உதயசூரியன் நாடு: டோக்கியோவில் தமிழரங்கம்!
கோவி.லெனின் Govi Lenin japan travel story 16
ஜப்பான் பயணப் பதிவுகள் 16
ஃபுனாபொரி டவர் ஹால். டோக்கியோ நிஷிகசாய் அருகே உள்ள உயரமான கட்டடம். மாநகராட்சி தொடர்பான அலுவலகங்கள் உள்ள அந்த வளாகத்தில் ஜப்பானியர்கள் தங்களுக்கான சான்றிதழ்களைப் பெறுவதற்கும், விளக்கங்களைக் கேட்டுப் பெறுவதற்கும் அதிகாரிகள் முன்பாக அமர்ந்திருந்தார்கள். எல்லாமே ஆன்லைனில் க்ளியர் செய்யப்பட்டு விடுகிறது. கூடுதல் விவரங்கள் பெற விரும்புவோர் நேரில் வந்து அறிந்து கொள்கின்றனர். அல்லது பதிவுகள் தொடர்பான சில விவரங்களுக்காக அங்கு வருகின்றனர்.
உயரமான அந்தக் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் உள்ள அரங்கத்தின் உள்ளே நுழைந்தபோது தமிழ் மணம் கமழ்ந்தது. ‘துளிக்கனவு’ என்கிற இலக்கிய வட்டமும், வெளிநாடுவாழ் தமிழ் இந்தியர்கள் சங்கம் ஜப்பானும் (NRTIA Japan) இணைந்து நடத்துகின்ற ‘தமிழரங்கம்’ நிகழ்வுக்காக டோக்கியோ வாழ் தமிழர்கள் தென்றல் போல மெல்ல உள்ளே வந்து கொண்டிருந்தார்கள். அந்த நிகழ்வில் பேசுவதற்காகத்தான் நான் ஜப்பானுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். எழுத்தாளர் சாரு நிவேதிதா சிறப்புரை ஆற்ற வேண்டிய நிகழ்வும் அதுதான். அரசு கட்டடம் என்றபோதும் அரங்கம் மிக அழகாக இருந்தது.
டோக்கியோ செந்தில் என்றழைக்கப்படும் எழுத்தாளர் ரா.செந்தில்குமாரின் உரை உணர்வுப்பூர்வமாக இருந்தது. இலக்கியத்தின் மீதான அவரது ஈடுபாட்டை எடுத்துக்காட்டியதுடன், சாருநிவேதிதாவின் படைப்புகளையும், அந்தப் படைப்புகள் வெளியானபோது வாசகர்கள் காட்டிய பேராதரவையும், சாருவின் புத்தக வெளியீட்டு நிகழ்வுகள் திரை நட்சத்திரங்களின் புதிய பட ரிலீசுக்கு இணையாக வாசகர்களால் கொண்டாடப்பட்டதையும் மிக நேர்த்தியாக எடுத்துரைத்தார்.
நண்பர் குன்றாளன் உள்ளிட்டோர் டோக்கியோ தமிழார்வலர்களின் இலக்கிய தாகத்தை தணிக்கும் வகையில் தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்துவதை அறிந்துகொண்டேன். நண்பர் கமலக்கண்ணன் தங்களின் இலக்கியப் பணியை எடுத்துரைத்து, டோக்கியோ தமிழார்வலர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி உரையாற்றினார்.
சமகாலத் தமிழ் இலக்கியம் குறித்த எழுத்தாளர் சாருவின் பேச்சு வாசகர்களுடன் நேரடியாக உரையாடும் தன்மையில் அமைந்திருந்தது. பல படைப்புகளைத் தந்த அவரை ஒரு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், “உங்கள் பேச்சுகளை டி.வியில் நீயா-நானா நிகழ்ச்சியில் கேட்டிருக்கேன்” என்று அடையாளப்படுத்திக் கொண்டபோது, ஓர் எழுத்தாளனாகத் தனக்கு ஏற்பட்ட அதிர்வுகளை விவரித்து, தமிழர்களுக்கு சினிமாக்காரர்கள் மீது இருக்கின்ற ஈர்ப்பு என்பது கடல் கடந்தும் தொடர்கிறது என்பதை விளக்கி, தற்கால இலக்கியப் போக்குகளை சுட்டிக்காட்டினார். புதுமைப்பித்தன் போன்ற மிகப் பெரும் படைப்பாளிகள் தங்கள் சொந்த வாழ்க்கையில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடிகளையும் அவற்றை அவர்கள் கடந்து சென்ற சூழலையும், அத்தகையச் சூழலையும்கூட இலக்கியமாகப் பதிவு செய்திருப்பதையும் சொன்னார். ஜப்பானிய திரைப்படங்கள், ஜப்பானிய இயக்குநர்கள்-படைப்பாளிகள் குறித்த அவரது விவரிப்பு, திரையில் காட்சிகளைப் பார்ப்பது போல இருந்தது.
‘மொழிப் போர்- தொடக்கமும் தொடர்ச்சியும்’ என்பதுதான் எனக்கானத் தலைப்பு. தமிழ்நாட்டில் 20ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற மொழிப் போராட்டத்தையும் அதில் பங்கேற்றவர்களின் தியாகங்களையும் ஜப்பானில் இன்றைக்கு இருப்பவர்களிடம் சொல்ல வேண்டிய தேவை என்ன இருக்கிறது? தமிழுக்கு உள்ள சிறப்புகள் ஜப்பான் மொழிக்கு இல்லையா? ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட சிறப்புகள் உண்டு. அதை மதிப்பவர்கள் தமிழர்கள். ஒரு மொழி இன்னொரு மொழி மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என நினைப்பவர்களும் தமிழர்கள்.
டோக்கியோவில் தரையிறங்கிய நிமிடம் முதல் ஜப்பானிய எழுத்துகள் ஒவ்வொன்றும் ஓவியங்களாகவே என் கண்களில் பட்டன. அந்த மொழியின் உச்சரிப்பு இசை போலவே இருந்தது. சீன எழுத்துகளைச் சார்ந்த காஞ்சி என்ற சித்திர வடிவமைப்பில் ஜப்பானிய எழுத்துகள் அமைந்துள்ளன. பழமையான ஜப்பானிய சொற்கள், அதன் அடுத்தடுத்த மாறுபாடுகள் என காலத்திற்கேற்ற மாற்றங்களைக் கொண்டுள்ள ஜப்பானிய மொழியின் உச்சரிப்பு அந்த மண்ணின் தன்மையுடன் இருப்பதால் அவர்கள் பேசுவதுகூட பாடுவது போல எனக்குத் தோன்றியது.
2004 டிசம்பர் 26 அன்று இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் தொடங்கி கன்னியாகுமரி வள்ளுவர் சிலை வரையில் கடல் பொங்கியது. சென்னை கடற்கரையையொட்டிய திருவல்லிக்கேணிப் பகுதியில் வசிக்கும் எனக்கு அது அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தைத் தந்தால், கடலை நோக்கி ஓடி, கண்ணகி சிலை வரை வந்திருந்த கடல் நீரைக் கண்டேன். புயல், வெள்ளம் இவற்றை சொந்த ஊரிலேயே எதிர்கொண்டிருந்த நான், சென்னையில் பூகம்பத்தையும் கடல் பொங்குவதையும் கண்டவனானேன்.
ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகமான நீளம் கொண்டது தமிழ்நாட்டின் கடற்கரை. சென்னை முதல் குமரி வரை பல நூறு பேரின் உயிர்களைக் குடித்த அன்றைய நாளில், கடல்நீர் தன் தாகம் தணித்துக்கொண்டது. இயற்கையின் இந்தக் கோரத் தாண்டவம் குறித்து தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் செய்திகள் மெல்ல வெளியாகத் தொடங்கி சில மணிநேரம் கழித்துதான், இத்தகையப் பெரிய அலையுடன் கடல் பொங்குவதற்குப் பெயர் ‘சுனாமி’ என்று தெரிய வந்தது. கடந்த 20 ஆண்டுகளாக டிசம்பர் 26 அன்று சுனாமி நினைவு நாளைக் கடைப்பிடிக்கின்றன தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதிகள்.
சுனாமி என்பது ஜப்பானியச் சொல். ஒரு பேரிடரில் அது இன்று தமிழ்ச் சொல்லைப் போலவே பயன்படுத்தப்படுகிறது. கடல் பொங்குவது ஜப்பானில் இயல்பு. அது அந்த மொழிக்கு ஒரு சொல்லை உருவாக்கித் தந்திருக்கிறது. தமிழ்நாட்டில் கடல்பொங்குவது அரிது. அதனால் சுனாமி என்ற புதிய சொல், தமிழ் போலவே புழக்கத்திற்கு வந்துவிட்டது. தமிழார்வலர்கள் சுனாமி என்ற சொல்லுக்கு இணையாக ஆழிப்பேரலை என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினர்.
எந்தவொரு மொழியும் அதன் சொற்களும் இயல்பான தன்மையில் உருவாகி வளர்கின்றன. பிற மொழிகளுக்கும் சொற்களைக் கொடை வழங்குகின்றன. ஒரு மொழி அழிக்கப்பட்டால் அதன் இயற்கையான அறிவு வளமும் அழிந்துபோகும். அதனால்தான், மூத்த மொழியான தமிழ் மொழி மீது இந்தி ஆதிக்கம் செலுத்தியபோது அதனை எதிர்த்து திராவிட இயக்கம் போராடியது. பெரியார்-அண்ணா-கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் போராடினார்கள். மாணவர்களும் இளைஞர்களும் போராடினார்கள். நடராசன்-தாளமுத்து தொடங்கி, கீழப்பழுவூர் சின்னசாமி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரன் உள்ளிட்ட பலர் உயிர்த்தியாகம் செய்தனர்.
அந்தத் தியாகிகளின் உணர்வு வீணாகிப்போய்விடக் கூடாது என்பதால்தான் ஆதிக்க இந்திக்கு இடமில்லை என்று சொல்லி தமிழ்நாட்டில் தமிழ்-ஆங்கிலம் என்ற இருமொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார் அண்ணா. அந்தத் தமிழுக்கு செம்மொழித் தகுதி கிடைக்கச் செய்தார் கலைஞர். தகவல் தொழில்நுட்பத் துறையில் முன்னோடி மாநிலமாகத் தமிழ்நாட்டை உருவாக்கினார்.
மொழிப் போர்க்களத்தின் முதல் பலியான நடராசனின் இறுதி ஊர்வலத்தில் அண்ணா இரங்கலுரை ஆற்றியபோது, “தனது மொழிக் கலாச்சாரத்திற்காகவும் விடுதலைக்காகவும் உயிரை ஈந்த நடராசனின் வீரவாழ்வை நாமும் பின்பற்றுவோம்” என்றார். அந்தத் தியாகிகளின் வீரவாழ்வு வீண்போகவில்லை என்பதைத்தான் தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கை வழியில் அமைந்த கல்வி வாயிலாக-கணினி உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப உயர்கல்வியினைப் பயின்று ஜப்பானிலும் கடல் கடந்த பல நாடுகளிலும் உயர்ந்த பணிகளில் இருக்கின்ற உங்களைப் போன்ற தமிழர்களின் வாழ்வு நிலைநாட்டியிருக்கிறது என்று என்னுடைய உரையை நிறைவு செய்தேன். தொகுப்பாளர் கவிதா மோகன் நல்ல முறையில் நிகழ்ச்சியைக் கையாண்டார்.
ஜப்பானில் சிறந்து விளங்கும் தமிழர்களான தொழிலதிபர் உகானந்த், தொழிலதிபர் நடராஜன், உணவக உரிமையாளர் ஹரிநாராயணன், இலக்கிய ஆர்வலரும் பொதுவுடைமைச் சிந்தனையாளருமான கோவிந்தராஜன் உள்ளிட்டோர் நிகழ்வுக்கு வருகை தந்திருந்தனர். பேசி முடித்தபிறகு, அருகில் வந்து பாராட்டி, அன்பைப் பகிர்ந்தனர். அவர்களுடன் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, நண்பர் ஒருவர் தனது அலைபேசியை என்னிடம் தந்து, “உங்ககிட்ட பேசணுமாம்” என்றார்.
யாராக இருக்கும் என்று யோசித்தபடி அலைபேசியை காதருகே கொண்டு சென்றேன்.
“நான் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் சிவகங்கை ராசேந்திரனுடைய உறவினர். டோக்கியோவில்தான் இருக்கிறேன். என்னுடைய இடத்திலிருந்து அங்கே வருவதில் நேரம் தாமதமாகிவிட்டது. இருந்தாலும் உங்கள் பேச்சைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்” என்றது அலைபேசியில் ஒலித்த குரல்.
மொழிப்போர்த் தியாகிகள் விதைத்ததும் அவர்களைப் பற்றி நான் உரைத்ததும் வீணாகவில்லை…
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு Govi Lenin japan travel story 16
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
உதயசூரியன் நாடு: ஆசை நூறு வகை.. ஜப்பான் பயணப் பதிவுகள் – 15
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை! 14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1