ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று மத்திய இணை அமைச்சரும், நீலகிரி பாஜக வேட்பாளருமான எல்.முருகன் இன்று (ஏப்ரல் 28) தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் இன்று (ஏப்ரல் 28) செய்தியாளர்களை சந்தித்த எல்முருகன், “நேற்று (ஏப்ரல் 27) நீலகிரி தொகுதியில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக பதிவான வாக்குகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் நேரலை காட்சிகளில் சுமார் 20 நிமிடங்கள் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற தொழில்நுட்ப கோளாறுகள் வராமல் தேர்தல் ஆணையம் பார்த்துக்கொள்ள வேண்டியது அவர்களின் கடமை. கால சூழ்நிலை காரணமாக இந்த தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராவில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருப்பது கவனிக்கப்படக்கூடியது.
ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். எந்தவித ஐயத்திற்கும் இடமளிக்காமல் தேர்தல் ஆணையம் அதனை முறையாக கண்காணிக்க வேண்டும்.
பல வாக்காளர்களின் பெயர்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நீக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிக்கும் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
நீலகிரி, கோவை, தென்சென்னை போன்று தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் தோல்வி பயம் காரணமாக எங்களது வாக்காளர்களின் பெயர்களை நீக்கியுள்ளனர். விவிபேட் குறித்து தேர்தல் ஆணையம் தெளிவாக விளக்கி உள்ளது. தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் தேவையில்லாமல் தோல்வி பயத்தால் அவதூறுகளை பரப்புகிறார்கள்.
அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டு இருப்பது ஒவ்வொரு இந்தியர்களின் கனவை நினைவாக்கி உள்ளது. ராகுல் காந்தி அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல மாட்டேன் என்று கூறுவது அவர் ராமரை வெறுக்கிறாரா? இந்து மதத்தை வெறுக்கிறாரா? கடவுளை வெறுக்கிறாரா? என்பதற்கு அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்” என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ரூ.4 கோடி பறிமுதல்… நயினார் வழக்கு ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு!
நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்… சென்னை போலீஸ் வார்னிங்!