கோவி.லெனின் Govi Lenin japan travel story 11
“இந்தோனேஷியா சிக்கன் கிரேவி காது வழியாகத்தான் புகையைக் கக்கும். ஜப்பான் மலை கிராமங்களுக்குப் போகலாமா? ஊரே புகை கக்கும்” என்றார்கள் தமிழ் நண்பர்கள்.
வெளிநாடு வாழ் இந்தியத் தமிழர்கள் அமைப்பின் ஜப்பான் பொறுப்பாளர்களான டோக்கியோ செந்தில், கோவிந்த பாசம் ஆகியோருடன் எங்கள் ஜப்பான் பயணத்தின் இரண்டாவது நாள் அமைந்தது.
7 மணிக்கு ஹோட்டலுக்கு வருகிறோம் என்று முதல் நாள் சொல்லியிருந்தார்கள். ஜப்பான் நேரம் காலை 7 மணி என்றால், நமக்கு அதிகாலை மூன்றரை மணி. முதல் நாள் இரவு ஜப்பான் நேரத்துக்கு சாப்பிட்டு முடித்திருந்தாலும், இந்திய நேரத்திற்குத்தான் தூக்கம் வந்தது. அதாவது, நமக்கு 12.30மணிக்கு மேல் இருக்கும். மூன்றரை மணி நேரத்தில் எழுந்து ரெடியாக இருக்க வேண்டும் என்பதால் கோழித் தூக்கம்தான்.
ஜப்பானியர்கள் நேர மேலாண்மைக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஜப்பான் வாழ் தமிழர்களும் அப்படியே. 7 மணிக்கெல்லாம் ஹோட்டலுக்கு வந்துவிட்டார்கள் நண்பர்கள். சற்றுப் பொறுத்திருந்து பார்த்துவிட்டு, போன் செய்தார்கள். அப்போதுதான் தூக்கத்திலிருந்து எழுந்தேன். நேரம் ஏழரை. கீழேதான் காத்திருக்கிறோம் என்றார்கள். சரி.. ”இன்னைக்கு நமக்கு ஏழரைதான்” என்று முடிவு செய்துவிட்டேன்.
அவசர அவசரமாகக் குளித்து, உடை மாற்றிக் கிளம்பி, கீழே இறங்குவதற்காக லிஃப்ட்டுக்கு வந்தபோது, க்ரவுண்டு ஃப்ளோருக்கான G பொத்தானைக் காணோம். “நெஜமாவே ஏழரை ஸ்டார்ட் ஆயிடிச்சோ?” என்று குழம்பியபோதுதான், முதல்நாளே நண்பர்கள் கமலும், செந்திலும் “ஜப்பானில் தரைத்தளம்தான் ஃபர்ஸ்ட் ஃப்ளோர் என்றும், முதல் தளம் செகன்ட் ஃப்ளோர்” என்றும் சொல்லியிருந்தது நினைவுக்கு வந்தது. அதனால் ஜப்பானில் ‘ஜி’ தொல்லை கிடையாது. 1ஆம் எண்ணை அழுத்தி, தரைத்தளமான ஃபர்ஸ்ட் ஃப்ளோருக்கு வந்தேன். ஜப்பான் நண்பர்களுடன் எழுத்தாளர் சாருவும் காரில் காத்திருந்தார்.
எல்லாருக்கும் ஒரு “சாரி” சொல்லிவிட்டு, காரில் ஏறியபடியே, “நீங்க முன்னாடியே வந்துட்டீங்களா சாரு சார்?” என்றேன். “ம்.. நீங்க வருவதற்கு 5 நிமிடம் முன்னாடியே வந்துட்டேன்” என்றார். அடடா.. ஒரு சாரி போச்சே.!
டோக்கியோவின் காலை நேர பரபரப்புடன் கார் விரைந்து கொண்டிருந்தது. உயரமான கட்டடங்கள், கச்சிதமானக் குடியிருப்புகள், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் எனக் கடந்து வந்தபோது, ஜப்பானின் தலைநகரத்தைத் தாண்டியிருந்தோம். இப்போது இயற்கை சூழ்ந்த பகுதிகளில் கார் பயணித்தது. செந்திலின் ட்ரைவிங், உடன் பயணிப்பவர்களுக்கு இதமாக இருந்தது.
ஏறத்தாழ இரண்டரை மணி நேரப் பயணத்திற்குப் பின், அழகான ஏரிக்கரை ஒன்றை அடைந்தோம். அதில் பாய்மரக் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது. ஒரு சில நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்றது போன்ற உணர்வு. ஜப்பானின் புகழ் பெற்ற அஷி ஏரி, கண்களையும் மனதையும் கவ்வி இழுத்தது. சற்று இளைப்பாறிய பிறகு, “இன்னைக்கு முழுக்க இப்படிப்பட்ட ஜப்பானைத்தான் பார்க்கப் போகிறோம்” என்று மீண்டும் காரில் ஏறினார் செந்தில். பயணம் இனித்தது.
ஹக்கோனே என்ற இடத்திற்கு வந்திருந்தோம். அடர்ந்த மலைப்பகுதி. அதன் ஒரு புறம் பரந்து விரிந்த ஏரி. மலைகளுக்கிடையே Rope way கேபிள் கார்கள் போய்க் கொண்டிருந்தன. செந்திலின் காரிலிருந்து, கேபிள் காரில் அடுத்த பயணம் தொடங்கியது. உயரத்திலிருந்து பார்க்கும்போது ஹக்கோனே நெஞ்சை அள்ளியது. பசுமையான மலைகள், அடர்ந்திருந்த காடுகள், செழிப்பாக்கிய நீர்நிலைகள்.
“நீங்க வந்திருக்கிற இந்த மாசம் ரொம்ப நல்ல சீசன்” என்றார் கோவிந்தபாசம். “மழையோ பனியோ இல்லாத செப்டம்பர் கடைசியும் அக்டோபர் முதல் வராமும் ஜப்பானைப் பார்க்க ரொம்பவும் அழகாக இருக்கும்” என்றார் செந்தில்.
கேபிள் கார், மலைப் பகுதியில் பல ஊர்களைக் கடந்து சென்றது. எதிரே பல கேபிள் கார்கள் பக்கத்து கம்பி வடம் வழியே கடந்தன. ஒவ்வொரு ஊருக்கும் ஸ்டேஷன் இருந்தது. ஊர்க்காரர்களைவிட சுற்றுலாப் பயணிகள்தான் அதிகமாக ஏறி இறங்கிக் கொண்டிருந்தனர். கேபிள் காரில் உயரப் பயணித்தபடியே செந்திலும் சாருவும் நவீன இலக்கியப் போக்குகளை ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தார்கள். ரசித்தபடியே ஊர்கள் கடந்தன.
நெருங்கியிருந்த இடம், ஒவாக்குடானி.
கேபிள் காரிலிருந்து பார்த்தபோது, மலைப் பாறைகளிலிருந்து புகை வந்து கொண்டிருந்தது. “என்ன புகை அது, குவாரியில் வெடி வைக்கிறாங்களா?” என்று நம்ம ஊர் வழக்கப்படி கேட்டேன். அது, குவாரியும் அல்ல, வெடிகுண்டுப் புகையும் அல்ல. ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் வெடித்த எரிமலையின் மிச்சக் கனல். இன்னும் புகைந்து கொண்டிருந்தது. கேபிள் காரிலிருந்து இறங்கும்போதே கந்தக நெடி மூக்கைத் துளைத்தது.
ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அந்த மலைப்பகுதிகளை ரசித்துக் கொண்டிருந்தார்கள். சுற்றிலும் புகை மண்டலமாக இருந்தது. எச்சரிக்கைப் பலகை ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. எரிமலைப் பகுதியில் திடீரென வெடிப்பு ஏற்பட்டு, கற்கள் எகிறி வரக்கூடும் என்பதையும், அத்தகைய சூழலில் அருகில் உள்ள கட்டடத்திற்கு சென்று பாதுகாப்பாக இருக்கவும் என்றும் அந்த பலகை தெரிவித்தது. கேபிள் கார் நின்று செல்லும் ஸ்டேஷனிலும், பக்கத்தில் இருந்த கட்டடத்திலும் ஹெல்மெட் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
“மூவாயிரம் வருசமாகியும் இன்னும் நீ அடங்கலையா?” என்று புகை கக்கும் மலையைப் பார்த்தபடியே கேட்டது மைன்ட் வாய்ஸ். “இந்த மலைகள்தான் ஜப்பாளின் இயற்கைச் செல்வங்கள்” என்றார் செந்தில். ஆபத்துகளைக் கடந்துதான் நன்மைகளை அடைய முடியும் என்பதை இயற்கை உணர்த்துவது போல இருந்தது.
கந்தக நெடியை சுவாசிப்பது எங்கள் மூக்குக்கு இயல்பாகியிருந்தது. அருகில் இருந்த கட்டடத்தை நோக்கிச் செல்லும்போது, கருப்பு நிறத்தில் பெரிய முட்டை போன்ற வடிவமைப்பை செய்து வைத்திருந்தார்கள். “இது என்ன?” என்றேன்.
“நாம் சாப்பிடுற முட்டைதான். உள்ளே இருக்கிற கடைக்குப் போனால், வேகவைத்த ஒரிஜினல் கோழி முட்டை கருப்பு ஓட்டுடன் கிடைக்கும்” என்றார் செந்தில். “ஜப்பான் கோழி போடுற முட்டைக்கு ஓடு கருப்பா இருக்குமா?”
“எல்லா ஊரு கோழியும் ஒரே கலரில்தான் முட்டை போடும். இந்த மலையில் இருந்து வரும் கந்தக அனலில் முட்டையை வேக வைக்கிறார்கள். ஓடு மட்டும் கருப்பாகிவிடும். உள்ளே வெந்திருக்கும் முட்டை வழக்கம்போல வெள்ளைக் கரு, மஞ்சள் கருவுடன்தான் இருக்கும்’‘ என்றவர், இவனிடம் பேசிக்கொண்டிருக்க வேண்டாம் என நினைத்தாரோ என்னவோ, நான்கைந்து முட்டைகளை வாங்கி வந்து விட்டார்.
கருப்பு ஓடு முட்டைகளில் ஒன்றை, அருகிலிருந்த சிமெண்ட் கட்டையில் லேசாகத் தட்டி, ஓட்டை நீக்கிவிட்டு, வெள்ளைக்கருவையும் மஞ்சள் கருவையும் சாப்பிட்டேன். பதமாக வெந்திருந்தது. மற்றவர்களும் சாப்பிட்டனர்.
“கந்தகத்தில் வெந்த கருப்பு ஓடு முட்டையை சாப்பிட்டால் ஆயுளில் பத்து வயது கூடுமாம்” என்றார் செந்தில். அவர் கையில் இன்னொரு முட்டை மிச்சம் இருந்தது. “நீங்க சாப்பிடுங்க” என்றார். சாப்பிட்டேன். அதுவும் சரியாக வெந்திருந்தது.
“இன்னொரு முட்டை வாங்கிட்டு வரட்டுமா?” என்றார்.
“எக்ஸ்ட்ரா இருபது வயது போதும். அதற்கு மேல் ஆயுள் நீடித்தால் சரிப்படாது” என்றேன்.
நண்பர் கோவிந்தபாசத்திடம் செந்தில், “நீங்க இவங்களை அழைச்சிக்கிட்டு க்ரூஸூக்குப் போங்க. நான் கேபிள் காரில் ஹக்கோனே போய் என் காரை எடுத்துக்கிட்டு தோகெம்பா வந்திடுறேன்” என்றார்.
மலைப்பகுதியில் ஆகாயத்தில் பயணித்த நாங்கள், அடுத்ததாக மலைகளிடையே சலசலக்கும் ஏரித்தண்ணீரில் மிதக்கத் தயாரானோம்.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin japan travel story 11