புத்தாயிரம் ஆண்டான 2000த்தில் உருவான மாநிலம் இது. மொத்தம் 90 சட்ட மன்றத் தொகுதிகள்.
சத்தீஷ்கரில் நடந்த 2000, 2003, 2008, 2013 ஆகிய நான்கு தேர்தல் முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியானவை. முதல் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 48 தொகுதிகளைக் கைப்பற்றி இருந்தது. அடுத்து வந்த மூன்று தேர்தல்களில் வென்ற பா.ஜ.க முறையே 50, 50, 49. 2018ல்தான் இந்த நிலைமை மாறியது. 68 இடங்களுடன் காங்கிரஸ் கட்சி பெரிய அளவில் பெரும்பான்மை பெற்றது. அந்தமுறை பாரதிய ஜனதா 15 இடங்களை பெற்று எதிர்க்கட்சியாக மாறியது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் தற்போது முதல்வராக இருப்பவர் காங்கிரஸ் கட்சியின் பூபேஷ் பாகேல். இவர் இதர பிற்பட்ட வகுப்பினரான குர்மி பிரிவைச் சேர்ந்தவர்.
பாகேல் விவசாயி ஒருவரின் மகன். சத்தீஷ்கர் மாநிலத்தில் 40 விழுக்காடு மக்கள் இதர பிற்பட்ட வகுப்பினர்தான். இதன் காரணமாக, பூபேஷ் பாகேல், இந்திய அளவில் காங்கிரஸ் கட்சியின் ஓ.பி.சி முகமாகப் பார்க்கப்படுகிறார்.
இந்தமுறை காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாகேல், கருத்துக்கணிப்பில் 45 சதவிகிதத்துடன் முன்னணியில் இருக்கிறார். ஆகவே, இந்தமுறையும் அவர் வெற்றிக்கனி பறிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
களத்தில் இருக்கும் கட்சிகள்
சத்தீஷ்கரில் காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சிகள் இடையில்தான் உண்மையான மோதல். ஆனால், களத்தில் இன்னும் நிறைய கட்சிகள் இருக்கின்றன.
ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் (ஜே.சி.சி.-ஜே) கட்சி, 84 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
சத்தீஷ்கர் மாநிலத்தில் பிராந்திய கட்சி என்ற அங்கீகாரம் பெற்ற ஒரே கட்சி இந்த ஜே.சி.சி.-ஜே கட்சிதான். சத்தீஷ்கர் மாநிலத்தின் முதல் முதல்வரான அஜித் ஜோகியின் மகன் அமித்ஜோகிதான் இந்த கட்சியின் தலைவர்.
பகுஜன் சமாஜ் கட்சி 49 தொகுதிகளிலும், சமாஜ்வாடி கட்சி 26 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இதுபோக, ஆம் ஆத்மி, அரவிந்த் நெதம் தலைமையிலான சர்வ ஆதிவாசி தளம், சந்த்ராம் நெதம் தலைமையிலான கோண்ட்வானா கணதந்திரி கட்சி போன்றவையும் களத்தில் உள்ளன.
இப்படி பல்வேறு கட்சிகள் களமாடி, பலமுனைப் போட்டி ஏற்பட்டால் அது பாரதிய ஜனதாவுக்கே வாய்ப்பாக மாறும்.
சத்தீஷ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், துர்க் மாவட்டத்தில் உள்ள படான் தொகுதியில் போட்டியிடுகிறார். துர்க் பகுதி, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் இடம்.
மாமா மருமகன் மட்டுமல்ல… மும்முனை போட்டி
முதல்வர் பூபேஷ் பாகேலை எதிர்த்து படான் தொகுதியில் பாரதிய ஜனதா நிறுத்தி யிருக்கும் வேட்பாளர் விஜய் பாகேல். இவர் துர்க் நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி. அதுமட்டுமல்ல. இவர் முதல்வரின் மருமகனும் கூட.

மாமா, மருமகன் இடையே இருமுனைப் போட்டி நிலவிய நிலையில், எதிர்பாராத திருப்பமாக இங்கே வேட்பு மனுத்தாக்கல் செய்திருக்கிறார் ஜனதா காங்கிரஸ் சத்தீஷ்கர் (ஜே.சி.சி.-ஜே) கட்சியின் தலைவரான அமித்ஜோகி.

‘அது என்னப்பா? படான் தொகுதியில் 23 ஆண்டுகளாக ஒரே குடும்பம்தான் போட்டி போடுது. தாவு குடும்பத்துக்கு படான் தொகுதியை எழுதிவச்சிட்டாங்களா? இது என்ன மாமா மருமகன் (சாச்சா-பாத்திச்சா) தொகுதியா?
இவர்களது பிடியில் இருந்து படான் தொகுதியை விடுவிக்க வேண்டும். அதற்காகவே இந்த தொகுதியில் நான் போட்டியிடுகிறேன். நான் முதல்வர் பாகேலுக்கு எதிராக நிற்கவில்லை. ஊழலுக்கு எதிராக நிற்கிறேன். படான் தொகுதி இப்போதுதான் உண்மையான தேர்தலைச் சந்திக்கிறது’ என்று பொங்கி இருக்கிறார் அமித்ஜோகி.
அது மட்டுமல்ல. ‘நான் நினைத்தால் இரண்டு தொகுதிகளில் போட்டியிடலாம். பாதுகாப்பான, வெற்றி வாய்ப்புள்ள தொகுதியில் நிற்கலாம். ஆனால், அதை நான் விரும்பவில்லை. படான் தொகுதியில் நான் துணிச்சலாகப் போட்டியிடுகிறேன்’ என்றும் அமித்ஜோகி கூறியிருக்கிறார்.
அமித்ஜோகியின் திடீர் நுழைவு காரணமாக படான் தொகுதியில் இப்போது மும்முனைப் போட்டி ஏற்பட்டிருக்கிறது.
சத்தீஷ்கரில், பஸ்தர், சார்குஜா என்ற இரண்டு மாவட்டங்கள் மிக முக்கியமான மாவட்டங்கள். இந்த இரு மாவட்டங்களில் ஒரு கோடி பழங்குடி மக்கள் வாழும் 26 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. சத்தீஷ்கரில் அதிகாரத்துக்கான நுழை வாசல் இந்த இரு மாவட்டங்கள்தான். ஆகவே, இந்த இரு மாவட்டங்கள் மீது பல்வேறு கட்சிகள் கண் வைத்துள்ளன.
பிரியங்கா காந்தியின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்…
அண்மையில் சத்தீஷ்கர் மாநிலத்தின் கைராகர், பிலாஸ்பூர் பொதுக்கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி சார்பாக பிரியங்கா காந்தி வாத்ரா பிரச்சாரம் செய்தார். அப்போது ஏராளமான வாக்குறுதிகளை பிரியங்கா அள்ளி இறைத்திருக்கிறார்.
‘காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால் அமைச்சரவை முதல் கூட்டத்திலேயே விவசாயிகளின் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியாகும்’ என்பது அந்த அறிவிப்புகளில் ஒன்று.
அதுபோல, ‘மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி, 500 ரூபாய் மானிய விலையில் எல்.பி.ஜி சிலிண்டர், 200 யூனிட் வரை இலவச மின்சாரம், வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள 17.5 லட்சம் மக்களுக்கு வீடு, பீடி இலை சேகரிப்பவர் களுக்கு ஆண்டு போனஸ் 4 ஆயிரம் ரூபாய், ஆறாயிரம் பள்ளிக்கூடங்கள் தரம் உயர்த்தப்படும், 500 நகர்ப்புற தொழிற்கூடங்கள் ஆயிரமாக்கப்படும்’
இதுபோன்ற தேர்தல் வாக்குறுதிகளையும் பிரியங்கா அள்ளித் தெளித்திருக்கிறார்.
முதல்வர் பூபேஷ் பாகேலும் அவர் பங்குக்கு, முழு மதுவிலக்கு, நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற தேர்தல் வாக்குறுதிகளை அளித்திருக்கிறார்.
ஓபிசி வாக்குகள்
முன்னமே கூறியதுபோல சத்தீஷ்கர் மாநிலத்தில் 40 விழுக்காடு மக்கள் இதர பிற்பட்ட வகுப்பினர்தான். முதல்வர் பூபேஷ் பாகேல், இதர பிற்பட்ட வகுப்பினர் என்பது அவரது பலம்.
பாரதிய ஜனதா கூட, ஓ.பி.சி. வாக்குகளுக்காக மாநிலத்தின் பா.ஜ.க தலைவராக இருந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த தியோ சாயை கைவிட்டு விட்டு ஓ.பி.சி. யைச் சேர்ந்த அருண் சாவ்வை மாநிலத் தலைவராக்கி இருக்கிறது. சத்தீஷ்கரில் ஓ.பி.சி. வாக்குகள் அந்த அளவுக்கு முதன்மையாகக் கருதப்படுகின்றன.
சத்தீஷ்கரில் முதல்வர் பூபேஷ் பாகேலுக்கு நல்ல பெயர் இருந்தாலும், பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மோசடி, அதன் தொடர்ச்சியாக நடந்த அமலாக்கத்துறை சோதனைகள், கைது நடவடிக்கைகள் பாகேலுக்குப் பின்னடைவாக உள்ளன.
சத்தீஷ்கரில், அரசியல் கட்சிகள் அள்ளித்தரும் வாக்குறுதிகள் எல்லாம் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே உள்ளன. இதர பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களே அதிக அளவில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். அதே வேளையில் பழங்குடி வேட்பாளர்கள் பலர் பொதுத் தொகுதிகளிலும் போட்டி யிடும் அதிசயமும் அங்கே நடக்கிறது. மக்களவை எம்.பி.க்கள் பலர், சட்டமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களாகக் களமிறங்கி புதுஅவதாரம் எடுத்திருக்கிறார்கள்.
சத்தீஷ்கர் மாநிலம் நவம்பர் 7, நவம்பர் 17 ஆகிய தேதிகளில், இரு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கிறது.
காங்கிரஸ் கட்சி ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது பாரதிய ஜனதா வெல்லுமா என்பது டிசம்பர் 3ஆம் தேதியன்று தெளிவாகத் தெரிந்துவிடும்.
(களத்தை வலம் வருவோம்)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6
மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5
தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!-1