ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!

Published On:

| By Kavi

Madhya Pradesh Election 2023 Overview
5 மாநில தேர்தல்  அலசல் மினி தொடர்-9 
மோகன ரூபன்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் பரப்புரை அமர்க்களப்பட்டுக் கொண்டிருக்கிற நேரம் இது. இந்த ஐந்து மாநிலங்களில் ஆகப்பெரிய மாநிலம் மத்திய பிரதேசம் தான். மொத்தம் 230 தொகுதிகள்.

நவம்பர் 17ஆம்தேதி, ஒரே கட்டமாக மத்தியபிரதேசம் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது. 2003, 2008, 2013 ஆகிய மூன்று தேர்தல்களில் பாரதிய ஜனதா ஹாட்ரிக் வெற்றி பெற்ற மாநிலம் இது. 2014 மக்களவைத் தேர்தலில்கூட 80 எம்.பி. தொகுதி களில் 64 தொகுதிகளை  பாஜக அள்ளியது.

2018 சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் காங்கிரஸ் வென்றது. பாரதிய ஜனதாவுக்கு 109 இடங்கள். பெரும்பான்மைக்கு 2 இடங்கள் குறைவு என்ற நிலையில், காங்கிரஸ், 4 சுயேச்சைகள் 2 பகுஜன் சமாஜ், 1 சமாஜ்வாடி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. கமல்நாத் முதல்வர் ஆனார். ஆனால் கமல்நாத் அரசு 15 மாதங்களே நீடித்தது.

சௌஹான்  சாதனை தொடருமா? 

2020 மார்ச் மாதம், காங்கிரஸ் கட்சியின் ஜோதிராதித்ய சிந்தியா அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 22 பேருடன் பாஜகவில் இணைந்து ஆட்சியை மாற்றினார். கமல்நாத்தின் ஆட்சி கவிழ்ந்தது. அதன்பின் மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி. சிவராஜ்சிங் சௌகான் முதல்வர்.

சிவராஜ்சிங் சௌகானுக்கு என்று ஒரு பெருமை உண்டு. பாரதிய ஜனதா கட்சியில் மிக நீண்டகால முதல்வர் இவர்தான். நான்கு முறை முதல்வராகப் பொறுப்பேற்று, 18 ஆண்டுகாலம் இவர் முதல்வராக இருந்திருக்கிறார். புத்னி தொகுதியில் இவர் நான்கு முறை வென்றிருக்கிறார். இந்தமுறையும் அவர் புத்னி தொகுதியில்தான் போட்டியிடுகிறார்.

பொதுவாக ஆளும்கட்சி மீது வாக்காளர்களுக்கு அதிருப்தி நிலவுவது இயல்புதான். அதிலும், 18 ஆண்டுகாலம் முதல்வராக நீடித்து வரும், சிவராஜ்சிங் சௌகான் மீது வாக்காளர்களுக்கு எக்கச்சக்க அதிருப்தி நிலவுகிறது.

பா.ஜ.க தலைமை கூட இந்தமுறை சிவராஜ்சிங் சௌகான்  மீது நம்பிக்கையை இழந்து விட்டதைப் போலத் தோன்றியது. காங்கிரசில் இருந்து கழன்று வந்து தற்போது மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் ஜோதிராதித்ய சிந்தியா, நரேந்திர டோமர், பிரகலாத்சிங் படேல் போன்றவர்களை மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில், பாரதிய ஜனதா களமிறக்கி உள்ளது.

ஆனால், சிவராஜ்சிங் சௌகானே முதல்வராகத் தொடரட்டும் என ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பச்சைக் கொடி காட்டிவிட்டநிலையில், பா.ஜ.க வெற்றி பெற்றால் மீண்டும் சிவராஜ்சிங் சௌகானே முதல்வர் என்று தெரிகிறது.

மத்திய பிரதேசத்தில் ஓ.பி.சி எனப்படும் இதர பிற்பட்ட பிரிவினர் அதிகம். மத்திய பிரதேசத்தின் மொத்த வேட்பாளர்களில் 39% பேர் ஓ.பி.சி.தான். பாரதிய ஜனதா 68 ஓ.பி.சி வேட்பாளர்களையும்,  காங்கிரஸ் 59 ஓ.பி.சி வேட்பாளர்களையும் நிறுத்தி யுள்ளது.

சிவராஜ்சிங் சௌகான் ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர் என்பது அவரது மிகப்பெரிய பலம். பாரதிய ஜனதா கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவுக்கான முகம் சௌகான்தான்.

ஆனால், வியாபம், ரேஷன் முறைகேடு குற்றச்சாட்டுகள் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக உள்ளன.

காங்கிரசை பாதிக்கும் கமல்நாத்-திக்விஜய் மோதல்

தலைவர்களின் செல்வாக்கு தொடர்பான கருத்துக் கணிப்பில், காங்கிரஸ் கட்சியின் கமல்நாத், முதல்வர் சிவராஜ்சிங் சௌகானை கிட்டத்தட்ட எட்டிப் பிடிக்கும் தொலைவில்தான் இருக்கிறார். அதாவது தொட்டுவிடும் தூரம்.

மத்திய பிரதேசத்தில் மாற்றத்துக்கான காற்று வீசுகிறது என்ற மெகா நம்பிக்கையில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.

காங்கிரஸ் வெளியிட்ட முதல் கட்ட 144 வேட்பாளர் பட்டியலின்படி கமல்நாத், சிந்த்வாரா தொகுதியில் போட்டியிடுகிறார். அதுபோல, திக்விஜய்சிங்கின் மகன் ஜய்வர்தன், ராகிகாத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதேவேளையில் முதல்வர் சிவராஜ்சிங் சௌகானுக்குப் போட்டியாக புத்னி  தொகுதியில், ராமாயண சீரியலில் அனுமார் வேடத்தில் நடித்த  நடிகர் விக்ரமை காங்கிரஸ் கட்சி நிறுத்தியுள்ளது. நடிகர் விக்ரம் அண்மையில்தான் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தவர்.

மத்திய பிரதேச தேர்தலில் கமல்நாத், திக்விஜய்சிங் இடையிலான உள்கட்சி மோதல் காங்கிரசுக்கு ஒரு சிக்கலாக இருக்கிறது.

ம.பி.தேர்தலில் இந்தியா கூட்டணி எங்கே?

காங்கிரஸ் கட்சி, மத்திய பிரதேச சட்டமன்றத் தேர்தலில் தனது  ‘இந்தியா கூட்டணி’ கட்சிகளை கண்டுகொள்ளவில்லை. அவற்றுக்கு இடஒதுக்கீடு எதுவும் செய்யாமல் காங்கிரஸ் தனித்தே போட்டியிடுகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தநிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகள், மொத்தமுள்ள 230 தொகுதிகளில் 92 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. ஏ.ஏ.டி 70 தொகுதிகளிலும், சமாஜ்வாதி 43 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 10 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளன.

இந்தியா கூட்டணிக் கட்சிகள் நிற்கும் 92 தொகுதிகளும் காங்கிரசுக்கு மிகச் சிக்கலான தொகுதிகள். 2018 தேர்தலில் இந்த 92 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதுவும் 121 ஓட்டு, 1,234 ஓட்டு என அற்பமான விளிம்புநிலை வெற்றிகள்தான் காங்கிரசுக்குக் கிடைத்தன.

ஷோலே ஜெய் -வீரு

இந்த தேர்தலிலும் இதேபோன்ற நிலை ஏற்பட்டால் காங்கிரசுக்கு அது சிக்கல்தான்.

‘ஆளும் பாரதிய ஜனதா அரசு ஐம்பது சதவிகிதம் கமிஷன் வாங்குவதாக‘ கமல் நாத் குற்றம் சாட்ட, பதிலுக்கு ‘கமல்நாத்தின் 15 மாத ஆட்சியில் பதினைந்தாயிரம் கோடி ஊழல் நடந்ததாக பாரதிய ஜனதா பதில் குற்றம் சாட்டியது தனிக்கதை.

காங்கிரஸ் கட்சியின் ரண்தீப் சுர்ஜேவாலா சும்மா இருந்திருக்கலாம். அவர் கமல் நாத், திக்விஜய்சிங் இரண்டு பேரையும் ஷோலே படத்தில் வரும் ஜெய், வீரு கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டிருந்தார்.

முதல்வர் சிவராஜ்சிங் சௌகானோ, ‘ஜெய், வீரு என்ற இரண்டு பேரும் கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் பணத்தை பங்கு பிரிக்கத் தகராறு செய்தவர்கள்’ என கிண்டல் செய்திருக்கிறார்.

‘மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை 3 குடும்பங்களின் ஆட்சிதான். அந்த 3 குடும்பங்கள் காந்தி குடும்பம், கமல்நாத் குடும்பம், திக்விஜய் சிங் குடும்பம்.

காந்தி, கமல்நாத் குடும்பங்கள் உத்தரவு போடும் குடும்பங்கள். கமல்நாத் குடும்பம் தோல்விப் பழியை ஏற்கும்  குடும்பம்’

இப்படியும் பாரதிய ஜனதா கேலி செய்துள்ளது.

‘மத்திய பிரதேச தேர்தலில் இந்தமுறை 150க்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெற்று சுனாமியைப் போல வெற்றியைச் சுருட்டப் போகிறது. முதல்வர் சௌகான் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள். ஜோதி ராதித்ய சிந்தியா, நரேந்திரசிங் டோமர், பிரகலாத்சிங் படேல் போன்றவர்களின் கூட்டுத் தலைமை எடுபடாது. அளவுக்கு அதிகமான சமையல்காரர்கள் கேக்கை கெடுத்து விடுவார்கள்’ என்று காங்கிரஸ் கட்சி கூறி வருகிறது.

இந்த தேர்தலில் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், மழை வெள்ளம், காரிப் சோயாபீன்ஸ் உற்பத்தி பாதிப்பு போன்றவை பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ளன.

மத்திய பிரதேசத்தில் 47 தொகுதிகள், பழங்குடிகள் அதிகம் வாழும் தொகுதிகள். மொத்த வாக்குகளில் 20 சதவிகிதம் வாக்கு பழங்குடியினரின் வாக்கு. சித்தி பகுதி பாரதிய ஜனதா தலைவர் பிரவேஷ் சுக்லா, பழங்குடி இளைஞர் மீது சிறுநீர் கழித்த சம்பவம் வேறு பாரதிய ஜனதாவுக்கு எதிராக உள்ளது.

மோடியை மட்டுமே நம்பும் பாஜக

மத்திய பிரதேசம் பத்து டிவிசன்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்தூர் பகுதியில் 37 தொகுதிகள், குவாலியர், சம்பல் பகுதியில் 34 தொகுதிகள்.  குவாலியர், சம்பல் பகுதிகளில் பாரதிய ஜனதாவின் செல்வாக்கு படுபாதாளத்தில் இருக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியா கைகொடுக்கத் தவறினால் இந்த பகுதிகளில் பெரும் சரிவை பாரதிய ஜனதா சந்திக்க வேண்டியிருக்கும்.

ம.பி. தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு இருக்கிற ஒற்றை நம்பிக்கை பிரதமர் நரேந்திர மோடியின் செல்வாக்கு ஒன்றே. அதை நம்பியே பாரதிய ஜனதா களமிறங்கி நிற்கிறது.

காங்கிரஸ் கட்சி அதன் தேர்தல் வாக்குறுதியில், பழைய ஓய்வூதிய திட்டம், 100 யூனிட் வரை இலவச மின்சாரம், மகளிருக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை, கடன்தள்ளுபடி, 500 ரூபாய்க்கு சமையல் சிலிண்டர் போன்ற வாக்குறுதிகளை அள்ளிவிட்டு பரப்புரை செய்து வருகிறது.

அண்மையில் பிரியங்கா காந்தி அவரது பிரச்சாரத்தில், காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் மாணவ மாணவியர்களுக்கு 500 முதல் 1500 ரூபாய் வரையிலான மாத கல்வி உதவித்தொகை என்ற வாக்குறுதியை அளித்துள்ளார்.

கமல்நாத் அவர் பங்குக்கு, சாதிவாரி கணக்கெடுப்பு, சமன் அவ்சார் ஆயோக் (சம வாய்ப்பு கமிஷன்) அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

கருத்துக் கணிப்புகள் என்ன சொல்கின்றன?

கருத்துக்கணிப்புகளைப் பொறுத்தவரை பாரதிய ஜனதா 153 இடங்களையும், காங்கிரஸ் 58 இடங்களையும் கைப்பற்றும் என டைம்ஸ் நவ் கணித்துள்ளது.

ஆனால், மற்ற கருத்துக்கணிப்புகள், காங்கிரஸ் கட்சிக்கு 117 முதல் 119 இடங்கள் கிடைக்கும் எனவும், பாரதிய ஜனதா 101 முதல் 106 இடங்கள் வரை பெறும் எனவும் கணித்துள்ளன.

எது எப்படியோ? மத்திய பிரதேசம் ஒரு மாற்றத்துக்காக காத்திருப்பது போன்றே தோன்றுகிறது. மாறுதல் ஒன்றே நிரந்தரமானது என்பார்கள். அது மத்திய பிரதேசத்துக்கும் பொருந்தும் இல்லையா?

(களத்தை வலம் வருவோம்)

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share