அதிமுகவில் மீண்டும் ஓ.பன்னீரை சேர்க்கின்ற எந்த திட்டமும் இல்லை என்று உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவரான உதயகுமார்.
இன்று (மே 19) மதுரை செய்தியாளர்களை சந்தித்த அவர்,
“பாராளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பிறகு மீண்டும் அதிமுகவில் ஓ பன்னீர்செல்வம் அவர்களை சேர்க்கத் திட்டமிட்டிருப்பதாகவும் திரை மறைவிற்கு முயற்சிகள் நடப்பதாகவும் எந்தவிதமான அடிப்படை ஆதாரமும் இல்லாமல் பரபரப்புக்காக பல்வேறு தகவல்களை பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் வெளியிட்டு வருகின்றார்கள்.
அம்மாவுடைய மறைவுக்குப் பிறகு முதல் முதலாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் தனக்கு பதவி பறிபோகிறது என்ற ஒரு சூழ்நிலையை வந்தவுடன் பிரிவுக்காக முதன்முதலாக பிள்ளையார் சுழி போட்டவர் தான் ஓபிஎஸ். அதை தொடர்ந்து அம்மா உயிரை கொடுத்து உருவாக்கிய அம்மாவுடைய அரசை காப்பாற்றுவதற்கு நம்பிக்கை தீர்மானம் வந்தபோது ஆதரவு நிலைப்பாடு இல்லாமல் எதிர்த்து வாக்களித்த ஒரு நிலையை சட்டமன்ற த்தில் உருவாக்கியவர்.
அதை தொடர்ந்து கட்சிக்கு எதிராக வாக்களித்தாலும் கட்சியினுடைய ஒற்றுமையின் முக்கியத்துவத்தை கருதி அவரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டு அவருக்கு கட்சியிலே மிக உயர்ந்த பொறுப்பான பொதுச் செயலாளர் அந்தஸ்திலான பொறுப்பு வழங்கப்பட்டது.
ஆட்சியிலே முதலமைச்சர் அந்தஸ்திலான துணை முதலமைச்சர் பதவியும் வீட்டு வசதி வாரியத் துறை பொறுப்பும் வழங்கப்பட்ட து.
ஆனால் கட்சியிலே முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டிய தருணத்தில் எல்லாம், ஒன்று அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவிப்பார். அல்லது மௌனம் சாதிப்பார். இதனால் கட்சினுடைய வளர்ச்சி நடவடிக்கை வரலாறு காணாத வகையிலே பின்தங்கி இருந்ததை நாம் பார்த்தோம்.
சட்டமன்றத்தில் அவருடைய நடவடிக்கைகள் பேச்சுக்கள் அதிமுகவின் கொள்கைக்கு முற்றிலுமாக விலகி இருப்பதை பார்க்க முடிந்தது. அது பதிவிலே இருக்கிறது. ஏடிஎம்கே என்றால் என்ன என்று சின்ன குழந்தையிடம் கேட்டால் அண்ணா டிஎம்கே என்று சொல்வதோடு சேர்த்து ஆன்ட்டி டி எம் கே என்றுதான் சொல்லும். எடப்பாடி அந்த நிலைப்பாட்டில் எள் முனை அளவும் பின்வாங்காமல் நெஞ்சுரத்தோடு இன்றைக்கு திமுக ஆட்சியினுடைய அவலங்களை தொடர்ந்து தோல் உரித்து காட்டிக் கொண்டிருக்கிறார்.அவருக்குத் தோளோடு தோள் கொடுத்து துணை நிற்க வேண்டியவர் அதிமுகவின் எதிர்காலத்தை குழிதோண்டி புதைக்கின்ற ஒரு சூழ்நிலையை சட்டமன்றத்தில் ஏற்படுத்தியதைப் பார்க்கிறபோது தொண்டர்கள் எப்படி பொறுத்துக் கொள்வார்கள்?
ஆகவே பொதுச் செயலாளர் ஒப்புதலோடு இதை நான் சொல்லுகிறேன். எந்த காலத்திலும் ஓ பன்னீர்செல்வம் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் மீண்டும் சேர்ப்பதாக வருகின்ற செய்திகளிலே துளியும் உண்மை இல்லை. இது அடிப்படை ஆதாரம் அற்றது. எந்த ரகசியமான விவாதங்களும் நடைபெறவில்லை என்பதை அழுத்தம் திருத்தமாக ஆணித்தரமாக பொதுச் செயலாளர் உத்தரவோடு நான் இதை நான் ஊடகங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார் உதயகுமார்.
–வேந்தன்
ஸ்டார் பாக்ஸ் ஆபீஸ் வசூல் எவ்வளவு?
ராகுல் காந்தி பிரதமர் ஆவாரா? பிரியங்கா பதில்!