உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கோவி.லெனின் japan food govi lenin story
Chops Sticks எனப்படும் உணவு சாப்பிடும் குச்சிகளை ஸ்பூன் போல, அல்ல.. அல்ல.. தங்களின் ஆறாவது, ஏழாவது விரல்களைப் போல பயன்படுத்துகிறார்கள் ஜப்பானியர்கள்.
நானும் ட்ரை பண்ணிப் பார்த்தேன். மிகவும் சிரமப்பட்டு, ஒரு வழியாக இரண்டு குச்சிகளால் சூப்புக்குள் இருந்த நூடுல்ஸ்களை, குச்சிகளால் எடுத்துவிட்டேன். குச்சிக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை. நூடுல்ஸ் மீண்டும் சூப்புக்குள்ளே போய் விழுந்தது. வெளியேற்ற முயற்சிக்கும் வெள்ள நீர், மீண்டும் குடியிருப்பு பகுதிக்குள்ளேயே வரும் சென்னை போல.
நான் மீண்டும் முயற்சி செய்து குச்சியால் நூடுல்ஸை எடுப்பதைப் பார்த்த நண்பர் ரா.செந்தில்குமார்(டோக்கியோ செந்தில்), தன் செல்போனில் அதைப் படம் பிடித்தார். “ஓ.கே.. படம் எடுத்துட்டேன். இப்ப குச்சியைப் போட்டுட்டு ஸ்பூனில் எடுத்து சாப்பிடுங்க” என்றார்.
தட்டிலிருந்தோ கிண்ணத்திலிருந்தோ உணவை எடுக்கும்போது, உணவுத் துண்டை கவ்வியிருக்கும் இரு குச்சியின் முனைகளும் இணைந்தபடி இருக்க வேண்டும். அதற்கேற்ப அதை லாவகமாக பிடிக்க வேண்டும். எனக்கு அது சரியாக அமையவில்லை. நண்பர் கமல் அதன் சூட்சுமத்தை சொல்லிக் கொடுத்தார். அதை ட்ரை பண்ணியும், கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை.
செந்திலும் கமலும் அந்த உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஜப்பானியர்கள் போலவே Chops Sticksல் உணவை எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். டோக்கியோவிலிருந்து புறப்படுவதற்கு முன்பாக நாமும் இதைப் பழகிவிட வேண்டும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டேன். ‘இந்த ஆட்டத்துக்கெல்லாம் நான் வரமாட்டேன்’ என்பது போல எழுத்தாளர் சாரு நிவேதிதா தனக்கு பரிமாறப்பட்ட உணவை ஒழுங்காக ஸ்பூனில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
எங்கள் இருவராலுமே, அவரவருக்கு பரிமாறப்பட்ட உணவை முழுமையாக சாப்பிட முடியவில்லை. நம்ம ஊர் கடைகளில் ஒன் பை டூ சொல்வது போல இங்கும் சொல்லியிருக்கலாம் என்றார் சாரு. ஜப்பானில் ஒன் பை டூ, டூ பை த்ரீ என்பதெல்லாம் கிடையாது என்றார் கமல். ‘இதை முடித்துவிட முடியுமா?’ என்பது போல என் சூப் கிண்ணத்தைப் பார்த்தேன்.
சோபா என்கிற சூப் வகை அது. கோதுமையால் செய்யப்பட்ட நீளமான நூடுல்ஸ் அதில் நெளிந்துகொண்டிருந்தது. அத்துடன் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், பச்சைப் பட்டாணி, முட்டைகோஸ் போன்ற காய்கறிகளும் கலந்திருந்தன. அது மட்டுமா இறால் துண்டு, எலும்பில்லாத சிக்கன் ஆகியவையும் சூப்புக்கு சுவை சேர்த்தன. சிறிய கோலிகுண்டு அளவுக்கு இரண்டு முட்டைகளும் அதில் இருந்தன.
“இது என்ன முட்டை?”
“காடை முட்டை”
ஒரு நாளைக்குத் தேவையான புரோட்டீன், விட்டமின், ஃபைபர் உள்ளிட்ட அத்தனை சத்துகளும் அந்த சூப்புக்குள் இருந்தன. நூடுல்ஸைத் தவிர்த்துப் பார்த்தால், அப்படியே பேலியோ டயட்தான். சமையலிலும் பாக்கெட் மசாலாக்களை ஜப்பானியர்கள் பயன்படுத்துவதில்லை என்றனர் நண்பர்கள். தென்கிழக்காசிய நாடுகள் பலவற்றிலும் அவரவர் மண்ணில் விளையும் பொருட்களைக் கொண்டே மசாலா தயாரித்து சமைக்கிறார்கள்.
“நூடுல்ஸை முழுமையா சாப்பிட முடியாவிட்டாலும், சூப்பில் இருக்கிற மற்ற எல்லாத்தையும் சாப்பிடுங்க”
“சாப்பிட்டுட்டேன்.. சூப்பையும் குடிச்சிடுறேன்”
“மதியம்.. இன்னும் பல வகை ஜப்பான் உணவு வகைகளை ட்ரை பண்ணலாம்”
“பாம்புக் கறியெல்லாம் ஜப்பானில் ஸ்பெஷலாமே?”
“இங்கே பாம்பெல்லாம் கிடையாது. அதெல்லாம் நம்ம தமிழ் சினிமாவில் ஜப்பான் பற்றி விட்ட ரீலு” என்றனர் நண்பர்கள்.
ஜப்பானில் கலைஞர் நூற்றாண்டு விழா, இலக்கிய விழா ஆகியவற்றில் கலந்து கொள்ளச் செல்கிறேன் என்றதுமே சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்த அன்புத் தோழமைகள் பலரும், ‘ஜப்பானில் கல்யாணராமன்’ என்பதுபோல ‘ஜப்பானில் கோவி.லெனின்’ என்று கலாய்த்திருந்தார்கள். அத்துடன், “பாம்புக் கறி சாப்பிட்டீங்களா?” என்றும் கேட்டிருந்தார்கள்.
முதல் நாள் முதல் வேளை உணவில் கேரட், கோஸ், இறால், சிக்கன் என எல்லாம் கலந்திருந்ததால், பாம்பும் ஜப்பானியர்களின் உணவுதானா எனத் தெரிந்துகொள்ள விரும்பினேன். சீனாவின் சில பகுதிகள், ஹாங்காங், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் பாரம்பரிய உணவாக பாம்புக்கறி சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒன்றிரண்டு இந்திய மாநிலங்களும் உண்டு. எந்த நாட்டிலும் எல்லாரும் எல்லாவற்றையும் சாப்பிடுவதில்லை. ஜப்பானில் கடல் உணவுதான் பிரபலம். பாம்புக்கறி என்பது அரிது.
“நம் பார்வைக்கு, மஞ்சள் நிற மனிதர்கள் எல்லாருமே பாம்புக் கறி சாப்பிடுபவர்களாகத் தெரிகிறார்கள். அதனால், சினிமாவில் ஜப்பானோ சீனாவோ எதுவாக இருந்தாலும் பாம்புக்கறி என்று டயலாக் வைத்து காமெடி சீன் எடுத்தால், நம் மக்களும் அதை சிரித்துக் கடக்காமல், சீரியஸாக நம்பிவிடுகிறார்கள். ஜப்பான் வந்த புதிதில் எங்களுக்கும் பாம்புக்கறி பயம் இருந்தது. அப்புறம்தான் உண்மை தெரிந்தது” என்றனர் நண்பர்கள்.
“லெனின்.. சுஷி ட்ரை பண்ணிப் பாருங்க” என்றார் எழுத்தாளர் சாரு.
“நீங்க டோக்கியோ சென்ட்ரல் போறப்ப சாப்பிடுங்க” என்றார் செந்தில்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
சாப்பிட்டதற்கு பில் வந்தது. ஒரு தட்டில் வைத்துக் கொடுத்தார்கள். எவ்வளவு பணம் என்பது வெளிப்படையாகத் தெரியாதபடி, பில்லைத் திருப்பி வைத்திருந்தார்கள். நாம் எவ்வளவுக்கு சாப்பிட்டோம் என்பதை பக்கத்து சீட் ஆளுக்குத் தெரிவது போல வைப்பது மரியாதைக் குறைவு என்பது ஜப்பானியர்கள் வழக்கம். பில் தொகைக்கு மேல் டிப்ஸ் எதுவும் வைக்கவில்லை நண்பர்கள். “டிப்ஸ் கொடுத்தால் தங்களை இழிவுபடுத்துவது போல நினைப்பார்கள்” என்றனர்.
சாப்பிட்டு முடித்து வெளியேறும்போது, ‘அரிகத்தோ ஹோசைமாஸ்” என்று ராகம் பாடுவது போன்ற குரல் கேட்டது. எளிதான செயல்பாடுகளுக்கு கூட நன்றி சொல்வதும், யார் நன்றி சொன்னாலும் ‘அய்.. அய்..’ என்ற சொற்களால் அதை ஏற்பதும் ஜப்பானியர்களின் இயல்பான பண்பு.
“ஜப்பானில் வெஜ் ஹோட்டல், நான்-வெஜ் ஹோட்டல் என்றெல்லாம் கிடையாது. ஹோட்டல் என்றால் எல்லாவகை உணவும்தான்” என்றார் கமல்.
“ப்யூர் வெஜ்” என்று பெருமை பீற்றும் குரூப் இங்கே கிடையாதா?”
“இங்கேயும் Veganனு சுத்துற ஆட்கள் இருக்காங்க. அவங்க உலகம் தனி”
“சரி.. அது என்ன சுஷி?”
“மீன் உணவு..அதுவும் பச்சை மீன்”
“அதுக்கு பாம்பு ஃப்ரை பெட்டரா இருக்குமோ!”
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
japan food govi lenin story