Govi Lenin Japan Travel Story
|

உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7

கோவி.லெனின் Govi Lenin Japan Travel Story

மெட்ரோ ரயில் நிலையங்கள் டோக்கியோவில் படுபரபரப்பாக இருந்தன. குறிப்பாக, டோக்கியோ சென்ட்ரல் நிலையம் கூடுதல் பரபரப்பு. எழுத்தாளர் சாரு இந்தியாவிலிருந்து புறப்படும்போதே டோக்கியோ-ஒசாகா-ஹிரோஷிமா புல்லட் ரயில் பயணத்திற்காக முன்பதிவு செய்திருந்தார்.

அந்த டிக்கெட்டுகளுக்கான பயண நாள், நேரம், இருக்கை வசதிகளை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. தொடுதிரையில் தன்னார்வலர் ஒருவர் அவருக்காக உதவினார்.

அந்த நடைமுறை சற்று கூடுதல் நேரம் எடுத்த சூழலில், “ஏதாவது சாப்பிடலாம்” என்ற எண்ணம் எங்கள் எல்லாருக்குள்ளும் இருந்தது. நண்பர் கமல்தான் அங்குள்ள சிறிய உணவகத்திற்கு அழைத்துச் சென்று, “சுஷி சாப்பிடலாம்” என்றார்.

தமிழர்களுக்கு இட்லி போல, ஜப்பானியர்களுக்கு சுஷி. நாலு இட்லி போதும் என்கிற தமிழர்கள் உண்டு. பத்து இட்லி சாப்பிட்டாலும் பத்தாது என்கிற தமிழர்களும் உண்டு. பசிக்கும் ருசிக்கும் ஏற்றபடி ஒவ்வொரு தமிழருக்கும் இட்லியின் எண்ணிக்கை வேறுபடும். அதுபோலத்தான் ஜப்பானியர்களுக்கு சுஷியும்.

சுஷி எப்படி செய்கிறார்கள்

நம்ம ஊர்போல ஜப்பானிலும் முதன்மையான உணவு தானியம், அரிசிதான். நம்ம ஊரில் சோறு குழைந்தால் ஒன்றுக்கொன்று ஒட்டிக்கொள்ளும், ஆனால், ஜப்பானில் முழு பருக்கையே ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொள்ளும் ஸ்டிக்கி ரைஸ் வகை அரிசி உண்டு.

அந்த அரிசியில் சோறு ஆக்கி, அதை லட்டு பிடிப்பது போல சூட்டுடன் பிடிப்பார்கள். சைஸ் ஏறத்தாழ ‘மைசூர்பா’ போல இருக்கும். ஒட்டும் தன்மை கொண்ட அந்த சோற்றின் மீது, மீனின் தோல் நீக்கிய மெல்லிய சதைத் துண்டு வைக்கப்பட்டிருக்கும்.

பச்சை மீனும் வெந்த சோறும் சேர்ந்த உணவுப் பண்டத்தை சோயா சாஸில் தொட்டு அப்படியே சாப்பிட வேண்டும். இதுதான் சுஷி.குமட்டக் கூடாது.

சோறும் மீனும் சோயா சாஸூடன் பற்களால் அரைபட்டு, கூழாகும்போது, மூன்றும் சேர்ந்த கலவையால், நாக்கு ஒரு ஸ்பெஷல் டேஸ்ட்டை அனுபவிக்கும்.

அதைச் சொல்வதைவிட சாப்பிட்டு அனுபவிப்பது சுகம். மைசூர்பா சைஸில் மட்டுமில்லாமல், பாதுஷா போல வட்டமான வடிவத்திலும்கூட சுஷி இருக்கும். நடுவில் மீனை வைத்து, சுற்றிலும் சோறு, அதற்கு கடல்பாசி கோட்டிங் கொடுத்திருப்பார்கள். இன்னும் சில வகை சுஷிகளும் உண்டு.

வங்கக்கடல் மீன் வகைகளில் வஞ்சிரம், வாவல் (வவ்வா), கொடுவா உள்ளிட்டவை பிரபலமானவை. பசிபிக் பெருங்கடல் பகுதியில் சால்மன், மக்கரேல், டுனா உள்ளிட்ட மீன்கள் பேர் பெற்றவை.

அவற்றின் சதைதான் சுஷியில் பயன்படுத்தப்படுகிறது. நம் ஊரில் மீனை சுத்தம் செய்வதென்றால் செதில்களையும் வயிற்றுக்குள் இருப்பதையும் நீக்கித் தருவார்கள். ஜப்பானியர்கள் அத்துடன், மீனின் மேல் தோலையும் நீக்கிவிட்டு, சதையை மட்டும் மெலிதாக ஸ்லைஸ் போட்டு சுஷிக்குப் பயன்படுத்துகிறார்கள். பச்சையாக சாப்பிடுவதால், அதற்கேற்ப தரமான, கெட்டுப் போகாத மீன்களையே கவனமாகப் பயன்படுத்துகிறார்கள்.

டோக்கியோ சென்ட்ரல் மெட்ரோ ரயில்வே ஸ்டேஷனில் நண்பர் கமல் சுஷியை ஆர்டர் செய்தபோது, எனக்கு சற்று தயக்கமாகத்தான் இருந்தது. பச்சை மீன் சதையை சாப்பிட முடியுமா என்று யோசித்தேன்.

ஜப்பானை விட்டுப் புறப்படுகிற வரை அவர்களின் உணவுதான் எனத் தீர்மானித்திருந்ததால் ட்ரை பண்ணினேன். ருசித்தது. முதல் தடவையே, மூன்று சுஷி சாப்பிட்டேன். வயிற்றுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லை. கைதான் எத்தனை முறை கழுவினாலும் பச்சை மீன் வாடை அடிப்பது போலவே இருந்தது.

சுவையான சஷிமி

Govi Lenin Japan Travel Story

சஷிமி என்றொரு உணவு வகையும் ஜப்பானில் உண்டு. இதில் சோறு கிடையாது. விதவிதமான மீன்களின் சதையும் சோயா சாஸூம் மட்டும்தான். எந்த வகை மீன் சதையாக இருந்தாலும் மெல்லிய ஸ்லைஸாகத்தான் இருக்கும்.

சஷிமி என்பதற்கு ‘தோலுரிக்கப்பட்ட உடம்பு’ என்று அர்த்தம். உரிக்கப்பட்ட மீன், உரிக்கப்பட்ட மாடு அல்லது பன்றியின் சதையும்கூட சஷிமியில் பரிமாறப்படும். மீன் சதைத் துண்டுகளுடன் சில பச்சைக் காய்கறிகள் சேர்ந்த சஷிமி உணவையும் டோக்கியோவில் சாப்பிட்டேன். சுவையாக இருந்தது.

ஜப்பான் உணவகங்களில் மீன் முதன்மையான உணவு. அதுபோல மாட்டிறைச்சி, கோழி-பன்றி இறைச்சிகளும் பலவித சுவைகளில் கிடைக்கின்றன. மட்டன் மட்டும் இல்லை. “ஆடு எங்களுக்கு வேண்டவே வேண்டாம் ” என்று ஒதுக்கிவிட்டார்கள் போல.

நாங்கள் சென்ற உணவகங்கள் பலவும் Wine&Dineதான். ஆண்களும் பெண்களும் அருந்திக் கொண்டே சாப்பிடுகிறார்கள். சாப்பிட்டுக் கொண்டே அருந்துகிறார்கள். மதுவை விரும்பாதவர்கள் உணவை மட்டும் சுவைத்துவிட்டுச் செல்கிறார்கள்.

பியர், விஸ்கி, வைன் ஆகியவை ஜப்பானிய உணவகங்களில் அதிகமாக கிடைக்கின்ற மது வகைகள். ஒரு பெரிய கிளாஸில் விஸ்கியும் சோடாவும் கலந்து ஐஸ்கட்டிகளுடன் கொடுப்பார்கள். அதற்கு பெயர் ஹைபால்(Highball).

ஜப்பானியர்களின் உள்நாட்டு மது வகைகளில் முதன்மையானது, சாக்கே(Sake). அது அரிசிச் சோற்று ஊறலில் தயாரிக்கப்படும் மதுவாகும்.

நம் ஊரில், சோற்றை ஊறவைத்து, நொதிக்கச் செய்து, புளிப்பேறி, போதையூட்டும் வஸ்துக்குப் பெயர் சுண்டக் கஞ்சி (சுண்டி சோறு). அதையே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து, சுத்தமாக வடிகட்டி, நொதித்த நுரையோ-புளிப்பு சுவையோ இல்லாமல், தெள்ளிய நீர்போல பாட்டில்களில் விற்கப்படுகிறது ஜப்பான் மதுவான சாக்கே. அதில் பல வகை உண்டு. உணவகங்களில் அதைப் பரிமாறும் முறைகளிலும் புதுவகை உண்டு.

Govi Lenin Japan Travel Story

வழக்கமான முறை, பீங்கான் கிண்ணத்தில் பரிமாறுகிறார்கள். இன்னொரு முறை, ஒரு சிறிய தட்டை கீழே வைத்து அதன் மேல் ஒரு கிளாஸை வைத்து ஊற்றுகிறார்கள்.

கிளாஸ் நிரம்பி வழிந்து தட்டுக்கு வரும். “போதும்” என்று சொன்னதும் பரிமாறுபவர் நிறுத்திவிடுவார். கிளாஸில் நிறைந்திருக்கும் சாக்கேவை, தலையை சாய்த்து உறிஞ்சிக் குடிக்கிறார்கள்.

மட்டம் இறங்கியதும், கிளாஸை எடுத்துவிட்டு, தட்டில் ஊற்றியதை எடுத்துக் குடிக்கிறார்கள். அதன்பிறகு, மெல்ல மெல்ல கிளாஸில் உள்ளதைப் பருகுகிறார்கள். நாட்டு சரக்கு… நச்னுதானே இருக்கு(ம்)

சமைத்தவருக்கான பாராட்டு

சாப்பிடும்போது, உறிஞ்சி இழுக்கின்ற சத்தம், சப்புக் கொட்டி சுவைத்து சாப்பிடுகின்ற சத்தம் இவையெல்லாம் டேபிள் மேனர்ஸூக்கு எதிரானது என்ற எண்ணம் பரவலாக உண்டு.

ஜப்பானியர்கள் சாப்பாட்டு மேசையில் நாகரிகம் பார்ப்பதில்லை. சூப்பை உறிஞ்சிக் குடிக்கிறார்கள். உணவை சப்புக் கொட்டி ருசிக்கிறார்கள். அந்த ஓசை, சமைத்தவருக்கான பாராட்டாகும்.  சாப்பிட்டு முடித்தபிறகு, மிகுந்த நாகரிகத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். வீட்டிலும் உணவகங்களிலும் அவர்கள் அப்படித்தான்.

சாக்கேவுடன் சிக்கன், பீஃப், மீன் எனப் பல சைடு டிஷ்கள் இருந்தாலும், உடனடியாக கொண்டு வந்து மேசைமேல் வைக்கப்படுவது, மொச்சை போன்ற ஒரு வகைதான். அப்படியே காயாக கொண்டு வந்து வைக்கிறார்கள்.

பார்ப்பதற்கு கொடுக்காப்புளி போல இருக்கும் அதன் பெயர் எதாமாமே. தோலுடன் உள்ள காய் மீது லேசாக உப்புத் தூவப்பட்டிருக்கும். அதனை வாய்க்குள் வைத்து, பற்களால் கடித்து, தோலை மட்டும் வெளியே இழுக்கும்போது, மொச்சைக் கொட்டை சைஸிலான விதைகள் வாய்க்குள் விழுந்து, சுவையைக் கூட்டும்.

இவையெல்லாம் இருந்தாலும், ஜப்பானியர்களுக்கு Wine&Dineல் சிறப்பு சேர்ப்பது, வசாபி.

அது என்ன?

(விரியும்  வரும் ஞாயிறு அன்று)

கட்டுரையாளர் குறிப்பு

Govi Lenin Japan Travel Story

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6

கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1

Govi Lenin Japan Travel Story

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts