5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 13 Madhya Pradesh Election Survey 2023
மோகன ரூபன்
மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சௌகான். இவர் 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கி, இன்று வரை முதல்வராக நீடிக்கிறார். அதாவது 18 ஆண்டு காலமாக முதல்வர் (இடையில் ஒரு 15 மாத இடைவெளி மட்டும்) பாரதிய ஜனதாவின் வரலாற்றில் மிக நீண்ட கால முதல்வர் சிவராஜ்சிங் சௌகான்தான்.
முதல்வர் சிவராஜ்சிங் சௌகான், இந்தமுறையும் புத்னி தொகுதியில்தான் போட்டி யிடுகிறார். இது அவரது சொந்தத் தொகுதி. அவரது ஊரான ஜெய்ட் இந்த தொகுதியில்தான் இருக்கிறது. 2006ஆம் ஆண்டு முதல் சௌகானின் தொகுதி இதுதான். நான்கு முறை இங்கே அவர் வென்றிருக்கிறார். இப்போது ஐந்தாவது முறையாக போட்டி.
18 ஆண்டு கால முதல்வரா? முதல் முறையாக போட்டியிடும் நடிகரா?
சிவராஜ்சிங் சௌகானின் பாணியில் சொல்வதானால் புத்னி தொகுதி, அவரது ‘பிறப்பிடம், பணியிடம், புனித மண், தாய்நிலம்’.
புத்னி தொகுதியில் சௌகானுக்கு எதிராக நடிகர் விக்ரம் மஸ்தாலை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. விக்ரம் மஸ்தால், இராமாயண தொடரில் அனுமானாக நடித்தவர். அவருக்கும் இது சொந்த தொகுதிதான். ஆனால் மஸ்தால் சந்திக்கும் முதல் தேர்தல் இது.
புத்னி தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மிர்ச்சி பாபா (மிளகாய் சாமியார்) எனப்படும் வைராக்கியானந்த் கிரி போட்டியிடுகிறார். இவர் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
தற்போது நடந்து வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா புது மாதிரியான வியூகம் ஒன்றை கடைப்பிடித்து வருகிறது. அதாவது, அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் அறிவிக்காமல் பா.ஜ.க களமிறங்கி உள்ளது.
அதன்படி மத்திய பிரதேசத்திலும், சிவராஜ்சிங் சௌகான், பா.ஜ.க.வின் அதிகார பூர்வ முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதே வேளை யில் காங்கிரஸ் கட்சி, கமல்நாத்தை அதிகாரபூர்வ முதல்வர் வேட்பாளராக அறிவித்து களத்தில் இறக்கியுள்ளது.
முதல்வர் வேட்பாளராக ஜோதிராதித்யா சிந்தியா- தயங்கும் பாஜக
பாரதிய ஜனதா சார்பில் சிவராஜ்சிங் சௌகானுக்கு பதிலாக, ஜோதிராதித்ய சிந்தியாவை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கலாம் என்ற கருத்தும் இருந்தது. ஆனால், இரண்டு காரணங்களுக்காக பா.ஜ.க.வுக்கு இதில் தயக்கம் இருக்கிறது. 1. ஜோதிராதித்ய சிந்தியா வயதில் மிகவும் இளையவர். 2. அவர் அண்மையில்தான் காங்கிரஸ் கட்சியில் இருந்து பா.ஜ.க.வுக்கு வந்தவர்.
பாஜக தோற்பதற்கான அறிகுறி-கமல் நாத்
காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளரான கமல்நாத், தலைநகர் போபாலில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிந்த்வாரா தொகுதியில் போட்டி யிடுகிறார். இந்தமுறை மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க தோற்று, காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்பதில் கமல்நாத் மிக உறுதியாக இருக்கிறார்.
’அரசியலில் எனக்கு 45 ஆண்டுகால அனுபவம். அந்த அனுபவத்தை வைத்து சொல்கிறேன். மத்திய பிரதேசத்தில் இந்தமுறை ஆட்சி மாற்றம் நடக்கும். பா.ஜ.க பெரிய அளவில் தோல்வியைச் சந்திக்கும்.
மகளிருக்கு மாதம் 1,500 ரூபாய் வழங்கும், லட்லி பெஹ்னா (அன்பு சகோதரி) என்ற திட்டத்தை பா.ஜ.க. அறிவித்துள்ளது. ஏன்? 18 ஆண்டுகாலம் சிவராஜ்சிங் சௌகான் முதல்வராக இருந்தபோது இந்த அன்பு சகோதரிகள் மேல் அவருக்கு அக்கறை இல்லையா?
சிவராஜ்சிங் சௌகான் டெலிவிஷனை நம்புகிறார். நான் ‘விஷனை’ நம்புகிறேன். பா.ஜ.க ஆட்சி 50 சதவிகித கமிஷன் ஆட்சி. வியாபம் உள்பட ஏகப்பட்ட ஊழல்கள் இந்த அரசு மீது இருக்கிறது.
இது மாநிலத் தேர்தல். இதில், ஏகப்பட்ட எம்.பி.க்களை பாரதிய ஜனதா இறக்கி விட்டிருக்கிறது. தேர்தல் தொடங்கும் முன்பே பா.ஜ.க தோற்றுவிட்டது என்பதற்கான அறிகுறி இது.
இந்த தேர்தலில் இந்து என்ற அடையாளத்தை நான் அதிகமாகப் பயன்படுத்துவதாக பா.ஜ.க குற்றம் சாட்டுகிறது. 14 ஆண்டுகளுக்கு முன்பே 101 அடி உயர அனுமார் சிலையை வைத்தவன் நான். அப்போதெல்லாம் எந்தப் பிரச்சினையும் வரவில்லையே. நான் இந்து என்று பாரதிய ஜனதா ஒன்றும் எனக்கு சான்றிதழ் தரத் தேவையில்லை’ இப்படி கூறியிருக்கிறார் கமல்நாத்.
மத்திய பிரதேசத்தில் 3 மத்திய அமைச்சர்கள் உள்பட 7 எம்.பி.க்களை பாரதிய ஜனதா தேர்தல் களத்தில் இறக்கிவிட்டுள்ளது. பாரதிய ஜனதாவின் தேசியப் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜவர்கியாவும் களமிறக்கி விடப்பட்டுள்ளார்.
பிரியும் வாக்குகள்
மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பிரகலாத் படேல், பக்கன்சிங் குலாஸ்தே போன்றவர்கள் மத்திய பிரதேசத்தில் போட்டியிவதால் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று பாரதிய ஜனதா கருதுகிறது. Madhya Pradesh Election Survey 2023
நரேந்திரசிங் தோமர், திமானி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கே 80 ஆயிரம் தோமர் ராஜ்புத் வாக்குகள் உள்ளன. அதேவேளையில் காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தோமர், ஆம்ஆத்மி வேட்பாளர் சுரேந்திர தோமர் ஆகியோர் வாக்குகளைப் பிரிப்பார்கள் என கருதப்படுகிறது. போதாக்குறைக்கு 20 ஆயிரம் தலித் வாக்கு களை பகுஜன் சமாஜ் கட்சி சார்பாகப் போட்டியிடும் முன்னாள் எம்.எல்.ஏ பல்பீர் பிரிக்க இருக்கிறார்.
மத்திய பிரதேசத்தில் குவாலியர்-சம்பல், மகோகோசல் பகுதிகள் பாரதிய ஜனதாவின் பலவீன பகுதிகள். இங்கே உள்ள 78 தொகுதிகளில் 46 தொகுதிகள் பாரதிய ஜனதா தோற்ற தொகுதிகள். ஆகவே, இந்தமுறை இந்த இருபகுதிகளிலும் பாரதிய ஜனதா அதிக கவனம் செலுத்தி வருகிறது.
மகாராஷ்டிர எல்லையில் உள்ள மாள்வா பகுதியின் இதயம் போல இருக்கும் நகரம் இந்தூர். இது மாள்வா பகுதியின் தலைநகரம் மட்டுமின்றி, மத்திய பிரதேசத்தின் பெரிய வணிக மையமும் கூட. மாள்வா பகுதியில் மொத்தம் 66 தொகுதிகள் உள்ளன. கடந்த 2018 தேர்தலில், பாரதிய ஜனதா இங்கே 33 தொகுதிகளிலும், காங்கிரஸ் 30 தொகுதிகளிலும் வென்றுள்ளது.
சாகர் பகுதியில் மொத்தம் 8 தொகுதிகள். முன்பு இது காங்கிரஸ் கோட்டை. இப்போது இது பா.ஜ.க.வின் செல்வாக்குப் பகுதி.
மூன்றாவது பெரிய கட்சியாக வருமா சமாஜ்வாதி?
மத்திய பிரதேசத்தில், இந்தியாவின் இருபெரும் கட்சிகள் மல்லுக்கட்டும் நேரத்தில், இந்தமுறை அந்த மாநிலத்தில் வலுவாக கால் ஊன்ற நினைக்கும் கட்சிகளில் ஒன்று சமாஜ்வாதி. 2003ஆம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் 7 தொகுதிகளில் வென்றதுதான் சமாஜ்வாதியின் உச்சபட்ச வெற்றி.
2018ஆம் ஆண்டு தேர்தலில் 3 சதவிகித ஓட்டு வாங்கிய கட்சி அது. இந்தமுறை காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடத்தான் சமாஜ்வாதி விரும்பியது. ஆனால், காங்கிரஸ் அதை விரும்பவில்லை. ஆகவே தனித்துப் போட்டியிடுகிறது சமாஜ்வாதி.
உத்தரபிரதேச மாநிலத்தையொட்டியுள்ள பண்டல்காண்ட், விந்தியா, பிண்ட், சம்பல் பகுதிகளில் சமாஜ்வாதிக்கு வாக்குகள் அதிகம். நடப்பு சட்டமன்றத் தேர்தலில் மத்திய பிரதேசத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக வேண்டும் என்ற முனைப்புடன் பரப்புரை செய்து வருகிறது சமாஜ்வாதி.
பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்
மத்திய பிரதேச தேர்தலில், 96 பக்க தேர்தல் அறிக்கையை பாரதிய ஜனதா வெளியிட்டுள்ளது. அதில் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள்.
‘வீட்டில் ஒருவருக்கு வேலை, முதியவர்களுக்கு 1,500 ரூபாய் ஓய்வூதியம், பெண்களுக்கு இலவச கல்வி, 1.36 கோடி பெண்களுக்கு மாதம் ரூ.1250, ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,100, ஒரு குவிண்டால் கோதுமைக்கு ரூ. 2,700, பதின்மூன்று மில்லியன் மக்களுக்கு பக்கா வீடுகள், ரூ.450 விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்..’ இப்படிப் போகிறது பா.ஜ.க.வின் தேர்தல் வாக்குறுதிகள்.
மத்திய பிரதேசத்துக்கு மூன்று தீபாவளி
நவம்பர் 17 ஆம் தேதியான இன்று ஒரே கட்டமாகத் தேர்தலைச் சந்திக்கிறது மத்திய பிரதேசம். மத்திய பிரதேசத்துக்கு இந்தமுறை மூன்று தீபாவளி என்றிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஒன்று ஒரிஜினல் தீபாவளி, இரண்டாவது டிசம்பர் 3ஆம்தேதி வாக்கு எண்ணிக்கைக்குப்பின் மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க. அடையப் போகும் வெற்றி. மூன்று ஜனவரி 22ஆம்தேதி நடக்கப்போகும் ராமர்கோயில் பிரதிஷ்டை. Madhya Pradesh Election Survey 2023
மத்திய பிரதேசத்துக்கு மூன்று தீபாவளிகளா? இல்லை 2 தீபாவளிகள்தானா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்! 12
கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11
மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10
ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9
சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8
மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6
மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5
தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!-1