மாநில உரிமைக்கு முதன்முதலில் குரல் கொடுத்தது திமுக தான்!

Published On:

| By Minnambalam

ஜாசன்

மாநில உரிமைக்கு அன்றும் இன்றும் தொடர்ந்து குரல் கொடுத்து வருவது திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

தேர்தல் அரசியல் தான் மக்களுக்கு நன்மை செய்வதற்கான நல்வாய்ப்புக்கான  வழி என்று அண்ணா முடிவு செய்தார். மத்தியில் அதிகாரங்கள் குவிந்து இருப்பதை சுட்டிக்காட்டி முதலில் பேசியவர் அண்ணாதான். 60களில் ஒரு சில மாநிலங்களை தவிர எல்லா மாநிலங்களிலும் காங்கிரஸ் தான் ஆட்சி செய்தது. காங்கிரஸ் முதல்வர்கள் நினைத்தபடி எல்லாம் முடிவு எடுக்க முடியாது. டெல்லி தலைமை சொல்வதை தான் அவர்கள் செயல்படுத்த வேண்டும். காங்கிரஸின் இந்தப் போக்கு மாநில உரிமையை நசுக்க பார்க்கிறது என்று அண்ணா விமர்சனம் செய்தார்.

1.5.1962 டெல்லி மாநிலங்கள் அவையில் அண்ணாவின் கன்னிப் பேச்சு இப்படித்தான் தொடங்கியது. “கம்பீரம் நிறைந்த இந்த அவையில் பேசப்படும் கருத்துகளோடு என் கருத்துகளையும் உடன் எடுத்துச் சொல்ல வாய்ப்பு தந்த உங்களுக்குப் பெரிதும் நன்றி சொல்லிக் கொள்கிறேன். என்னுடைய ஆசை இந்த அவையை கவனித்து கற்றுக் கொள்வதுதான் பேசி பிரச்சினைகளை கிளறுவது அல்ல !”  என்று  தான் ஆரம்பித்தார்.

குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மீது நடந்த விவாதத்தில் தான் அண்ணா முதன்முதலில் பேசினார். அவரது பேச்சு வட இந்தியத் தலைவர்களை யோசிக்க வைத்தது. வியந்து பார்த்தார்கள். எல்லோரும் அவர் பேசுவதை உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தார்கள். அண்ணா என்ற   அறிவு ஜீவி அவர்களுக்கு அறிமுகமானது அன்றுதான்.

வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் இருந்தது அவரது கன்னிப் பேச்சு. முதிர்ந்த அரசியல் தலைவரின் சபை நாகரிகம் என்ற எல்லைக்கோட்டை தாண்டாமல் ஆளுங்கட்சியின் வெற்றி ரகசியத்தை இப்படிப் போட்டு உடைத்தார். காங்கிரஸ் கட்சியின் பலம் அதனிடம் இல்லை; எதிர்க்கட்சிகளின் பலவீனத்தில்தான் காங்கிரஸ் கட்சியின் பலம் இருக்கிறது. அண்ணா அன்று  சொன்னது இன்றைய பாஜகவுக்கும் பொருந்தும்.

அவரது பேச்சு எதிர்க்கட்சியின் உரிமைக்குரலாக இருந்தது. சமத்துவம் என்பது எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவது அல்ல. எல்லோருக்கும் சம வாய்ப்பு தருவதாகும் என்று அண்ணா காங்கிரஸ் கட்சிக்கு அன்றே அறிவுரை வழங்கினார்.

‘வடக்கு வாழ்கிறது… தெற்கு தேய்கிறது’ என்பதை மத்திய அரசுக்கு அவர் நினைவுபடுத்திய உதாரணம் மிகவும் அருமை. “தமிழகத்திற்கு ஓர் எஃகு ஆலை வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆனால், நீங்கள் என்ன செய்தீர்கள்? அந்த கனரக இயந்திர இலாகாவை எங்கள் மாநில மந்திரிக்கு தந்தீர்கள். தொழிற்சாலையை அல்ல. இப்போதைக்கு இல்லை என்று அவரை விட்டே நீங்கள் சொல்ல வைக்கிறீர்கள். இதுதான் காங்கிரஸ் அரசின் மாற்றான் தாய் மனப்பான்மை” என்று சொல்லி, சாடினார். இன்று வரை அப்படித்தான் இருக்கிறது.

தேசிய ஒருமைப்பாடு என்று சொல்வது முன்னுக்குப் பின் முரணான ஒரு வாசகம் என்ற விமர்சனத்தை அவர் குறிப்பிட்டார். “ஒருமைப்பாடு பெற்ற மக்கள் சமுதாயம் தான் நாடாகிறது. அப்படி ஒரு நாடு உருவாகி இருந்தால் ஒருமைப்பாட்டுக்கு இப்போது என்ன அவசியம் வந்தது?”  என்று கேள்வி கேட்டார் அண்ணா.

தனது உரையில் கடைசியாக, “ஜனநாயகம், சோஷலிசம், தேசியம் ஆகிய மூன்றில் ஜனநாயகம் உருக்குலைக்கப்பட்டு இருக்கிறது.   சோஷலிசம் சாரமற்றதாக்கப்பட்டிருக்கிறது. தேசியம் தவறான பொருளுக்கு உள்ளாக்கப்பட்டு இருக்கிறது” என்று சொல்லி முடித்தார்  அண்ணா.  இன்றுவரை இந்தக் கசப்பான உண்மை அப்படியே தான் இருக்கிறது.

60களில் நாடாளுமன்றம் இளைஞர்களுக்கான களம் அல்ல. 1967ஆம் ஆண்டு தேர்தலில் நாடாளுமன்றத்தை இளைஞர்களுக்கான களமாக அண்ணா மாற்றினார். 1967இல் திமுக 25இடங்களில் போட்டி போட்டு 25இடங்களில் வெற்றி பெற்றது. அந்தத் தேர்தலில் நாடாளுமன்றத்தின் கதவுகளை இளைஞர்களுக்காகச் சற்று அகலமாக திறந்து வைத்தார் அண்ணா.

திமுக தான் நாடாளுமன்றத்திற்கு இளைஞர்களை முதலில் அறிமுகப்படுத்தியது. அதுவும் படித்த இளைஞர்களை. பேராசிரியர் அன்பழகன், ஜி.விஸ்வநாதன், குசேலர், சிட்டிபாபு, செ.கந்தப்பன், எஸ்.டி.சோமசுந்தரம், முரசொலி மாறன்…  இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். இது தவிர மூத்த உறுப்பினர்களாக நாஞ்சில் மனோகரன், இரா.செழியன் ஏற்கனவே திமுக உறுப்பினர்களாகத் தொடர்ந்து இருந்து வந்தார்கள்.

ஜி.விஸ்வநாதன் 1967 முதல் 77வரை பத்தாண்டுக் காலம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். ஒருமுறை நாடாளுமன்ற வளாகத்தில் மாநிலங்களவை துணைத் தலைவர் வயலட் ஆல்வா உடன் ஜி.விஸ்வநாதன் பேசிக் கொண்டிருந்தார். இவர் மார்கெட் ஆல்வாவின் மாமியார். இவர்கள் அருகே வந்த நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் ஒருவர் வயலட் ஆல்வாவிடம் “யார் இந்த பையன்?” என்று கேட்டார், விஸ்வநாதனைச் சுட்டிக்காட்டி . அப்போது வயலட் ஆல்வா, “இவர் பையன் அல்ல… இவரும் உங்களைப் போல் நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்றத்தில் இவரை போன்ற இளைஞர்களை நீங்கள் பார்த்தால் அவர்கள் திமுக உறுப்பினர்கள் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்”  என்றார்.

வேட்பாளர்களைத் தேடித் தேடி தேர்வு செய்தார் அண்ணா. எஸ்.டி.எஸ். பொதுப்பணித்துறையில் பொறியாளராக இருந்தார். அவரை பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி தேர்தலில் போட்டியிட வைத்தார் அண்ணா. அவர் தோற்கடித்தது, ஆர்.வெங்கட்ராமன் என்ற மூத்த காங்கிரஸ் தலைவரை. வந்தவாசி தொகுதியில் போட்டியிட்ட ஜி.விஸ்வநாதனுக்கு அண்ணா தேர்தல் பிரச்சாரம் செய்யும்போது, “என்னை விட அதிகம் படித்தவர் விஸ்வநாதன். எம்.ஏ.பி.எல். பட்டதாரி. இவரைப் போன்றவர்கள்தான் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும்” என்று அவரை உயர்த்தி, தன்னை தாழ்த்திக் கொண்டு பிரச்சாரம் செய்தார் அண்ணா.

திமுக 1967இல் 25 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் இருந்தபோது அந்த அவையில் இருந்த மூத்த உறுப்பினர்கள் ஆச்சார்யா வினோபாவே கிருபாளினி, அசோக் மேத்தா, பெருந்தலைவர் காமராஜர், டாக்டர் கரன்சிங், ராம் மனோகர் லோகியா, மொரார்ஜி தேசாய், இந்திரஜித் குப்தா, ஏ.கே.கோபாலன், மதுலிமாயி, என்.ஜி.ரங்கா, பிலுமோடி, எஸ்.ஏ.டாங்கே, ஜார்ஜ் பெர்னாண்டஸ், தமிழகத்தைச் சேர்ந்த பி.ராமமூர்த்தி, கல்யாணசுந்தரம் போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் இப்படி ஆளுங்கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் பிரபலமான விவரமான அரசியல் தலைவர்களை திமுக இளைஞர் எம்.பிக்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

ஆனால், திமுக எம்.பிக்கள் மாநில உரிமைகள், ஹிந்தி திணிப்பு என்று அவர்கள் பேசாத பிரச்சினைகளே இல்லை என்று எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார்கள். அவர்கள் குரல் எல்லா மாநிலத்துக்குமாக இருந்தது. ராஜஸ்தானி மொழியை எட்டாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்று கொண்டு வந்து தீர்மானத்தைக் கூட திமுக உறுப்பினர்கள் ஆதரித்து பேசினார்கள். அப்போது அவர்கள் வாதம், ‘இந்தி மொழிக்குத் தரும் அதே முக்கியத்துவம் மற்ற மொழிகளுக்கும் இருக்க வேண்டும். அரசியல் சட்டத்தில் எல்லா மொழிகளும் சமம் என்று சட்டத்தைத் திருத்த வேண்டும்’ என்று பேசினார்கள் திமுக உறுப்பினர்கள்.

ஆட்சிக் கலைப்பை அது எந்த மாநிலமாக இருந்தாலும் அதைக் கடுமையாக எதிர்த்தது திமுக. அதைத்தொடர்ந்து தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து கொண்டிருந்தது திமுக. தனி தெலங்கானாவுக்குக் கூட திமுக குரல் கொடுத்தது. மாநிலக் கட்சியான திமுகவின் தேசிய பார்வை எல்லா மாநிலங்களுக்கான மாநில உரிமையாக அது இருந்தது. நாடாளுமன்றத்தில் அதன் குரல் அப்படித்தான் ஒலித்தது. மத்தியில் அதிகாரம் குவிக்கப்பட்டு இருக்கிறது என்பதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலமுறை அவையில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

1969இல் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜமன்னார் தலைமையில் மாநிலங்களுக்கு அதிக அளவு அதிகாரம் கிடைக்க அல்லது மத்திய அரசு வழங்க என்ன செய்ய வேண்டும். மாநில சுயாட்சிக்கு என்ன வழி. இவை பற்றி ஆராய அன்றைய முதல்வர் கருணாநிதி ஓர் உயர்நிலைக் குழுவை அமைத்தார். அந்தக் குழு அரசமைப்பு சட்டத்தில் பல அடிப்படையான திருத்தங்களைச் செய்ய பரிந்துரை செய்தது. அந்தக் குழு மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் அவசியம் தேவை என்பதை வலுவான எடுத்துக்காட்டுடன் ஆணித்தரமாக பரிந்துரை செய்தது.

1971இல் அந்த அறிக்கை, அன்றைய பிரதமர் இந்திரா காந்திக்கு அனுப்பி வைக்கப்பட்டது .அப்போது மற்ற மாநில முதலமைச்சர்களை கலந்து ஆலோசித்து முடிவுகளைச் சொல்வதாக இந்திரா அம்மையார் சொன்னார். அப்போது பெரும்பான்மையாக காங்கிரஸ்தான் மாநிலங்களில் ஆட்சி செய்தது. எந்த மாநில காங்கிரஸ் முதல்வருக்கும்… ஆமாம், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் தேவை என்று சொல்லும் துணிச்சல் யாருக்கும் கிடையாது. அப்படி இருக்கும்போது எங்கே கலந்து ஆலோசிப்பது?

ஆனாலும் முதலமைச்சராக இருந்த கருணாநிதி மாநில உரிமைக்காக 1974இல் தமிழக சட்டசபையில் ஐந்து நாள் ராஜமன்னார் குழு பரிந்துரைகள் பற்றி விவாதம் நடத்தி ராஜமன்னார் குழு பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்று மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சியைக் கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியலமைப்பு சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி அதை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால், மத்திய அரசு இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அன்றும் சரி… இன்றும் சரி மத்திய அரசு மாநிலங்களுக்கு உரிமையைத் தரத் தயாராக இல்லை என்பதுதான் உண்மை.

அதே சமயம் மாநில உரிமை என்ற விதையை அண்ணா விதைத்தார். அது மிகப்பெரிய விருட்சமாக ஆக்கியது திமுக தலைவர் கருணாநிதி தான். மாநில உரிமை விஷயத்தில் அவர் என்றுமே சமரசம் செய்து கொண்டதில்லை. ஒருமுறை பொதுக்கூட்டத்தில் இந்திரா அம்மையார் கருணாநிதி எதிரியாக இருந்தாலும் நண்பனாக இருந்தாலும் தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருப்பார் என்று பேசினார். அதுதான் உண்மை. அன்றும் சரி இன்றும் சரி மாநில உரிமைக்கான குரலைத் தொடர்ந்து சற்று உரக்க  வலியுறுத்துவது திமுக தான். இதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க வாய்ப்பு இல்லை.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

RCB vs CSK: ‘6 அபார வெற்றிகள்’… பிளே-ஆஃப்-க்கு சென்ற பெங்களூரு!

கோடை மழையில் வெள்ள நிவாரணம்: அப்டேட் குமாரு

மகாராஷ்டிரா: உள்ளே, வெளியே… பாஜகவுக்கு எதிரான பல்முனைத் தாக்குதல்!

இலவச பேருந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைகிறதா? மோடிக்கு ஸ்டாலின் பதில்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share