மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’

அரசியல் ஐந்து மாநில தேர்தல் சிறப்புக் கட்டுரை

மோகன ரூபன்

பா.ஜ.க போட்டிருக்கும் புதுக்கணக்கு!

இந்தியத் திருநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இறங்கி பிரச்சாரம் செய்யாத தேர்தல்களே கிடையாது. அதிலும், 2014ஆம் ஆண்டுக்குப்பிறகு எந்த மாநிலத்தில் தேர்தல் நடந்தாலும் பிரதமர் மோடி அங்கு பிரச்சாரத்துக்குச் சென்றே தீர்வார்.

இந்த வழக்கம் முதல்முறையாக முறியடிக்கப்பட்டிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கும் மிசோரம் மாநிலத்தில் மோடியின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ‘பெருமையை’ அவருக்குப் பெற்றுத் தந்தவர் யார் என்றால், அவர் மிசோரம் மாநில முதல்வர் சோரம் தங்கா.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரத்தில், மிசோ தேசிய முன்னணி (எம்.என்.எஃப்) கட்சி ஆட்சியில் இருக்கிறது. 79 வயதான சோரம் தங்கா முதல்வராக இருக்கிறார். பாரதிய ஜனதா தலைமையிலான வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியில் எம்.என்.எஃப் இருக்கிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியிலும் எம்.என்.எஃப் அங்கம் வகிக்கிறது.

இருந்தாலும் என்ன? பாரதிய ஜனதாவுக்கும், எம்.என்.எஃப்.புக்குமான உறவு அப்படியொன்றும் இதமாக இல்லை.

மிசோரத்தின் அண்டை மாநிலம்தான் மணிப்பூர். அந்த மணிப்பூர் மாநில கலவரத்தின்போது பிரதமர் மோடி அங்கே எட்டிப் பார்க்கவில்லை.

மணிப்பூர் மாநில குக்கி இனத்தவர்களும், மிசோரம் மாநில பழங்குடி மக்களும் நெருங்கிய உறவுமுறை உள்ளவர்கள். தொப்புள்கொடி உறவு கொண்டவர்கள்.  நிலைமை இப்படியிருக்க, மணிப்பூர் கலவரத்தை பிரதமர் மோடி கையாண்ட விதம் முதல்வர் சோரம் தங்காவுக்குப் பிடிக்கவே இல்லை.

இந்தநிலையில், கடந்த 30ஆம்தேதி மிசோரம் மாநிலம் மாமித் நகர் பகுதியில், பிரதமர் மோடியும், முதல்வர் சோரன் தங்காவும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்வதாக இருந்தது.

தங்காவின் ஹைலைட்

ஆனால் சோரம் தங்கா என்ன நினைத்தாரோ? மோடியுடன் ஒரே மேடையில் ஏற மாட்டேன் என்று முன்கூட்டியே மறுத்துவிட்டார். ‘மணிப்பூரில் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். தேவாலயங்கள் எரிக்கப்பட்டுள்ளன. மக்கள் கொந்தளிப்புடன் இருக்கிறார்கள். இந்த நேரத்தில் பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தால் பின்னடைவு தான். மோடியுடன் நான் மேடையைப் பகிர்ந்து கொள்ள மாட்டேன். தனியாக பிரச்சாரம் செய்து கொள்கிறேன்’ என்று சொல்லிவிட்டார் தங்கா.

இதில், பாரதிய ஜனதாவுடன் சேர்ந்தால் பின்னடைவுதான் என்று அவர் சொன்னது தான் ஹைலைட்.

அதன்பிறகு பிரதமரின் மாமித் நகர் பிரச்சாரக் கூட்டம் கைவிடப்பட்டது. மிசோரம் தேர்தல் பரப்புரையில் அமித்ஷா பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடியாக, சோரம் தங்காவை பாரதிய ஜனதா திட்டித் தீர்த்திருக்கிறது. ‘சோரம் தங்கா, இரண்டு வகையான முகம் கொண்டவர். டெல்லிக்குப் போய் மத்திய அரசிடம் பேசும்போது அவர் புன்னகை மன்னன் பூவிழி கண்ணன். அப்போது சிரித்த முகமாக இருப்பார். மாநிலத்தில் அவருக்கு சிடுமூஞ்சி முகம்’ என்று சாடியிருக்கிறது பாரதிய ஜனதா.

‘மிசோரத்தில் சில்சார் பகுதியில் இருந்து சாய்ராங் பகுதி வரை  98 கிலோ மீட்டர் தொலைவுக்கு நான்கு வழிச்சாலை போட மத்திய அரசு நிதி ஒதுக்கிவிட்டது. முதல்வர் சோரம் தங்கா வேண்டுமென்றே அந்த சாலைத்திட்டத்தை கிடப்பில் போட்டு தாமதப்படுத்தி வருகிறார்’ என்றும் பாரதிய ஜனதா குற்றம்சாட்டி உள்ளது.

மிசோரம் சிறிய மாநிலம். மொத்தம் 40 சட்டமன்றத் தொகுதிகள். வரும் நவம்பர் 7ஆம்தேதி அங்கே ஒரே கட்டமாகத் தேர்தல்.

இந்தநிலையில், ஆளும் மிசோ தேசிய முன்னணி, எதிர்க்கட்சியான மிசோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் கட்சி ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் 40 தொகுதி களிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

2018ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 39 வேட்பாளர்களை நிறுத்திய பாரதிய ஜனதா, இந்தமுறை 23 வேட்பாளர்களை மட்டுமே நிறுத்தியிருக்கிறது. ‘இந்த 23 தொகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்தி வெற்றி பெற்றால், பா.ஜ.க அரசு அமைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ.

மிசோரத்தின் பெரும்பகுதி மக்கள் மிசோ இன மக்கள். ஆனால், பாரதிய ஜனதா அதிக ஆர்வம் காட்டுவது மிசோ மக்கள் அதிகம் வாழாத மாமித், டாம்பா, ஹச்சேக் போன்ற தொகுதிகளில்தான்.

பாரதிய ஜனதா கட்சி, ஆளும் எம்.என்.எஃப் கட்சியில் இருந்து கழன்று வந்த மூவருக்கு சீட் ஒதுக்கியிருக்கிறது. அவர்களில் ஒருவர் சட்டமன்ற முன்னாள் அவைத்தலைவர் லால்ரின்லியானா சைலோ. அவர் மாமித் தொகுதியில் போட்டியிடுகிறார்.

இதுதவிர முன்னாள் அமைச்சர் கே. பெய்சுவா, பா.ஜ.க கட்சியின் மாநிலத் தலைவர் லாயேன்ங்தாங் ஆகியோர்களுக்கும் பா.ஜ.க சீட் ஒதுக்கி இருக்கிறது. இந்த மூவரது வெற்றி மீதும் பாரதிய ஜனதா அதிக நம்பிக்கை வைத்திருக்கிறது.

மிசோரம் நிலவரம்

பா.ஜ.க மாநிலத்தலைவர் வன்லால்மக்கா, டாம்பா தொகுதியில் போட்டியிடுகிறார். இது வங்கதேச எல்லையில் புலிகள் சரணாலயத்தின் அருகே உள்ள தொகுதி.

மணிப்பூர் கலவரத்துக்குப்பின் மிசோரத்தில் மிசோ மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளை விட,  பிரு, சக்மா, லாய், மாரா இன மக்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் பா.ஜ.க கவனம் செலுத்துவதைப் போலத் தெரிகிறது. ‘

கடந்த 2018 சட்டமன்றத் தேர்தலில், எம்.என்.எஃப் கட்சி, 26 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. மிசோரம் மக்கள் இயக்கம் 8 இடங்களை வென்று இருந்தது. காங்கிரஸ் 5 இடங்களையும், பாரதிய ஜனதா ஒரு இடத்தையும் கைப்பற்றி இருந்தன.

மொத்தம் 39 தொகுதிகளில் பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அவர்களில் 33 பேர் டெபாசிட் இழந்திருந்தனர். 8.09 சதவிகித ஓட்டு பா.ஜ.க.வுக்குக் கிடைத்திருந்தது.

2018 தேர்தலில், பா.ஜ.க வென்ற ஒரே தொகுதி, புத்த மதத்தைச் சேர்ந்த சக்மா மக்கள் அதிகம் வாழும், துய்ச்சாங் தொகுதிதான். டாக்டர் புத்தாதான் என்பவர் பா.ஜ.க.வி.ன் ஒரே எம்.எல்.ஏ.வாக ஆனார்.

தற்போது வயது மூப்பு காரணமாக புத்தாதான் ஓய்வுபெற்று விட்ட நிலையில், துய்ச்சாங் தொகுதியில் இந்தமுறை துர்ஜாதான் சக்மா போட்டியிடுகிறார். இவரது வெற்றி மீதும் பாரதிய ஜனதா அதிக நம்பிக்கையோடு இருக்கிறது.

மிசோரத்தைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா போட்டு வைத்திருக்கும் கணக்கே வேறு.

முதல்வர் சோரம் தங்காவுக்கு இப்போது 79 வயது. அவரது ஆளும் எம்.என்.எஃப் கட்சியுடன் பா.ஜ.க.வுக்கு இப்போது நெருடல் ஏற்பட்டுவிட்ட நிலையில், எதிர்க்கட்சியான மிசோரம் மக்கள் இயக்கத்துடன் புதிய கூட்டணி அமைக்க பா.ஜ.க தயாராக உள்ளது. கூட்டணி அரசு என்பதிலும் பா.ஜ.க உறுதியாக உள்ளது.

‘சோரம் தங்கா மீண்டும் முதல்வரானால், 2024 பொதுத்தேர்தலிலும் பா.ஜ.க.வுக்கு அவர் இடையூறாக இருப்பார். தோற்று விட்டால் பேசாமல் அவர் ஓய்வு பெற்றுவிடுவார். எனவே சோரம் தங்கா இந்தமுறை தோற்று வீட்டுக்குப் போய்விட வேண்டும் என்பது பா.ஜ.க.வின் விருப்பமாக இருக்கிறது.

மிசோரத்தில் இந்தமுறை தொங்கு சட்டமன்றம் அமையவே வாய்ப்பு அதிகம். கருத்துக்கணிப்புகள் அப்படித்தான் சொல்கின்றன.

இந்தநிலையில்,  எதிர்க் கட்சியான மிசோரம் மக்கள் இயக்கம் குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் வென்றால், அந்தக்கட்சியுடன் கூட்டணி’ என பா.ஜ.க திட்டமிட்டு உள்ளது. சுருக்கமாகச் சொல்லப்போனால் குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க பா.ஜ.க தயாராக உள்ளது.

ராகுலின் வாக்குறுதி

இந்தியாவில் சட்டமன்றத்தேர்லைச் சந்திக்கும் ஐந்து மாநிலங்களில் மிகச்சிறிய மாநிலம் மிசோரம்தான். அது குறைவான மக்கள் தொகை கொண்ட மாநிலமும் கூட. மொத்த வாக்காளர்களே 7.4 லட்சம் பேர்தான்.  ஆகவே, தொகுதிகளில் மிகச் சிறிய வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி பெறுவது மிசோரத்தில் வழக்கம். வெறும் 2 ஆயிரம் ஓட்டுகள்கூட பல நேரங்களில் அங்கே வெற்றியை முடிவு செய்யும். இந்தமுறையும் அப்படி விளிம்புநிலை வெற்றிகள் பலருக்குக் கிடைக்க உள்ளன.

மிசோரத்தில், பிரதமர் மோடியின் பிரச்சாரம் நடக்காமல் போய்விட்ட நிலையில், கடந்த 16ஆம்தேதி காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல் இருநாள் பிரச்சாரப் பயணமாக மிசோரம் வந்து நாலரை கி.மீ. நடைப்பயணம் மேற்கொண்டு விட்டார்.

‘மிசோரத்தை முன்மாதிரி மாநிலமாக மாற்றுவோம். காங்கிரசிடம் அதற்கான தெளிவான திட்டம் இருக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முதியவர்களுக்கு மாதம் 2,500 ரூபாய் ஓய்வூதியம் வழங்குவோம், 750 ரூபாய்க்கு எல்.பி.ஜி சிலிண்டர் தருவோம், டாங் புய்ஹ்னா பொருளாதார மேம்பாட்டு முயற்சியில் இறங்குவோம்’ என ராகுல் பரப்புரை செய்திருக்கிறார்.

இதன் எதிர்வினையாக, பாரதிய ஜனதாவும் தாமரைத்திட்டம் என்ற பெயரில் தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்திருக்கிறது.

‘பெண் குழந்தைகளுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய், அரசு வேலைகளில் மகளிருக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு, அசாம் மாநிலத்துடன் உள்ள நீண்டகால எல்லைப்பிரச்சினை தீர்த்து வைக்கப்படும், குடும்பங்களுக்கான ஆண்டு மருத்துவக் காப்பீடு 5 லட்சத்தில் இருந்து பத்து லட்சமாக உயர்த்தப்படும், மிசோரத்தில் விளையாட்டு அகாடமி கொண்டுவரப்படும், போதைப்பொருள் இல்லாத மிசோரத்தை உருவாக்குவோம்’ இதெல்லாம் பா.ஜ.க. வழங்கி இருக்கும் வாக்குறுதிகள்.

பாஜக சூசகம்

மிசோரம் கிறிஸ்துவர்கள் அதிகம் வாழும் மாநிலம். அதனால் ஆளும் எம்.என்.எஃப் கட்சியும், எதிர்க்கட்சியான மிசோரம் மக்கள் இயக்கமும் கிறிஸ்துவ ஓட்டுகளை குறிவைத்து பரப்புரை செய்து வருகின்றன.

மணிப்பூர், மிசோரம்  உள்பட பல மாநிலங்களில் வாழும் குக்கி, மிசோ, சின் பழங்குடி இனமக்களை ஒன்றுபடுத்தும் திட்டம் ‘சோ யூனிபிகேசன்’ திட்டம். இந்த திட்டத்துக்கு இரு முன்னணி கட்சிகளுமே ஆதரவாக உள்ளன.

தேர்தலுக்குப்பிறகு மிசோரம் மக்கள் இயக்கத்துடன்  கூட்டணி அரசு அமைக்க ஆதரவு என பாஜக சூசக அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

மிசோரம் மக்கள் இயக்கமும் அதை மறுக்கவில்லை. ‘தேர்தலுக்குப்பிறகு எது வேண்டுமானாலும் நடக்கலாம்’ என அது அறிவித்துள்ளது.

ஆம். தேர்தலுக்குபிறகு எதுவேண்டுமானாலும் நடக்கலாம் இல்லையா?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

BJP's Election Game in Mizoram - 5 state assembly election 2023 by mohana ruban

மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5

தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு!  5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4

சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3

ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2

5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?  அலசல் மினி தொடர்!-1

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *