கள்தான். ரயில்வே, மக்கள் நலம், விளையாட்டு தொடர்பாக பல உள்கட்டமைப்புகளை மிசோரத்தில் ஏற்படுத்தி இருக்கிறோம்” என்று நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மிசோரத்தில் மூன்று முன்னணி கட்சிகளும் 40 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள நிலையில், பாரதிய ஜனதா 23 இடங்களில் மட்டுமே வேட்பாளர் களை நிறுத்தியுள்ளது. அந்த 23 தொகுதிகளில் மட்டுமே தனிக்கவனம் செலுத்தி வெற்றிக்கனி பறிக்க பாரதிய ஜனதா திட்டமிட்டுள்ளது.
எதிர்க்கட்சியான சோரம் மக்கள் இயக்கத்துக்கு இந்தமுறை வாய்ப்பு உண்டு என்று கருதப்படும் நிலையில், முதல்வர் சோரம் தங்கா, ‘கிச்சடி கட்சி’ என்று சோரம் மக்கள் இயக்கத்தை கேலி செய்துள்ளார்.
‘2008 தேர்தலை விட வரும் தேர்தலில் அந்தக் கட்சிக்கு கொஞ்சம் அதிக இடம் கிடைக்குமா என்று பாருங்கள். அப்படி கிடைத்தால் அது செம அதிர்ஷ்டம்’ என்றிருக்கிறார் சோரம் தங்கா.
மிசோரம் சட்டமன்றத் தேர்தலில் மொத்தம் 174 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
மிசோரத்தில் மணிப்பூர் எதிரொலிக்குமா?
மிசோரத்தில் பெரும்பான்மையாக வாழும் மிசோ மக்களும், மணிப்பூரில் வாழும் குக்கிகளும், மியான்மர் நாட்டின் சின் மக்களும் ‘சோ’ என்ற ஓரே இனத்தைச் சேர்ந்தவர்கள். ‘இந்த சோ மக்களை பிரிட்டிஷ்காரர்கள் இந்தியா, மியான்மர் என்று இருநாடுகளில் பிரித்துவிட்டார்கள்.
பின்னர் பங்களாதேஷ் என மூன்றாவது நாட்டிலும் சோ மக்களினம் பிரிந்துவிட்டது’ என்பது மிசோரத்து மிசோ மக்களின் அங்கலாய்ப்பு.
‘எல்லை தாண்டி வாழும் மிசோ, குக்கி, சின் மக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டும்’ என்பது மிசோ மக்களின் கனவு. மிசோரத்தின் ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் ‘சோ ஒன்றிணைப்பு’ என்ற இந்த திட்டத்துக்கு ஆதரவாக உள்ளன.
மிசோரத்தில் மியான்மர் நாட்டைச் சேர்ந்த 33 ஆயிரம் சின் பழங்குடியின அகதிகள் உள்ளனர். இவர்கள் 2021 ஆண்டு பிப்ரவரி மாதம் மியான்மரில் நடந்த ராணுவப் புரட்சிக்குப்பின் ஓடிவந்தவர்கள். பங்களாதேஷில் இருந்து வந்த 800 குக்கி இன அகதிகளும் மிசோரத்தில் உள்ளனர்.
இவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் கடந்த செப்டம்பர் மாதத்துடன் நின்று போன நிலையில், 2 வேளை உணவு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி, இவற்றுக்காக ஏங்கி நிற்கிறார்கள் இந்த அகதிகள்.
மிசோரம் மாநில சட்டமன்றத் தேர்தலை முடிவை ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பவர்கள் மிசோரம் மக்கள் மட்டுமல்ல. இந்த அகதிகளும்தான்.
மிசோரத்தின் 40 தொகுதிகளும் நவம்பர் 7ஆம்தேதி ஒரே கட்டமாகத் தேர்தலைச் சந்திக்கின்றன. மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 42 ஆயிரத்து 88. வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 1,276.
வெற்றி யாருக்கு என்பது டிசம்பர் 3ஆம்தேதி தெரிந்துவிடும். Election situation climax report
(களத்தை இன்னும் வலம் வருவோம்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9
சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8
மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6
மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5
தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!-1