கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 

அரசியல் ஐந்து மாநில தேர்தல் சிறப்புக் கட்டுரை

5 மாநில சட்டமன்றத் தேர்தல் மினி தொடர் – 11

மோகன ரூபன்

சட்டமன்றத் தேர்தலைச் சந்தித்துவரும் ஐந்து மாநிலங்களில், ஒரேயொரு தென்னிந்திய மாநிலம் தெலங்கானா தான். தேர்தல் பர(பர)ப்புரை தெலங்கானாவில் இப்போது திமிலோகப்பட்டு கொண்டிருக்கிறது. பரப்புரை என்றாலே அடுத்த கட்சிகள் மீது குற்றச்சாட்டுகள் பாயத்தானே செய்யும்?

காங்கிரஸ் – பி.ஆர்.எஸ் மோதல்!

தெலங்கானா தனி மாநிலத்தை காங்கிரஸ் கட்சி எடுத்த எடுப்பில் தரவில்லை. 14 ஆண்டு கால போராட்டத்துக்குப் பிறகுதான் தந்தது. நான் சாகும் வரை உண்ணாவிரதம் அறிவித்த பிறகுதான் தந்தது’ என்று காங்கிரசை சாடியிருக்கிறார் முதல்வர் சந்திரசேகர் ராவ்.  ‘காங்கிரஸ் கட்சியில் ஏகப்பட்ட முதல்வர் வேட்பாளர்கள்’ என்று கிண்டல் வேறு செய்திருக்கிறார்.

காங்கிரஸ் கட்சி என்ன சும்மாவா இருக்கும்? தெலங்கானாவின் கொல்லாப்பூர் பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ‘தெலங்கானா மக்களே… உங்களுக்கு தொரலா தெலங்கானா  வேண்டுமா? பிரஜால தெலங்கானா வேண்டுமா?’ (நிலப் பிரபுத்துவ தெலங்கானா வேண்டுமா? மக்கள் தெலங்கானா) என்று கேட்டிருக் கிறார்.

‘காலேஸ்வரம் பாசனத் திட்டம், சந்திரசேகர் ராவ் குடும்பத்தின் தனிப்பட்ட ஏ.டி.எம். போல இருக்கிறது’ என்றும் ராகுல்காந்தி குற்றம் சாட்டினார்.

கல்வகுர்தி கூட்டத்தில் ராகுல்காந்தி பரப்புரை செய்யும்போது, ‘தலித், பழங்குடி, பிற்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சி தந்த நிலங்களை ஆளும் பி.ஆர்.எஸ். அரசு கபளீகரம் செய்து விட்டது. தெலங்கானாவில் பழங்குடியினரின் நிலத்தை விற்று காலேஸ்வரம் திட்டத்தை தீட்டி, ஒரு லட்சம் கோடி ஊழல் செய்திருக்கிறார்கள். தெலங்கானா மக்களிடம் சந்திரசேகர் ராவ் கொள்ளையடித்த பணம் மக்களுக்குத் திருப்பி வழங்கப்படும்’ என்றிருக்கிறார்.

பதிலுக்கு முதல்வர் சந்திரசேகர ராவ், ‘தலித்துகளை கைதூக்கி விட காங்கிரஸ் கட்சி தவறி விட்டது’ என்று  பதில் சாடல் சாடியிருக்கிறார்.

‘ராகுல் காந்தி எங்கள் மீது கூறும் ஊழல் குற்றச்சாட்டுகள் பொய். மத்திய அரசின் கணக்குப்படி தெலங்கானா தான் ஊழல் குறைந்த மாநிலம்’ என்று பரப்புரையின் போது கூறியிருக்கிறார் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கல்வகுந்த்தளா  கவிதா.

இந்த கேப்பில் பாரதிய ஜனதாவும் சந்திரசேகர ராவ்  மீது பாயத் தவறவில்லை. ‘சந்திரசேகர் ராவின் பாரத் ராஷ்ட்டிரிய சமிதி கட்சி, தெலங்கானாவை பத்து ஆண்டுகள் பின்னோக்கிக் கொண்டு போய்விட்டது. ஐந்து லட்சம் கோடி கடன் வலையில் தெலங்கானா இருக்கிறது’ என்றிருக்கிறார் மத்திய அமைச்சர் அனுராக் தா(க்)கூர்.

தெலங்கானா தேர்தலில் காங்கிரஸ் ஸ்கெட்ச்!

தெலங்கானா தேர்தலை காங்கிரஸ் கட்சி கையாளும் விதமே அழகாக இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை யார் யார் பிரிக்க வாய்ப்பிருக்கிறதோ அவர்களைத் தேடித் தேடி வளைக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சி, அதன் தோழமை கட்சியான சி.பி.ஐ.க்கு கோத்தகூடம் தொகுதியை ஒதுக்கீடு செய்துள்ளது. (சி.பி.எம். தனித்தே போட்டியிடுகிறது). தெலங்கானா ஜன சமிதி, 2018 தேர்தலில் காங்கிரசுடன் இருந்த கூட்டணிக்கட்சி. அந்த கட்சியை மீண்டும் கூட்டணியில் இணைத்துள்ளது காங்கிரஸ். ஒய்.எஸ்.ஆர். தெலங்கானா கட்சியின் தலைவர்  ஷர்மிளா, இந்த தேர்தலில் போட்டியில்லை என்று அறிவித்து விட்டார்.

தெலுங்குதேசம் கட்சி, தெலங்கானாவில் 20 தொகுதிகளில் செல்வாக்கு உள்ள கட்சி. சந்திரபாபு நாயுடு கைதை பி.ஆர்.எஸ் கட்சி கண்டிக்கவில்லை என்று கூறி தெலுங்குதேசம் இப்போது காங்கிரசுக்கு ஆதரவு தருகிறது. ஆக மொத்தம், காங்கிரஸ் கட்சி பிரமாதமாக காய் நகர்த்தி வருகிறது.

அதேப்போல, மிகக் குறுகிய காலத்தில், பன்னிரண்டுக்கும் மேற்பட்ட அரசியல் புள்ளிகள் பாரதிய ஜனதாவில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்துள்ளனர். கோமதி ரெட்டி ராஜ்கோபால ரெட்டி, ஏனாம் சீனிவாச ரெட்டி, முன்னாள் எம்பி விவேக் வெட்கடசாமி, பா.ஜ.க. செய்தித் தொடர்பாளர் அனுகுல ராகேஸ் ரெட்டி, அவரது மகன் வம்சி… இப்படி இந்த பட்டியல் கொஞ்சம் நீளமான பட்டியல். நடிகை விஜய சாந்தி வேறு எந்த நேரத்திலும் பா.ஜ.க.வை விட்டு விலகி காங்கிரசில் சேரலாம் என்ற நிலை.

காங்கிரசில் சேர்ந்த அனைவருமே சொல்லிவைத்த மாதிரி, ‘பி.ஆர்.எஸ். ஆட்சியில் இருந்து தெலங்கானாவை விடுவிக்க சரியான கட்சி பாரம்பரிய கட்சியான காங்கிரஸ்தான்’ என்று கூறிவருகிறார்கள்.

சந்திரசேகர் ராவுக்கு நெருக்கடி கொடுக்கும் காங்கிரஸ், பாஜக!

சரி. இப்போது கே.சி.ஆர் என அழைக்கப்படும் முதல்வர் சந்திரசேகர் ராவுக்கு வருவோம். 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் பி.ஆர்.எஸ் கட்சி சார்பாக 115 வேட்பாளர்களை கடந்த ஆகஸ்ட் மாதமே அறிவித்து விட்டார் சந்திரசேகர் ராவ்.

கஜ்வேல், காமரெட்டி என்ற 2 தொகுதிகளில் சந்திரசேகர் ராவ் போட்டியிடுகிறார். கஜ்வேல் தொகுதியில் கே.சி-ஆரை எதிர்த்து பாரதிய ஜனதா நிறுத்தியிருக்கும் வேட்பாளரின் பெயர் எதேலா ராஜேந்தர்.

எதேலா (ஈட்டல) ராஜேந்தர் ஒருகாலத்தில் சந்திரசேகர் ராவின் நம்பிக்கைக்குரிய நண்பர். நிலஅபகரிப்பு வழக்கில் அமைச்சர் பதவியை இழந்தவர். இவர், முதிராஜ் என்ற பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். கஜ்வேல் தொகுதியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகள் அதிகம். எதேலா ராஜேந்தர் ஏகப்பட்ட வாக்குகளைப் பிரிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காமரெட்டி தொகுதியிலும் ஒரு எதிர்பாராத திடீர் திருப்பம். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முகமது அல் சபீர் என்பவர்தான் போட்டியிடப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. கமுக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சி, கடைசிநேரத்தில், முகமது அல் சபீரை, நிஜாமாபாத் தொகுதி வேட்பாளராக்கிவிட்டு, காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டியை, காமரெட்டி தொகுதியில் நிறுத்தி யுள்ளது.

ஆக, கஜ்வேல், காமரெட்டி என்ற 2 தொகுதிகளிலும் கடும் போட்டியை எதிர் கொண்டிருக்கிறார் முதல்வர் சந்திரசேகர் ராவ். காமரெட்டி தொகுதி, நிஜாமாபாத் மக்களவைத் தொகுதிக்குள் வரும் சட்டமன்றத் தொகுதி. தற்போது எம்.எல்.சி.யாக இருக்கும்  சந்திரசேகர் ராவின் மகள் கவிதா, இதற்கு முன் நிஜாமாபாத்  தொகுதி எம்.பி.யாக இருந்தவர். எனவே இந்த தொகுதி தனக்கு  சாதகமாக இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் காமரெட்டி தொகுதியில் கால்வைத்தார் சந்திரசேகர் ராவ். அது கடும் போட்டிக்குரிய தொகுதியாக மாறும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை.

தெலங்கானா சாதி அரசியல்

தெலங்கானாவைப் பொறுத்தவரை பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகம். 3.82 கோடி தெலங்கானா மக்களில் 52 சதவிகிதம் பேர் பி.சி பிரிவு மக்கள்.

தெலங்கானா தேர்தலில் இந்தமுறை பாரதிய ஜனதா 52 பி.சி. வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பி.ஆர்.எஸ். கட்சி 22 பி.சி வேட்பாளர்களையும், காங்கிரஸ் கட்சி 19 பி.சி. வேட்பாளர்களையும் நிறுத்தி இருக்கின்றன.

‘மத்தியில் பி.சி. சென்சஸ் எடுக்கச் சொன்னதே நாங்கள்தான். தனி ஓபிசி அமைச்சகம் வேண்டும் என்று கேட்டதும் பி.ஆர்.எஸ். கட்சிதான். தெலங்கானா மக்கள் அதை மறந்துவிடக் கூடாது’ என்கிறார் முதல்வர் சந்திரசேகர ராவ்.

சரி. தெலங்கானாவில் பாரதிய ஜனதாவின் நிலை என்ன? ‘தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் பிற்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர்தான் முதல்வர்’ என்று அறிவித்திருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா.

அதேநேரம் ‘தெலங்கானாவில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தால் முஸ்லீம் இட ஒதுக்கீடு ரத்து’ என அறிவித்திருக்கிறார் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி.

‘2 சதவிகித வாக்குகளை வைத்துக் கொண்டு பாரதிய ஜனதா எப்படி பிற்படுத்தப் பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும்? புரியவில்லையே?’ என்று இதைக் கிண்டல் செய்திருக்கிறது காங்கிரஸ் கட்சி.

காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியும் நம்பிக்கையும்! 

பாரதிய ஜனதா, தெலங்கானாவில் 9 தொகுதிகளை ஜன சேனா (ஜே.எஸ்.பி.) கட்சிக்கு ஒதுக்கியிருக்கிறது. ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சிக்கும் பாரதிய ஜனதாவுக்கும் ஒரு மறைமுக புரிதல் உண்டு என்ற குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. மஜ்லிஸ் கட்சியும் தெலங்கானாவில் 9 தொகுதிகளில் போட்டி யிடுகிறது.

தெலங்கானா தேர்தலைப் பொறுத்தவரை காங்கிரஸ் கட்சி அதிக நம்பிக்கையோடு இருக்கிறது. காங்கிரஸ் ஆறு நலத்திட்டங்களை முன் வைத்திருக்கிறது. ‘தெலங்கானாவில் பி.சி. கோட்டாவை உயர்த்துவோம்’ என்பது உள்பட பல வாக்குறுதிகளை அது அளித்துள்ளது.

‘பெண்களுக்கு மாதம் 4 ஆயிரம் மதிப்பில் பலன்கள்,  மானிய விலையில் ரூ.500க்கு சிலிண்டர். ரூ. ஆயிரத்தில் அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்’ போன்றவை காங்கிரஸ் அளித்துள்ள சில வாக்குறுதிகள்.

தெலங்கானா தேர்தலில் மகுடம் சூட்டப்போவது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்.

(களத்தை இன்னும் வலம் வருவோம்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

Election situation climax report by Mohana Ruban

மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9

சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8

மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5

தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு!  5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4

சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3

ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2

5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?  அலசல் மினி தொடர்!-1

 

+1
3
+1
0
+1
0
+1
3
+1
0
+1
0
+1
0