டிஜிட்டல் திண்ணை: எங்கே சென்றார் எடப்பாடி? பாதி வழியில் திரும்பிய நிர்வாகிகள்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும், ‘எடப்பாடி பழனிசாமியை பார்க்கப் போன நிர்வாகிகள் பாதியில் திரும்பி வந்ததாக வெளியான மின்னம்பலம் செய்தி இன்பாக்சில் வந்து விழுந்தது. அதை முழுதாய் படித்த வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“கடலூர் மாவட்ட நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஏப்ரல் 29 ஆம் தேதி சேலம் புறப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் மூலமாக எடப்பாடியுடனான சந்திப்புக்கு நேரம் வாங்கப்பட்டிருந்தது.

காலையில் புறப்பட்ட நிர்வாகிகள் சேலத்துக்கு அருகே ஆத்தூர் சென்று கொண்டிருந்தபோது எடப்பாடியின் உதவியாளரிடம் இருந்து அவர்களுக்கு போன் வந்தது. ‘பொதுச் செயலாளர் இப்ப கொஞ்சம் பிசியா இருக்காரு. அதனால இன்னிக்கு நீங்க சேலத்துக்கு வரவேணாம்’ என்று சொன்னார் உதவியாளர். கொஞ்ச நேரத்தில் அந்த நிர்வாகிகளில் ஒருவரின் செல்போனில் வீடியோ கால் வழியாக தோன்றினார் எடப்பாடி.

அதிமுக பொதுச் செயலாளரை வீடியோ காலில் பார்த்த நிர்வாகிகள், ‘அண்ணே’ என்றனர். ‘என்னை நேர்ல சந்திக்க முடியலைனு நீங்க நினைக்கக் கூடாதுனுதான் வீடியோ கால்ல வந்தேன். மே 5-ஆம் தேதிக்கு அப்புறம் சந்திக்கலாம். நீங்க இப்ப ஊருக்கு புறப்படுங்க’ என்று சொல்லியிருக்கிறார் எடப்பாடி. வீடு தேடிச் சென்று சந்திக்க வேண்டியவர் வீடியோ காலில் வந்துவிட்டாரே என்று திகைப்பில் நிர்வாகிகள் மீண்டும் கடலூருக்குத் திரும்பிவிட்டனர்.

நேற்று காலையே சேலத்தில் இருந்து புறப்பட்ட எடப்பாடி பழனிசாமி ஈரோடு வழியாக காரில் கோவை சென்றிருக்கிறார். கோவையில் இருந்து கேரளா சென்றுள்ள எடப்பாடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் வயநாட்டில்தான் இப்போது தங்கியுள்ளார் என்கிறார்கள் அதிமுக வட்டாரங்களில்.

நடந்து முடிந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி முழுதும் ஒற்றை ஆளாய் சென்று பிரச்சாரம் செய்தார் எடப்பாடி பழனிசாமி. தேர்தல் முடிந்ததும் சென்னை சுற்றுப்புற மாவட்டங்களுக்கு உட்பட்ட மக்களவைத் தொகுதிகளை சேர்ந்த மாசெக்கள், வேட்பாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இதன் பிறகு ஓய்வும் ஆயுர்வேத சிகிச்சையும் எடுத்துக் கொள்ள முடிவு செய்தார் எடப்பாடி. அதன்படியே வயநாட்டில் இருக்கும் தாஜ் ஓட்டலில் சில நாட்கள் தங்குவதற்காக சென்றுள்ளார். வயநாடு தாஜ் ஓட்டலில் நிபுணத்துவம் வாய்ந்த ஆயுர்வேத நிபுணர்களால் இயற்கை முறையிலான மறுமலர்ச்சி சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வரும் மே 12 ஆம் தேதி எடப்பாடிக்கு பிறந்தநாள். கடந்த வருடம் அவரது பிறந்தநாளின் போது சேலத்திலும் சென்னையிலும் பல மணி நேரம் நின்றுகொண்டே நிர்வாகிகளின், தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டதால் கணுக்கால் வலிக்கு உள்ளானார் எடப்பாடி. இப்போதும் அவருக்கு கணுக்கால் வலி தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது.

இந்த நிலையில் இயற்கை ஆயுர்வேத வழிமுறைகளோடு ஓய்வில் இருக்கும் எடப்பாடி, வரும் மே 12 ஆம் தேதி தனது பிறந்தநாளுக்குள் ஃப்ரஷ்ஷாக சென்னை வந்துவிடுவார் என்கிறார்கள் சேலம் வட்டாரங்களில்” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கொளுத்தும் வெக்கையில, விக்கிரவாண்டி இடைத் தேர்தலா?

ஏற்காடு மலையில் பேருந்து விபத்து : 5 பேர் பலி!

+1
0
+1
7
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *