உலகில் மிகவும் தொன்மையான மொழியான தமிழை நாம் தொலைத்து வருகிறோம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழைத் தேடி என்ற பரப்புரையை டாக்டர் ராமதாஸ் இன்று முதல் பிப்ரவரி 28-ஆம் தேதி வரை மேற்கொள்கிறார்.
இந்த பரப்புரையை இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி மதுராந்தகம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, புதுச்சேரி, கும்பகோணம், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரையில் பிப்ரவரி 28-ஆம் தேதி நிறைவு செய்கிறார்.
பரப்புரையின் தொடக்க நிகழ்ச்சி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசும்போது, “தமிழ் இருக்கிறது என்று யாராவது சொல்கிறார்கள் என்றால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.
நாங்கள் எந்த மொழிக்கும் எதிரிகள் அல்ல. கற்பழிப்பு என்ற வார்த்தையை நீக்கிவிட்டு பாலியல் வன்கொடுமை என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியது உட்பட ஆயிரக்கான வார்த்தைகளை தமிழில் அறிமுகப்படுத்தினோம்.
மெல்ல தமிழ் இனி சாகும் என்று நீலகண்ட சாஸ்திரி கூறியது உண்மையாகி போனது. ஆனால் தமிழ் இப்போது வேகமாக செத்துக்கொண்டிருக்கிறது.
ஆங்கிலம் உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கடன் வாங்கியுள்ளது. அது ஒரு கலப்பு மொழி. ஆனால் அந்த ஆங்கில மொழி உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் கலந்துள்ளது.
குறிப்பாக நம்முடைய தமிழ் மொழியில் அதிகமாக கலந்துள்ளது. உலகில் மிகவும் தொன்மையான மொழி தமிழ். அதனை நாம் தொலைத்து வருகிறோம். 5 விழுக்காடு பிற மொழி கலப்பு இருக்கலாம். மீதமுள்ள 95 விழுக்காடு தமிழில் பேச வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
ஆர்.எஸ்.எஸ் பேரணி: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
ஸ்டாலின் 70: துரைமுருகன் புதிய அறிவிப்பு!