கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!

அரசியல் ஐந்து மாநில தேர்தல் சிறப்புக் கட்டுரை

மோகன ரூபன்

தெலங்கானா தேர்தல் நிலவரம்

அடுத்தமாதம் சட்டமன்றத் தேர்தலை சந்திக்க இருக்கும் ஐந்து மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. தென் இந்திய மாநிலமான தெலங்கானா, நவம்பர் 30ல் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.

தெலங்கானாவில், பாரத ராஷ்ட்டிர சமிதி கட்சி ஆட்சியில் இருக்கிறது. கல்வகுந்தல சந்திரசேகர் ராவ் எனும் கே. சந்திரசேகர் ராவ் முதல்வராக இருக்கிறார். ஒன்பது ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் உதித்ததில் இருந்தே சந்திரசேகர் ராவ்தான் முதல்வர்.

தெலங்கானாவில் மொத்தம் 119 சட்டமன்றத் தொகுதிகள். அதில் 115 வேட்பாளர் களின் பெயர்களை கடந்த ஆகஸ்ட் 21ஆம்தேதியே சந்திரசேகர் ராவ் அறிவித்து விட்டார். எஞ்சிய நான்கு தொகுதிகளுக்கும் கூட வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் சிறுசிறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. சந்திரசேகர் ராவ் இந்தமுறை கஜ்வல், காமரெட்டி என்று 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

பி.ஆர்.எஸ் கட்சி மூன்றாவது முறையாக முடிசூடும், 95 முதல் 105 இடங்களில் பாரத ராஷ்ட்டிர சமிதி வெற்றி பெறும் என்ற அபார நம்பிக்கையில் இருக்கிறார் சந்திரசேகர் ராவ்.

புதிய முதல்வருக்கான போட்டி

அவரது மகள் கவிதாவுக்கும் அந்த நம்பிக்கை இருக்கிறது. ‘தெலங்கானாவில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். ஹாட்ரிக் வெற்றி என்பதில் எங்களுக்கு 100 சதவிகித நம்பிக்கை இருக்கிறது. தெலங்கானா மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். 95 முதல் 100 இடங்களைப் பிடிப்பதே இலக்கு’ என்று ஆணித்தரமாக பரப்புரை செய்து வருகிறார் கவிதா.

கவிதா

தெலங்கானாவில் இந்தமுறை காங்கிரஸ் கட்சியின் கை உயர்ந்து இருக்கிறது. புதிய வேகத்துடன் தேர்தல் களத்தில் புகுந்து இருக்கிறது காங்கிரஸ்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவராக இருப்பவர் அனுமுலா ரேவந்த் ரெட்டி. மல்கஜ்கிரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. இவர். புதிய முதல்வருக்கான போட்டியில் இவருக்கும், சந்திரசேகர் ராவுக்கும் கிட்டத் தட்ட சமவாய்ப்பு இருப்பதாக ஒரு கருத்துக் கணிப்பில் தெரிய வந்திருக்கிறது.

அனுமுலா ரேவந்த் ரெட்டி

ஆனால், யார் கண்பட்டதோ தெரியவில்லை, காங்கிரஸ் கட்சியில் முறுகல்கள், திருகல்கள் தொடங்கி விட்டது. அந்த கட்சியின் மூத்த தலைவர் பொன்னால லட்சுமையா, வேட்பாளர் தேர்வில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னுரிமை கோரி டெல்லி சென்றார். அங்கே காங்கிரஸ் தலைவர்களைப் பார்க்க முயன்றார். முடியவில்லை. அந்த கடுப்பில் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, பாரத ராஷ்ட்டிர சமிதி கட்சியில் தன்னை இணைத்து கொண்டு விட்டார் பொன்னால லட்சுமையா.

பொன்னால லட்சுமையா

இந்தநிலையில், டெல்லியில் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் நடந்த காங்கிரஸ் மத்திய தேர்தல் குழுவின் கூட்டத்துக்கு மறுநாள், அக்டோபர் 15ஆம்தேதி, 55 வேட்பாளர்களைக் கொண்டு முதல் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டது.

(காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் சோனியா காந்தி, சல்மான் குர்ஷித், மல்லிகார்ஜூன கார்கே, உள்பட பலர் பங்கேற்ற நிலையில் ராகுல்காந்தி அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. ராகுல் அந்தக்கூட்டத்தை புறக்கணித்தது அது இரண்டாவது முறை!)

காங்கிரஸ் வெளியிட்ட முதல் பட்டியலின்படி அனுமுலா ரேவந்த் ரெட்டி, கோடங்கல் தொகுதியில் போட்டியிடப் போகிறார் என்பது தெரிய வந்தது.

கோடங்கல், விகராபாத் மாவட்டத்தில், மகபூர்நகர் மக்களவை தொகுதிக்குள் உள்ள சட்டமன்ற தொகுதி. 2009, 2014ல் தெலுங்குதேசம் வென்ற தொகுதி இது. 2018ல் பி.ஆர்.எஸ் கட்சியின் பட்னம் நரேந்தர்ரெட்டி 9 ஆயிரத்து 319 வாக்குகள் வித்தியாசத்தில் இங்கே வென்றார். தற்போது நடப்பு எம்.எல்.ஏ அவர்தான்.

கலகலக்க வைத்த பட்டியல்

காங்கிரஸ் கட்சியின் இரண்டாவது வேட்பாளர் பட்டியல் கடந்த 27ஆம்தேதி வெளி வந்தது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் உள்பட 45 வேட்பாளர்களின் பெயர்கள் அதில் இடம் பெற்றிருந்தன.

முகமது அசாருதீன்

இந்த இரண்டாவது பட்டியல் காங்கிரஸ் கட்சியை கொஞ்சம் கலகலக்க வைத்து விட்டது என்றே சொல்ல வேண்டும். பட்டியல் வெளிவந்தபோது அதில் வேட்பாளராக தனது பெயர் வரும் என்று தெலங்கானா காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலத் தலைவர் ஷேக் அப்துல்லா சோகைல் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தார். பாவம். பட்டியலில் அவரது பெயரே இல்லை.

’நாற்பத்து மூன்று ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றுகிறேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு இல்லை. காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ரேவந்த் ரெட்டி, இஸ்லாமியர்களுக்கு எதிரானவர். ஆர்.எஸ்.எஸ். பின்னணி உள்ள அவரை மாநிலத் தலைவராக்கியதன் மர்மம் என்ன?’ என்று கேட்டு, 8 பக்க ராஜினாமா கடிதத்தை மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அனுப்பி, கட்சி விலகி விட்டார் ஷேக் அப்துல்லா சோகைல்.

ஷேக் அப்துல்லா சோகைல்

காங்கிரஸ் கட்சியின் தெலங்கானா மாநில மூத்த தலைவர்களில் ஒருவர் வெங்கல்ராவ். கொக்கட்பள்ளி தொகுதி தனக்குக் கிடைக்கும் என்ற ஆவலில் இருந்த இவர், அந்த சீட் கிடைக்காத நிலையில் குமுறி அழுதது தனிக்கதை.

‘கட்சியில் புதுமுகங்களுக்குத்தான் வாய்ப்பு தருகிறார்கள். மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை’ என்றுகூறி கட்சியை விட்டு கழன்று விட்டார் வெங்கல்ராவ்.

தெலங்கானாவில் பத்து சதவீத வாக்குகள் இஸ்லாமியர்களின் வாக்குகள். அவர்களது வாக்குகள் அதிகம் செறிந்திருக்கும் இடம் ஐதராபாத்.

இரண்டாவது பட்டியலில் அதை முன்னிட்டே முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனுக்கு ஐதராபாத்தில் உள்ள ஜூப்ளி ஹில்ஸ் தொகுதி வழங்கப் பட்டுள்ளது. இது, அந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான பி.விஷ்ணு வர்தன் ரெட்டியிடம் அதிருப்தியை ஏற்படுத்தி விட்டது.

‘ஐதராபாத்தில் காங்கிரசுக்கு வெற்றி வாய்ப்புள்ள ஒரே தொகுதி ஜூப்ளி ஹில்ஸ் தொகுதிதான். அதைப் போய் அசாருதீனுக்குத் தூக்கிக் கொடுத்து விட்டீர்களே. எல்லாத் தரப்பு மக்களும் வாழும் அந்த தொகுதியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவருக்கு அங்கே எப்படி சீட் தரலாம்?’

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சுயேச்சையா? பாஜகவா?

Telangana Assembly Election 2023 Situation
பி.விஷ்ணுவர்தன் ரெட்டி

இப்படி கேட்டு காங்கிரசில் இருந்து விலகுவதாக அறிவித்து விட்டார் பி.விஷ்ணு வர்தன் ரெட்டி. இவர் பி.ஜே.ஆர் என அழைக்கப்படும் ஜனார்த்தன ரெட்டியின் மகன். 2004 தேர்தலில் ஜூப்ளி ஹில்ஸ் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இவர் இருந்தவர். 2014, 2018 தேர்தல்களில் இதே தொகுதியில் பி.ஆர்.எஸ். கட்சியின் மாகந்தி கோபிநாத்திடம் வெற்றி வாய்ப்பை இழந்தவர்.

பி.விஷ்ணுவர்தன் ரெட்டி ஜூபிளி ஹில்ஸ் தொகுதியில் சுயேச்சையாக களமிறங்குவார் என கருதப்படுகிறது. அவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து வேட்பாளர் ஆனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தெலங்கானா பிரதேச காங்கிரஸ் கட்சியின் முதன்மைப் பொறுப்பில் இருந்த எம்.சரஸ்வதி, ஆசிஃபாபாத் தொகுதி மீது கண்வைத்திருந்தார். அந்த தொகுதி ஷியாம் நாயக் என்பவருக்கு ஒதுக்கப்பட, எம்.சரஸ்வதி, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிவிட்டார். தேர்தலின்போது ஷியாம் நாயக்குக்கு எதிராக அவர் வேலை செய்வார் என்பது உறுதியாகி விட்டது.

Telangana Assembly Election 2023 Situation
எம்.சரஸ்வதி

வாரங்கல் மாவட்டம் பார்கல் தொகுதி கிடைக்காத ஏமாற்றத்தில் காங்கிரஸ் கட்சியின் வெங்கட்ராம் ரெட்டி, அந்த தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.

இப்படி காங்கிரசில் இருந்து பல தலைவர்கள் கழன்றநிலையில் கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி பாரதிய ஜனதாவில் இருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருக்கிறார் என்பது நல்ல செய்தி.

Telangana Assembly Election 2023 Situation
கோமதி ரெட்டி ராஜகோபால் ரெட்டி

பாரதிய ஜனதா கட்சி அக்டோபர் 22ஆம்தேதி 52 வேட்பாளர்கள் கொண்ட முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், 3 எம்.பி.க்கள் உள்பட பலர் இடம்பெற்று இருந்தார்கள்.

பாஜகவின் டி.ராஜாசிங் என்பவர், முகமது நபி குறித்து அவதூறு செய்து கட்சி நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் பாஜகவில் சேர்க்கப்பட்டவர். அவருக்கு சீட் தரப்பட்டிருக்கிறது. ராஜாசிங், கோஷமகால் தொகுதியில் மீண்டும் போட்டி யிடுகிறார்.

Telangana Assembly Election 2023 Situation
டி.ராஜாசிங்

தெலங்கானாவைப் பொறுத்தவரை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள நலத்திட்டங்களை நம்பியே பாரதிய ஜனதா களம் இறங்கி உள்ளது. வாரிசு அரசியலை பாரதிய ஜனதா எதிர்த்து வருகிறது.

தெலங்கானாவில் வாரிசு அரசியல் நிலவுகிறது. வாரிசு அரசியலில் இருந்து தெலங்கானாவை விடுவிக்க பாரதிய ஜனதாவால் மட்டுமே முடியும்’ என்ற மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தெலங்கானாவில் பி.ஆர்.எஸ்., காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகளுக்கு இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

மும்முனை போட்டி

‘சட்டமன்றத் தேர்தலில் மட்டுமல்ல, 2024 மக்களவைத் தேர்தலிலும்கூட யாருடனும் கூட்டணி இல்லை’ என்று பி.ஆர்.எஸ் கட்சியின் தலைவரும், மாநில முதல்வருமான சந்திரசேகர ராவ் ஏற்கெனவே அறிவித்து விட்டார்.

கடந்த 2018 தேர்தலில் தெலங்கானாவில் சந்திரசேகரராவின் பி.ஆர்.எஸ் கட்சி, மொத்தம் உள்ள 144 தொகுதிகளில் 88 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. (வாக்கு சதவீதம் 47.4)

காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் வெற்றி பெற்றது. (வாக்கு சதவீதம் 28.7) தெலுங்கு தேசத்தின் மக்கள் கூட்டணி 22 இடங்களைக் கைப்பற்றி இருந்தது. ஏ.ஐ.எம்.ஐ.எம். 7 இடங்கள். சுயேச்சைகள் 2. பாஜக ஒரு இடத்தைப் பிடித்திருந்தது

இதோ இப்போது ஆரம்பமாகி விட்டது அடுத்த சுற்று. தெலங்கானாவில் தேர்தல் முடிவு எப்படி இருக்கு

ம்? நம்மைப்போலவே ஆவலுடன் காத்திருக்கிறார்கள் பலரும்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கட்டுரையாளர் குறிப்பு:

மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.

உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.

மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!

தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு!  5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4

சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3

ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?

5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு?  அலசல் மினி தொடர்!

 

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *