2024 ஐபிஎல் தொடரில் ‘வாழ்வா? சாவா? என்ற ஒரு ஆட்டத்தில், மே 18 அன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதிக்கொண்டன.
பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ஆர்.சி.பி அணி, பிளே-ஆஃப் செல்ல சி.எஸ்.கே-வை 18 அல்லது அதற்கும் அதிகமான ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியது.
கோலி, டு பிளசிஸ், கேமரூன் கிரீன் ஆகியோர் அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 218 ரன்கள் ரன்களை குவித்தது.
இதை தொடர்ந்து, பிளே-ஆஃப் வாய்ப்பை பெற 201 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற இலக்கோடு களமிறங்கிய சென்னை அணி, 20 ஓவர்களில் 191 ரன்கள் மட்டுமே சேர்த்தது. இதை தொடர்ந்து, 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்.சி.பி அணி, பிளே-ஆஃப் சுற்றுக்கும் முன்னேறியது.
இப்போட்டியில், 201 ரன்கள் என்ற இலக்கை எட்ட கடைசி ஓவரில் சென்னைக்கு 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, முதல் பந்திலேயே ஒரு இமாலய சிக்ஸரை விளாசினார், தல தோனி. 110 மீ தூரம் சென்ற அந்த பந்து, மைதானத்தை விட்டு வெளியேறியது. அடுத்த பந்திலேயே தோனி ஆட்டமிழந்தார். சென்னை மீதமிருந்த 4 பந்துகளில் 1 ரன் மட்டுமே எடுத்தது.
இந்நிலையில், தோனி அடித்த அந்த சிக்ஸ் தான் சென்னை அணியின் நாக்-அவுட்க்கும், பெங்களூரு அணியின் வெற்றிக்கும் காரணம் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா?
ஆட்டத்தின் 2-ஆம் பாதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், பெங்களூரு பந்துவீச்சாளர்கள் பந்தை ஒழுங்காக கிரிப் செய்ய முடியாமல் திணறினர். லாக்கி பெர்குசன் வீசிய 2 ராட்சத பீமர்கள் அதற்கு சாட்சி.
இதன் காரணமாக, பந்தை மாற்ற சொல்லி பெங்களூரு வீரர்கள் நடுவர்களிடம் கோரிக்கை வைத்த நிலையிலும், அதை ஏற்க நடுவர்கள் மறுத்தனர். இந்நிலையில், தோனி அடித்த சிக்ஸ் காரணமாக, பந்து மைதானத்திற்கு வெளியே சென்றதால், வேறு வழியின்றி நடுவர்கள் புதிய பந்தை கொண்டுவந்தனர். அதன் காரணமாக, கடைசி ஓவரில் மீதமிருந்த 5 பந்துகளை யஷ் தயாலால் சிறப்பாக வீச முடிந்தது.
இது குறித்து பேசிய ஆர்.சி.பி வீரர் தினேஷ் கார்த்திக், “சின்னசாமி மைதானத்திற்கு வெளியே செல்லும் அளவிற்கு, 110 மீ தொலைவிற்கு தோனி அடித்த சிக்ஸ் தான் எங்களுக்கு நடந்த மிகச்சிறந்த விஷயம். அது எங்களுக்கு புது பந்தை கொடுத்தது. அந்த புது பந்து எங்களுக்கு மிகவும் உதவியது”, என தெரிவித்துள்ளார்.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…