5 மாநில சட்டமன்றத் தேர்தல் அலசல் மினி தொடர்- 15 rajasthan election small parties play a major role
மோகன ரூபன்
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானில் வரும் 25ஆம்தேதி வாக்குப்பதிவு என்ற நிலையில், கட்சிகளின் பரப்புரை அங்கே உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
தேர்தல் என்றால் சர்ச்சைகள் இருக்கத்தானே செய்யும்? அந்தவகையில் ராஜஸ்தான் தேர்தலில் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறார் அசாம் மாநில ஆளுநரான குலாப்சந்த் கட்டாரியா. இவர் பாரதிய ஜனதாவின் முன்னாள் தலைவர்களில் ஒருவர்.
ராஜஸ்தானின் உதய்பூர் பகுதியைச் சேர்ந்த இவர், பழசை மறக்காமல் உதய்பூர் தொகுதிக்குப் போய், ‘உங்கள் வாக்கு தாமரைக்கே!’ என்று பாரதிய ஜனதாவுக்காக ஓட்டு கேட்டது, அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
‘ஆளுநருக்கு எதுக்குப்பா இந்த வேலை?’ என்று எதிர்கட்சிகள் அங்கலாய்க்க, ‘இப்ப எல்லாம் ஆளுநர்கள் எங்கப்பா ஆளுநர் வேலையைப் பார்க்கிறாங்க?’ என்று மூத்த அரசியல் தலைவர்கள் பலர் அலுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆளுநரை பதவி நீக்கக் கோரி ஒரு பக்கம் கண்டனக் கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன.
ஆளுநர் குலப்சந்த் கட்டாரியாவைத் தவிர்த்து, ராஜஸ்தான் தேர்தல் களத்தில் இப்போது லேட்டஸ்ட் நிலவரமாக இருப்பது பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான வசுந்தரா ராஜே சிந்தியாவின் போக்குதான்.
பா.ஜ.க சார்பாக இரண்டு முறை ராஜஸ்தான் முதல்வராக இருந்தவர் வசுந்தரா. இந்தமுறை ஜல்ராபதன் தொகுதியில் அவர் போட்டியிடுகிறார்.
தற்போது நடந்து வரும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி, முதல்வர் வேட்பாளர் என்று யாரையும் முன்னிறுத்தவில்லை. பிரதமர் மோடியை மட்டுமே முன்னிறுத்தி பா.ஜ.க பிரசாரம் செய்து வருகிறது.
இந்தநிலையில், ராஜஸ்தானில் இந்தமுறை பாரதிய ஜனதா வெற்றிவாகை சூடினால், 70 வயதான வசுந்தரா ராஜே சிந்தியா தவிர, வேறு சிலரும் முதல்வருக்கான போட்டியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இது வசுந்தரா ராஜே சிந்தியாவின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே ஒரு பொதுக்கூட்டத்தில், ‘ஓய்வு பெறப்போகிறேன்’ என்று சொல்லி ஓர் உலுக்கு உலுக்கிய வசுந்தரா, இந்தமுறை ராஜஸ்தானில், தனது ஆதரவு வேட்பாளர்களுக்கு மட்டுமே தேடித்தேடி பிரசாரம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கெலாட் என்னும் மேஜிக் மேன்
இது ஒருபுறமிருக்க, ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குத்தல்கள், கிண்டல்களுக்கும் குறைவு இல்லை.
ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், மேஜிக் செய்யும் ஒரு மந்திர வித்தைக்கார குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர். இது பாரதிய ஜனதாவின் பிரசாரத்துக்கு மிக வாகாக அமைந்து விட்டது.
அமித்ஷா அவரது பரப்புரையில், ‘ராஜஸ்தானில் பாரதிய ஜனதா ஆட்சியில் நாங்கள் உருவாக்கி வைத்திருந்த சிறந்த ஆட்சி அதிகாரம், சட்டம் ஒழுங்கு, சுகாதாரம், மின்வசதி, வேலைவாய்ப்பு எல்லாவற்றையும் அசோக் கெலாட் மாயமாக மறையச் செய்து விட்டார். ஒரு மந்திரவாதியால் மட்டும்தான் இப்படி மாய வித்தை செய்ய முடியும்’ என்று கிண்டல் அடித்திருக்கிறார்.
பிரதமர் மோடி அவர் பங்குக்கு, ‘கெலாட் ஒரு ஜாதுகர் (மேஜிக்மேன்). அவர் இந்த தேர்தலில் ராஜஸ்தானில் இருந்து காங்கிரசை மாயமாக மறைய வைத்துவிடுவார் பாருங்கள்’ என்று கேலி செய்திருக்கிறார்.
ராஜஸ்தானின் காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட்டுக்கும் ஆகாது. 2020ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ஒரு பெரிய விரிசல் ஏற்பட்டு, அது இன்றுவரை பட்டும் படாமல், தொட்டுத் தொடர்கிறது.
இந்தநிலையில் சட்டமன்றத் தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு, அண்மையில் முதல்வர் அசோக் கெலாட்டும், சச்சின் பைலட்டும் கைகுலுக்கிக் கொண்டார்கள். rajasthan election small parties play a major role
இதை, ‘இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய கைகுலுக்கல்’ என்று கேலி செய்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ‘ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதுபோல நடிக்கிறார்கள். கடந்த ஐந்தாண்டுகளில் ஒருவரையொருவர் ஒழித்துக் கட்டும் வேலையைத்தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். உருப்படியான வேலை எதையும் செய்யவில்லை’ என்று கிண்டல் அடித்திருக்கிறார்.
‘பாரதிய ஜனதா என்பது பொய்களை மட்டுமே உற்பத்தி செய்யும் தொழிற்சாலை’ என்று காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜூன கார்கே சொல்ல, ‘மல்லி கார்ஜூன கார்கே, காங்கிரஸ் கட்சியின் ரிமோட் கண்ட்ரோல்’ என்று பிரதமர் மோடி கிண்டல் செய்ய, கொஞ்சம் ரகளையாகவும், ரசனையாகவும்தான் போய்க் கொண்டிருக்கிறது ராஜஸ்தான் தேர்தல்.
ஐந்து ஐந்தா பிரிச்சுக்கோ
பாலைவன மாநிலமான ராஜஸ்தானை ஐந்து பகுதிகளாகப் பிரிக்கலாம். செஷகாவதி, மார்வார், துந்தார், ஹாரெவ்தி, மேவார்.
இவற்றில், மேவார் 61 தொகுதிகள் கொண்ட பகுதி. முதல்வர் அசோக் கெலாட், பாரதிய ஜனதாவின் கஜேந்திர ஷெகாவத் போன்றவர்களின் ஏரியா இது. காங்கிரஸ், பாரதிய ஜனதா இரண்டும் இங்கே சமபலம்.
துந்தார் பகுதி ராஜஸ்தானின் கிழக்கே, குஜ்ஜார் சமூகத்தவர்கள் அதிகம் வாழும் பகுதி. காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்.
ஹாரெவ்தி என்பது பாரதிய ஜனதாவின் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியாவின கோட்டை. மேவார் பகுதி பாரதிய ஜனதாவின் மாநிலத் தலைவரான சந்திர பிரகாஷ் ஜோஷியின் (சி.பி.ஜோஷியின்) ஆதிக்கப்பகுதி. ஹாரெவ்தி, மேவார் பகுதிகளில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. பாரதிய ஜனதாவின் பலமான செல்வாக்குப் பகுதிகள் இவை.
சரி. இந்தப் பட்டியலில் முதலில் சொல்லப்பட்ட செஷகாவதி பகுதி? இது காங்கிரஸ் கட்சியின் மாநிலத்தலைவரான கோவிந்த்சிங் தோதசரா, பாரதிய ஜனதாவின் சதீஷ் பூணியா ஆகியோரின் செல்வாக்கு நிறைந்த பகுதி.
2013ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவு இடங்களை இந்தப்பகுதி தரவில்லை. எனவே, இந்தமுறை ஹாரெவ்தி, மேவார், செஷகாவதி பகுதிகளில் அதிக கவனம் செலுத்துகிறது காங்கிரஸ்.
ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலில் இந்தமுறை மாற்று அரசை மக்கள் விரும்புவார்கள் என்று பாரதிய ஜனதா நம்புகிறது. ஆளும் அரசுக்கு எதிரான அதிருப்தி இந்தமுறை வேலை செய்யும் என்பது பாரதிய ஜனதாவின் எண்ணம். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை.
கடந்த முப்பதாண்டுகளாக, ராஜஸ்தானில் ஆளும் கட்சி ஒன்று, மீண்டும் ஆட்சிக்கு வந்ததாக வரலாறு இல்லை. இரண்டு கட்சிகளும் அங்கே மாறிமாறி ஆட்சிக்கு வருவதுதான் வழக்கம். ஆகவே இந்தமுறை மக்களின் அதிருப்தியை பாரதிய ஜனதா நம்புகிறது. அதேவேளையில், காங்கிரஸ் கட்சி அதன் நலத் திட்டங்களை நம்பி களத்தில் இறங்கியுள்ளது.
சிறு கட்சிகள் கையில் லகான்
ராஜஸ்தானில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றால் எப்போதும் பெரிதாக வெற்றி பெறும். காங்கிரஸ் கட்சி தோற்றால் பெரிதாக தோற்கும். இதுதான் நடைமுறை. கடந்த 2018 தேர்தலில் மொத்த 200 தொகுதிகளில் 99 தொகுதிகளில்தான் காங்கிரஸ் வென்றது. 101ஐ தாண்டி அதனால் பெரும்பான்மை பெற முடியவில்லை.
ராஜஸ்தானில் சுயேச்சைகள், சிறுகட்சிகளின் பலம் அதிகம். சராசரியாக 19 தொகுதிகளை (20 சதவிகித வாக்குகளை) இவர்கள் கைப்பற்றி விடுவார்கள்.
ராஜஸ்தானில் பலம் வாய்ந்த கட்சிகளில் ஒன்று பகுஜன் சமாஜ். சராசரியாக 4 தொகுதிகளில் வெல்லும் கட்சி அது. கடந்த 2018 தேர்தலில் 6 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் வென்றது. (வாக்கு சதவிகிதம் 4.03%). 2008, 2018 தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்து கரை சேர உதவியது பகுஜன் சமாஜ் கட்சிதான்.
கடந்தமுறை காங்கிரஸ் கட்சி, பகுஜன் சமாஜ் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவுடன்தான் ஆட்சி அமைத்தது. ஆகவே, இந்த தேர்தலிலும் பகுஜன் சமாஜ் கட்சியின் வகிபாகம் கொஞ்சம் பெரிதாகவே இருக்கும் எனக் கருதப்படுகிறது.
சாதி காரணி
ராஜஸ்தான் தேர்தல் களத்தில் மொத்தம் 58 கட்சிகள் உள்ளன. இவற்றில் அனுமான் பேனிவால் தலைமையிலான ராஷ்ட்டிரிய லோக் தந்திரிக் கட்சி, 78 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இதன் கூட்டணி கட்சியான, சந்திரசேகர் ஆசாத் தலைமையிலான ஆசாத் சமாஜ் கட்சி (ஏ.எஸ்.பி.) 48 தொகுதிகளில் போட்டி போடுகிறது.
‘ராஷ்ட்டிரிய லோக் தந்திரிக் கட்சி என்பது 36 சமூகங்களின் கூட்டமைப்பு’ என்று பேனிவால் சொல்லிக்கொண்டாலும் அது அடிப்படையில் ஜாட் சமூகக் கட்சி. ஜாட் வாக்காளர்கள், ராஜஸ்தானின் 60 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை முடிவு செய்யக் கூடியவர்கள்.
ராஜஸ்தானில் ஜாட்கள் 10 சதவிகிதம், தலித்துகள் 17.8 சதவிகிதம் என்ற நிலையில், ராஷ்ட்டிரிய லோக் தந்திரிக் கட்சி, ஆசாத் சமாஜ் கட்சிகளின் கூட்டணி, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.
பயங்காட்டும் போட்டி வேட்பாளர்கள்
ராஜஸ்தான் தேர்தலில், போட்டி வேட்பாளர்களின் தொல்லையை, பாரதிய ஜனதா, காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளுமே சந்தித்து வருகின்றன.
பாரதிய ஜனதாவின் முதன்மை வேட்பாளர்களில் ஒருவரான மத்திய அமைச்சர் ராஜ்யவர்தன் ரத்தோர் போட்டியிடும் ஜெய்ப்பூர் ஊரகத் தொகுதியில், அவரை எதிர்த்து ராஜ்பால்சிங் ஷெகாவத் போட்டி வேட்பாளராக மனு செய்ய, அமித் ஷாவின் தலையீடு காரணமாக ராஜ்பால்சிங் ஷெகாவத் விலகிக் கொண்டிருக்கிறார். அதேவேளையில் போட்டி வேட்பாளர்களால் காங்கிரஸ் கட்சி இருபது தொகுதிகளில் சிக்கலை எதிர் கொண்டு வருகிறது.
ராஜஸ்தான் தேர்தலில் ஒருபக்கம் சூடு பறந்தாலும், சுவாரஸ்யத்துக்கும் பஞ்சமில்லை.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள பஸ்சி தொகுதியில் முன்னாள் ஐ.ஏ.எஸ். ஒருவரும் முன்னாள் ஐ.பி.எஸ். ஒருவரும் பா.ஜ.க., காங்கிரஸ் சார்பாகப் போட்டியிடுகின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் சந்திரமோகன் மீனா ஓய்வுபெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி. இவர் ஜாலோர் மாவட்ட ஆட்சியராக இருந்திருக்கிறார்.
இவரை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளராக நிற்கும் லக்ஸ்மண்சிங் மீனா முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் ஜாலோர் மாவட்ட எஸ்.பி.யாக இருந்திருக்கிறார். இவர் பஸ்சி தொகுதியின் நடப்பு எம்.எல்.ஏ.வும் கூட. இந்த போட்டி ராஜஸ்தான் தேர்தலில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
வரும் 25ஆம்தேதி தேர்தல் நாள். பிரச்சாரத்துக்கு 23 ஆம் தேதிதான் கடைசிநாள்… அதனால் உச்சகட்ட காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. rajasthan election small parties play a major role
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு:
மோகன ரூபன் மூத்த பத்திரிகையாளர், கவிஞர், மொழி பெயர்ப்பாளர், இயற்கை ஆர்வலர்.
உலக அரசியலில் இருந்து உள்ளூர் அரசியல் வரை பல்வேறு கட்டுரைகளை எழுதியிருக்கிறார், அரசியல் மட்டுமல்லாமல் வரலாறு, அறிவியல் துறைகளிலும் ஆர்வம் மிக்கவர். உலக அளவிலான புதிய தகவல்களை தேடிப் படித்து தமிழில் தந்து வருபவர். அந்தோணியார் காவியம், உவரியும் ஓபீரும், சந்தன உவரியில் சாலமன் கப்பல், திமிங்கல வேட்டை (மோபி டிக்), பிணந்தின்னிக் கழுகு (அமெரிக்க வல்லரசு சதிகள் பற்றியது), ஆண்டுவன் சேரல் (வரலாற்றுப் புதினம்), கவின் மிகு கானகம் உள்ளிட்ட 17 நூல்களின் ஆசிரியர்.
பா.ஜ.க எடுத்த ஆயுதம்: அரசியல் ஆய்வகமாகும் தெலங்கானா -14
மத்திய பிரதேசத்தில் ஆட்சிமாற்றமா? 13
ஒருபக்கம் ஊழல் குற்றச்சாட்டு; மறுபக்கம் மதவாதம் : சத்தீஷ்கரில் பா.ஜ.க.வின் இரட்டைவியூகம்! 12
கிடுக்கிப்பிடியில் சிக்கிய கே.சி.ஆர்: விறுவிறுப்பாகும் தெலங்கானா தேர்தல் 11
மணிப்பூர் ஆகிவிடுமா மிசோரம்? தேர்தல் நிலவரம் க்ளைமாக்ஸ் ரிப்போர்ட்! 10
ம.பி. தேர்தலில் மாற்றத்துக்கான காற்று!-9
சத்தீஷ்கர்: முதல்வரை எதிர்த்து நிற்கும் மருமகன்! பிரியங்காவின் பிரம்மாண்ட வாக்குறுதிகள்!-8
மிசோரம் தேர்தல் : ‘ஓ! பா.ஜ.க.வின் கேம் பிளான் இதுதானா?’-7
கழன்று செல்லும் தலைவர்கள்.. கலகலக்கும் காங்கிரஸ்!-6
மிசோரம்: தேர்தல் மல்லுக்கட்டில் மலை மாநிலம்!-5
தெலங்கானா வடக்கின் தெற்கு, தெற்கின் வடக்கு! 5 மாநில தேர்தல் அலசல் மினி தொடர்-4
சோழன் ஆண்ட சத்தீஷ்கர்- 5 மாநில தேர்தல் -அலசல் மினி தொடர்-3
ராவணனின் மாமனார் வீடு ராஜஸ்தான் யாருக்கு?-2
5 மாநில தேர்தல்… வெற்றி வாய்ப்பு யாருக்கு? அலசல் மினி தொடர்!-1