ஜப்பான் பயணப் பதிவுகள்!- 4 Govi Lenin’s Memoirs of a Trip to Japan
கோவி.லெனின்
நரிதா ஏர்போர்ட் சுங்கச் சோதனைக்கானப் படிவத்தில், போதை பொருட்கள் உள்ளதா, துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் உள்ளதா போன்ற கேள்விகளுடன் “தங்கம் எடுத்து வந்திருக்கிறீர்களா?” என்ற கேள்வியும் இருந்தது. எல்லாக் கேள்விகளுக்கும் இல்லை என்றே ‘டிக்’ செய்திருந்தோம்.
என் வலது கை மோதிர விரலில் மனைவி பிரதிபா அணிவித்துச் சென்ற ‘பேனா நிப்’ போன்ற மோதிரம் எப்போதும் இருக்கும். எழுத்தாளர் சாரு நிவேதிதா கழுத்திலும், மணிக்கட்டிலும், விரலிலும் தங்கம் ஜொலி ஜொலிக்கும். எங்களுடன் மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த இந்திய பயணிகளின் கழுத்து, காது, மூக்கு, கை என அங்கமெல்லாம் தங்கம் தான்.
படிவத்தில், ‘தங்கம் எடுத்து வந்திருக்கிறீர்களா’ என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலைப் படித்துவிட்டு நிமிர்ந்த சுங்கச் சோதனை பெண் அதிகாரி, தன் அதிகாரப் பார்வையைத் தளர்த்தி, புன்னகையை வெளிப்படுத்தினார். இந்தியர்களின் அங்கத்தில் தங்கம் நிறைந்திருக்கும் என்பதைவிட, இந்தியர்களுக்கு தங்கமும் ஓர் அங்கம்தான் என்பது ஜப்பானியர்களுக்குப் புரிந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் அந்தப் புன்னகை.
“அப்பாடா.. ஜப்பான் ஜெயிலைப் பார்க்க வேண்டியதில்லை!” என மனசு நிம்மதியடைந்தது.
எல்லா ‘சோதனை’களும் நிறைவடைந்த நிலையில், பயணப் பெட்டியையும் கைப்பையையும் எடுத்துக் கொண்டு விமான நிலையத்தின் முன்பகுதிக்கு வர ஆயத்தமானோம். தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தவரைத் தொந்தரவு செய்யாமல், பெட்டியை சற்று தள்ளி இழுத்து, நாங்கள் நடந்ததும் அந்த ஜப்பானிய பெண்மணி, ராகத்துடன் ஏதோ சொன்னார். அந்த ஜப்பான் வார்த்தைகள் சரியாகப் புரியாததால் எனக்கென்னவோ ஃப்ரெண்ட்ஸ் படத்தின் பிரபல வசனமான, ‘ல்..த..கா செய்மா’ என்று சொன்னது போல இருந்தது.
“சொந்த ஊரிலேயே ல்..த.கா செய்ய முடியலம்மா.. ஜப்பானில் நான் எப்புடிம்மா” என்றது மைன்ட் வாய்ஸ்.
வழக்கத்தைவிட சற்று முன்னதாகவே எங்கள் விமானம் தரையிறங்கியிருந்தது. டோக்கியோ நகரத்திலிருந்து தமிழ் உடன்பிறப்புகள் நரிதா விமானநிலையத்திற்கு வரவேண்டுமென்றால் ஏறத்தாழ 80 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். 5 நிமிடத்தில் ஏர்போர்ட்டை அடைந்துவிடுவோம் என்று வாட்ஸ்ஆப் காலில் தெரிவித்தார்கள். சொன்ன நேரத்திற்கு வந்துவிடுவது ஜப்பான் நடைமுறை. அதை ஜப்பானில் வாழும் தமிழ் நண்பர்கள் சரியாகக் கடைப்பிடித்தனர். ‘ரோம் நகரில் வாழும்போது ரோமானியராக இரு’ என்று ஒரு பழமொழி உண்டு. அது ஜப்பானுக்கும் பொருந்தும் என்பதை வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்களான குன்றாளன், செந்தில்குமார், கமலக்கண்ணன் மூவரும் மெய்ப்பித்திருந்தனர்.
மனம் கனிந்த அவர்களின் புன்னகையுடன் ஜப்பானைக் காண்பதற்கு ஆவலானோம். பயணம் எப்படி இருந்தது என்பதை விசாரித்துவிட்டு, “காபி சாப்பிடலாமா?” என்றனர் உடன்பிறப்புகள். ஸ்டார்பக்ஸ் போன்ற ஏர்போர்ட் காபி ஷாப்களின் தரம், விலை பற்றிய அனுபவம் இருப்பதால், எழுத்தாளர் சாரு தன்னுடைய ஃபேவரைட்டான ‘கேப்புசினோ’ காபி கேட்டார்.
வேறு என்ன இருக்கும் என்று நண்பர்களிடம் கேட்டேன். இன்டர்நேஷனல் ஸ்டாண்டர்டு முதல் தரை லோக்கல் வரை காபி, டீ இரண்டும் கிடைக்கும் என்றார்கள். ஜப்பானியர்கள் தேநீர் விரும்பிகள். பச்சை இலைத் தேநீர் முதல் பால் கலந்த மசாலா டீ வரை வித விதமான தேநீர் வகைகள் ஜப்பானின் சிறப்பு. எளிமையான முறையில் நடைபெறும் கூட்டங்களைக் கூட தேநீர் விருந்துக்கான சிறிய அரங்கில் நடத்துவது அவர்களின் வழக்கம்.
வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு, குறிப்பாகத் தமிழர்களுக்கு சொந்த ஊர் உணவு கிடைக்காவிட்டால், இரண்டாவது நாளே நாக்கு செத்துப் போய்விடும். அதனால் தென்னிந்திய உணவு வகைகள் எங்கே கிடைக்கும் என்று தேடுவது நம் மண்ணின் மைந்தர்களின் இயல்பு. “ரெண்டு இட்லியைப் புட்டு, கொஞ்சம் சட்னி-சாம்பாரோடு சாப்பிட்டால் போதும். எங்கே கிடைக்கும்?” என்று கேட்பார்கள்.
வீட்டில் ரசம் வைத்தால், “என்ன சீக்காளிக்கு குடுக்குற சாப்பாடு மாதிரி இருக்குது?” என்பவர்கள்கூட, வெளிநாடு அல்லது வெளிமாநிலப் பயணத்தின்போது, “கொஞ்சம் ரசம் போட்டு சாப்பிட்டால் அதுல கிடைக்கிற திருப்தி, இந்த பட்டர் நான், குல்ச்சா, பீட்சா, பர்கரைத் தின்னா கிடைக்காது” என்பார்கள்.
நாக்கை நாம் பழக்கவில்லை. நாக்குதான் நம்மைப் பழக்கியிருக்கிறது. அது துபாய் முதல் அமெரிக்கா வரை சரவணபவன்களாகவும், அடையாறு ஆனந்த பவன்களாகவும் வளர்ந்திருக்கிறது.
நான் ஊருக்கேற்ற உணவை விரும்பி சாப்பிடுகிற ஆள். ஆந்திரா சமையலின் காரமும், கேரளா சமையலில் தேங்காய் வாசமும், கர்நாடகா உடுப்பி இனிப்பு-புளிப்பு சாம்பாரும் அந்தந்தப் பகுதியில் ருசியானவை. இறைச்சி உணவும் அப்படியே.
அதனால், ஜப்பானிலும் அந்த நாட்டு உணவையே சாப்பிட விரும்பினேன். நண்பர்கள் முன்கூட்டியே கேட்டபோதே சொல்லிவிட்டேன். எழுத்தாளர் சாரு நிவேதிதா இதில் தீவிரவாதி போல. தன்னுடைய blogல் “ஜப்பானில் உள்ள என் வாசகர்கள் யாரும் வீட்டுக்கு அழைக்காதீர்கள். நான் ஜப்பான் உணவு மட்டுமே சாப்பிடுவேன்” என்று எழுதிவிட்டதாகச் சொன்னார். அனைவரும் சிரித்தோம்.
அந்த மகிழ்ச்சியுடனேயே காலை தேநீர் நேரத்தை முடித்துக்கொண்டு, விமான நிலையத்தில் முறைப்படியான பூங்கொத்து வரவேற்பு கொடுத்தனர் நண்பர்கள். ஒரு ஜப்பான் பெண்ணிடம் செல்போனைக் கொடுத்து படம் எடுக்கச் சொன்னோம். அவரும் புன்னகைத்தபடி, எங்கள் புன்னகையைப் படம் பிடித்துத் தந்தார்.
‘அரிகத்தோ கொசைமாஸ்” என்றனர் நண்பர்கள்.
‘அய்ய்..’ என்று அந்தப் பெண் பதிலுக்கு சொன்னார்.
“நீங்கள் என்ன சொன்னீங்க… அவங்க என்ன சொன்னாங்க” என்று நண்பர்களிடம் கேட்டேன்.
“நாங்கள் Thanks என்று சொன்னோம். அவர், No mention என்றார் என்று பதில் வந்தது.
நாரிதா விமான நிலைய பணிப் பெண் சொன்ன நன்றியைத்தான் ‘ல்..த..கா.. செய்’ என்று நினைத்து நான் பல்பு வாங்கியிருக்கிறேன்.
ஏர்போர்ட் பார்க்கிங் ஏரியாவுக்கு வந்திருந்தோம். டொயோட்டா, ஹோண்டா, நிஸான், இசுசூ என ஜப்பான் நாட்டுத் தயாரிப்புகள் நிறைந்திருந்தன. பென்ஸ், பி.எம்.டபிள்யூ வகையறாக்களும் கலந்திருந்தன. நண்பர்களின் காரில் புறப்பட்டோம்.
2021 சட்டமன்றத் தேர்தல் ரிசல்ட் போல உதயசூரியன் மெல்ல உயர்ந்து வந்து கொண்டிருந்தது. கார்கள் பயணிக்கும் ரோடா, விமானத்திற்கான ரன்வேயா என்பதுபோல சாலைகள் சீராக இருந்தன. வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. ஜப்பான் என் பார்வையில் புதிய நாடு. உண்மையில், ஜப்பானுக்குத்தான் நான் புதியவன். ஒவ்வொன்றையும் ரசித்துப் பார்த்தேன்.
ஒரு ஹோட்டலின் மேல்தளத்தில் பெரிய பலகை இருந்தது. Rent 200, Stay 500 என்று போட்டிருந்தது.
“இது என்ன இரண்டு வித கட்டணம்” என்றேன்
“இவ்வளவு நேரத்தில் இதைத்தான் கவனிச்சீங்களா.. இன்னொன்றை கவனிக்கலையா?” என்றார் நண்பர் குன்றாளன்
எதை ‘மிஸ்’ பண்ணினேன்?
(வரும் ஞாயிறு விரியும்)
கட்டுரையாளர் குறிப்பு:
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?
“இத்தோட நிறுத்திக்கங்க”: தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை எச்சரித்த சமுத்திரக்கனி
Govi Lenin’s Memoirs of a Trip to Japan