தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அணிந்திருக்கும் விலையுயர்ந்த கை கடிகாரம் குறித்து சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணாமலை, ”இந்திய ராணுவத்தின் ரஃபேல் விமானம் எனக்கு மிகவும் பிடித்தமானது. அதை ஓட்டும் பாக்கியம்தான் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் அதைவைத்து உருவாக்கப்பட்ட வாட்சை அணியும் பாக்கியம் கிடைத்துள்ளது. எனக்கு இது போதும். நான் தேசியவாதி. அதனால் இந்த வாட்சை அணிகிறேன்.
இதை வைத்து பிரிவினைவாதிகள்தான் சர்ச்சை செய்வார்கள். உலகில் இதுபோல 500 வாட்ச்கள்தான் உள்ளது. இதில் என்னுடைய வாட்ச் 149ஆவது வாட்சாகும். அது ஒரு கலெக்டட் எடிஷன், ஸ்பெஷல் எடிஷன். நான் கட்டி இருக்கும் வாட்ச் ரஃபேல் விமான பாகங்களை வைத்து செய்தது.
ரஃபேல் விமான பாகங்களை வைத்து 500 வாட்ச்கள் செய்யப்பட்டன. இது சிறப்புப் பதிப்பு. உலகில் 500 பேரிடம் மட்டுமே இந்த வாட்ச் இருக்கிறது. அதில் ஒன்று என்னிடம் இருக்கிறது. அந்த விமானத்தில் உள்ள பாகங்கள் இதில் இருக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
செந்தில் பாலாஜி கேள்வி

அண்ணாமலையின் இந்தப் பதிலுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பதிவில், ”பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கை கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்ட, 5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரஃபேல் வாட்சை, வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்” என தெரிவித்திருந்தார்.
மேலும் அவர், “வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து 5 லட்ச ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி? வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா? கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா? இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலைதான் வருமா” என்று செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதில் அளித்த அண்ணாமலை, ”பாஜக மாநில தலைவராக தேர்வு செய்யப்படும் முன்பே ரஃபேல் கடிகாரத்தை வாங்கிவிட்டேன். கை கடிகாரம் வாங்கியதற்கான ரசீதுகள் அனைத்தும் தன்னிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், ”நான் அறிவித்ததைவிட ஒரு பைசா அதிகமான சொத்தை யாரேனும் கண்டுபிடித்தால், எனது சொத்துக்கள் அனைத்தையும் அரசிடம் ஒப்படைக்க நான் தயார்.
இதே போல வருமான விவரங்களையும் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் விவரங்களையும் திமுகவினர் மற்றும் திமுக தலைவர்கள் தமிழக சகோதர சகோதரிகளின் முன்னிலையில் வெளியிட தயாரா?” என்று பதிவிட்டிருந்தார்.
அண்ணாமலைக்கு ஆதரவு

இதனால், அண்ணாமலையின் வாட்ச் விவகாரம் பேசுபொருளாகியது. இந்த நிலையில், அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்துகளைப் பதிவிட்டனர். பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, ”ஒரு தலைவரின் கையில் கட்டியிருக்கும் ‘வாட்சை’ விட வேறு ஒரு தலைவரின் தலையிலிருக்கும் ‘விக்’ கின் விலை அதிகம் என்பது தெரியாமல் வம்பை விலை கொடுத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர் உடன்பிறப்புகள்” என தெரிவித்திருந்தார்.
இன்று (டிசம்பர் 19) வெளியிட்டிருக்கும் அவருடைய மற்றொரு பதிவில், “சரக்குகளுக்கு ‘பில்’ கொடுக்காதவர்கள் ‘வாட்ச்’க்கு பில் கேட்பதா” என அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த நிலையில், அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் உண்மையிலேயே அந்த போர் விமானத்தின் பாகங்களை வைத்து தயாரிக்கப்பட்டதா என்று விவாதமும் எழுந்து வருகிறது. இதுகுறித்து ஷாஜகான்.ஆர் (புதியவன்) என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில் விரிவான கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
முகநூலில் விவாதம்
அதில் அவர், “இந்தியா ரஃபேலிடம் விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தது 2016இல். மேற்கண்ட வாட்ச் தயாரானது 2015இல். ஆக, இதற்கும் இந்தியாவுக்கு ரஃபேல் விமானம் வந்தது என்பதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” எனப் பதிவிட்டிருக்கும் ஷாஜகான், “ரஃபேல் விமானத்தின் ஸ்பேர்களால் செய்யப்பட்ட வாட்சை தேச பக்தியின் காரணமாக அணிந்துள்ளேன் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
அப்படி என்றால், அந்த வாட்சை தயாரித்த டஸால்ட் நிறுவனம், டிஷர்ட்கள், தொப்பிகள், குடைகள், கைப்பைகள், வாசனைத் திரவியங்கள், ஸ்டேஷனரிகள் என இன்னும் பல பொருட்களையும் விற்பனை செய்து வருகிறது. ஏன், அதையெல்லாம் அண்ணாமலை வாங்கவில்லை” என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் அவர், ”இந்தியாவுக்கு ரஃபேல் விமானங்களை விற்க ஒப்பந்தம் கிடைத்த காரணத்தால், அந்த நிறுவனம் பெல் & ராஸ் (Bell & Ross) நிறுவனத்திடம் இந்த வாட்ச்களை மொத்தமாக ஆர்டர் கொடுத்து வாங்கியிருக்கும். விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்தவர்களை திருப்தி செய்வதற்காக இந்த வாட்ச்களை அவர்களிடம் வழங்கியிருக்கும்.
இதற்கு, ஆர்டர் கொடுத்தது பாஜக அரசு. பாஜக ஆட்களுக்குக் கிடைத்த வாட்சுகளை தமக்குள் பகிர்ந்து கொண்டிருப்பார்” என்று தெரிவித்திருக்கும் ஷாஜகான், “இதற்கான பில்லை அண்ணாமலை வெளியிடாதவரை இந்த ஊகத்தைத் தவிர்க்க முடியாது” என்றும் “2015இல் வெளியிட்ட லிமிடெட் எடிஷன் கடிகாரம் 2021 வரை விற்பனையில் இருந்திருக்க வாய்ப்பே இல்லை” எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அவர் பதிவிட்டதைப்போன்று, இன்னும் பலரும் அண்ணாமலை கட்டியிருக்கும் வாட்ச் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதுமட்டுமின்றி, அண்ணாமலையின் வாட்ச் குறித்த தேடல்களும் இணையதளத்தை மொய்த்து வருகின்றன. அந்த வகையில் நாம் தேடிப் பார்த்ததில் நமக்குச் சில தகவல்கள் கிடைத்தன.

பெல் & ராஸ் நிறுவனம் தயாரித்த வாட்ச்கள்
ரஃபேல் என்பது பிரான்ஸ் நாட்டின் போர் விமானம் ஆகும். டஸால்ட் நிறுவனத்தின் இந்த போர் விமானத்தைதான் இந்தியாவும் பயன்படுத்தி வருகிறது. ரூ.59ஆயிரம் கோடிக்கு 36 ரஃபேல் போர்விமானங்களை வாங்குவதற்கு கடந்த 2016ம் ஆண்டு பிரான்ஸ் அரசுடன் மத்திய அரசு ஒப்பந்தம் செய்திருந்தது. ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான முயற்சி நடைபெற்றபோதும், அது இறுதி வடிவம் பெறவில்லை.
2016ஆம் ஆண்டு பாஜக அரசின் ஒப்பந்தப்படி, ஏற்கெனவே 35 விமானங்கள் இந்தியாவுக்கு வந்த நிலையில், எஞ்சிய ஒரு விமானம் மட்டும் வரவேண்டி இருந்தது. இந்த 35 ரஃபேல் விமானங்களும் அம்பாலா, ஹரியானா, மேற்கு வங்கத்தின் ஹசிமரா விமானத் தளத்தில் நிறுத்தப்பட்டுள்ளன. இதில் மிச்சமிருந்த ஒரு விமானமும் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி இந்தியா வந்து சேர்ந்தது.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் கடிகாரம் தயாரிப்பதில் புகழ்பெற்ற நிறுவனமாக சுவிட்சர்லாந்தில் பெல் & ராஸ் என்கிற கடிகார நிறுவனம் உள்ளது. அது, ரஃபேல் விமானங்களைத் தயாரிக்கும் டசால்ட் நிறுவனத்தின் 50 ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் வகையில், 2013இல் பெல் & ராஸ் வின்டேஜ் ஸ்போர்ட் ஹெரிடேஜ் (Bell & Ross Vintage Sport Heritage) என்ற பெயரில் ஒரு மாடல் வாட்சைத் தயாரித்து வெளியிட்டது.
பின்னர் அந்த நிறுவனம், 2015இல் இன்னொரு வாட்சை தயாரித்து வெளியிட்டது. அதன் பெயர்தான் BR-03-94. இந்த மாடல் வாட்சைதான் அண்ணாமலை வாங்கியதாகக் குறிப்பிடுகிறார். இந்த மாடல் வாட்ச்கள் இந்திய ரூபாயில் அப்போது 4.40 லட்சத்திற்கு விற்பனை ஆனது. இதில் மொத்தம் 500 மாடல்கள் மட்டுமே உலகம் முழுக்க தயாரிக்கப்பட்டது.
அப்போதே புக் செய்த 500 பேருக்கு மட்டுமே உலகில் இந்த வாட்ச் கிடைத்தது. மற்றபடி ரஃபேல் பாகத்தில் எல்லாம் செய்யப்படவில்லை எனவும், இது, கேசிங் செராமிக் மூலம் செய்யப்பட்து எனவும் தகவல் வெளியாகி உள்ளது. ரஃபேல் விமானங்களின் பல்வேறு பாகங்கள் செராமிக் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இது மிகவும் வலிமையாக இருக்கும்.
மேலும், அனைத்து விதமான வானிலையையும் தாங்கும் தன்மை உடையது. இதன் நிறம் குறையாது. ரபேல் விமானத்தின் அதே லைட் கிரே நிறத்தில் இதில் உருவாக்கப்பட்டு உள்ளது என்பதே இதன் சிறப்பம்சமாகும்.
ஜெ.பிரகாஷ்
முன்னாள் அமைச்சர் கார் மீது தாக்குதல்: சினிமா பாணியில் வேட்பாளர் கடத்தல்!அலகுமலை ஜல்லிக்கட்டு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
அதென்ன அண்ணாமலைஜி அவர்களின் பேட்டியில் மட்டும் நிருபர்கள் புத்திசாலித்தனமாக எந்தக் கேள்வியும் கேட்கவே மாட்டேங்கிறாங்க…