“நீலகிரி போல வேறெங்கும் நடக்கக் கூடாது”: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

அரசியல்

நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் ஏற்பட்டது போல தமிழ்நாட்டில் வேறு எங்கும் ஏற்படக் கூடாது என்று தேர்தல் ஆணையத்தில் திமுக இன்று (ஏப்ரல் 29) மனு கொடுத்துள்ளது.

நீலகிரி தொகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு உதகை அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்ட்ராங் ரூம் அறையை சுற்றிலும் 173 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 27ஆம் தேதி அனைத்து சிசிடிவி கேமராக்களின் நேரடி ஒளிபரப்பும் ஒரே நேரத்தில் தடைப்பட்டது.

இதனால் 26 நிமிட சிசிடிவி ஃபுட்டேஜ்கள் பதிவாகவில்லை என்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக திமுக சட்டத்துறை செயலாளரும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தார்.

தேர்தல் ஆணையர் சத்ய பிரதா சாகுவிடம் புகார் அளித்ததை தொடர்ந்து தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய என்.ஆர்.இளங்கோ, “நீலகிரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் கடந்த 27ஆம் தேதி அன்று 20 நிமிடங்களுக்கு இயங்காமல் போய்விட்டன. தொடர்ந்து சிசிடிவி கேமிராக்கள் இயங்கியதால் மின் இணைப்புகளில் பழுது ஏற்பட்டு சிசிடிவி இயங்கவில்லை என்று நீலகிரி தேர்தல் அதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலை தமிழ்நாட்டில் உள்ள வேறு எங்கும் ஏற்படக் கூடாது. அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம்.

சிசிடிவி கேமராக்கள் எந்த பழுதும் இல்லாமல் முழுமையாக இயங்க வேண்டும். வாக்கு எண்ணிக்கைக்கு ஸ்ட்ராங் ரூம்கள் திறக்கப்படும் வரை சிசிடிவி கேமராக்கள் இயங்க வேண்டும்.

இந்த ஃபுட்டேஜ்களை தேவைப்படும் போதெல்லாம் வேட்பாளர்களோ, வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் கேட்கும்போது தர வேண்டும் என மனு கொடுத்திருக்கிறோம்.

இதுமட்டுமில்லாமல் ஸ்ட்ராங் ரூம்கள் உள்ள பகுதிகளில் 500 மீட்டர் சுற்றளவுக்கு ட்ரோன் போன்ற சாதனங்களை அனுமதிக்கக் கூடாது. அதற்கான உரிய உத்தரவுகளை காவல்துறைக்கு பிறப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

இந்த இரு கோரிக்கைகளையும் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

ட்ரோன் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ள மண்டலம் குறித்த உரிய அறிவிப்பை போலீஸுக்கு அனுப்புவதாக கூறியுள்ளார்.

சிசிடிவி கேமராக்களை பழுது அடையாமல் பார்த்துக் கொள்வோம் என்ற உறுதியையும் அளித்துள்ளார்.

எலெக்ட்ரிக்கல் ஷாட் சர்க்யூட் காரணமாக வயர் பழுதானதால் நீலகிரியில் கோளாறு நடந்து உள்ளதாக கூறினார்.

எல்லா வேட்பாளர்களின் ஏஜெண்ட்களையும் அழைத்து சென்று காட்டியுள்ளனர். எங்களுடைய ஏஜெண்ட்கள் சென்று பார்க்கும்போது சீல்கள் எல்லாம் சரியாக இருந்தது, இந்த விவகாரத்தில் ஆட்சியர் சொல்லியிருக்கக் கூடிய விளக்கம் சரியானதாக படுகிறது” என கூறினார்.

கோவையில் வாக்காளர் பட்டியலில் ஒரு லட்சம் வாக்காளர்கள் பெயர்கள் விடுபட்டு உள்ளதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, ”வாக்காளர் பட்டியல் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1950-இன் படி தயாரிக்கப்படுகிறது.

இதனை தயாரிப்பது தேர்தல் ஆணையத்தின் முழுமையான பணியாகும். இதில் வேறு யாரும் தலையிட முடியாது.

வாக்காளர் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் சீரமைத்துக் கொண்டே வருவார்கள், தேர்தல் வரும்போது, குறைந்தபட்சம் மூன்று முறையாவது மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிடுவார்கள்.

அதுமட்டுமல்ல, 4 வாரம் சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் நடத்தும்.
அதில் அரசியல் கட்சிகளின் ஏஜெண்டுகள், பெயர்சேர்ப்பு, பெயர் நீக்கம் குறித்து கேட்கலாம்.

அரசியல் கட்சியினர் மற்றும்  வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தேர்தலுக்கு முன்பாக உறுதி செய்து கொள்வது அவர்களது கடமை.

இதனை மக்களோடு பணியாற்றக் கூடிய அரசியல் கட்சிகள் எல்லோரும் செய்வார்கள்,

வாட்ஸ் அப், ஃபேஸ்புக்கில் கட்சி நடத்துபவர்களுக்கு இது தெரியாது. சட்டத்தை படித்து தெரிந்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

அஜித்தின் விடாமுயற்சி தாமதம்: என்னதான் காரணம்?

நிர்மலா தேவிக்கு என்ன தண்டனை? நாளை அறிவிப்பு!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *