சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில் 2023 ஜூன் 14 ஆம் தேதி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணையை மே 6ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
சென்னை உயர் நீதிமன்றம் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார் செந்தில்பாலாஜி.
ஏப்ரல் 1 ஆம் தேதி இதை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ் ஓகா, மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனு மீது ஏப்ரல் 29 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு’ அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணையை ஏப்ரல் 29 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
அதன்படியே இன்று (ஏப்ரல் 29) வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த வழக்கில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்திருக்கிறோம். இன்று மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவால் வர இயலவில்லை. அதனால் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது செந்தில்பாலாஜி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், “இந்த வழக்கை அமலாக்கத்துறை வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது. செந்தில்பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார் என்பதை கருத்தில் கொண்டு விசாரணையை நடத்த வேண்டும்” என்று கூறினார்.
அப்போது அமலாக்கத்துறை தரப்பில்… இந்த வழக்கில் நாங்கள் பதில் மனு தாக்கல் செய்துள்ளோம், பதில் மனு தாக்கல் செய்ய ஏற்பட்ட தாமதத்துக்கு மன்னிக்க வேண்டும் என்று நீதிபதிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதிகள் வழக்கு விசாரணையை அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று மே 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜியின் ஜாமீன் மனுவுக்கு எதிராக தாக்கல் செய்த 93 பக்க பதில் மனு அபிடவிட்டில் என்ன இருக்கிறது?
“2014-2015 காலகட்டத்தில் அரசு வேலை பெற்றுத் தருவதாக சொல்லி பணம் வாங்கிக் கொண்டு மோசடி செய்ததில் தமிழக முன்னாள் அமைச்சர் வி. செந்தில்பாலாஜிதான் மையமாகவும் முக்கியமாகவும் செயல்பட்டுள்ளார்.
செந்தில்பாலாஜி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது, சென்னை பெருநகரப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாய்ப்புக்காக லஞ்சம் பெறப்பட்டது.
இது தொடர்பாக ED பதிவு செய்த அமலாக்க வழக்கு தகவல் அறிக்கை (ECIR) மூன்று எஃப்ஐஆர்கள் மற்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரால் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையை அடிப்படையாகக் கொண்டது.
செந்தில்பாலாஜியின் கணக்கில் ₹1.34 கோடியும், அவரது மனைவி எஸ்.மேகலாவின் கணக்கில் ₹29.55 லட்சமும் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக வங்கி அறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும், அவரது சகோதரர் அசோக்குமாரிடம் ₹13.13 கோடியும், அவரது மனைவி ஏ.நிர்மலாவிடம் ₹53.89 லட்சமும், செந்தில்பாலாஜியின் தனி உதவியாளரான பி.சண்முகத்தின் வங்கிக் கணக்கில் ₹2.19 கோடியும் டெபாசிட் செய்யப்பட்டிருந்தது.
இந்த கால கட்டத்தில் வருமான வரிக் கணக்குகளில் வெளிப்படுத்தப்பட்ட வருமானத்துடன் ஒப்பிடும்போது இந்த டெபாசிட் மிகப்பெரியது. இந்த கணக்கில் வராத டெபாசிட்டுகள் மோசடி செய்த குற்றத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறில்லை.
செந்தில்பாலாஜியின் தனி உதவியாளர் சண்முகத்திடம் நேரடியாகவோ அல்லது மத்தியஸ்தர்கள் மூலமாகவோ பணம் செலுத்தியதாக பணம் கொடுத்தவர்களின் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓட்டுனர்கள், நடத்துனர்கள், இளநிலை வர்த்தகர்கள், இளநிலைப் பொறியாளர்கள், உதவிப் பொறியாளர்கள் ஆகியோரின் ஆட்சேர்ப்பு தொடர்பான குற்றச் சாட்டு ஆவணங்கள் செந்தில்பாலாஜியின் வீட்டில் ரெய்டு நடத்தியபோது கைப்பற்ற பென் டிரைவில் இருந்து கிடைத்தன.
இதுமட்டுமல்ல… இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, சண்முகம் மற்றும் மற்றொரு தனி உதவியாளர் எம். கார்த்திகேயன் ஆகியோருக்கும் அப்போதைய போக்குவரத்துத் துறை அதிகாரிகளுடன் மின்னஞ்சல் தொடர்புகளும் இருந்துள்ளன.
இவற்றின் மூலம் செந்தில்பாலாஜி தனது அமைச்சர் அலுவலகத்தை ஊழல் செயல்பாடுகள் மூலம் தனது தனிப்பட்ட லாபத்திற்காக பயன்படுத்தியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. அவர் தனது தனிப்பட்ட ஊழியர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து இதற்கான பெரும் ஒருங்கிணைப்பை செய்திருக்கிறார். செந்தில்பாலாஜியின் குற்றங்களை இந்த ஆவணங்கள் உறுதி செய்கின்றன.
செந்தில்பாலாஜியும் அவரது சகோதரரும் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள். செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் நீண்ட நாட்களாக தலைமறைவாகவே இருக்கிறார். செந்தில்பாலாஜி நீதிமன்றக் காவலில் இருந்தபோதும் இலாகா இல்லாமல் அமைச்சராகத் தொடர்ந்தார். அது அவரது செல்வாக்கைக் காட்டுகிறது.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இப்போது அவர் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தாலும் அவர் எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். பழைய செல்வாக்குடன் தான் இருக்கிறார்.
செந்தில்பாலாஜி விசாரணையைத் தொடங்குவதற்கு ஒத்துழைக்கவில்லை. மூன்று மாதங்களில் விசாரணையை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் கூறியதை அவர் ஏற்கவில்லை.
எனவே செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிடக் கூடாது” என்று அமலாக்கத்துறை சமர்ப்பித்த 93 பக்க அபிடவிட்டில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
–வேந்தன்
“நீலகிரி போல வேறெங்கும் நடக்கக் கூடாது”: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!
அஜித்தின் விடாமுயற்சி தாமதம்: என்னதான் காரணம்?