ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!
தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், சிபிசிஐடியிடம் இன்று (ஏப்ரல் 28) காவல்துறையினர் ஆவணங்களை ஒப்படைத்தனர்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ஆம் தேதி லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. இந்தநிலையில், ஏப்ரல் -ஆம் தேதி சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தாம்பரத்தில் நடைபெற்ற இந்த சோதனையில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் 3 கோடியே 99 லட்சம் ரூபாயை, உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு சென்ற 3 பேர் சிக்கினர்.
பிடிபட்டவர்கள் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக எம்எல்ஏவும், நெல்லை நாடாளுமன்ற பாஜக வேட்பாளருமான நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணியாற்றும் சதீஷ், நவீன், லாரி டிரைவர் பெருமாள் ஆகியோர் என்பது அவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்தது
பிடிபட்ட சதீஷிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பாஜக நெல்லை வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்காக நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக தெரிய வந்தது.
இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, சென்னையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.
நயினார் நாகேந்திரனுக்காக பணம் கொண்டு செல்வதாக சதீஷ் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மன் அனுப்பினர்.
இதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரனின் வழக்கறிஞர் காவல் நிலையத்தில் ஆஜராகி தாம்பரம் ஆய்வாளர் பால முரளியிடம் மனு ஒன்றை அளித்தார்.
அந்த மனுவில், நயினார் நாகேந்திரன் ஆஜராக 10 நாட்கள் அவகாசம் வழங்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதேசமயம், ரயிலில் சிக்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார். இந்தநிலையில், மே 2-ஆம் தேதி தாம்பரம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் ஆஜராக உள்ளார்.
இந்த நிலையில், 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் இன்று (ஏப்ரல் 28) தாம்பரம் போலீசார் சிபிசிஐடியிடம் ஒப்படைத்தனர்.
நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த 4 கோடி ரூபாய் பணம் யாருக்கு சொந்தமானது, எங்கு கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொள்ள சிபிசிஐடி தரப்பில் விரைவில் ஒரு விசாரணை அதிகாரி நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உலக செஸ் சாம்பியன்ஷிப் எப்போது தொடக்கம்?
ஆம் ஆத்மி கூட்டணிக்கு எதிர்ப்பு: டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!