ஜப்பான் பயணப் பதிவுகள் -3 journalist kovi lenin japan visit 3
– கோவி.லெனின்
வங்காள விரிகுடாவின் அலைகள் கவிதையெழுதும் சென்னை மெரினா கடற்கரையிலிருந்து பசிபிக் கடற்கரையோரம் உள்ள ஜப்பானுக்கு வந்து சேர்வதற்கான பயணம் மட்டும் பத்தரை மணி நேரம்.
சென்னை விமான நிலையத்திலும், கோலாலம்பூர் விமான நிலையத்திலும் காத்திருப்பு நேரம் 5 மணி நேரத்திற்கு மேல். ஏறத்தாழ 6ஆயிரம் கிலோ மீட்டர் கடந்து வருவதற்கு சுமார் 16 மணி நேரம் ஆகியிருந்தது.
“பயணக் களைப்பை மறந்திடுடா கண்ணா.. ஒரு புது உலகத்தைப் பார்க்கப் போறே” என்பது போல கன்னத்தைத் தடவியது ஜப்பான் சூரியன். டோக்கியோவின் இரண்டு பன்னாட்டு விமான நிலையங்களில் ஒன்று, நரிதா. அங்குதான் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் தரையிறங்கியது. புது வெளிச்சம் உடலுக்குப் புத்துணர்வை அளித்தது.
பூமி சுழற்சியின்படி உலகத்தில் சூரியோதயம் முதலில் தெரிவது, கரோலின் தீவுகளில்தான் என்கின்றனர் ஆய்வாளர்கள். மில்லினியம் (புத்தாயிரம்) தீவுகள் என்றும் அழைக்கப்படும் இப்பகுதியும் பசிபிக் பெருங்கடலில்தான் உள்ளது.
அமெரிக்க கண்டத்திற்கும் ஆஸ்திரேலியா கண்டத்திற்கும் இடையே மத்திய பசிபிக் பெருங்கடலில் உள்ள கரோலின் தீவுகளில் உதிக்கும் சூரியனின் கதிர்களுக்குத் தொட்டுத் தடவ எந்த மனிதக் கன்னங்களும் கிடைப்பதில்லை. அந்தத் தீவுகளில் மனிதர்கள் குடியிருக்கவில்லை. கரோலின் தீவுகள் போலவே இன்னும் சில தீவுகளிலும், மேலும் சில நாடுகளிலும் சூரிய உதயம் முன்னதாகவே இருந்தாலும், ஜப்பானுக்குத்தான் ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்ற பெயர் அமைந்திருக்கிறது.
பண்பாட்டுப் பெருமையும், மிகப் பெரிய நிலப்பரப்பும் கொண்ட சீன நாட்டுக்கு கிழக்கு திசையில் இருக்கிறது ஜப்பான். சீனாவுக்கும் ஜப்பானுக்கும் நெடுங்காலத் தொடர்பு உண்டு. போர்களும் ஆக்கிரமிப்புகளும் நடந்துள்ளன. வரலாற்றின் பார்வையில், கி.மு.400 முதலே ஜப்பான் நாட்டைப் பற்றிய குறிப்புகள் உள்ளன. அதனால், சீனா, இந்தியா, கிரேக்கம், எகிப்து போன்ற மூத்த நாகரிக நாடுகளுக்கு முன்பாக கிழக்கு திசையில் உள்ள ஜப்பான் நாட்டில்தான் முதலில் சூரியோதயம் தெரியும். அந்த அடிப்படையில், ‘சூரியன் உதிக்கும் நாடு’ என்று ஜப்பானை சீனர்கள் அழைக்க, அதுவே மற்ற நாடுகளிலும் வழக்கமாகிவிட்டது.
நம்முடைய மண்ணுக்கு ஏற்ப ஓர் எடுத்துக்காட்டு சொல்லவேண்டும் என்றால், முதல் பொதுத் தேர்தல் நடைபெற்ற 1952ல் தி.மு.க போட்டியிடவில்லை. எனினும், அன்றைய தென்னார்க்காடு மாவட்டம் வளவனூர் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட ஏ.கோவிந்தசாமி வெற்றி பெற்ற சின்னம் உதயசூரியன்.
அறிஞர் அண்ணாவின் அன்பைப் பெற்றவர். தி.மு.க.வின் ஆதரவையும் தேர்தல் களத்தில் பெற்றவர். 1957ல் தி.மு.க. முதன்முதலில் தேர்தலில் போட்டியிட்டபோது, ஏ.கோவிந்தசாமி அதே தொகுதியில் அதே சின்னத்தில் தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வென்றார்.
அண்ணா, கலைஞர், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட 15 தி.மு.க.வினரும் அந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றனர். திருவண்ணாமலை தர்மலிங்கம், ஈ.வெ.கி.சம்பத் இருவரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். இவர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தேர்தல் ஆணையம் ஒதுக்கிய சின்னம், உதயசூரியன்தான். தேர்தல் முடிவுகளுக்குப் பின், தி.மு.க.வுக்கான சின்னமாக உதயசூரியனை ஒதுக்கி, அங்கீகாரம் அளித்தது இந்தியத் தேர்தல் ஆணையம். 1967ல் அண்ணாவின் அமைச்சரவையில் இடம் பெற்ற முதல் உதயசூரியன் வேட்பாளர் ஏ.கோவிந்தசாமி, கரோலின் தீவு என்றால், உதயசூரியனை அதிகாரப்பூர்வமாகப் பெற்ற தி.மு.க., ஜப்பான்.
நாங்கள் அங்கே தரையிறங்கியபோது, ஜப்பான் நேரம் காலை 7.10 மணி. இந்திய கடிகாரத்தைவிட ஜப்பான் கடிகாரம் மூன்றரை மணி நேரம் வேகமாக ஓடிக் கொண்டிருக்கும். நம்ம ஊரில் எல்லாரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கும் நேரமான 3.40மணி. அதனால், பத்திரமாகத் தரையிறங்கியதை மகள் தமிழ்நிலாவுக்கும், உற்ற (ஆண்-பெண்) நண்பர்களுக்கும் வாட்ஸ்ஆப் மெசேஜாக அனுப்பிவிட்டு, நரிதா விமான நிலையத்தில் பயண ஆவணங்கள் ஆய்வு, பாதுகாப்பு- சுங்கச் சோதனைகளுக்கு ஆயத்தமானேன். நீண்ட வரிசை நின்றது.
விமான நிலையப் பணிகளில் இருந்த ஜப்பானியர்கள் தங்கள் தலையை லேசாகத் தாழ்த்தி வரவேற்று, மென்புன்னகையுடன், சோதனை நடைமுறைகளுக்கு செல்லவேண்டிய பகுதிகளுக்கு வழிகாட்டினர். எடுத்த எடுப்பில், உடல் வெப்பநிலை சோதனைதான். அதற்கென உள்ள வாசல் வழியே நுழைந்து சென்றால், நம் உடலின் வெப்பநிலை பதிவாகிவிடுகிறது. அதைக் கடந்து, சென்றபிறகு விசா ஆய்வு. அதற்கு முன்பாக, ஒரு படிவத்தை நிரப்ப வேண்டும்.
இதற்கு முன் ஜப்பான் வந்திருக்கிறீர்களா, வேறு நாடுகளுக்கு சென்றிருக்கிறீர்களா, உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ உங்கள் மீது வழக்கு உண்டா, கடவுச்சீட்டு குறித்த விசாரிப்புகள் உண்டா போன்ற கேள்விகள். இந்தப் படிவத்தை விமானத்திலேயே எங்களிடம் தந்திருந்ததால் அதனை நிரப்பி வைத்திருந்தோம். அதைக் காட்டியதும், ஆவணங்களை ஆய்வு செய்யும் பகுதிக்கு விரைந்து அனுப்பி வைத்தனர்.
எல்லாமே பயோ-மெட்ரிக் என்பதால் ஓரிரு நிமிடத்திற்கும் குறைவாகவே அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு, அனுமதி முத்திரையிட்டுத் தந்தார் அலுவலர். அதன் பிறகு, பயணப் பெட்டி எந்த கன்வேயர் பெல்ட்டில் வருகிறது என்பதை அங்கிருந்த மின்னணு அறிவிப்பு பலகையில் கவனித்தோம். நிரப்பிய படிவத்திலும் சரி, அறிவிப்பு பலகையிலும் சரி, ஜப்பானிய மொழிக்குத்தான் முன்னுரிமை. ஆங்கிலம் சிறிய எழுத்துகளில்தான் உள்ளது. கண்ணாடியைப் போட்டுக் கொண்டுதான் படித்தேன். journalist kovi lenin japan visit 3
நானும் எழுத்தாளர் சாருநிவேதிதாவும் அவரவர் பயணப் பெட்டிகளை எடுத்துக் கொண்டோம். சுங்கச் சோதனைக்கு வழிகாட்டும் விமான நிலையப் பணியாளர்கள், கையில் ஒரு மொபைலை வைத்துக்கொண்டு, இதில் பதிவு செய்துவிட்டீர்களா என்று கேட்டார்கள். ஜப்பானுக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய வேண்டிய செயலி. நாங்கள் விமானத்திலேயே இன்னொரு படிவத்தையும் நிரப்பியிருந்தோம். அது, சுங்கப் பரிசோதனைக்கானது. அதனால், அந்தப் பரிசோதனை இடத்திற்கும் விரைந்து சென்றோம்.
தடை செய்யப்பட்ட பொருட்கள் உள்ளனவா, ஆயுதங்கள்- போதை பொருட்கள் இருக்கிறதா என்ற கேள்விகள் அந்தப் படிவத்தில் இருக்கும். எல்லாவற்றுக்கும் இல்லை என்பதுதான் எங்கள் பதில். அதை ஒவ்வொன்றாகப் பார்த்துக் கொண்டு வந்த சுங்கச் சோதனை பெண் அதிகாரி, ஒரு கேள்விக்கானப் பதிலுக்குப் பக்கத்தில் தன் பேனாவை அழுத்தமாக வைத்தபடி, நிமிர்ந்து பார்த்தார். “என்னய்யா இது?” என்பது போன்ற அந்தப் பார்வையில் ‘ஜெர்க்’ ஆனேன். பெட்டிக்குள் ஏதாவது வில்லங்கமாக எடுத்து வந்துவிட்டோமா என்று மனதுக்குள் குடைந்தது.
“ஜப்பான் பற்றி பல விவரங்களை கூகுளில் தேடினியே.. ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்னு தேடுனியா?” என்றது மைன்ட்வாய்ஸ்.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் – 1
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் – 2