மோகன ரூபன்
இயற்கை எழில்கொஞ்சும் மிசோரம்
‘மி’ என்றால் மக்கள், ‘சோ’ என்றால் மலை ‘ரம்’ என்றால் நிலம். இந்த மூன்று சொற்களையும் அப்படியே சேர்த்துச் சொன்னால் மிசோரம். மலையில் வாழும் மக்களின் நாடு என்பது இதற்கு அர்த்தம்.
மிசோரம் நான்கு பக்கமும் நிலம் சூழ்ந்த மாநிலம். கிழக்கிலும், தெற்கிலும் மியான்மர் நாடு. வடக்கில் திரிபுரா, அசாம், மணிப்பூர் மாநிலங்கள். மேற்கில் வங்கதேசம் எனப்படுகிற பங்களாதேஷ். மியான்மர் என்ற பர்மாவுடனும், பங்களாதேஷூடனும் மிசோரத்துக்கு 722 கிலோ மீட்டர் நீள எல்லையுண்டு.
அடர்காடுகள், மலைகள், தேசியப்பூங்காக்கள் நிறைந்த இயற்கை எழில்கொஞ்சும் அழகிய மாநிலம் மிசோரம். மாநிலத்தில் 84.5 சதவிகிதம் முதல் 91 சதவிகிதம் பகுதி காடுகள்தான்.
பல்வேறு பழங்குடி இனமக்கள் வாழும் மாநிலம் இது. பழங்குடிகளில் பெரும்பான்மை யானவர்கள் மிசோ இனத்தைச் சேர்ந்தவர்கள்.
மிசோ பழங்குடியினர் பேசும் மொழிக்குப் பெயர் லூசெய். இதைத்தவிர மேலும் 9 வகையான மொழிகள் மிசோரத்தில் புழக்கத்தில் உள்ளன.
மிசோ மக்கள், சீனாவின் யாலுங் ஆற்றுப் பகுதியில் இருந்து பழங்காலத்தில் மிசோரத்தில் வந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படுகிறது. மியான்மரில் வாழும் சின் இனத்தவர்களுக்கும், மிசோக்களுக்கும்கூட நெருங்கிய தொடர்பு உள்ளது. இந்த இரு இன மக்களும் கூட்டாக குக்கிகள் என அழைக்கப்படுகிறார்கள்.
மிசோரத்தின் மக்கள் தொகை வெறும் 11.2 லட்சம்தான். (2014ஆம் ஆண்டு கணக்குப்படி) சிக்கிம் மாநிலத்துக்கு அடுத்தபடி இந்தியாவில் மிகக்குறைவாக மக்கள் வாழும் மாநிலம் இது. ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 52 பேர் வசிக் கிறார்கள்.
மாநில மக்கள் தொகையில் 87 சதவிகிதம் பேர் கிறிஸ்துவர்கள். 8.5 சதவிகிதத்தினர் புத்த மதத்தினர். 2.7 சதவிகிதம் பேர் இந்துக்கள். மிசோரத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 91.33 சதவிகிதம்!
வேளாண்மையும், சுற்றுலாவும்
வேளாண்மையும், சுற்றுலாவும்தான் மிசோரத்தின் முதன்மைத் தொழில்கள்.
மியான்மர் எல்லையையொட்டியுள்ள சம்பாய் மாவட்டம் நெல்விளைச்சலுக்குப் பெயர் பெற்ற பகுதி. மிசோரத்தின் நெல் கூடை என்ற இந்த பகுதியை அழைப்பார்கள்.
மாநிலத்தின் 44 சதவிகிதப் பகுதிகளில் மூங்கில் பயிரிடப்படுகிறது. இந்தியாவின் வணிகரீதியிலான மூங்கில் உற்பத்தியில் மிசோரத்தின் பங்கு 14 சதவிகிதம்.
மலை மீதுள்ள சுற்றுலா நகரங்கள் மிசோரத்தில் அதிகம். மாநிலத் தலைநகரமான அய்சோல் கூட 1,132 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு மலை நகரம்தான். 1890ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நகரம் இது.
மாநில அருங்காட்சியகம், பாரா பஜார் என்ற உள்ளூர் கைவினைப் பொருட் களுக்கான சந்தை, சாலமன் தேவாலயம் போன்ற பல அம்சங்கள் அய்சோல் நகரில் உண்டு. ஆண்டுக்கு 215 செ.மீ. வரை மழையைச் சந்திக்கும் நகரம் அய்சோல்.
இந்தியாவிலேயே மிக அமைதியான நகரம் அய்சோல்தான். காரணம், இந்த நகரத்து சாலைகளில் வாகனங்கள் ஹார்ன் ஒலியெழுப்பத் தடையுள்ளது. மாநிலம் முழுவதும் கூட இதுபோன்ற தடை உள்ளது. இந்தியாவில் இப்படி ஹார்ன் எழுப்பத் தடையுள்ள ஒரே மாநிலம் மிசோரம்தான்.
அதுபோல, 2009ஆம் ஆண்டில் இருந்து மிசோரம் மாநிலத்தில் திருவிழாக்களின் போது பட்டாசுகள் வெடிக்கவும், வாண வேடிக்கைகள் நடத்தவும்கூட தடை இருக்கிறது.
கண்ணைக் கவரும் அழகிய பூக்கள், அருவிகள், பறவைகள், விலங்குகள் மிசோரத்தில் ஏராளம் தாராளம். 645 வகையான பறவை இனங்கள் இங்கே வாழ்கின்றன.
சிவப்பு வாண்டா என்ற ஆர்க்கிட் வகை பூ, மிசோரத்தின் மாநில மலர். நடனமாடும் பெண் வடிவத்தில் இருக்கிற ஓர் அரியவகை பூ, மிசோரத்தின் பேர் சொல்லும் பூக்களில் ஒன்று. இந்த பூ, குட்டை பாவாடையுடன் ஒரு பெண் கைகளை விரித்து நடனமாடுவதைப்போன்ற தோற்றத்தில் இருக்கும். பேஷன் என்ற கொடித்தோடைப் பழத்துக்கும் மிசோரம் புகழ்பெற்றது.
சாப்சார் குட் உள்பட பல திருவிழாக்கள் மிசோரத்தில் குதூகலமாகக் கொண்டாடப்படுகின்றன. சேரா என்ற மிக பழமையான மூங்கில் நடனம், மிசோரம் மக்களால் மகிழ்வுடன் ஆடப்படுகிறது. மாநில நடனமும் இதுதான்.
மிசோரத்தின் அழகுக்கு மேலும் அழகூட்டும் பல அருவிகள் உள்ளன. அந்த அருவிகளில் ஒன்று வேடாங் அருவி. ஈரடுக்கு அருவி இது.
அதுபோல, 2 ஆயிரத்து 157 மீட்டர் உயரமுள்ள பாங்புய் சிகரம், மிசோரத்தின் மிக உயரமான மலைச்சிகரம். நீலப்புகை சூழ்ந்துநிற்கும் இந்த சிகரம், மிசோரம் மாநில மக்களுக்கு உயரமானது மட்டுமல்ல புனிதமானதும் கூட.
பாலா டிப்போ என்ற பாலாக் ஏரி மிசோரத்தின் மிகப்பெரிய ஏரி. டாம்டில் என்ற அழகிய ஏரியும் மிசோரத்தில் உண்டு. டம்தில் என்றால் கடுகு ஏரி என்று அர்த்தம். குளிர்காலத்தில் மஞ்சள் நிற கடுகு வயல்கள் புடைசூழ நிற்கும் டம்தில் ஏரியின் அழகைக் காண ஆயிரம் கண்கள் போதாது.
மிசோரம், 1895ஆம் ஆண்டு பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
அதன் பிறகு அசாம் அரசின் கட்டுப்பாட்டின்கீழ், லூசாய் மலை மாவட்டம் என மிசோரம் அழைக்கப்பட்டது. 1954ல் அது மிசோ மலைமாவட்டம் என்ற பெயரைப் பெற்றது.
1972ல் மத்திய அரசால் நேரடியாக நிர்வகிக்கப்படும் யூனியன் பகுதியாக மிசோரம் மாறியது. மிசோரம் என்ற பெயர் அப்போதுதான் வந்தது. 1987ஆம் ஆண்டு மிசோரம் தனிமாநிலமாக உருவெடுத்தது.
மாநிலத்தின் முதல் முதல்வராக பதவியேற்றவர் சுங்கா. மிசோ யூனியன் அமைப்பைச் சேர்ந்த இவர், 1972 முதல் 1977 வரை முதல்வராக இருந்தார்.
மிசோரத்தில் மொத்தம் 11 மாவட்டங்கள். 40 சட்டமன்றத் தொகுதிகள்.
மிசோரத்தின் மிகப்புகழ்பெற்ற மண்ணின் மைந்தர்கள் யார் யார் என்றால் லால்தன் ஹாவ்லாவைச் சொல்லலாம். இவர் காங்கிரஸ் கட்சி சார்பாக 5 முறை முதல்வராக, மொத்தம் 21 ஆண்டுகள் முதல்வர் பதவியில் இருந்தவர். 9 முறை சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டவர்.
மிசோரத்தைச் சேர்ந்த சியோன்னா சன்னா என்பவர் மிகப்பெரிய குடும்பஸ்தர். இவருக்கு மொத்தம் 39 மனைவிகள், 94 குழந்தைகள், 33 பேரக்குழந்தைகள். சியோன்னா சன்னா 76ஆவது வயதில் இறந்துபோனார். இவரது சாதனை கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
மிசோரத்தைச் சேர்ந்த மாமி வர்டே புகழ்பெற்ற பாடகியும், கவிஞரும் ஆவார். ஜெஜி மிகச்சிறந்த கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவர்.
மிசோரம் மாநிலத்தின் தற்போதைய முதல்வராக இருப்பவர் சோரம் தங்கா. இவர் மிசோ தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்.
வரும் நவம்பர் 7ஆம்தேதி, மிசோரம், ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது.
இந்தமுறை மிசோ தேசிய முன்னணியை ஆட்சிக் கட்டிலில் இருந்து அகற்ற, சோரம் மக்கள் அமைப்பு முழுமூச்சுடன் போராடும் என எதிர்பார்க்கப்படுதால் பரபரப்பு நிலவுகிறது.
மலைசூழ்ந்த மாநிலம் எதிர்கொள்ள இருக்கும் தேர்தலுக்காக ஆவலுடன் காத்திருப்போம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
தெலங்கானா… வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! – 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு… ராஜஸ்தான் யாருக்கு?
சந்திர கிரகணம்: கோயில்கள் நடை அடைப்பு விவரம்!
பெரும் சிக்கலில் இந்தியா: ஹர்திக் பாண்டியா அணிக்கு திரும்புவாரா?