What the railway minister said on Andhra train accident was a lie

ஆந்திரா ரயில் விபத்து : ரயில்வே அமைச்சர் கூறியது பொய்… விசாரணையில் அம்பலம்!

அரசியல் இந்தியா

ஆந்திர ரயில் விபத்து தொடர்பாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்னவ் கூறிய தகவலில் எந்த உண்மையும் இல்லை என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் ஆந்திராவில் சிக்னலுக்காக காத்திருந்த ரயில் மீது பின்னால் வந்த ரயில் மோதியது. இதில் இரு லோகோ பைலட்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

கிரிக்கெட் பார்த்ததால் விபத்து!

இந்த விபத்து தொடர்பாக அப்போது பேட்டியளித்த ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்,  ரயிலை ஓட்டி வந்த இரு ஓட்டுநர்களும் செல்போனில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டு இருந்ததால் விபத்து நடந்ததாக தெரிவித்தார். மேலும் பணியில் இருக்கும் ஓட்டுநர்களை தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.

அதனைத்தொடர்ந்து பணி நேரத்தில் பணியாளர்கள் புளூடூத் ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்த தடை விதித்து ரயில்வே  உத்தரவு பிறப்பித்தது.

 ரயில்வே பாதுகாப்பு ஆணையம் விசாரணை!

இந்த நிலையில் ஆந்திரா ரயில் விபத்து தொடர்பாக  ரயில்வே பாதுகாப்பு ஆணையம் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது, விபத்தில் உயிரிழந்த லோகோ பைலட்களின் மொபைல் சிக்னல்களை ஆய்வு செய்ததில் அவர்கள் கிரிக்கெட் போட்டியை பார்க்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரயில் விபத்துக்கு, பைலட்டுகள் ஃபோனில் கிரிக்கெட் போட்டி பார்த்ததே காரணம் என மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறிய தகவலில் எந்த உண்மையும் இல்லை என விசாரணையில் அம்பலமாகியுள்ளது.

அது வெறும் வதந்தி!

இதுதொடர்பாக ரயில்வே ஆணையத்தை சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறுகையில், “லோகோ பைலட் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் விபத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தனர், பணியில் இருந்தபோது கிரிக்கெட் பார்த்ததாக குற்றம் சாட்டி பதிவு செய்திருப்பது “கடுமையான” தவறு. அவர்கள் கிரிக்கெட் பார்த்ததாக நிரூபிக்க இப்போது எந்த ஆதாரமும் இல்லை… அது வெறும் வதந்தி.

கருணை அடிப்படையில் அவர்களின் மனைவிகளுக்கு நாங்கள் வேலை வழங்கியுள்ளோம்,” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

அனுபமாவின் புது பட அறிவிப்பு.. சம்பளம் இத்தனை கோடியா?

கோவை குண்டுவெடிப்பு : 14வது நபர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த என்.ஐ.ஏ!

+1
0
+1
0
+1
4
+1
0
+1
0
+1
1
+1
0

1 thought on “ஆந்திரா ரயில் விபத்து : ரயில்வே அமைச்சர் கூறியது பொய்… விசாரணையில் அம்பலம்!

  1. மோடிஜி சுடுற வடைகள் மாதிரி, அவரு மந்திரிகளும் வடை சுடுவாங்கல்ல,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *