காங்கிரஸ் கட்சியில் இரண்டு பிரிவுகள்: பிரதமர் மோடி தாக்கு!

அரசியல்

மோடியை வெறுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவும், மோடியை வெறுப்பதால் காங்கிரஸுக்கு இழப்பு ஏற்படும் என்று இன்னொரு பிரிவும் கருதுவதாக பிரதமர் மோடி இன்று (பிப்ரவரி 18) தெரிவித்தார்.

பாஜக தேசிய நிர்வாகக் குழு மற்றும் அனைத்து மாநில பிரதிநிதிகள் கூட்டம் டெல்லியில் நேற்று தொடங்கி, இன்று இரண்டாவது நாளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியபோது,

“என் வீட்டைப் பற்றி நினைத்திருந்தால் கோடிக்கணக்கான ஏழைகளுக்கு நான் வீடு கட்டியிருக்க மாட்டேன். ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்கிறேன்.

இந்த 10 ஆண்டுகால ஆட்சியில், பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த பணிகளை தீர்த்து வைத்தோம். குறிப்பாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதன் மூலம் 5 நூற்றாண்டுகளின் காத்திருப்புக்கு முடிவு கட்டினோம்.

பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தோம். இந்த வழக்குகளை விரைவாக கையாள சிறப்பு நடவடிக்கைகள் எடுத்தோம்.

கடந்த 10 ஆண்டுகளில், நாட்டில் பெண்களின் வாழ்க்கையை எளிதாக்க பாஜக அரசு பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடையும், 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம்.

இந்தியாவை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்த்துவோம். இது மோடியின் உத்தரவாதம். இந்தியா இன்று பெரிய இலக்குகளை நிர்ணயித்து வருகிறது.  2029-ம் ஆண்டு நடைபெறும் யூத் ஒலிம்பிக் போட்டிக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். 2036-ல் நமது நாட்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

பொருட்களின் தேவைக்காக வெளிநாடுகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து வருகிறோம். எதிர்காலத்தில் வெளிநாடுகளில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான எண்ணெய் மற்றும் உரங்களை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நிலையை உருவாக்குவோம்.

இந்தியா 1 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாற கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் ஆனது. 2014 ஆம் ஆண்டில், இந்தியா 11வது பெரிய பொருளாதார நாடாக இருந்தது. தற்போது அதனை 5-வது இடத்திற்கு கொண்டு வர 10 ஆண்டுகள் மட்டுமே எடுத்துக் கொண்டோம்.

தேர்தல்களுக்கான தேதி இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால், ஜூலை, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளிநாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஏற்கனவே எனக்கு அழைப்புகள் வந்துள்ளது. இதன் பொருள் என்ன? மற்ற நாடுகளும் பாஜக அரசு மீண்டும் ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கையில் உள்ளன.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பில் காங்கிரஸ் அக்கறை காட்டவில்லை. 5 ஆண்டுகளுக்கு முன்பு, இந்திய விமானப்படைக்கு ரஃபேல் ஜெட் கிடைப்பதை தடுக்க அவர்கள் எல்லா முயற்சிகளையும் செய்தனர். நமது பாதுகாப்புப் படையினர் நடத்திய சர்ஜிக்கல் ஸ்டிரைக் குறித்து கேள்வி எழுப்பினர். சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடந்தபோது ஆதாரம் கேட்டார்கள்.

காங்கிரஸ் குழப்பான நிலையில் உள்ளது. மோடியை அதிகபட்சமாக வெறுக்க வேண்டும், அவர் மீது தனிப்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்த வேண்டும் என்று காங்கிரஸில் உள்ள ஒரு பிரிவு கூறுகிறது.

மோடியை வெறுப்பதை நிறுத்துங்கள், காங்கிரஸுக்கு இதனால் அதிக இழப்பு ஏற்படும் என்று இன்னொரு பிரிவு கூறுகிறது” என்று தெரிவித்தார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“அடுத்த 100 நாட்கள்”: பாஜகவினருக்கு மோடி சொன்ன அட்வைஸ்!

’வெயில் அதிகரிக்கும் மக்களே’ : வானிலை மையம் எச்சரிக்கை!

+1
0
+1
2
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *