2024-ஆம் ஆண்டுக்கான தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர், தாய்லாந்தின் தலைநகரான பாங்காக்கில் கடந்த மே 14 அன்று தொடங்கியது.
ஆடவர் ஒற்றையர், இரட்டையர், மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என 5 பிரிவுகளில் இந்த தொடர் நடைபெற்ற நிலையில், அதற்கான இறுதிப்போட்டிகள் இன்று (மே 19) நடைபெற்றன.
இந்த தொடரில், தொடக்கத்தில் இருந்தே சிறப்பாக விளையாடிவரும் இந்தியாவின் நட்சத்திர இணையான சாத்விக் ரங்கிரெட்டி – சிராக் செட்டி இணை, மே 17 அன்று காலிறுதியில் மலேசியாவை சேர்ந்த யாப் ராய் கிங் மற்றும் ஜுனைதி ஆரிஃப் இணையை 21-7, 21-14 என நேர் செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.
பின் மே 18 அன்று நடைபெற்ற அரையிறுதியில், சீன தைபே நாட்டை சேர்ந்த டேங் கய் வெய் – மிங் சே லு இணையை 21-11, 21-12 என அபாரமாக வீழ்த்தி, இறுதிப்போட்டிக்கு முன்னேறினர்.
இதை தொடர்ந்து, இன்று இறுதிப்போட்டியிலும் தங்களது மிகச்சிறப்பான ஆட்டத்தால், யி லியூ – சென் போயங் இணையை 21-15, 21-15 என வீழ்த்தி, பட்டத்தை வென்றுள்ளனர்.
மார்ச் மாதம் நடைபெற்ற பிரென்ச் ஓபன் தொடருக்கு பிறகு, சாத்விக் – சிராக் இணை பெறும் முதல் பட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக விளையாடிய ஆல் இங்கிலாந்து ஓபன், பாட்மிண்டன் ஆசியா சாம்பியன்ஷிப் ஆகிய தொடர்களில் காலிறுதிக்கு கூட முன்னேறாமல், இந்த ஜோடி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
மறுபுறத்தில், மகளிர் இரட்டையர் பிரிவில் சிறப்பாக விளையாடி வந்த இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா – தனிஷா கிராஸ்டா இணை, அரையிறுதியில் 10வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த ஜோங்கோல்பான் கிடிதரக்குல் – ரவின்டா பிரஜோங்ஜெய் இணையிடம் 12-21, 20-22 என போராடி தோற்றது.
இந்த ஆண்டில், இந்த இணை முதல் முறையாக இந்த தொடரிலேயே அரையிறுதிக்கு முன்னேறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, ஆடவர் ஒற்றையர் பிரிவில், காலிறுதியில் தரவரிசையில் 8வது இடத்தில் உள்ள தாய்லாந்தை சேர்ந்த குன்லவுட் விடிட்சர்னை எதிர்கொண்ட 21 வயது இளம் இந்திய வீரரான மெய்ரபா லுவாங் மய்ஸ்னாம், 12-21, 5-21 என நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.
முன்னதாக, முதல் சுற்று ஆட்டத்திலேயே இந்தியாவின் நட்சத்திர வீரரான எச்.எஸ்.பிரணாயை 21-19, 21-18 என மெய்ரபா லுவாங் மய்ஸ்னாம் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
SK 24 : சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் சூப்பர் ஹிட் இயக்குநர்..!
வங்கி கணக்கை முடக்குவதே பாஜகவின் திட்டம் – கெஜ்ரிவால் அட்டாக்!