மோகன ரூபன்
தென்னிந்திய மாநிலம்தான் தெலங்கானா. ஆனால் கொஞ்சம் வடக்கின் சாயல் கொண்ட மாநிலம் இது. தெலங்கானாவை, ‘வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு’ என்பார்கள். அந்த அளவுக்கு இந்தியாவின் வடக்கையும் தெற்கையும் இணைக்கின்ற ஒரு வளாகம் இது.
வட இந்தியாவின் பல திருவிழாக்கள் தெலங்கானாவிலும் கொண்டாடப் படுவது வழக்கம். கோதாவரி, கிருஷ்ணா நதிகள் தென்னிந்தியாவில் நுழைவதற்கான நுழைவாயிலே தெலங்கானாதான். கோதாவரி, கிருஷ்ணா மட்டுமல்ல, மொத்தம் 18 ஆறுகள் தெலங்கானாவில் பாய்கின்றன.
தக்காண பீடபூமியில், கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் மேற்கே பாந்தமாக அமைந்திருக்கிற மாநிலம் தெலங்கானா.
தெலுங்கு பேசும் மக்கள் அதிகம் வாழும் தெலங்கானா பகுதி, இந்திய விடுதலைக்கு முன்னால் ஐதராபாத் நிஜாமின் ஆட்சியின்கீழ் இருந்தது. அன்றைய ஐதராபாத் அரசின் ஆட்சி மொழி உருது. அதோடு தனி நாணயம், தனிக்கொடி.
ஐதராபாத் நிஜாமின் 224 ஆண்டு கால ஆட்சி, 1948ஆம் ஆண்டுடன் முடிந்தது. அதன்பின் 1956ஆம் ஆண்டு வரை ஐதராபாத் மாநிலத்தின் கீழ் தெலங்கானா தொடர்ந்தது.
தெலங்கானா கனா தொடங்கியது எப்போது?
1956ல் ஆந்திர மாநிலம் உருவானபோது, ஆந்திராவுடன் தெலங்கானா இணைக்கப்பட்டு, ஒன்றுபட்ட ஒரு பெரிய ஆந்திர மாநிலம் உருவாக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் 4ஆவது பெரிய மாநிலம் ஆந்திரம்.
தெலங்கானா பகுதி மக்களுக்கு தெலங்கானா என்ற தனிமாநிலம் வேண்டும் என்ற கனா, 1952ஆம் ஆண்டே ஆரம்பமாகி விட்டது. கொத்தப்பள்ளி ஜெயசங்கர் என்கிற பேராசிரியர் ஜெயசங்கர் இந்த தனிமாநிலப் போராட்டத்தைத் தூக்கிப் பிடித்தவர்களில ஒருவர். அவர் போல பலரும் பங்கேற்ற போராட்டம் அது.
தெலங்கானா தனிமாநில போராட்டத்தின் குவிமையமாக இருந்த இடம் உஸ்மானியா பல்கலைக்கழகம்.
2001 ஏப்ரல் 27ஆம்தேதி கே.சந்திரசேகர ராவ் (தெலங்கானாவின் தற்போதைய முதல்வர்) பாரத ராஷ்ட்டிரிய சமிதி அமைப்பைத் தோற்றுவித்தார்.
அந்த அமைப்பின் குறிக்கோள் ஒன்றே ஒன்றுதான். ‘ஒரு தனி தெலங்கானா மாநிலம். ஐதராபாத் அதன் தலைநகரம்’ தெலங்கானா என்ற கனவு, 2014ஆம் ஆண்டு ஜூன் 2ஆம்தேதி நனவானது. ஆந்திரத்தில் இருந்து தெலங்கானாவின் பத்து மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு புதிய மாநிலம் உருவானது. இந்தியாவின் 29ஆவது மாநிலமாக தெலங்கானா தோற்றம் கண்டது.
இந்தியாவில் ஒரே மொழி பேசும் ஒரு பகுதி இரண்டு மாநிலங்களாகப் பிரிக்கப் பட்டது அதுவே முதல்முறை.
தெலங்கானா பெயர்க் காரணம்!
இந்திய அளவில் பரப்பளவில் 12ஆவது பெரிய மாநிலம் தெலங்கானா. ஒரு தனி நாடாக தெலங்கானா இருந்தால், உலகில் பெரிய நாடுகள் வரிசையில் 33ஆவது இடத்தில் இருக்கும். இன்றைய தெலங்கானாவில் 33 மாவட்டங்கள், 129 நகராட்சிகள், 3.8 கோடி மக்கள்.
தெலங்கானா மாநிலத்துக்கு ஏன் அந்த பெயர் வந்தது? இதற்கு பலவிதமான காரணங்களைச் சொல்கிறார்கள். மகாபாரத காலத்தில் இந்தப் பகுதியில் தெலவானா என்ற மக்கள் இனம் வாழ்ந்ததால், இந்த பகுதிக்கு தெலங்கானா என்ற பெயர் வந்தது என்று ஒரு கணிப்பு.
தெலுங்கு மொழியைக் குறிப்பிடும் தெலிங்கா என்ற வார்த்தையில் இருந்து தெலங்கானா வந்தததாகவும் ஒரு கணிப்பு உள்ளது. தெலங்கானா பகுதிக்கு திரிலிங்க தேசம் என்ற பெயர் ஒருகாலத்தில் இருந்திருக்கிறது. காலேசுவரம், ஸ்ரீசைலம், திரக்சாரமம் (பீமேசுவரம்) ஆகிய மூன்று பழமையான சிவன் கோயில்கள் உள்ள இந்த திரிலிங்க தேசம் என்ற பெயரே தெலங்கானாவாக மாறியது என்ற கருத்தும் உண்டு.
ஐதராபாத் நிஜாமின் சாம்ராஜ்ஜியம் மற்றும் மராத்தி பேசும் மராத்வாடா பகுதிகளை தங்களிடம் இருந்து பிரித்துக்காட்ட தெலங்கானா பகுதி மக்கள் தெலுங்கு அங்கனா என்ற சொல்லைப் பயன்படுத்தினார்கள். அதில் இருந்துதான் தெலங்கானா என்ற பெயர் வந்ததாகவும் சொல்லப்படுகிறது.
இன்றைய தெலங்கானாவில் 77 சதவிகிதம் மக்கள் பேசும்மொழி தெலுங்கு. 12 சதவிகிதம் பேர் பேசும் மொழி உருது. சாதவாகனர்களில் தொடங்கி காகதேயர்கள், ராஷ்டிரகூடர், பாமினி, தக்காண சுல்தான்கள், முகலாயர், நிஜாம்கள் என தெலங்கானா பகுதி பயணித்த வரலாற்றுப் பாதை மிக நீளமானது.
தலைநிமிர்ந்து நிற்கிறது எவற்றில்..?
‘தெலங்கானாவில் என்னங்க இருக்கு? இந்தப் பகுதி தனி மாநிலமாகி என்ன செய்யப் போவுது?’ என்று ஒரு கேலி கலந்த கேள்வி அந்த காலத்தில் இருந்தது.
ஆனால், அந்த கேள்வியை அடித்து நொறுக்கிவிட்டு இன்று தலைநிமிர்ந்து நிற்கிறது தெலங்கானா.
இந்தியாவில் ஐந்தாவது பணக்கார மாநிலம் இது. தனிநபர் வருமானக் கணக்கின்படி பார்த்தால் இந்திய மாநிலங்களில் தெலங்கானாவுக்கு 3ஆவது இடம். நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் பார்த்தால் ஒன்பதாவது இடம்.
தெலங்கானாவின் தலைநகரம் ஐதராபாத். ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாதிரி ஐதராபாத்துடன் கை கோர்த்தபடி இருக்கும் நகரம் செகந்திராபாத்.
‘தோட்டங்களின் நகரம்’, ‘முத்துகளின் நகரம்’ என்றும் ஐதராபாத்தைச் சொல்வார்கள். ஹைதர் என்றால் சிங்கம், அபாத் என்றால் நகரம். ஆகவே, ஐதராபாத் என்ற பெயருக்கு சிங்க நகரம் என்பது அர்த்தம்.
ஐதராபாத் என்றதுமே நினைவுக்கு வருவது சார்மினார் கட்டடமும், கமகம பிரியாணியும்தான். சார்மினார், முசி ஆற்றின் கிழக்கே, 1591ல் கட்டப்பட்ட, 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி. நான்கு மினார்கள் (கோபுரங்கள்) இருப்பதால் அது சார்மினார்.
ஐதராபாத்தில் உள்ள இதய வடிவ உசைய்ன் சாகர் ஏரி, பெரிய புத்தர் சிலை, வைர வர்த்தகத்துக்குப் பேர் பெற்ற கோல்கொண்டா கோட்டை, ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டி, பிர்லா மந்திர், லாட் பஜார், ஃபலக்னுமா கோட்டை, நிஜாம் அருங்காட்சியகம் யாவும் புகழ் பெற்றவை. மென்பொருள் தொழிலுக்கும், சினிமா ஸ்டூடியோக்களும் பேர் பெற்ற நகரம் ஐதராபாத்.
வைரத்தின் பிறப்பிடம்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தெலங்கானாவில் வாரங்கல், அதிலாபாத், கம்மம், மகபூப் நகர், நிஜாமாபாத், மேதக், கரீம்நகர், நால்கொண்டா, ரங்கா ரெட்டி போல பல மாவட்டங்கள் உள்ளன.
காமரெட்டி மாநிலம் தெலங்கானாவின் தானியக்கூடை என்று கருதப்படுகிறது. நால்கொண்டா மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளிக்கு, பட்டு நகரம் (சில்க் சிட்டி) என்று ஒரு பெயர் உண்டு. நிர்மல் நகரம் பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்குப் பேர்பெற்ற நகரம். வாரங்கல்லின் ஆயிரம் தூண் ஆலயம் புகழ்பெற்றது.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ள சமத்துவ ராமானுஜர் சிலை தெலங்கானாவுக்கு ஒரு புதிய வரவு.
கருப்புத் தங்கம் என்று அழைக்கப்படும் நிலக்கரியை, அதிக இருப்பு வைத்திருக் கும் தென்னிந்திய மாநிலங்களில் தெலங்கானாவும் ஒன்று. உலகப் புகழ்ப்பெற்ற கோகினூர் வைரத்தின் பிறப்பிடமும் தெலங்கானாதான்.
தெலங்கானாவில் வெள்ளைத் தங்கம் என்று அழைக்கப்படும் பருத்தி, ஆண்டுக்கு 25 லட்சம் டன் வரை உற்பத்தியாகிறது.
அல்போன்சா, நீலம், பங்கனப்பள்ளி, தோதாபுரி போன்ற பலவகை மாம் பழங்களுக்கு தெலங்கானா புகழ்பெற்றது. தெலங்கானா மாநிலத்தின் அதிகாரபூர்வ பழமே மாம்பழம்தான்.
தெலங்கானா புகழ் மைந்தர்கள்!
தெலங்கானா மாநிலத்தின் புகழ்மிக்க நபர்கள் யார் யார் என்று கேட்டால், தெலங் கானாவின் பகத்சிங் என்று போற்றப்படும் விடுதலைப் போராட்ட வீரர் அனாபேரி பிரபாகர் ராவ், கவிஞர் நந்தினி சித்தா ரெட்டி, இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான விஞ்ஞானி முரளி திவி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரபல யூடியூப்பர் அலேக்யா ஹரிகா போன்ற பெயர்களைச் சொல்லலாம்.
தெலங்கானாவில் 119 சட்டமன்றத் தொகுதிகள், 17 நாடாளுமன்றத் தொகுதிகள்.
9 ஆண்டுகளுக்கு முன் தெலங்கானா மாநிலம் பிறந்ததில் இருந்தே அங்கு முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான டி.ஆர்.எஸ். (தெலங்கானா ராஷ்ட்டிர சமிதி) கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. சமீபத்தில் இதை பாரத ராஷ்டிர சமிதி என்று பெயர் மாற்றினார் அதன் தலைவர் கேசிஆர்.
வரும் நவம்பர் 30ஆம்தேதி ஒரே கட்டமாகத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது தெலங்கானா.
தேர்தலை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருப்பவர்கள் தெலங்கானா மக்கள் மட்டுமல்ல. நாமும்தான்.
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன், மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!
ராவணனின் மாமனார் வீடு… ராஜஸ்தான் யாருக்கு?
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
‘KH 234’ அப்டேட்: நாயகன் மீண்டும் வரார்!
தமிழ்நாட்டில் பெண் வாக்காளர்கள் அதிகம்… மிகப் பெரிய தொகுதி எது? சிறிய தொகுதி எது?