கொரோனா காலத்தில் இந்தியாவில் பலரும் போட்டுக்கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசி பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதன் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
2019ல் சீனாவில் பரவத் தொடங்கி, உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பாதிப்பால் கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்தியாவில் இந்த வைரஸுக்காக 5,33,586 பேர் பலியாகினர்.
மொத்தம் மூன்று அலையாக பரவிய இந்த வைரஸுக்கு தமிழ்நாட்டில் 36,11,852 பேர் பாதிக்கப்பட்டு, 38,086 பேர் உயிரிழந்தனர்.
அப்போது இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை குணப்படுத்த மருந்து கண்டுபிடிக்க ஒட்டுமொத்த மருத்துவ உலகமே போராடியது.
இறுதியில் கோவாக்சின், கோவிஷீல்டு, ஸ்ப்ட்னிக்-வி, நோவாக்ஸ், பைஃசர் என பல தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் இந்த தடுப்பூசிகளின் நோக்கம், ஒருவருக்கு கோவிட்-19 தொற்று வராமல் தடுப்பதல்ல; ஒருவருக்கு தொற்று ஏற்பட்ட பிறகு உடலில் அதன் தீவிரத் தன்மையைக் குறைப்பதாகும்.
இதில் இந்தியாவில் கோவாக்சின், கோவிஷீல்டு மருந்துகள் தான் அதிகம் போடப்பட்டது.
குறிப்பாக ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் – அஸ்ட்ராஜெனகா என்ற மருந்து நிறுவனம் இணைந்து உருவாக்கிய கோவிஷீல்டு தான் கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு செலுத்தப்பட்டன. இந்தியாவில் இந்த மருந்தை சீரம் நிறுவனம் தயாரித்து கொடுத்தது.
நாட்டில் மொத்தம் 220 கோடிக்கும் (2,20,68,66,568) அதிகமான தடுப்பூசி டோஸ் செலுத்தப்பட்டன. இதில் 1,749,417,978 டோஸ் கோவிஷீல்டு செலுத்தப்பட்டதாக மத்திய அரசின் கோவின் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆரம்பக்காலத்தில், கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், சிலர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் பரவி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் இதற்கு மத்திய சுகாதார துறை மறுப்புத் தெரிவித்து தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியால் உயிரிழப்புகள், தீவிர பாதிப்புகள் ஏற்பட்டதாக லண்டனில் உள்ள உயர் நீதிமன்றத்தில் 51 வழக்குகள் தொடரப்பட்டு விசாரணையில் உள்ளன. 100 மில்லியன் பவுண்ட் அளவில் நிவாரணம் கோரி இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இவ்வழக்குகளின் முதல் புகார்தாரரான ஜேமி ஸ்காட், “2021 ஏப்ரலில் கோவிஷீல்டு போட்டுக்கொண்டேன். அதன்பிறகு மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டது. இதனால் எனது உயிருக்கு ஆபத்து என மருத்துவர்கள் மூன்று முறை கூறிவிட்டனர்” என தனது மனுவில் கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் கோவிஷீல்டு தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராஜெனிகா வாதிட்டு வருகிறது. என்றாலும் இந்நிறுவனம் தாக்கல் செய்த ஒரு அறிக்கையில், கோவிஷீல்டு மருந்தால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என கூறியுள்ளது.
அதில், TTS – Thrombosis with Thrombocytopenia Syndrome பாதிப்பு அரிதாக ஏற்படலாம் என்று கூறியுள்ளது. ஆனால் ஏன் இந்த பாதிப்பு ஏற்படுகிறது என தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
TTS என்பது ரத்த உறைதல் (thrombosis), ரத்த தட்டுக்கள் குறைதல் (thrombocytopenia) ஆகும். இது தலைவலி, வயிற்று வலி, கால் வீக்கம், மூச்சுத் திணறல் மற்றும் நரம்பியல் குறைபாடுகள் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படுகிறது.
பிளேட்லெட் அளவை மதிப்பிடுவதற்கும், இரத்த உறைதலை கண்டுபிடிப்பதற்கும் இரத்த பரிசோதனைகள் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.
“வக்ஸ்செவ்ரியா, கோவிஷீல்ட் (அஸ்ட்ராஜெனிகா) மற்றும் ஜான்சன் & ஜான்சன்/ஜான்சன் கோவிட்-19 தடுப்பூசி போன்ற அடினோ வைரல் வெக்டர் கோவிட்-19 தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டவர்களிடம் இந்த நிலை காணப்பட்டது” என்கிறார்கள் மருத்துவ வட்டாரத்தில்.
இந்தியாவில் ரத்த உறைவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா?
2021 மே மாதத்தில், மத்திய சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில் கொரோனா தடுப்பூசி எடுத்து பக்க விளைவு வந்த 498 பேரிடம் சோதனை செய்ததில் , 26 பேருக்கு மட்டுமே ரத்த கட்டு, ரத்த கசிவு உள்ள பக்க விளைவுகள் இருந்தன என்று தெரிவித்திருந்தது. இது மற்ற நாடுகளைக் காட்டிலும் மிக குறைவானது என்று கூறியிருந்தது.
முன்னதாக ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க், நார்வே, ஆஸ்திரியா, எஸ்டோனியா, பல்கேரியா, ருமேனியா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் கோவிஷீல்டு போடுவதை தற்காலிகமாக நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தண்ணீர் பந்தல் வைப்பதிலும் கோஷ்டி மோதல்! எடப்பாடியிடம் போன பஞ்சாயத்து!
ரஜினியை கலாய்த்தாரா வெங்கட்பிரபு?
டி20 ஸ்குவாட்… ரோகித் சர்மா, பாண்டியா: ஆக்ஷனுக்கு தயாராகும் இந்தியா
நிர்மலா தேவிக்கு பத்து ஆண்டுகள் சிறை: ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு!