kovi lenin japan visit

கல்யாணம் கசக்கும்… கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5

சிறப்புக் கட்டுரை

கோவி.லெனின்

காரின் முன் சீட்டில் உட்கார்ந்து வருவதால், ”ரோட்டை சரியாத்தானே பார்த்துக்கிட்டு வந்தேன். யாரை மிஸ் பண்ணினேன்?” என்று மனது தவித்தது. காரை ஓட்டிக் கொண்டிருந்த நண்பர் குன்றாளன் கேட்டார், “கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மேலாக வண்டியில வந்துக்கிட்டிருக்கோம். நான் ஹார்ன் அடிச்சு பார்த்தீங்களா.. வேற வண்டியிலிருந்து ஹார்ன் சத்தம் கேட்டதா”

கொஞ்சம் யோசித்துப் பார்த்தேன். கேட்ட ஞாபகம் இல்லை. “ஏன்.. ஜப்பான் வாகனங்களில் ஹார்ன் கிடையாதா?” என்றேன்.

“எல்லா நாட்டு வண்டியும் போல ஜப்பானிலும் ஹார்ன் உண்டு. ஆனா, நம்ம நாட்டுல, சைரன் சத்தம் மாதிரி ஹார்ன்ல கை வச்சிக்கிட்டே போறது போல ஜப்பானில் போக மாட்டாங்க. மெதுவா போற வாகனங்கள் இடதுபக்க லேனில் போகும். வேகமாக போற வாகனங்கள் வலது பக்க லேனில் விரைந்து செல்லும். கரெக்ட்டான லேனில் போவதால் ஹார்ன் தேவையில்லை. ஓவர் ஸ்பீடு போக முடியாது. போகவும் கூடாது. பின்னாடி இருந்து ஹார்ன் அடித்தால், முன்னாடி போய்க்கிட்டிருக்கிற வாகனத்தின் டிரைவரை அவமானப்படுத்துவது போல நினைப்பாங்க” என்றார் குன்றாளன்.

அவர் சொன்னபிறகுதான் யோசித்தேன். ஏர்போர்ட்டில் இருந்து புறப்பட்டது முதல் சாலையில் ஹார்ன் சத்தம் இல்லை. ஒவ்வொரு வண்டியும் அதனதன் வேகத்தில் விரைந்து கொண்டிருந்தன. நம்ம நாட்டைப் போல ஜப்பானிலும் ரைட் ஹேண்ட் ட்ரைவ்தான். பெரிய கார்கள், பட்ஜெட் கார்கள் என எல்லா வகையான கார்களும் இருக்கின்றன. அவரவர் வருமானத்திற்கேற்ப ஜப்பானியர்கள் கார் வைத்திருக்கிறார்கள். ஹார்ன் பற்றி அறிந்து கொண்ட பிறகு, ஜப்பான் சாலைகளில் எதையும் ‘மிஸ்’ பண்ணாமல் கவனித்தேன்.

“தோழர்.. நாம் ஹார்ன் அடிக்காமல் வருவதை கவனிக்காமல் ஹோட்டல் ரூம் ரென்ட் அண்ட் ஸ்டே மேட்டரை கவனித்திருக்கிறார்” என்று காரில் வந்த நண்பர்கள் கிண்டலடித்தார்கள்.

“அதையும்கூட சரியா கவனிக்கல”

“ஆமாமா.. ஸ்டே 2000. ரென்ட் 5000. தோழர் அமவுண்ட்டையும் குறைச்சிட்டாரு. ஸ்டே, ரென்ட் இரண்டையும் மாத்தி சொல்லிட்டாரு” என்றார் கமல்.

சரி.. இன்னைக்கு நாமதான் இவங்களுக்கு என்பது புரிந்துவிட்டது.

“முன்னே பின்னே தெரியாத ஜப்பானைப் பார்க்குறப்ப அப்படிஇப்படி இருக்கத்தான் செய்யும். அதை விடுங்க பாஸ்.. ஒரு ஹோட்டலில் ரூம் போடுறதுக்கு எதுக்கு இப்படி ரெண்டு ரேட்” என்றேன்.

“ஸ்டே என்றால் ஒன்றிரண்டு மணி நேரம் ஸ்டே பண்ணிட்டுப் போறது. ரென்ட் என்றால் ஒருநாள் வாடகை. ஜப்பானில் பெரும்பாலான வீடுகள் சின்ன வீடுதான். வேற மாதிரி நினைச்சிடாதீங்க. பூகம்பம், சுனாமியெல்லாம், சென்னையின் நவம்பர் மாத மழைபோல டோக்கியோவில் சர்வசாதாரணம். அதோடு இடத்தின் விலை, கட்டுமானச் செலவு, வாடகை எல்லாம் அதிகம். அதனால, பூகம்பத்தில் இடிபாடுகள் ஏற்படாதபடியும், சிக்கனம் கருதியும் சின்ன அளவில் வீடுகள் கட்டியிருப்பாங்க. அதிலே குடும்பத்தினருக்கு பிரைவேசி இருக்காது. தனிமையான நேரத்தை விரும்புகிற தம்பதிகள் இதுபோல ஹோட்டல் ரூம்களுக்கு வீக் எண்டில் வருவாங்க. ஒரு சில மணிநேரம் இருந்துட்டுப் போறதுக்கு பேருதான் ஸ்டே. அதுக்கு அமவுண்ட் கம்மி. முழு நாள் தங்கினால் ரெண்ட். அதற்கு அமவுண்ட் அதிகம்” என்று நண்பர்கள் விளக்கினார்கள்.

“வரவங்க தம்பதிதான்னு உறுதிப்படுத்தித்தான் ரூம் கொடுப்பாங்களா?” என்றேன்.

“ஜப்பானில் உள்ள இளைய தலைமுறை திருமணம் செய்து கொண்டு வாழ்வதில் விருப்பம் காட்டுவதில்லை. திருமண வாழ்க்கையை சுமையாக நினைக்கும் எண்ணம் அதிகரித்து வருது. அதனால், தங்களின் காதல் தோழமையோடு வந்து ஸ்டே செய்கிறவர்களும் உண்டு”

“ஏன் திருமண வாழ்க்கைக்குப் பயப்படுகிறார்கள்? நமக்கும் அந்த பயமெல்லாம் இருந்தாலும் அதை வெளியே காட்டிக்காம, கல்யாணம் பண்ணிக்கிட்டு, வீட்டுல எலியாகவும் வெளியில புலியாகவும் வாழலையா?” என்றேன்.

“இங்கே ஜப்பானிலும் குடும்ப வாழ்க்கை என்பது நம்ம இந்தியா மாதிரிதான். அன்பு, பாசம், சென்ட்டிமென்ட் எல்லாம் உண்டு. ஆனாலும் இளைய தலைமுறைக்கு கல்யாணம் கசக்குது. கட்டில் இனிக்குது”

அது எப்போதும் இனிக்கும்.

சாலையில் விரைந்து கொண்டிருந்தது கார். எதையும் மிஸ் பண்ணாமல் கவனித்தபடியே வந்தேன். “இன்னும் எவ்வளவு தூரம் போகணும்?”

“வந்துட்டோம் தோழர்.. இந்தப் பகுதியை லிட்டில் இந்தியான்னு சொல்லுவாங்க”

அந்தப் பகுதியின் பெயர், நிஷி கசாய்.

ஜப்பானில் வசிக்கும் சுமார் 30ஆயிரம் இந்தியர்களில் 20 விழுக்காட்டுக்கும் அதிகமானவர்கள் டோக்கியோவில் உள்ள நிஷி கசாய் பகுதியில் வசிக்கின்றனர். பெரும்பாலானவர்கள் கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் இருக்கின்றனர். சொந்தமாக வியாபாரம் செய்கிற இந்தியர்களும் உண்டு.

Y2K பிரச்சினை நினைவிருக்கிறதா? மில்லினியம் (2000)ஆண்டு பிறப்பதற்கு முன் கம்ப்யூட்டர்களில் கணக்குப் பதிவுப் பிரச்சினை வரும் என்றும், அதனால் வங்கிக் கணக்கு முதல் இஸ்ரோ-நாசா போன்ற விண்வெளி ஆய்வு மையங்கள் அனுப்பிய செயற்கைக் கோள்கள் வரை பிரச்சினைகள் உருவாகும் என்றும், உலகமே முற்றிலுமாக செயலிழக்கும் நிலை வரலாம் என்றும் அச்சுறுத்தல் உருவான காலகட்டம் அது. அப்போதுதான், தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்த ஜப்பானுக்கு கணினி மென்பொருள் பணியாளர்கள் அதிகளவில் தேவைப்பட்டனர். இந்தியாவிலிருந்து பலரை ஜப்பான் நிறுவனங்கள் வேலைக்கு சேர்த்தன. அதில் தமிழ்நாட்டினரும் உண்டு.

ஜப்பானில் வசிக்கும் இந்தியர்களில் அதிகபட்சம் 20+ ஆண்டுகள் அங்கே வாழ்பவர்களாக இருக்கிறார்கள். அதற்கு முன்பு வந்தவர்களின் எண்ணிக்கை குறைவுதான். ஜக்மோகன் சந்திரானி என்பவர் நிஷி கசாய் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேல் வாழ்பவர் என்றும் அவர்தான் அந்தப் பகுதிக்கு மற்ற இந்தியர்களை வரச் செய்தவர் என்றும் ஒரு குறிப்பினை இணையதளத்தில் காண முடிகிறது. இப்போது நிஷிகசாயில் இந்திய மளிகைப் பொருட்கள், தென்னிந்திய அரிசி, மசாலா மிக்ஸ் பாக்கெட்டுகள் எல்லாமும் கிடைக்கும். இந்திய உணவகங்களும் உள்ளன.

லிட்டில் இந்தியா எனப்படும் நிஷிகசாயில் உள்ள ஸ்மைல் ஹோட்டலில் நாங்கள் தங்குவதற்கு நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். நல்ல வசதியான ஹோட்டல் அறைகள்.

kovi lenin japan visit

“நீங்க குளித்து ரெடியாகுங்க.. பக்கத்தில் சாப்பிடப் போகலாம். கே.எஃப்.சி, மெக்டொனால்டு எல்லாம் இருக்கு” என்றார்கள் நண்பர்கள்.

“ஸ்ட்ரிக்ட்லி ஜப்பான் ஃபுட்” என்றார் எழுத்தாளர் சாரு.

முதன்முறையாக ஜப்பான் உணவு. அதுவும் கையோ, ஸ்பூனோ இல்லாமல் ஜப்பானிய முறைப்படி chop sticksல்.

kovi lenin japan visit

எனக்கு பரிமாறப்பட்ட அந்த பெரிய சூப் கிண்ணத்துக்குள் செடியில் காய்ப்பது, மண்ணுக்கு அடியில் முளைப்பது, தரையில் நடப்பது, கடலில் நீந்துவது எல்லாமும் கிடந்தன.

(விரியும்  வரும் ஞாயிறு அன்று)

கட்டுரையாளர் குறிப்பு

journalist kovi lenin japan visit 5

கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…

‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4

உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2

உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1

 

+1
0
+1
0
+1
1
+1
2
+1
2
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *