கோவி. லெனின்
ஜப்பான் பயணப் பதிவுகள் – 13 13 Govi Lenin japan travel story 13
மெல்ல இருட்டியிருந்தது. மலைப்பகுதியில் பயணித்து வந்ததால் சில்லென்று இருந்தது. காரை பார்க் செய்தார் செந்தில்.
“இதுதான் ஆன்சென்.. உள்ளே போய் குளிக்கலாம்” என்றார்.
“இந்த சிலுசிலு நேரத்திலா?” என்ற என் மைன்ட்வாய்ஸ் வெளியே கேட்காதபடி பார்த்துக் கொண்டேன்.
ஆசிரமம் போல இருந்தது அந்த இடம். உள்ளே நுழைந்தபோது ஆன்மிக சாயல் கொண்ட ஆயுர்வேத கிளினிக் போலத் தெரிந்தது.
“நீங்க டாட்டூ எதுவும் போடலியே?” -செந்தில் கேட்டார். “மெகந்திகூட போடுறது கிடையாது” என்றேன். டாட்டூ போட்டவர்களை உள்ளே அனுமதிக்க மாட்டார்களாம்.
“முதுகுல, நெஞ்சுல, வேற இடத்துலன்னு எங்கேயாவது டாட்டூ போட்டிருந்தால் எப்படி கண்டுபிடிப்பாங்க?”
“உள்ளே வந்தீங்கன்னா எல்லாமே பளிச்சுன்னு தெரிஞ்சிடும்”
செருப்புகளை வைப்பதற்கென்று தனி அலமாரி, லாக்கர் வசதியுடன் இருந்தது. ஆளுக்கொரு லாக்கரில் அவரவர் ஷூ, செருப்புகளை வைத்தபிறகு, உள்ளே சென்றோம்.
தியானம் செய்கின்ற இடமா, மூலிகை மசாஜ் பார்லரா என்று எனக்குப் புரியவில்லை. எத்தனை பேர் என்பதைச் சொல்லி, கட்டணத்தை செலுத்தினார் செந்தில். செல்போன்களை வாங்கி வைத்துக் கொண்டு, உடம்பைத் துவட்டுவதற்கு வசதியாக ஒரு துண்டு, அதைவிட நீளமும் அகலமும் குறைவான மற்றொரு சிறிய துண்டு ஆகியவற்றுடன், ஒரு சாவியையும் ஒவ்வொருவருக்கும் கொடுத்தார்கள். கீ-செயினில் நம்பர் போடப்பட்டிருந்தது. கையில் மாட்டிக் கொள்ளும் வகையில் ரப்பர் பேண்ட் இருந்தது.
மரத்தால் இழைக்கப்பட்ட அறைகள் ஒன்றிரண்டைக் கடந்து சென்ற பிறகு, பெரிய கூடம் இருந்தது. அதன் ஒரு பகுதியில் மர அலமாரி. அதில் வரிசையாக நம்பர் போடப்பட்டிருந்தது. நம் சாவிக்கொத்தில் உள்ள நம்பர்படி, பூட்டைத் திறந்து, பேண்ட்-சட்டை-உள்ளாடைகள் எல்லாவற்றையும் கழற்றி வைக்கவேண்டும்.
நண்பர்கள் பக்கத்தில் இருக்கிறார்கள். சுற்றிலும் முன்பின் அறியாத ஜப்பானியர்கள் இருக்கிறார்கள். துண்டைக் கட்டிக்கொண்டு பேண்ட்டை கழட்டுவோம் என்றால், முழு இடுப்பில் சுற்றும் அளவுக்குத் துண்டு நீளமாக இல்லை. நீளத்தை அகலமாகவும், அகலத்தை நீளமாகவும் வைத்துப் பார்த்தாலும், மறைக்க வேண்டியவற்றை மறைப்பதற்கு சரிப்படவில்லை.
“கழட்டுனாதான் ஆன்சென்னை அனுபவிக்க முடியும்” -கூட வந்தவர்களின் குரல் கேட்டது. அவர்கள் ஆன்சென்னுக்கு ரெடியாகிக் கொண்டிருந்தார்கள். “ஏதுடா.. வம்பாப் போச்சு” என்ற மனநிலையுடன், மறைந்தும் மறையாத நிலையில் உடைகளையும் உள்ளாடைகளையும் கழற்றி, அந்த அலமாரியில் வைத்துப் பூட்டி, துண்டால் முடிந்த அளவு என்னை மறைத்துக்கொள்ளப் பார்த்தேன்.
“ஊகும்.. துண்டையும் உள்ளே வச்சிப் பூட்டுங்க” என்ற குரல் கேட்டது.
“அதைப் பூட்டுனா.. நான் திறந்து கிடக்கணுமே”
“கைக்குட்டை மாதிரி ஒரு சின்ன துண்டு இருக்குல்ல அதை மட்டும்தான் எடுத்துக்கிட்டு உள்ளே போகணும்”
அதையாவது விட்டுவச்சாங்களே என்று மனதைத் திடப்படுத்திக்கொண்டு, வல்லவனுக்கு கைக்குட்டையும் உள்ளாடைதான் என்பதுபோல அதை அப்படி இப்படி சுற்றி, மறைக்க வேண்டியதை மறைத்துவிடலாம் என நினைத்தால், முன்பக்கம் மறைத்தால் பின்பக்கம் ஓப்பன். பின்பக்கம் மறைத்தால், முன்பக்கம் ஓப்பன். என்ன செய்வது என்று புரியவில்லை.
“குளிக்கத்தானே போறோம்.. வாங்க” என்றது குரல்.
குளிக்கிற இடத்துல முன்னே பின்னே தெரிஞ்சா பரவாயில்ல. குளிக்கப் போற இடத்துக்கே அந்தக் கோலத்துல எப்படிப் போவது, அதுவும் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்னு பலரும் இருக்கும் இடத்தில்
எல்லாருக்கும் பொதுவான பின்பக்கம் எப்படியோ போகட்டும், அவரவருக்கு தனித்துவமான முன்பக்கத்தை மறைத்துக்கொள்வோம் என்று மனது தீர்மானிக்க, கைகள் செயல்படுத்தின. கால்கள் தன் போக்கில் நடந்தன.
“இங்கே விதவிதமான வெந்நீர்க் குளியலுக்கேற்ற சின்னச் சின்ன குளம் போன்ற பகுதிகள் இருக்கும். அதற்கு முன், நம் உடலை அந்தக் குழாய் தண்ணீரில் சோப் போட்டுக் கழுவிக் கொள்ள வேண்டும்” -இது அடுத்த உத்தரவு.
ஹேண்ட் ஹஷர் இருந்தது. ஆனால், சம்மனம் போட்டோ, குத்துக்காலிட்டோ உட்கார்ந்தால்தான் அதைப் பயன்படுத்தி, சோப் போட்டு குளிக்க முடியும். சின்ன ஸ்டூல் இருந்தது. அதில் பாந்தமாக உட்கார்ந்தேன். சிறிய துண்டு, கச்சிதமாக மறைப்பு வேலையை செய்திருந்தது.
“அந்தத் துண்டை நனைச்சிடக்கூடாது” -அதிரடி உத்தரவில் அதிர்ந்து போனேன்.
“அதை வேணா தலையிலே போட்டுக்குங்க”
“செத்தான்டா சேகரு..” Govi Lenin japan travel story 13
அவர்களைப் போலவே தலையில் துண்டைப் போட்டுக்கொண்டேன். வரிசையாக இருந்த குழாய்+ஹேண்ட் ஷவர் முன்பாகப் பலரும் உட்கார்ந்து சோப் போட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் நம்மைப் பார்க்கிறார்களா என்பது தெரியாமல் இருக்க, நான் அவர்களைப் பார்க்காமல், கண்களை மூடி, சோப் போட்டு, உடம்பை சுத்தப்படுத்திக் கொண்டு, ஸ்டூலை விட்டு எழும்போதே, தலையில் கிடந்த துண்டை எடுத்து, சரியாகப் பொத்திக்கொண்டேன். வெந்நீர் குளம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன், முன்னே வழிகாட்டிச் சென்றவர்களின் பின்பக்கத்தைத் தொடர்ந்தபடி.
செவ்வக வடிவில் அமைக்கப்பட்டிருந்த ஒரு குளம். சுற்றிலும் படிகள். சுவரோரத்தில் இருந்து குளத்திற்குள் நீர் கொட்டிக் கொண்டிருந்தது. ஏற்கனவே ஒன்றிரண்டு ஆண்கள் அந்தக் குளத்தில் இருந்தார்கள். அவர்களுடன் நாங்களும் சேர்ந்தோம். கால் வைத்தபோது வெதுவெதுப்பாக இருந்தது நீர். சிறிய துண்டை தலையில் போட்டுக்கொண்டு, இடுப்பு மறையும் வகையில் குளத்தின் படிகளில் உட்கார்ந்து கொண்டேன்.
காலையிலிருந்து அலைந்து களைப்பான உடலுக்கு, இதமளிக்கும் வகையில் இருந்தது வெந்நீர்க் குளம். பாதம், முழங்கால், தொடை, இடை என எல்லாப் பகுதிகளையும் மசாஜ் செய்வது போல இருந்தது. இது போல வட்ட வடிவக் குளம், சதுர வடிவக் குளம் எனப் பல குளங்கள் இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்.
“ஜப்பான் நாட்டுக்கு இயற்கை தந்த மகத்துவம்.. உடலுக்கு மருத்துவம்” என்று ஆன்சென் குளத்திற்கான விளக்கம் கிடைத்தது.
நெருப்பைக் கக்கிய எரிமலைகள் அடங்கிவிட்டாலும், அடிநீரோட்டமாக அதன் வெப்பத்தன்மை முழுமையாகக் குறையவில்லை. அப்படிப்பட்ட இடங்களிலிருந்து இயற்கையாக வெளிப்படும் சூடான நீரில், 25 டிகிரி செல்சியஸ் கொதிநிலையில் குளிப்பதுதான் ஆன்சென் (hot spring) தற்காலத்தில், இயற்கையாக வெந்நீர் வெளிப்படும் இடங்கள் மட்டுமின்றி, போர்வெல் மூலம் ஆழத்திற்குத் தோண்டி, வெந்நீரைக் கொண்டு வரும் வசதி இருப்பதாலும், தண்ணீரை வெந்நீராகக் கொட்டச் செய்ய முடியும் என்பதாலும், ஆன்சென் மையங்களில் ஜப்பானியர்கள் தங்களுக்கான நேரத்தை ஒதுக்குகிறார்கள்.
கால்சியம், கந்தகம், கார்பனேட்டட், இரும்பு என பல விதத் தன்மை நிறைந்த வெவ்வேறு வெந்நீர்க் குளங்கள் உண்டு. உள்ளரங்கத்தில் உள்ள குளம், வெட்டவெளி குளம், நிலா வெளிச்சத்தில் நீராடுகிற குளம், ஃப்யூஜி எரிமலையைப் பார்த்தபடி குளிக்கின்ற குளம் எனப் பலவித ஆன்சென்கள் ஜப்பானில் உண்டு.
நாங்கள் சென்ற இடத்தில், உள்ளரங்கத்தில் இரண்டு குளங்களிலும், வெட்டவெளியில் இரண்டு குளங்களிலும் லேசாக ஆவி பறந்த வெந்நீரில் நீராடினோம். அதன்பின் நீராவியால் வெப்பமூட்டிய அறை ஒன்றில் அமைக்கப்பட்ட கல் பெஞ்ச்சில் படுத்தும், கரியை எரித்து வெப்பமூட்டிய அறையில் உட்கார்ந்த நிலையிலும் வியர்வைக் குளியலும் போட்டுவிட்டு, மறுபடியும் ஷவரில் குளித்தோம். அலமாரியைத் திறந்து, துண்டை எடுத்து துவட்டிக்கொண்டு, பழைய உடைகளுக்குத் திரும்பியபோதுதான், மனதுக்கு “அப்பாடா” என்றிருந்தது. உடம்புக்கோ, ஆன்சென் குளியலை விட்டுப் பிரிந்து வர விருப்பமில்லை.
அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த ஜப்பானில் இயந்திரகதியில் மனிதர்களின் வாழ்க்கை இருந்தாலும், இயல்பான-இயற்கையான வாழ்வின் தருணங்களையும் அவர்கள் அமைத்துக் கொள்கிறார்கள். ஆன்சென் அப்படிப்பட்டதுதான். மூட்டு வலி, முதுகுவலி, நரம்பு வலி, இரத்த அழுத்தம் போன்ற உடல் சார்ந்த பிரச்சினைகளுக்கு இந்த வெந்நீர்க் குளியல் சற்று நிவாரணம் அளிப்பதால் டோக்கியோவிலிருந்து வார இறுதியில் வந்து செல்கிறவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ஜப்பானுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளையும் ஆன்சென் ஈர்க்கிறது.
எதையும் மறைக்காமல் குளிக்கின்ற இடம் என்பதால் செல்போன்களை வாங்கி வைத்துவிடுகிறார்கள். படம் எடுக்க அனுமதியில்லை. அப்படியொரு கோலத்தில் எங்களை செல்ஃபி எடுத்து யார் பார்ப்பது டாட்டூ போட்டுக் கொள்வது கிரிமினல்களின் பழக்கம் என்ற மரபுப் பார்வை ஜப்பானியர்களிடம் இன்னமும் நீடிப்பதால், குடும்பத்தினர் வரக்கூடிய ஆன்சென் மையங்களில் டாட்டூ போட்ட உள்நாட்டு-வெளிநாட்டு நபர்களை அனுமதிப்பதில்லை.
குடும்பத்தினர் வரக்கூடிய மையங்கள் என்றால், ஒட்டுத் துணி கூட இல்லாமல் குளிக்கின்ற இடத்தில் பெண்களும் உண்டா?
இல்லாமலா…!
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin japan travel story 13