கோடைக்கால விளையாட்டு பயிற்சிக்கு கட்டணம்: எடப்பாடி எதிர்ப்பு!

Published On:

| By Selvam

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் மாணவ, மாணவிகளின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் மாவட்டந்தோறும் கோடை கால பயிற்சி முகாம் நடைபெறும்.

இவ்விளையாட்டுப் பயிற்சி முகாமில் 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். அதன்படி இந்தாண்டு நாளை (ஏப்ரல் 29) முதல் மே 13 வரை கால்பந்து, வாலிபால், கபடி, கூடைப்பந்து உள்ளிட்ட பல விளையாட்டுகளுக்கு கோடை கால சிறப்பு பயிற்சி வழங்கப்படும்.

அதற்காக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சிக் கட்டணமாக சென்னையில் 500 ரூபாயும், இதர மாவட்டங்களில் 200 ரூபாயும் கட்டவேண்டும் என்று தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,

“கோடை கால பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலானோர் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படித்து வருபவர்கள். அவர்களிடம் பயிற்சிக்கு கட்டணம் வசூலிக்க ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பிற்கு, விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களும், அவர்களது பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் மாணவர்களின் விளையாட்டுப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில், கோடை கால பயிற்சி முகாமிற்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல், 18 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சிறப்பு விளையாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வந்தது.

ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இப்பயிற்சி முகாமில் பங்கேற்று தமிழகத்தில் விளையாட்டுத் துறையில் தங்களது திறமைகளை நிரூபித்து வந்தனர்.

திமுக அரசின் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, எந்த ஆண்டும் இல்லாத புதுமையாக இந்த ஆண்டு கோடை கால பயிற்சி முகாமில் கலந்துகொள்ளும் மாணவர்களிடமிருந்து பயிற்சிக் கட்டணமாக 500 ரூபாய் மற்றும் 200 ரூபாய் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

இது விளையாட்டு ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் திமுக தமிழக மாணவர்களிடையே விளையாட்டு ஆர்வத்தை ஊக்கப்படுத்தும் முயற்சி.

விளையாட்டில் ஆர்வமுள்ள, துடிப்புமிக்க மாணவர்களை முடக்கிப் போடும் இந்த நாடகமாடி அரசின் செயலை, அதிமுக சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

விளையாட்டை ஊக்கப்படுத்துவோம் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டே, மறுபக்கம் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டுமென்றும், வழக்கம்போல் கோடை சிறப்பு பயிற்சி முகாமிற்கு எந்தவிதமான கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நீலகிரி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி செயலிழப்பு: எல்.முருகன் ரியாக்‌ஷன்!

நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்… சென்னை போலீஸ் வார்னிங்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share