|

ராவணனின் மாமனார் வீடு… ராஜஸ்தான் யாருக்கு?

5 மாநிலத் தேர்தல்… அலசல் மினி தொடர் -2

மோகன ரூபன்

ராஜஸ்தான்… இந்தப் பெயரைக் கேட்டதும் உங்கள் மனக்கண்ணில் தார் பாலைவனம், ஒட்டகம், ஜெய்ப்பூர், ஜோத்பூர் அரண்மனைகள் எல்லாம் தோன்றி இருக்கும்.

இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் ராஜஸ்தான்தான். மொத்த இந்தியாவில் 10.4 சதவிகித பரப்பளவு கொண்ட மாநிலம் இது. உலகத்தின் 9ஆவது பெரிய பாலை வனமான தார் பாலைவனம் ராஜஸ்தானில் இருக்கிறது. பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் தார் பாலைவனம் உண்டு. ஆனால், மொத்த தார் பாலை வனத்தில் 60 சதவிகிதம் இருப்பது ராஜஸ்தானில்தான். ஸ்தானம் என்பது சமஸ்கிருத மொழியில் இடத்தைக் குறிக்கும். ‘ராஜாக்களின் ஸ்தானம்’ அதாவது ராஜாக்களின் இடம் என்ற அர்த்தத்தில் வந்ததுதான் ராஜஸ்தான் என்ற பெயர்.

ராஜஸ்தானின் பெருமைகள்!

ராஜஸ்தானின் பெருமையைச் சொல்வதற்கு நிறைய இருக்கிறது. சிந்துசமவெளி நாகரீகத்துடன் ஒருகாலத்தில் ஒட்டி உறவாடிய ஒரு மாநிலம் ராஜஸ்தான். உலகத்தின் மிகப்பழமையான வயல்களில் ஒன்றாகக் கருதப்படும் காலிபங்கன் இங்கேதான் உள்ளது.

இந்தியாவில் மிகப்பழமையான ஆரவல்லி மலைத் தொடர், உலகின் மிக நீளமான அதாவது 36 கிலோ மீட்டர் நீளச் சுவர் கொண்ட கும்பல்கர் கோட்டை, 953 ஜன்னல்கள் வைத்த ஹவா மகால் என்ற தென்றல் மாளிகை.. இவையெல்லாம் இருப்பது ராஜஸ்தானில்தான்.

ராஜஸ்தானின் மார்வார் பகுதியின் தலைநகரமாக இருந்த இடம் மண்டோர். இராவணனின் மனைவியான மண்டோதரியின் ஊர் இது. ஆக, ஒரு வகையில் இராவணனின் மாமனார் வீடு கூட ராஜஸ்தான்தான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

வண்ணங்களின் மாநிலம்!

ராஜஸ்தானில் உள்ள நகரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணத்தில் மின்னும். உதாரணமாக ஜெய்ப்பூர் பிங்க் நிறம். விக்டோரியா ராணியும், வேல்ஸ் இளவரசரும் வருகை தந்தபோது அந்த நகரத்தில் உள்ள ஒவ்வொரு கட்டடத்துக்கும் பிங்க் வண்ணம் பூச, மகாராஜ சவாய் ராம்சிங் உத்தரவு போட, அன்று முதல் ஜெய்ப்பூரின் நிறம் பிங்க் நிறம்.

அதுபோல ஜோத்பூர் நீலநிறம். உதய்பூர் வெள்ளை நிறம். ஜாலாவார் பர்ப்பிள் நிறம். ஜெய்சால்மர், தார் பாலைவனத்தைப் பிரதிபலிக்கும் விதத்தில் தகதக தங்க நிறம்.

இப்படி கண்ணைக் கவரும் வண்ணங்கள் கொண்ட நகரங்களுக்கு மட்டுமின்றி அழகிய கோட்டைகளுக்கும் பேர்பெற்ற மாநிலம் ராஜஸ்தான். ரந்தம்பூர், ஆம்பர், ஜெய்சால்மர் உள்பட பல கோட்டைகள் ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியச் சின்னங்கள்.

தகிக்கும் வெப்பத்துக்குப் பேர் பெற்ற ராஜஸ்தானில் ஒரே ஒரு மலைச்சுற்றுலா தளம்தான் உள்ளது. அது கடல் மட்டத்துக்கு 1,722 மீட்டர் உயரத்தில் உள்ள மவுண்ட் அபு. கைவிடப்பட்ட குல்தாரா நகரம், 25 ஆயிரம் எலிகள் கொண்ட கர்ணி மாதா எலிக்கோயில், பிரம்மாவுக்கு கோயில் உள்ள புஷ்கர்.. இப்படி ராஜஸ்தானின் பெருமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

1974ஆம் ஆண்டு அணுகுண்டு சோதனை நடத்தப்பட்ட போக்ரான் பகுதி, ராஜஸ் தானில்தான் உள்ளது. இந்தியாவின் மிக ஆடம்பர ரயிலான, அரண்மனை ரயிலும் ராஜஸ்தானில்தான் இருக்கிறது.

மன்னராட்சியில் இருந்து மக்களாட்சிக்கு…

ஒருகாலத்தில் 22 மன்னராட்சிப் பகுதிகள் இருந்த இடம் ராஜஸ்தான். 1949ஆம் ஆண்டுதான் இந்த 22 முடியாட்சிப் பகுதிகளும் ஒன்று சேர்க்கப்பட்டு, ராஜஸ்தான் என்ற மாநிலம் உருவாக்கப்பட்டது.
அதுபோல, அந்தக் காலத்தில் ஆம்பர் நகரம்தான் ராஜஸ்தான் பகுதியின் தலை நகரமாக இருந்திருக்கிறது. 1727ஆம் ஆண்டுதான் ஜெய்ப்பூர் அந்த பெருமையைப் பெற்றிருக்கிறது.


ராஜஸ்தானில் ராஜ்புத் என்ற ரஜபுத்திரர்கள், பிராமணர்கள், பிஷ்னோய், மகாஜன் என்ற வணிக சமூகத்தவர்கள், ஜாட் என்ற விவசாய சமூகத்தவர்கள், குஜ்ஜார் என்ற மேய்ப்பர் சமூகத்தினர் வசிக்கின்றனர்.

ராஜ்புத் என்ற ரஜபுத்திரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஜாட் இனத்தவர்கள் ராஜஸ்தானின் வடக்கிலும், மேற்கிலும் வாழ்கிறார்கள். பிஷ்னோய்கள் ராஜஸ்தான் முழுவதும் பரவலாக உண்டு.

ராஜஸ்தான் மாநிலத்தில் 12 சதவிகிதம் பேர் பழங்குடிகள். பில், மினா, மியே, பர்சாரா, பில் போன்ற பழங்குடி மக்களும் ராஜஸ்தானில் உண்டு. ரபாரி என்ற மேய்ப்பர் சமூகத்தவர்கள் ஆரவல்லி மலைத் தொடருக்கு மேற்கே மத்திய மேற்கு ராஜஸ்தானில் வாழ்கிறார்கள்.

இந்தி தவிர ராஜஸ்தானில் வேறுசில மொழிகளும் பேசப்படுகின்றன. மேற்குப் பகுதியில் மார்வாரி, ஜெய்ப்பூர் பகுதியில் துண்ட்ஹாரி, தென்கிழக்கே மால்வி, உத்தர பிரதேச எல்லையோரம் மேவாத்தி மொழிகள் பேசப்படுகின்றன.

அரசியலும் ஆட்சியாளர்களும்!

ராஜஸ்தானின் முதன்முதலாக முதல்வராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹிராலால் சாஸ்திரி. அதன்பின் நீண்டகாலமாக காங்கிரஸ் முதல்வர்கள் தான். அதன்பின் பைரோன்சிங் ஷெகாவத், ஜனதா கட்சி சார்பாக முதல்வராகப் பதவியேற்று நிலைமையை மாற்றினார். 1992ல் பைரோன்சிங் ஷெகாவத், பாரதிய ஜனதா சார்பில் முதல்வரானார்.

அதன்பின் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட்டும், பாரதிய ஜனதாவின் வசுந்தரா ராஜே சிந்தியாவும் மாறிமாறி முதல்வராகி இருக்கிறார்கள். 2003ல் வசுந்தரா, 2008ல் கெலாட், 2013ல் மீண்டும் வசுந்தரா, கடந்த 2018ல் மீண்டும் அசோக் கெலாட். ஆக தற்போது ராஜஸ்தான் மாநில முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட்தான்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

ராஜஸ்தானின் மக்கள் பிரச்சினை!

ராஜஸ்தான் மாநிலத்தைப் பொறுத்தவரை அங்கே மிகப்பெரிய பிரச்சினையாக இருப்பது வேலையில்லா திண்டாட்டம்தான். மாநிலத்தின் தலையாய பிரச்சினையாக 21 சதவிகிதம் வாக்காளர்கள் இதைத்தான் கருதுகிறார்கள். இதற்கு அடுத்த படியாக பணவீக்கம், விலைவாசி (19 சதவிகிதம்). மூன்றாவதாக சட்டம் ஒழுங்கு (18 சதவிகிதம்) பிரச்சினைகள் இருக்கின்றன.

200 சட்டமன்றத் தொகுதிகள் கொண்ட ராஜஸ்தான், வரும் நவம்பர் 25ஆம்தேதி சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. நவம்பர் 23ஆம்தேதி நடக்க வேண்டிய தேர்தல் நவம்பர் 25ஆம்தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது.

5.26 கோடி வாக்காளர்கள், 51 ஆயிரத்து 756 வாக்குச் சாவடிகள் என ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் சும்மா அமர்க்களப்பட இருக்கிறது.

நாமும் ஆவலுடன் காத்திருப்போம் பாலைவனப் புயல் யாரை நோக்கி வீசப் போகிறது என்று!

களத்தை வலம் வருவோம்

கட்டுரையாளர் குறிப்பு:

மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

சென்னையின் ஆதரவு… நன்றி தெரிவித்த ஆப்கான் வீரர்கள்… பாபர் ரியாக்சன்!

கரையை கடந்த ‘தேஜ்’… நகரத் தொடங்கிய ’ஹாமூன்’: புயல் எச்சரிக்கை கூண்டு!

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts