கோவி.லெனின் Govi Lenin japan travel story 17
ஜப்பான் பயணப் பதிவுகள் – 17
அரங்கம் நிறைந்த கூட்டமாக இல்லாவிட்டாலும் தமிழரங்கம் நிகழ்வு, அன்பு நிறைந்த கூட்டமாக இருந்ததை அங்கு பேசியபோதும், பேசி முடித்த பிறகும் உணர முடிந்தது. கடல் கடந்தவர்களின் மனமெங்கும் தமிழ் மணந்தது. தேநீர் விருந்தில் வடை மணந்தது. ஜப்பானில் இருந்த நாட்களில் சாப்பிட்ட ஒரே தென்னிந்திய உணவு, மெதுவடையும் தேங்காய் சட்னியும்தான். அத்துடன் சூடான தேநீரைப் பருகியபோது, நாக்கில் தனிச் சுவை. சிற்றுண்டியை தமிழரங்கத்துக்காக ஸ்பான்சர் செய்திருந்தவர் கோவிந்தாஸ் உணவக உரிமையாளர் திரு. ஹரிநாராயணன்.
அதே நாள் மாலையில் மற்றொரு நிகழ்வு. வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம்- ஜப்பான் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா. அதற்கு ஆயத்தமாக வேண்டிய சூழலில், நண்பர்களின் குடும்பத்தாருடன் ஃபுனாபொரி டவர் ஹால் அருகே ஓர் உணவகத்தில் மதிய உணவு. ஜப்பான் வகை உணவுகளைத்தான் ஆர்டர் செய்தோம். நம் நாக்குக்கு ஏற்ற சுவையில் தயாரித்துக் கொடுத்தார்கள்.
சாப்பாட்டு மேசைக்கு உணவு வரும்வரை, ஜப்பானில் தமிழர்களின் வாழ்க்கை முறை பற்றிக் கொறித்துக் கொண்டிருந்தோம். இட்லி மாவு அரைப்பது முதல் பிரியாணி செய்வது வரை எல்லாவற்றுக்குமான பொருட்கள் டோக்கியோவில் கிடைப்பதையும், அதிலும் குறிப்பாக சின்ன இந்தியா என்றழைக்கப்படும் நிஷி கசாய் பகுதியில் இந்திய சமையலறைக்குத் தேவையான மளிகைப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இருப்பதையும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஜப்பானின் கல்வி முறையையும், அந்தப் பள்ளிகளில் கிடைக்காத தமிழ்க் கல்வியைத் தனிப்பட்ட முறையில் கற்றுக் கொடுப்பதையும் விவரித்தார்கள்.
கணவன்-மனைவியுமாக கார் ஓட்டத் தெரிந்த இணையர்கள் இருந்தனர். இந்தியாவில் லைசென்ஸ் எடுப்பதற்கும், ஜப்பானில் லைசென்ஸ் எடுப்பதற்குமான வேறுபாடுகளையும், எத்தனை முறை டெஸ்ட் நடந்தது என்பதையும், அதற்காக எத்தனை மணி நேரம் செலவிட வேண்டியிருந்தது என்பதையும் சுவையாகச் சொன்னார்கள். மேசைக்கு வந்த உணவைப் பகிர்ந்து சுவைத்தோம். நேரம் போனதே தெரியவில்லை.
அறைக்குத் திரும்பியபோது, அரை மணி நேரம்தான் மிச்சமிருந்தது. கலைஞர் நூற்றாண்டு விழாவுக்குப் புறப்பட்டாக வேண்டும். வெதுவெதுப்பான நீரில் ஒரு குளியல். களைப்பெல்லாம் பறந்தது. நிகழ்ச்சிக்கேற்ற உடை எது என்று சூட்கேஸில் தேடினேன். இதுதான் சரியாக இருக்கும் என மனதிற்குப் பட்டதை எடுத்து உடுத்திக் கொண்டேன்.
ஜப்பானிய மரபார்ந்த தேநீர் விருந்து நடைபெறும் அரங்கு ஒன்றில் எளிமையான முறையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை உடன்பிறப்புகள் குன்றாளன், ரா.செந்தில்குமார், கமலக்கண்ணன், கோவிந்தபாசம் உள்ளிட்டோர் இணைந்து ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்விடத்தின் பெயர், செய்ஷின்ச்சோ சமூக அரங்கு. செய்ஷின்ச்சோ என்றால் புதிய தூய்மையான நகரம். பொதுவாக ஜப்பானில் எல்லா இடங்களும் தூய்மையாக இருக்கும். இங்கு காற்று மாசுபாட்டையும் குறைக்கும் வகையில் 70% மரங்கள் அமைக்கப்பட்டுப் புதிதாக உருவாக்கப்பட்ட பகுதி. சின்ன இந்தியா நிஷிகசாயில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி.
நிகழ்வுக்கு உடன்பிறப்புகள் குடும்பத்துடன் வருகை தந்து பங்கேற்றிருந்தது மகிழ்வைத் தந்தது. நான் அணிந்திருந்த உடை அவர்களுக்கு வியப்பைத் தந்தது. Govi Lenin japan travel story 17
திருவாரூரைச் சேர்ந்தவன், கலைஞரின் மாணவன், அத்துடன் தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகர் என்ற முறையில் கருப்பு-சிவப்பு கரை வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து, அதே நிறத்திலான கரையும் உதயசூரியனும் போட்டிருந்த துண்டை தோளில் போட்டுக்கொண்டு அந்தத் தேநீர்க் கூட்ட அரங்கில் நுழைந்ததால்தான் அவர்களுக்கு வியப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டு உடை, அதுவும் ஓர் இயக்கத்தின் அடையாளத்துடனான உடையுடன், அந்த இயக்கத்திற்கு அரை நூற்றாண்டு காலம் தலைமை வகித்து, தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த முத்தமிழறிஞர் கலைஞருடைய நூற்றாண்டை டோக்கியோவில் கொண்டாடும் நிகழ்வுக்கு சென்றது எனக்கும் மனநிறைவைத் தந்தது.
தமிழரங்கம் நிகழ்வுக்காக ஜப்பானுக்கு நண்பர்கள் அழைத்திருக்கிறார்கள் என்ற விவரம் அறிந்ததும், தி.மு.க அயலக அணிச் செயலாளரும்-மாநிலங்களவை எம்.பி.யுமான அன்புச் சகோதரர் எம்.எம்.அப்துல்லா ஏற்பாடு செய்யச் சொன்ன நிகழ்வு இது. குறுகிய இடைவெளியில், இனிமையான மாலைப் பொழுதில் எளிமையான சூழலில் நிகழ்வு தொடங்கியது. நான் மட்டும்தான் சிறப்பு பேச்சாளர். அதனால் எனக்கு ஒரு சிறிய நாற்காலி போடப்பட்டிருந்தது.
ஜப்பானின் மரபார்ந்த தேநீர்க் கூட்ட அரங்குக்கு “தத்தாமி அறை” என்று பெயர். கோரைப்புற்களால் பாய் போன்று நெய்யப்பட்ட தரை. குளிருக்கு வெதுவெதுப்பாகவும் கோடைக்குக் குளுகுளுவெனவும் நீண்டநேரம் தரையில் அமர ஏதுவாக இருக்கும் அறை.
ஜப்பானின் மரபார்ந்த தேநீர்க் கூட்ட முறையில் நடந்த நிகழ்வில், நான் மட்டும்தான் சிறப்பு பேச்சாளர். அதனால் என்னை ஒரு சிறிய நாற்காலியில் உட்கார வைத்தனர். மற்றவர்கள் எதிரில் போடப்பட்டிருந்த திண்டுகளில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தனர்.
அதில் குடும்பத்தினருடன் பங்கேற்ற அவர்களின் உணர்வைப் பாராட்டி, “இதனால்தான் தி.மு.க.வை குடும்பக் கட்சி என்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தினர் மனதிலும் கலைஞர் இடம்பெற்றிருக்கிறார். காரணம், தமிழ்நாட்டில் ஒவ்வொரு குடும்பமும் அவரால் பயன் பெற்றுள்ளது. எவ்விதப் பின்னணியும் இல்லாமல் இந்திய தேர்தல் அரசியலில், களம் கண்ட 13 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் கலைஞர் மட்டும்தான். அவருடைய உழைப்பு, ஓயாத போராட்டம், தளராத தன்னம்பிக்கை இவை யாவும் எந்தத் துறையில் இருப்பவர்களுக்கும் வழிகாட்டக் கூடியதாகும். கலைஞர் ஒரு ரோல் மாடல்” என்பதை அவர்களுடன் பகிர்ந்து கொண்டு, கலைஞரைப் பற்றி நான் பேசுவதைவிட, அவரைப் பற்றி நீங்கள் ஒவ்வொருவரும் பேசுவதுதான் அவருக்குப் பெருமை சேர்ப்பதாகவும் இந்த நிகழ்வுக்கு சிறப்பு சேர்ப்பதாகவும் இருக்கும் என்றேன்.
எளிமையான விழா என்பதால் கலந்துரையாடலாக அமைவதுதான் கலைஞரின் பன்முக ஆற்றலை வெளிப்படுத்தும் என்பது என் எதிர்பார்ப்பு. உடன்பிறப்புகள் கமலக்கண்ணன், ரா.செந்தில்குமார், குன்றாளன் ஆகியோர் தங்களுக்குரிய தலைப்புகளில் கலைஞரைப் பற்றிய செழுமையான உரையாற்றினர். கலைஞரின் மேடைப் பேச்சு, திரைத்தமிழ், நிர்வாகத் திறன், நகைச்சுவை உணர்வு, உடனடி பதிலடி எனப் பன்முகத்தன்மையை எளிய மொழியில் எடுத்துச் சொன்னார்கள்.
டோக்கியோவில் உள்ள தமிழ்க் குடும்பத்தினரின் பிள்ளைகளுக்கு தாய்மொழிப் பயிற்சி அளிப்பதுடன், பல்கலைக்கழகத்தில் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் முனைவர் கணேஷ் ஏழுமலை தன்னுடைய பேச்சில், கலைஞரின் திட்டங்கள் தங்களுடைய குடும்பத்தை எந்தளவுக்கு முன்னேற்றியுள்ளன என்பதை எடுத்துச் சொன்னார்.
திருவண்ணாமலையில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் கணேஷ் ஏழுமலை என்ற அந்த இளைஞர், கலைஞர் ஆட்சிக்காலத்தில்தான் தனது அப்பாவின் விவசாயத்திற்கு இலவச மின்சாரம், அம்மாவின் சமையலுக்கு கேஸ் அடுப்புடன் கூடிய சிலிண்டர், தன் பள்ளிப் படிப்புக்கு பஸ் பாஸ், கல்லூரிப் படிப்புக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான இலவசக் கட்டணம், தன் தங்கை முறை உறவுகளுக்கு திருமண உதவித் திட்டம், கிராம மக்களின் பட்டினிச்சாவைத் தடுத்த ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி எனப் பலவற்றையும் பட்டியலிட்டு, கலைஞரால்தான் இன்று ஜப்பானில் வேலை பார்க்கிறேன் என்றார். அதுமட்டுமல்ல, ஈழப் பிரச்சினையில் லாபம் பார்த்த அரசியல் வியாபாரிகளின் பேச்சு போதையில் சில காலம் சிக்கிக் கொண்டு, அதிலிருந்து இப்போது முழுமையாக மீண்டு விட்டதையும் வெளிப்படையாகத் தெரிவித்தார்.
பெரியளவில் அரசியல் ஈடுபாடு இல்லாத இளைஞர் ஒருவர், கலைஞர் கட்டிய டைடல் பார்க்கைப் பார்த்து ஆச்சரியப்பட்டு, இதுபோன்ற இடத்தில் வேலை செய்ய என்ன படிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டு, கலைஞர் தந்த கல்வி வாய்ப்புகளால் படித்து முன்னேறி, ஜப்பானில் கணினித் துறையில் பணியாற்றுவதைக் குறிப்பிட்டார். இலக்கிய ஆர்வலரும் பொதுவுடைமைச் சிந்தனையாளருமான கோவிந்தராஜனின் பேச்சும் நிகழ்ச்சியை சிறப்பித்தது.
குடும்பத் தலைவி ஒருவர், சிறு வயதில் கலைஞரின் பொதுக்கூட்டங்களுக்கு தன் அப்பா அழைத்துச் சென்றதை நினைவு கூர்ந்ததுடன், வளர்ந்த நாடான ஜப்பானில் உள்ள பெண்களுக்கு கிடைக்காத உரிமைகள் தமிழ்நாட்டில் உள்ள பெண்களுக்கு கிடைத்திருப்பதற்கு காரணம் கலைஞரும், தளபதி தலைமையிலான திராவிட மாடல் அரசும்தான் என்றார். கலைஞரின் தமிழைத் தாங்கள் ரசித்த விதத்தை தொகுப்பாளர் விஜயலட்சுமி உள்பட பலரும் பகிர்ந்து கொண்டனர். ஜப்பானில் படித்து வளரும் தமிழ்க் குழந்தைகளையும் பெற்றோர் அழைத்து வந்திருந்ததால், படக்கதை வடிவிலான ‘திராவிடத்தால் வாழ்கிறோம்’ புத்தகத்தை அவர்களிடம் வழங்கினேன்.
முந்தைய தலைமுறைக்கு ஜப்பானைக் காட்டியது திரைப்படம். இப்போதைய தலைமுறைக்கு அது வாழ்விடம். அதற்குத் துணை நின்றது திராவிடம். டோக்கியோவில் மன நிறைவாக அமைந்தது கலைஞர் நூற்றாண்டுக் கொண்டாட்டம்.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு Govi Lenin japan travel story 16
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்! – 16
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1