நீலகிரி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் சிசிடிவி ஒளிபரப்பு செயலிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஸ்டார் தொகுதியான நீலகிரியில் திமுக துணை பொதுச்செயலாளரும் சிட்டிங் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் ஆகியோர் போட்டியிட்டனர்.
நீலகிரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டன.
கல்லூரியை சுற்றிலும் ஐந்து அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஸ்ட்ராங் ரூம் அறையை சுற்றிலும் 160 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இங்கு அரசியல் கட்சி முகவர்கள் மற்றும் அதிகாரிகள் பார்வையிட சிசிடிவி கேமராக்களின் நேரலை காட்சிகள் 24 மணி நேரமும் டிவியில் ஒளிபரப்பப்படுகின்றன.
இந்தநிலையில், இன்று இரவு 7 மணிக்கு அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பும் ஒரே நேரத்தில் தடைபட்டது. உடனடியாக அங்கிருந்த திமுக, பாஜக, அதிமுக பாதுகாப்பு முகவர்கள் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான அருணாவை தொடர்பு கொண்டனர். இதனையடுத்து தொழில்நுட்ப வல்லுநர்கள் 20 நிமிடங்களில் பிரச்சனையை சரிசெய்தனர்.
இதுகுறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான அருணா பிபிசி தமிழ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “சிசிடிவி கேமரா நேரலை தடைப்பட்ட போது நான் சம்பவ இடத்தில் தான் இருந்தேன்.
நேரலை அமைப்பின் உபகரணங்களில் ஓவர் ஹூட் காரணமாக டிவிகளுக்கு வரும் நேரலை தான் தடைப்பட்டது. சிசிடிவி கேமரா பதிவு செய்வதில் எந்த தடையும் ஏற்படவில்லை.
நேரலை தடைப்பட்ட 20 நிமிடங்களும் என்ன நடந்தது என்பது சிசிடிவி கேமராக்கள் பதிவு செய்துள்ளன. தேவைப்பட்டால் அரசியல் கட்சி முகவர்கள் அதனை பார்த்துக்கொள்ளலாம்.
உடனடியாக தொழில்நுட்ப வல்லுநர்கள் பிரச்சனையை சரிசெய்தனர். தற்போது எந்த பிரச்சனையும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சம்மர் சீசனில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு
தர்மபுரி… வன்னியர் ஓட்டு யாருக்கு? தலித் ஓட்டு யாருக்கு? மற்றவர்களின் ஓட்டு யாருக்கு? ரகசிய விவரம்!