கோவி.லெனின் Govi Lenin japan travel story 15
பரபரப்பான பகல் பொழுதுகளைவிட பளபளக்கும் இரவுப் பொழுதுகள் இதயத்திற்கு இதமளிக்கும். எண்ணங்களில் வண்ணமயமான உலகங்கள் தோன்றும். டோக்கியோ அசாகுசா பகுதியில் உள்ள ஷின்ட்டோ கோவிலைப் பார்த்துவிட்டு வரும்போது, இரவு பளபளத்தது. டோக்கியோவின் நிலாப் பொழுது எப்படியிருக்கும் என்பதைப் பார்ப்பதற்கு ஆசையாக இருந்தது. சற்று தூரத்தில், விண் முட்ட ஒளிர்ந்து கொண்டிருந்தது ஸ்கை ட்ரீ கோபுரம்.
ஜப்பானின் உயரமான கட்டடம் அதுதான். 2ஆயிரத்து 80 அடி உயரம் கொண்ட ஸ்கைட்ரீ கோபுரம் டோக்கியோவின் சுமிதா பகுதியில் அமைந்துள்ளது. உலகின் உயரமான கோபுரமான துபாயின் பூஜ் கலிஃபா 2 ஆயிரத்து 227 அடி.
சுமிதா ஆற்றின் கரையிலிருந்து பார்க்கும்போது ஸ்கைட்ரீ வண்ண விளக்குகளுடன் வானத்தைத் தொடுவது போல ஜொலிக்கிறது. ஆற்று நீரின் அலைகளிலும் அழகாக மின்னுகிறது. அதன் அழகை கண்களால் வருடியபடி அண்ணாந்து பார்த்தேன். ஜப்பானியர்களின் தொழில்நுட்ப பிரம்மாண்டம் விண்ணை உரசும் உயரத்தில் இருப்பது தெரிந்தது.
மறுபடியும் மெட்ரோ ரயில் பயணம். வெவ்வேறு திசைகள். ஒவ்வொன்றுக்கும் தனிப் பாதைகள். நண்பர் கமலக்கண்ணன் உடன் வந்ததால், எந்த ஸ்டேஷனில் இறங்கி, எந்த வண்டியில் மாறி, எந்த இடத்திற்குப் போக வேண்டும் என்பது எளிதாக இருந்தது. ஒரு ஸ்டேஷனில் இறங்கி, சற்று தூரம் நடந்து இன்னொரு இடத்திற்குப் போக வேண்டிய வழியில், அங்கிருந்த காம்ப்ளக்ஸில் ஒரு பெயர்ப்பலகை கண்களை ஈர்த்தது. ஜப்பானிய மொழிக்கு நடுவே DVD என்கிற ஆங்கில எழுத்துகள் தெரிந்தன.
நம்ம ஊரில் டிவிடி மலையேறி பல ஆண்டுகளாகிவிட்டது. பென்ட்ரைவ் கூட இப்போது அதிகமாகப் புழங்குவதில்லை. ரயிலில் பக்கத்து சீட் பயணி தன் மொபைலில் பார்க்கும் படத்தை இவரும், இவர் பார்க்கும் படத்தை அவரும் ஷேர் செய்து கொள்வதற்கான ஆப்கள் வந்துவிட்டன. ஓ.டி.டி.யில் படம் பார்க்கிறார்கள். ஆனால், இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட ஜப்பானில் டி.வி.டி. யுகம் இன்னும் மாறவில்லையா?
தொழில்நுட்பங்கள் காலந்தோறும் மாறும். உணர்வுகள் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் நீடிக்கத்தானே செய்யும். ஆதி மனிதர்களின் காம உணர்வு, அறிவியல் வளர்ச்சி பெற்ற மனிதர்களிடம் மறைந்தா போய்விட்டது? அது, காலத்திற்கேற்ற தொழில்நுட்பத்தில் உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டுதானே இருக்கிறது. ஜப்பானின் டிவிடி பார்களும் அப்படித்தான்.
கம்ப்யூட்டர் பிரவுசிங் சென்டர்களில் உள்ளதுபோல டிவிடி பார்களில் தனித்தனி கேபின்கள். அதனுள்ளே உட்காருவதற்கு வசதியான ஒரு நாற்காலி. எதிரே ஒரு திரை. அடல்ட்ஸ் ஒன்லி ட்ரிபிள் எக்ஸ் படங்களுக்காகவே வடிவமைக்கப்பட்டதோ அந்த கணினித் திரை என்று நினைக்குமளவுக்கு, எல்லா கேபின்களிலும் அப்படிப்பட்ட படங்களைப் பார்க்கலாம். ஆய கலைகள் அறுபத்து நான்கையும் அதற்கு மேலேயும் காட்டக்கூடிய படங்கள் ஓடும். மனது கிளர்ச்சியடைந்து, உணர்ச்சி வடிகின்ற வரை பார்த்து ரசிக்கலாம்.
“நானெல்லாம் நிலைச்சி நின்று ஆடக்கூடிய ஆள்” என்று ஷோல்டரை உயர்த்தக்கூடிய நபர் நீங்கள் என்றால், ஜப்பான் டிவிடி பார்காரர்களுக்கு அது பற்றியெல்லாம் கவலையில்லை. எவ்வளவு நேரம் வேணும்னாலும் நிலைச்சி நின்னுக்கோ.. எத்தனை மணி நேரமோ அதற்கேற்ப ஜப்பான் நாணயமான யென்னை எண்ணிக் கொடுத்துட்டுப் போ என்பதுதான் அவர்களின் பதிலாக இருக்கும். நான் மொரட்டு சிங்கிள் என்று தனியாக உட்கார்ந்து படங்களை ரசித்து உணர்ச்சிக்கான வடிகால்களில் பாய்கிறவர்களும் உண்டு. சேவைக் கரங்கள் தேவைப்படுகிறவர்கள் அதற்கும் பணம் கட்டி, உச்சபட்ச மகிழ்ச்சியுடன் திரும்பி வருவார்கள்.
காலை முதல் தொடர்ச்சியான அலைச்சல், இன்னும் ஒன்றிரண்டு மெட்ரோ ரயில்களுக்கு மாற வேண்டிய சூழல். அதனால், டிவிடி பார்களை அனுபவிக்க நேரம் வாய்க்கவில்லை. நிஷிகசாய்க்குத் திரும்பியபோது, தங்கள் பணிகளை முடித்துவிட்டு வந்திருந்த டோக்கியோ தமிழ் நண்பர்களுடன் இரவு உணவு நேரம் அமர்க்களமானது. நம்ம ஊர்க் கதைகளுடன் ஜப்பானிய உணவு வகைகளை கொறித்தோம். இரவு நேர டோக்கியோவின் சிறப்பம்சங்கள் பலவும் வெளிப்பட்டன.
“நீங்க தங்கியிருக்க ஹோட்டலுக்கு பக்கத்து தெரு வழியா போங்க” என்றார் ஒரு நண்பர். நாங்கள் சாப்பிட்ட உணவகத்துக்கும், தங்கியிருந்த ஹோட்டலுக்கும் அதிக தூரமில்லை. அப்படியே பக்கத்து தெரு வழியாகப் போனோம். தெருவின் முனையில் தன்னந்தனியாக ஒரு பெண் நின்று கொண்டிருந்தார். தன்னை அலங்காரம் செய்திருந்தார். அழகாக உடுத்தியிருந்தார். அவரைக் கடந்து சென்ற பிறகு, சற்று தூரத்தில் இன்னொரு பெண் அதுபோல நின்று கொண்டிருந்தார். இன்னும் கொஞ்ச தூரத்திலும் அப்படியே அவர்கள் நின்று கொண்டிருந்த இடத்திற்குப் பின்னால் எல்லாம் சிறிய விடுதிகள் இருந்தன.
விருப்பத்தைத் தெரிவித்தால், வாசலில் நிற்பவர்கள் உள்ளே அழைத்துச் செல்வார்கள். விருப்பங்களை நிறைவேற்றி அனுப்பி வைப்பார்கள். இரவு நேர டோக்கியோவில் இது சாதாரண வழக்கம். இதுபோன்ற சின்னச் சின்ன தெருக்கள் நிறைய உண்டு. அருகில் இருந்த அந்த ஒரு தெருவை மட்டும் அளந்துவிட்டு, நாங்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கு நண்பர்களுடன் வந்தேன். கிட்டத்தட்ட நள்ளிரவு நெருங்கியிருந்தது.அவர்கள் வீட்டிற்குப் புறப்பட வேண்டிய நேரம். “நாளைக்குப் பார்க்கலாம்” என்று காரில் ஏறினார்கள்.
ஹோட்டல் வாசலில் நின்றுகொண்டிருந்த நான், “கொஞ்சம் மேக்கப் போட்டுட்டு, நான் இங்கே நின்று கொண்டிருந்தால், எந்தப் பெண்ணாவது தன் விருப்பத்தை என்னிடம் தெரிவிக்க வாய்ப்புண்டா?” என்றேன்.
நண்பர்களின் கலகலப்பான சிரிப்புடன் அன்றைய எங்கள் இரவு அமைதியானது. டோக்கியோவின் இரவுப் பறவைகள் அப்போதுதான் சிறகசைக்கத் தொடங்கியிருக்கும்.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: மதம் உண்டு… வெறி இல்லை!14
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin japan travel story 15