கோவி லெனின் Govi Lenin Japan Travel Story 18
ஜப்பான் பயணப் பதிவுகள் 18
கலைஞர் நூற்றாண்டுக் கூட்டத்தைக் கலந்துரையாடலாக நடத்தி முடித்துவிட்டு, மகிழ்வுடன் அனைவரும் அந்த தேநீர் அரங்கத்திலிருந்து வெளியே வந்தோம். தமிழ்க் குடும்பங்களுடனான உரையாடல் தொடர்ந்தது. தங்கள் பிள்ளைகளுக்குத் தமிழ் சொல்லிக் கொடுப்பதை அவர்கள் பெருமையுடன் பகிர்ந்து கொண்டார்கள். முனைவர் கணேஷ் ஏழுமலை அந்தப் பணியை சிறப்பாக செய்வதாக நண்பர்கள் குன்றாளனும் கமலும் தெரிவித்தனர்.
நிஷிகசாய் ஸ்மைலி ஹோட்டலுக்கு காரில் திரும்பும்போது ஒரு சில நண்பர்களை அவரவர் வீடுகளில் விட்டுவிட்டுப் புறப்பட வேண்டியிருந்தது. இரவு நேரத்தில் காரின் மேற்பகுதியை திறந்துவிட்டு, ஒரு சிறுவன் சீட் மீது நின்று கொண்டு பயணிக்க, சூரியன் நாடான ஜப்பானின் வானத்தில் இரவு நேர குட்டி சூரியன்களாகப் பூத்திருந்த நட்சத்திரங்களை ரசித்தேன். இதே வானத்தையும் நட்சத்திரத்தையும்தான் தமிழ்நாட்டிலும் பார்க்கிறோம். ஆனால், ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால், தமிழ் மொழியில் மக்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டே இரவு நேர வானத்தைப் பார்ப்பது புதுவகை இன்பமாக இருந்தது.
டோக்கியோ தமிழர்களின் பொழுதுபோக்குகள் பற்றிய உரையாடலின்போது, இயல்பாகவே சினிமா பக்கம் பேச்சுத் திரும்பியது. ஜப்பான் எத்தனையோ பொழுதுபோக்கிற்கான தொழில்நுட்பக் கருவிகளைத் தந்திருந்தாலும், ஜப்பானியர்களுக்குத் தமிழ்நாடு தந்திருக்கும் பொழுதுபோக்கு, சூப்பர் ஸ்டார் ரஜினி. அவருக்கு ஜப்பானில் ரசிகர்கள் இருப்பதும், அவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்திருப்பதும், ஜப்பான் திரையரங்குகளில் ரஜினி படங்கள் ரிலீஸ் ஆவதும் FDFS என்று முதல் நாள் முதல் ஷோவுக்கு ரசிகர்கள் முண்டியடிப்பதும், ஒரு சில ஜப்பான் ரசிகர்கள் சென்னைக்கு வந்து முதல் காட்சியில் ரஜினியைப் பார்த்துப் பரவசமடைவதும் எப்படி என்று ஆச்சரியத்துடன் கேட்டேன்.
என்னுடைய ஆச்சரியத்திற்கு ஒரு காரணம் உண்டு. ஜப்பானில் ரஜினியின் முத்து படம் ஹிட்டடித்து ஏறத்தாழ 15 ஆண்டுகள் கழித்து நானும் நண்பர்களும் தாய்லாந்து சென்றிருந்தோம். அங்கே கோரல் தீவுகளில் நீர் விளையாட்டுகளில் பொழுது போக்கிக்கொண்டிருந்தபோது, பாரம்பரிய மீனவர்கள் இருவரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம். சுற்றுலாப் பயணிகளிடம் தங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பேசுவது அவர்களின் வழக்கம். எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் நான் பேசினேன்.
“இந்தியாவில் உங்களுக்கு யாரைத் தெரியும்?” என்று அவர்களிடம் கேட்டபோது இருவருமே, “அமிதாப்பச்சன்” என்றார்கள். அப்போது அமிதாப்பை ஓவர்டேக் செய்து பாலிவுட்டில் பல ஸ்டார்கள் வந்துவிட்டார்கள். க்ரோர்பதி நிகழ்ச்சியும் காலம் கடந்திருந்தது. ஆனாலும், தாய்லாந்துவாசிகளுக்கு இந்தியா என்றதும் சினிமா, அதிலும் அமிதாப் என்பது நினைவில் இருந்தது. ஆனால், நான் அவர்களிடம் உரையாடுவதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஜப்பானில் ரஜினியின் வெற்றிக்கொடி பறந்து கொண்டிருந்தது.
எப்படி இது நடந்தது? என்று டோக்கியோ நண்பர்களிடம் கேட்டேன். அவர்கள் அந்த மாயாஜாலத்தை விவரிக்கத் தொடங்கினார்கள். ஜப்பான் பொம்மைகள் அழகானவை. அங்குள்ள பெண்கள் மிகவும் அழகானவர்கள். (ஆண்கள் எப்படி என்பதைப் பெண்களிடம் கேட்டறியவும்). பெண்களின் கண்களை மீன்களுக்கு ஒப்பிடுவது சங்க காலம் தொட்டு தமிழர்களின் வழக்கம். அந்த அளவுகோலின்படி ஜப்பானியப் பெண்களை சென்னாகுன்னி மீன்களுக்குத்தான் ஒப்பிட முடியும். கண்கள் அந்தளவு சின்னதாக இருக்கும். அநியாயமான ஒப்பீடு என்று நினைத்தால், நெத்திலிக்கு இணை வைக்கலாம். எப்படிப் பார்த்தாலும் கெண்டை மீன் கண்கள் என்று சொல்ல முடியாது. ஜப்பான் தெருக்களில் கடந்து செல்லும் பெண்ணாக இருந்தாலும், சினிமா திரைகளில் கவர்ந்திழுக்கும் பெண்ணாக இருந்தாலும் மின்‘மினி’க் கண்கள்தான்.
இந்தியர்கள் ரசிக்கும் படங்களில் அப்படி என்னதான் இருக்கிறது என்ற ஆவல் ஜப்பானியர்களிடம் இருந்தது. நமக்கு மலையாளப் படங்களைப் பார்க்கின்ற ஆவலைப் போல. இந்தியப் படங்கள் என்றால் இந்திப் படங்கள் என்பதைத் தாண்டி அப்போதே Pan India தன்மைக்கு வந்திருந்தது ஜப்பான். அந்த சமயத்தில்தான், எஜமான் படம் ரிலீசாகியிருந்தது. அந்தப் படத்தில், ஜப்பானியர்களை முதலில் கவர்ந்தவர் கதாநாயகி மீனா. அவருக்கு இருப்பது கண்ணா, மீனா? என்று ஆச்சரியத்தால் ஜப்பானியர்களின் நெத்திலிக் கண்கள் விரிந்தன. ஆனாலும், அந்தக் கண்களுக்குள் மீனாவின் கண்ணழகை முழுமையாகக் கொண்டு செல்ல முடியவில்லை. இப்படிப்பட்ட பெரிய-அழகான கண்களைக் கொண்ட பெண் பூமியில் பிறந்தவரா, வானத்து தேவதையா என்று அதிசயித்தனர். மீனாவின் ரசிகர்களாயினர் ஜப்பானியர்கள்.
புழுவை இரையாக வைத்து மீனுக்குத் தூண்டில் போடுவார்கள். அதில் மாட்டும் சின்ன மீனை, தூண்டில் முள்ளில் மாட்டி , பெரிய மீனுக்குத் தூண்டில் போடுவார்கள். இந்த இரண்டாவது உத்தியை ஜப்பானில் கச்சிதமாகச் செய்தவர் பெயர், யசுதா. ஜப்பான் நாட்டில் பலவிதத் திரைப்படங்கள் உண்டு. புகழ்பெற்ற இயக்குநர் அகிராகுரோசேவா இயக்கிய ராஷோமோன் என்ற படத்தில் பயன்படுத்திய உத்தியில்தான் விருமாண்டி படத்தின் திரைக்கதையை அமைத்திருப்பார் கமலஹாசன். உலகத்தரத்திலான படங்களையும் ஜப்பானியர்கள் ரசிப்பார்கள். உள்ளூர் பொழுதுபோக்குப் படங்களையும் ரசிப்பார்கள்.
ஜப்பானியர்களின் ரசனையைப் புரிந்துகொண்ட யசுதா, ஜப்பான் ரசிகர்கள் மீனாவை ரசிப்பதைப் புரிந்துகொண்டு, எஜமானைத் தொடர்ந்து முத்து படத்தையும் ஜப்பானியர்கள் பார்க்கும்படி செய்தார். மீனாவின் கண்களை ரசித்த ஜப்பான் கண்கள், ரஜினியின் ஸ்டைலை ரசித்தன. அவரது வேகத்தை ரசித்தன. படத்தின் விறுவிறுப்பை ரசித்தன. ரசிகர் மன்றங்களை உருவாக்கும் அளவுக்கு ரஜினி படங்களுக்கு ஜப்பானில் மார்க்கெட்டை உருவாக்கினார் யசுதா. அவரே ஜப்பான் ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் ஆகிவிட்டார். முத்து பட டி.வி.டி. ஜப்பான் மார்க்கெட்டில் சக்கை போடு போட்டது. ஜப்பானிய சேனல் NHKவில் முத்து திரைப்படம் 2-3 தடவை ஒளிபரப்பப்பட்டது.
உலகின் பல நாடுகளையும் பார்த்து ரசிப்பதில் ஜப்பானியர்களுக்கு ஆர்வம் உண்டு. காடே நமக்கு சொந்தமாக இருந்தாலும் அடுத்தவர் வீட்டில், ஒரு தொட்டியில் பூத்திருக்கும் பன்னீர் ரோஜாவின் அழகு தனித்துவமாக ஈர்ப்பதில்லையா? அதுபோல கடல் சூழ்ந்த ஜப்பானில் கடற்கரைகளுக்குப் பஞ்சமில்லாவிட்டாலும், சென்னை மெரினா போன்ற நீண்ட அழகான மணற்பரப்பைக் கொண்ட கடற்கரை ஜப்பானியர்களை ஈர்த்தது. அதனால், தென்னிந்திய சுற்றுலா என்ற பெயரில் யசுதா பேக்கேஜ் டூர்களை உருவாக்கினார். ரஜினி படங்கள் ரிலீசாகும் சமயத்தில் சுற்றுலாவை ஏற்பாடு செய்வார். மெரினா கடற்கரையைக் கண்கள் விரிய ரசிக்கும் ஜப்பானியர்கள், சத்யம்-தேவி திரையரங்குகளில் ரஜினி படத்தின் முதல் காட்சியில் மகிழ்ச்சி பொங்க விசிலடித்து ஆரவாரம் செய்வார்கள். அது இப்போதும் தொடர்கிறது.
அண்மையில் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் கலந்த கொண்ட ஜப்பானைச் சேர்ந்த கிபுகி என்ற மூத்த குடிமகன், அரங்கில் திரண்டிருந்த மாணவர்களின் கையொலியுடனும் கரோக்கியுடனும் முத்து படத்தின் ‘ஒருவன் ஒருவன் முதலாளி’ பாடலை ராகத்துடன் பாடி அசத்தினார். மீனாவின் கண்கள், ஜப்பானியர்களை ரஜினி ரசிகர்களாக்கி, தமிழ்நாட்டின் கலை-பண்பாட்டைக் கண்டு மகிழும் கண்களாக மாறிவிட்டன.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: கடல் கடந்த கலைஞரின் புகழ்!-17
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1