சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் செல்வ கணபதி மற்றும் தேனியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலார் டிடிவி தினகரன் வேட்பு மனுக்கள் இன்று (மார்ச் 28) ஏற்கப்பட்டுள்ளது.
எடப்பாடி, ஓமலூர், சேலம் மேற்கு, சேலம் தெற்கு, சேலம் வடக்கு, வீரபாண்டி ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய நாடாளுமன்றத் தொகுதி சேலம்.
இத்தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வ கணபதி, அதிமுக வேட்பாளர் விக்னேஷ், பாமக வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மனோஜ் குமார் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 52 பேர் போட்டியிடுகின்றனர்.
நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், இன்று (மார்ச் 28) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் பெயர் சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியிலும், சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக புகார் அளிக்கப்பட்டது.
இரண்டு இடங்களில் செல்வ கணபதியின் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருப்பதாக அதிமுக வேட்பாளர் விக்னேஷ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் சிலர் வாய்மொழியாக தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவியிடம் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் அடிப்படையில் திமுக வேட்பாளர் செல்வ கணபதியின் வேட்புமனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அதற்கு செல்வகணபதி தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “தனது பெயர் வாக்காளர் பட்டியலில் இரண்டு இடங்களில் இடம்பெற்றிருப்பதை முன்பே கண்டறிந்து, அதை நீக்கக் கோரி தேர்தல் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பெயரை நீக்கக் கோரி அளித்த மனுவின் நகலை தேர்தல் அதிகாரியிடம் செல்வ கணபதி சமர்பித்த நிலையில், அவரது வேட்பு மனு ஏற்கப்பட்டதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வேட்புமனுவும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சார வாகனத்தில் வந்து டிடிவி தினகரன் வேட்புமனு செய்ததாகவும், மேலும் தினகரனின் வழக்கு விவரங்கள் குறித்து வேட்புமனுவில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் குற்றம்சாட்டி டிடிவியின் மனுவை பரிசீலனை செய்யக்கூடாது என திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இதற்கு குற்றச்சாட்டுகளுக்கு டிடிவி தினகரன் தரப்பில் உரிய விளக்கம் அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அவரது மனுவும் ஏற்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிங்கு ராஜா 2 : பிரம்மாண்ட செட்… இவ்வளவு செலவா?
கெஜ்ரிவாலை பதவி நீக்கக் கோரிய மனு தள்ளுபடி!