கோவி. லெனின் Govi Lenin japan travel story 12
கடல் போல விரிந்திருந்தது அஷி ஏரி. பழைமையின் சாயல் மாறாத பெரிய படகு ஒன்று அலைகளில் அசைந்தாடியபடி கரையோரத்தில் நின்றது. அதில் பயணிப்பதற்காக, டிக்கெட் கவுன்ட்டர் முன் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர். இத்தனை பேர் டிக்கெட் வாங்க எத்தனை நேரமாகும் என கணக்குப்போட்ட இந்திய மனது, ஏதாவது சைடு கேப்பில் முன்னாடி போய்விட முடியுமா என யோசித்தது. ஜப்பானியர்கள் யாரும் அப்படி யோசிக்கிறவர்களாக இல்லை. க்யூ என்றால் க்யூதான். தங்களுக்கான முறை வரும்போது டிக்கெட் வாங்கிப் பயணிப்பது, இல்லையென்றால் அடுத்த படகில் போகலாம் என்ற ஜென் நிலையில் இருந்தார்கள்.
டிக்கெட் எடுத்ததும், கரையோரம் இருந்த படகு அலைகளில் அசைவது, வா..வா.. எனக் கூப்பிடுவது போலத் தெரிந்தது. பழைய ’ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் காட்டப்படும் கப்பல் போல இருந்தது அந்த பெரிய படகு. உள்ளே, மூன்று அடுக்கு. முதல் இரண்டு அடுக்குகளில் பயணிகள் உட்கார்ந்து கொள்ளலாம். அதிலும் காசுக்கேற்ற வகுப்புகள் உண்டு. மூன்றாவது அடுக்கு, ஏரியையும் வானத்தையும் ரசிப்பதற்கு.
இரண்டாவது அடுக்கில் உட்கார்ந்து, ஜன்னல் வழியே படகு சவாரியை அனுபவித்துவிட்டு, மூன்றாவது அடுக்குக்கு சென்றபோது, ஜப்பானின் இயற்கை அழகு மயக்கியது. ஏரிக் கரையில் அடர்ந்த காடுகள், தூரத்தில் மலைகள். நீரில் இன்னும் சில படகுகள், அவற்றின் மீது சிறகசைக்கும் பறவைகள். மனது மீன் போலத் துள்ளியது.
தூரத்தில் உள்ள எதையோ சிலர் கையை நீட்டி சுட்டிக்காட்டிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் பைனாகுலரால் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்களின் முகத்தில் ஒரு பரவசம் தெரிந்தது. அவர்கள் பார்த்தது, ஃப்யூஜி எரிமலை. ஜப்பானின் இயற்கைக் கொடை. ஹக்கோனேவிலிருந்து ரோப் வே வழியாகப் பயணிக்கும்போதும், படகுப் பயணத்திலும் பல கோணங்களில் ப்யூஜி எரிமலையைப் பார்க்க முடியும் என்பது தனிச் சிறப்பு. சுற்றுலா வருபவர்கள் அந்தக் கோணங்களுக்காகக் காத்திருந்து பரவசமடைவதைக் காண முடிந்தது.
அரை நூற்றாண்டுக்கு முன்பாகவே, ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தின் பாடல் காட்சியில், இந்த அஷி ஏரியிலிருந்து ப்யூஜியை படம் பிடித்து, தமிழ் ரசிகர்களுக்கு காட்டியிருந்தார் அந்தப் படத்தின் ஹீரோவும் இயக்குநருமான எம்.ஜி.ஆர். பல முறை பார்த்த படம் என்பதால், ‘பன்சாயி..காதல் பறவைகள் ’ என்ற பாட்டை ‘ஹம்’ செய்தது உதடு.
கோதெம்பாவில் கரை இறங்கினோம். செந்தில் காத்திருந்தார். மறுபடியும் கார் பயணம். சாலையோரமாக அமைந்திருந்த ஓர் உணவகத்தை சுற்றிலும் இயற்கை ஓவியம் வரைந்ததுபோல அத்தனை அழகு. தொலைவில் மலைகள், அருகில் பசுமை, கை தொடும் தூரத்தில் சில பூக்கள்.
ஜப்பானிய பாரம்பரிய உணவு வகைகளை பொதுவாக எல்லாரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் தந்தார்கள். சோறு, மீன், சிக்கன், பீஃப், போர்க் எல்லாமும் சுவையாக இருந்தது. மதிய நேரப் பசிக்கும், சாப்பாட்டின் ருசிக்குமான போட்டியில் வயிறு நிறைந்தது.
“அடுத்தது எங்கே?” Govi Lenin japan travel story 12
“ஃப்யூஜிசான்” என்றார் செந்தில்.
“அப்படின்னா?”
“ஃப்யூஜி எரிமலைதான்.. அதை அப்படித்தான் சொல்வாங்க” என்றார் கோவிந்தபாசம்
“ஏன்?”
“நேரில் பார்க்கும்போது தெரிஞ்சுக்குவீங்க” என்றார் செந்தில்.
ஊருக்குள் பயணித்து, கிராமங்களைக் கடந்து, மலைப் பாதையில் ஏறியது கார். ஜப்பானியர்களின் வீடுகள், நெல்வயல்கள், தோட்டங்கள் எல்லாவற்றையும் ரசித்தபடி பயணித்தோம். நெடுநெடுவென வளர்ந்திருந்த மரங்களால் அடர்ந்திருந்த காட்டுக்கு நடுவே, கருத்த பாம்பு போல நெளிந்து சென்று கொண்டிருந்தது சாலை.
எத்தனையாவது கட்டத்தில் இருந்து பார்த்தால், ஃப்யூஜி எரிமலை தெளிவாக இருக்கும் என்பதை செந்தில் அறிந்திருந்தார். அந்த கட்டத்தை அடைந்தபோது, மலை முழுவதும் மேகமூட்டமாக இருந்தது. ஃப்யூஜி எரிமலையைப் பார்க்க வரும் சுற்றுலாவாசிகளுக்கு, மேக மூட்டம் கலையும் வரை காத்திருந்து தரிசிப்பதில் தனி இன்பம். நாங்கள் சென்றது மாலை நேரம் என்பதால், இனி எப்போது மேக மூட்டம் கலையும் என்ற யோசனை எங்களுக்கு.
சிலுசிலுவென வீசிய காற்று உடம்பை லேசாக நடுங்க வைத்தது. காரிலிருந்து இறங்கிய நிலையில், கண்கள் அப்படியே மலைச் சிகரம் இருக்கும் திசை நோக்கி உறைந்திருந்தது. ஒரு சில நொடிகளில்.. மேக மூட்டம் கொஞ்சமாகக் கலைய, மெல்லிய வெள்ளைத் துணி போர்த்தியது போன்ற அழகுடன் தெரிந்தது ஃப்யூஜி.
“வாங்க.. வாங்க..” என்று எழுத்தாளர் சாருவை அழைத்தேன். அவர் எந்தப் பதற்றமும் இல்லாமல் ஜெர்கினை அணிந்து கொண்டு வந்தார். ஃப்யூஜியைப் பார்த்தார்.
“இப்படி நில்லுங்க சார்” என்று ஒரு ஃபோட்டோ எடுத்தேன். மீண்டும் மேக மூட்டத்திற்குள் சிக்கிக் கொண்டது ஃப்யூஜி.
“கைலாய தரிசனம் போலத்தான்” என்றார் சாரு.
கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்தில் ரெஸ்டாரண்ட் இருந்தது. ரெஸ்ட் ரூம் இருந்தது. சிமெண்ட் பெஞ்ச்கள் இருந்தன. ரெஸ்ட் ரூம் போய்விட்டு வந்து, ரெஸ்டாரண்ட்டில் டீ ஆர்டர் பண்ணிவிட்டு, சிமெண்ட் பெஞ்சில் உட்கார்ந்து, மேக மூட்டம் விலகுகிறதா என்று காத்திருந்தோம்.
தேநீர் வாங்கி வந்தார் செந்தில். அவர் வரும்வழியில் ஒரு போஸ்ட் பாக்ஸ் தெரிந்தது.
“ஆள் இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துறாங்க.. அப்படிங்கிற மாதிரி, யாரும் குடியிருக்காத இந்த ஃப்யூஜி மலை அடிவாரத்தில் எதற்கு போஸ்ட் ஆபீஸ்?” என்பது போல எங்கள் பார்வை இருந்ததை செந்தில் கண்டுபிடித்துவிட்டார்.
ஜப்பானின் ஹொன்ஷூ தீவில் 12ஆயிரத்து 389அடி உயரத்தில் அமைந்திருக்கிறது ஃப்யூஜி. ஆசியாவின் இரண்டாவது உயரமான எரிமலை. (முதல் அதிக உயரம் கொண்ட எரிமலை சுமத்திரா தீவில் உள்ள கெரின்சி). ஃப்யூஜியின் சிறப்பு அதன் உயரத்தில் மட்டுமல்ல, ஜப்பானின் இயற்கை வளத்திற்கு அது அடிப்படையாக இருக்கிறது என்பதுதான்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் நெருப்பைக் கக்கும் எரிமலையாக இருந்த ஃப்யூஜி இப்போது அமைதியாகக் காட்சியளிக்கிறது. அதிலிருந்து பொங்கிப் பெருகிய லாவா எனும் எரிமலைக் குழம்பு, மலையைக் கடந்து, தரை வரை ஓடி, பின்னர் குளிர்ந்ததன் விளைவுதான் அந்தப் பகுதியில் உள்ள ஏரிகளும் ஆறுகளும். இன்றளவும் ஜப்பானை வளப்படுத்துபவை இந்த நீர் ஆதாரங்கள்தான்.
ஜப்பானிய மொழியில் சான் என்றால் புனிதம் என்பது போன்ற அர்த்தம் என்றார் செந்தில். செயின்ட் என்று ஆங்கிலத்தில் சொல்வதுபோல, ஜப்பானிய மொழியில் சான் என்கிறார்கள். மனிதர்களுக்கு மட்டுமே உரிய இந்த சான், எரிமலையான ஃப்யூஜிக்கும் பொருத்தப்பட்டு, ஃப்யூஜிசான் என்று மரியாதையுடன் குறிப்பிடுகிறார்கள்.
பூகம்பம், சுனாமி, எரிமலை, புயல், வெள்ளம் என இயற்கை சீற்றங்களை இயல்பாக எதிர்கொள்ளும் ஜப்பானியர்கள், ஃப்யூஜியை புனிதமாகக் கருதுவதிலும், ஃப்யூஜி மலை மீது ஏறி உச்சி வரை செல்வதிலும் ஆச்சரியமில்லை. ஃப்யூஜி மலை அமைந்துள்ள பகுதியில் ஒரு போஸ்ட் ஆஃபீஸ் இருப்பதற்கு காரணம், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தங்கள் சொந்த முகவரியிட்டு ஒரு அஞ்சலட்டையையோ, கடிதத்தையோ தபால் பெட்டியில் போட்டால், ஃப்யூஜி போஸ்ட் ஆபீஸ் முத்திரையுடன் தங்கள் இல்லம் தேடி வந்து சேரும்போது, கைகளில் ஏந்தி மகிழ்ச்சியடைவார்கள். அதற்காகத்தான் இவ்வளவு உயரத்தில் ஒரு ‘நமக்கு நாமே’ போஸ்ட் ஆஃபீஸ்.
கொதிக்கக் கொதிக்க கப்பில் ஊற்றப்பட்ட டீ, கைக்கு வரும்போது மிதமான சூட்டில் இருந்தது. அதை ருசித்துப் பருகியபடியே, ஃப்யூஜி இருக்கும் திசையைப் பார்த்தோம். மேகக்கூட்டம் விலகுவேனா என்பது போல இருந்தது.
புறப்படலாம் என்று காரில் ஏறினோம். கொஞ்ச தூரம் வந்தபோது,
வாவ்..
மேகமூட்டம் விலகி, சாலையின் இடதுபுறத்தில் செக்கச் சிவந்து கம்பீரமாக காட்சியளித்தது ஃப்யூஜிசான்.
காரை நிறுத்தி, இறங்கி, கண்குளிர ரசித்தோம். வெண்பனி மூட்டத்தில் பார்த்த அதே ஃப்யூஜியா இத்தனை சிவப்பாக எனக் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தன.
விரிந்த கண்கள் வழியே மனதுக்குள் ஃப்யூஜியை பதிவு செய்து கொண்டு பயணத்தைத் தொடர்ந்தோம். ஃப்யூஜி மலை மீது ஏறி உச்சி வரை சென்ற அனுபவத்தை செந்திலும் கோவிந்தபாசமும் பயண வழியில் பகிர்ந்து கொண்டார்கள்.
டோக்கியோ நகரை நோக்கிப் பயணிக்க வேண்டிய கார், திடீரென இன்னொரு பகுதிக்குச் சென்றது.
“என்ன இது?”
“ஆன்சென்”
“அப்படின்னா?”
“அனுபவிச்சா புரியும்”
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin japan travel story 12