இரண்டாம் கட்டத் தேர்தல்: பின்னடைவை சந்திக்கிறதா பாஜக? எத்தனை தொகுதிகளை இழக்கிறது?

அரசியல் சிறப்புக் கட்டுரை

நாடாளுமன்றத் தேர்தலின் இரண்டாம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 26 அன்று 87 தொகுதிகளில் நடைபெற்றது. குறிப்பாக கேரளாவில் மொத்தமுள்ள 20 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. கர்நாடகாவில் பாதி தொகுதிகளிலும், ராஜஸ்தான் மாநிலத்தில் பாதி தொகுதிகளிலும், மேலும் 10 மாநிலங்களில் உள்ள பல தொகுதிகளிலும் இந்த தேர்தல் நடைபெற்றது.

இரண்டு கூட்டணிகளும் தற்போது கையில் வைத்திருக்கும் தொகுதிகள்

2019 நாடாளுமன்றத் தேர்தலில் இந்த 87 தொகுதிகளில் 62 தொகுதிகளை பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கைப்பற்றியிருக்கின்றன. 24 தொகுதிகளை மட்டுமே இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் கையில் வைத்திருக்கின்றன. ஒரு தொகுதியை பகுஜன் சமாஜ் கட்சி கையில் வைத்திருக்கிறது.

கடந்த முறை வென்ற 62 தொகுதிகளையோ, அதற்கு மேற்பட்ட தொகுதிகளையோ இந்த முறை பாஜகவால் மீண்டும் வெல்ல முடியுமா அல்லது பாஜக அந்த 62 இல் பல தொகுதிகளை இழக்குமா என்பதே இப்போது நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி.

கடந்த முறை கர்நாடகா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் ஒன்றிரண்டு தொகுதிகளைத் தவிர்த்து ஒட்டுமொத்தமான வெற்றியை பாஜக பெற்றது. தற்போது அடுத்தகட்ட ஆய்விற்கு அந்த மாநிலங்களில் 2019-க்குப் பிறகு நடந்த அரசியல் மாற்றங்களைக் கணக்கில் கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் பாஜகவோடு கூட்டணியில் இருந்த உத்தவ் தாக்கரே தற்போது இந்தியா கூட்டணியில் இருக்கிறார். பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் தனிப்பெரும் கட்சியாக எழுச்சி கண்டிருக்கிறது. கர்நாடகாவிலும் காங்கிரஸ் ஆளுங்கட்சியாக மாறியிருக்கிறது. கடந்த முறையே பாஜக அதிகபட்ச தொகுதிகளை வென்றுவிட்ட சூழலில், இந்த முறை பாஜக இழக்கிற ஒவ்வொரு தொகுதியும் இந்தியா கூட்டணிக்கு லாபமே.

பாஜக இழக்கும் தொகுதிகள்

இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டிற்குப் பிறகு ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வெற்றிகளின் அடிப்படையில் ஒரு கணக்கீட்டினை சுயாட்சி இந்தியா அமைப்பின் தலைவரும், இந்தியா முழுதும் பயணங்களை மேற்கொண்டு தேர்தல்கள் குறித்த பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்பவருமான யோகேந்திரா யாதவ் வெளியிட்டுள்ளார். அதனடிப்படையில் பார்க்கும்போது கடந்த தேர்தலில் வென்றதில் குறைந்தபட்சம் எத்தனை தொகுதிகளை பாஜக இந்த தேர்தலில் இழக்கும் என்பதனை முன்வைக்கிறார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் 87 தொகுதிகளில் 62 இல் வெற்றி பெற்றிருந்த பாஜக கூட்டணியின் கணக்கு இந்த முறை 44 ஆகக் குறைகிறது. அதேசமயம் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு 43 ஆக அதிகரிக்கிறது. அதாவது 62 vs 24 ஆக இருந்த பாஜக vs காங்கிரஸ் வெற்றியானது தற்போது 44 vs 43 ஆக மாறும் என்பதே யோகேந்திர யாதவ் சொல்லும் கணக்கு. இது எப்படி என்பதை இன்னும் விரிவாகப் பார்ப்போம்.

இந்தியா கூட்டணி கடந்த தேர்தலில் வென்றதில் எதையும் இழக்க வாய்ப்பில்லை என்பதே கள நிலவரமாக இருக்கிறது. ஏனென்றால் கடந்த தேர்தலில் இந்தியா கூட்டணி பெற்ற 24 தொகுதிகளில் 20 தொகுதிகள் கேரளாவிலிருந்து வந்தவை. கேரளாவில் போட்டியே இந்தியா கூட்டணிக்குள் உள்ள காங்கிரசுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் தான் என்பதால் இந்த முறையும் பாஜக வெற்றி பெறுவதற்கு எந்த சூழலும் இல்லை என்பதையே கேரளாவின் கருத்துக்கணிப்புகள் சொல்கின்றன. எனவே அந்த 20 தொகுதிகள் மீண்டும் அப்படியே இந்தியா கூட்டணிக்கு கிடைக்கவே வாய்ப்புகள் அதிகம். இதற்கு மேல் அவர்கள் கர்நாடகாவில் 1 தொகுதியிலும், பீகாரில் 1 தொகுதியிலும், மத்தியப்பிரதேசத்தில் 1 தொகுதியிலும், அசாமில் 1 தொகுதியிலும் வென்றிருந்தனர்.

கர்நாடகாவில் எத்தனை தொகுதி?

கர்நாடகாவைப் பொறுத்தவரை, இரண்டாம் கட்டத் தேர்தல் என்பது தென் கர்நாடகாவைச் சேர்ந்த 14 தொகுதிகளில் நடைபெற்றது. இதில் 13 தொகுதிகளை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கையில் வைத்திருக்கின்றன. ஒரு தொகுதியை மட்டும் காங்கிரஸ் வைத்திருக்கிறது. 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் வெற்றிகள் அடிப்படையில் பார்க்கும்போது இந்த 14 தொகுதிகளில் 9 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும். ஆனால் இந்த முறை பாஜக மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி சேர்ந்துள்ளதால், இரண்டின் வாக்கு வங்கியையும் சேர்த்துப் பார்க்கும்போது, காங்கிரசின் வெற்றி குறையலாம். ஆனாலும் காங்கிரஸ் ஏற்கனவே வைத்துள்ள ஒரு தொகுதியோடு, கூடுதலாக பாஜக வசமிருந்த 2 தொகுதிகளை வென்று 3 தொகுதிகளிலாவது வெற்றி பெறும். இது குறைந்தபட்சம் தான். எனவே பாஜக கடந்த முறை வென்ற 13-ல் 2 தொகுதிகளை நிச்சயம் இழக்கும் என்கிறது யோகேந்திர யாதவின் கணக்கு. இன்னும் சித்தாராமைய்யா, டிகே சிவகுமார் இணைந்து கொண்டுவந்த மக்கள் நலத் திட்டங்களுக்கு கர்நாடகாவில் வரவேற்பு அதிகரித்துள்ளதன் அடிப்படையில் பார்த்தோமென்றால் காங்கிரசின் எண்ணிக்கை 3-ஐ விட அதிகரிக்கவே வாய்ப்புகள் உள்ளன.

ராஜஸ்தானின் நிலை

ராஜஸ்தானில் 13 தொகுதிகளில் இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. இந்த 13 லும் பாஜகவே வெற்றி பெற்றது. ஆனால் இந்த தொகுதிகளில் 2023 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் முடிவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, காங்கிரஸ் 4 தொகுதிகளில் வெற்றி பெறும். மேலும் ராஷ்டிரிய லோக் தந்த்ரிக் கட்சி(RLP) மற்றும் பாரதிய ஆதிவாசி கட்சி (BAP) ஆகிய கட்சிகளுடனான கூட்டணியின் காரணமாக காங்கிரஸ் கூட்டணியின் கணக்கில் மேலும் 2 தொகுதிகள் சேரும். இதன் காரணமாக மொத்தமாக பாஜக கூட்டணி ராஜஸ்தானில் கடந்த முறை பெற்றதில் 6 தொகுதிகளை இழக்கும்.

மகாராஷ்டிரா

அடுத்ததாக மகாராஷ்டிராவில் 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 8 தொகுதிகளில் 7 தொகுதிகளை பாஜக கூட்டணியே 2019 நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்றியிருந்தது. கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த உத்தவ் தாக்கரே இப்போது இந்தியா கூட்டணியில் இருக்கிறார். சிவசேனா கட்சி உடைக்கப்பட்டிருந்தாலும் உத்தவ் தாக்கரேவின் வலிமை என்பது மகாராஷ்டிராவில் இருக்கவே செய்கிறது. அதேபோல் இந்தியா கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டிருக்கிறது. சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் வாக்குகளை பாஜக, காங்கிரஸ் இரண்டு கூட்டணிகளுக்கும் சரி சமமாகப் பிரித்துக் கொள்வோம். அப்படிப் பார்க்கும்போது பாஜக கடந்த முறை வென்ற 7 தொகுதிகளில் குறைந்தபட்சம் 3 தொகுதிகளை மகாராஷ்டிராவில் இழக்கும். மகாராஷ்டிராவின் 8 தொகுதிகளில் பாஜகவும், காங்கிரசும் தலா 4 தொகுதிகளில் வெல்லும்.

சட்டீஸ்கர்

சட்டீஸ்கர் மாநிலத்தில் 3 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. கடந்த முறை இந்த 3 தொகுதிகளையும் பாஜகவே கைப்பற்றியது. ஆனால் 2023 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் இந்த முறை இந்த 3 தொகுதியையுமே பாஜக இழந்து காங்கிரஸ் கைப்பற்றும்.

மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற்றுள்ள 3 தொகுதிகளிலும் கடந்த முறை பாஜகவே வென்றது. ஆனால் அதற்குப் பிறகு நடந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் அதில் 2-ஐ பாஜக இழக்கும்.

மற்ற மாநிலங்கள்

அதேபோல் பீகாரில் நடைபெற்ற 5 தொகுதிக்கான தேர்தலில் குறைந்தபட்சம் 1-ஐ பாஜக இழக்கும். மத்தியப் பிரதேசத்தில் 1-ஐ இழக்கும். அசாம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக எதையும் இழக்காது என்பது சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அடிப்படையில் பார்க்கும்போது தெரிகிறது. ஆனால் சமீபத்தில் மேற்கு உத்திரப் பிரதேசத்தில் பாஜகவுக்கு எதிரான ராஜபுத்திரர்களின் எழுச்சி மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

குறைந்த வாக்குப்பதிவு

மேலும் இந்த 87 தொகுதிகளில் கடந்த தேர்தலை விட இந்த முறை வாக்குப் பதிவு பெருமளவு குறைந்திருக்கிறது. குறிப்பாக ஹிந்தி பெல்ட் என்று சொல்லக்கூடிய உத்திரப் பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தொகுதிகளில் வாக்குப் பதிவு 7 சதவீதத்திற்கு மேல் குறைந்திருப்பது பாஜகவிற்கு பாசிடிவ் செய்தியாக இல்லை.

முதல் கட்டத் தேர்தலில் எவ்வளவு இழக்கும் பாஜக?

தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகள் உள்ளிட்ட 102 தொகுதிகளில் முதல்கட்டத் தேர்தல் ஏப்ரல் 19 அன்று நடைபெற்றது. இந்த 102 தொகுதிகளில் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் கடந்த முறை 49 தொகுதிகளில் வென்றிருந்தது. இந்த முறை அதில் 7 தொகுதிகளை பாஜக கூட்டணி இழக்கும் என்று யோகேந்திர யாதவ் தனது கணக்கின் மூலம் சொல்கிறார்.

மாநில வாரியாக பாஜக இழப்பது

ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி இந்த தேர்தலில் இழக்கும் தொகுதிகளை தொகுத்துப் பார்த்தோமென்றால், கர்நாடகாவில் 2, ராஜஸ்தானில் 6, மஹாராஷ்டிராவில் 3, மத்தியப் பிரதேசத்தில் 1, பீகாரில் 1, மேற்கு வங்கத்தில் 2, சட்டீஸ்கரில் 3 என மொத்தமாக 18 தொகுதிகள் பாஜகவின் கையை விட்டுப் போவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பாஜக ஆட்சிக்கு வருவதைத் தடுக்க வேண்டுமென்றால் கடந்த முறை பாஜக வென்றதில் 65 தொகுதிகளை  இழக்கச் செய்ய வேண்டும் என்ற நிலையில் எதிர்கட்சிகள் இருக்கின்றன. இந்நிலையில் முதல் கட்டத் தேர்தல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல் இரண்டையும் சேர்த்து 25 தொகுதிகளை பாஜக இழக்கும் என்ற தகவலை பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சியுடனே பார்க்கின்றனர். இந்தியாவை யார் ஆளப் போகிறார்கள் என்பதை தீர்மானிப்பதற்கு இன்னும் 5 கட்டத் தேர்தல் மீதமிருக்கிறது.

விவேகானந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

செந்தில்பாலாஜி ஜாமீன்… உச்ச நீதிமன்றத்தில் ED தாக்கல் செய்த 93 பக்க அபிடவிட்டில் என்ன இருக்கிறது?

“நீலகிரி போல வேறெங்கும் நடக்கக் கூடாது”: தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

பாஜக 400 இடங்களைக் கைப்பற்ற முடியுமா? வாக்கு சதவீதங்கள் என்ன சொல்கின்றன?

+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *