கோவி.லெனின் Govi Lenin Japan Travel Story 8
நாக்குக்கு காரம் தெரியும். அந்தக் காரம், மூக்கில் ஏறினால் எப்படி இருக்கும்? ஜப்பானியர்களின் உணவு நேரத்தில், ‘தொட்டுக் கொள்ள’ வைக்கப்படும் வசாபி, பார்ப்பதற்கு நம்ம ஊர் புதினா அல்லது கொத்தமல்லி துவையல் போலத் தெரியும்.
இட்லியில் தோய்த்து சாப்பிடும் அளவுக்கு, அவசரப்பட்டு எடுத்து சாப்பிட்டீர்கள் என்றால் அவ்வளவுதான். நாக்கின் காரம், மூக்கில் புரையேறி, கண்களில் மிக்ஜாமை மிஞ்சிய மழை கொட்டும்.
ஜப்பான் மண்ணின் தாவரம் இந்த வசாபி. மலையில் உருவாகி, பள்ளத்தாக்குகளில் ஓடும் ஆறுகளின் கரையோரங்களில் கொடி போல வசாபி பரவியிருக்கும். அதன் வேர்ப்பகுதியில் உள்ள கிழங்குதான் துவையல் போல அரைக்கப்படுகிறது.
ஜப்பானியர்களின் வீடுகளிலும் சரி, பெரும்பாலான உணவகங்களிலும் சரி, விருந்தினர் வந்தபிறகே வசாபி துவையலை அரைத்துக் கொடுப்பார்கள். Chopstickன் முனையில் லேசாகத் தொட்டு, நாக்கில் வைத்தால் சுர்ரென்று உச்சி மண்டை வரை சூடு ஏற்றும் காரம். சுஷியுடன் வசாபியை லேசாகத் தொட்டு சாப்பிடுவது கூடுதல் சுவை. சாக்கே சரக்குக்கும் வசாபி நல்ல சைடுடிஷ்தான்.
சிக்கன், மீன், சிப்ஸ் என்று பலவித சைடுடிஷ் இருந்தாலும், ஊறுகாய் தேடுகின்ற தமிழரின் நாக்கு போல, வசாபியை விரும்புவது ஜப்பானியர்களின் இயல்பு.
பச்சை மீன், பச்சை இறைச்சி, சாப்பிடும் நேரத்தில் அரைக்கப்படும் துவையல், தேவைக்கேற்ப அரைக்கப்படும் மசாலா பொருட்கள், அவற்றில் பெரும்பாலும் உள்ளூர் மூலிகை வகைகள் என ஜப்பானியர்களின் அன்றாட உணவே பேலியோ டயட்டுக்குரிய அம்சங்களுடன் இருக்கிறது. அதை சாப்பிட்டுவிட்டு, நடையாய் நடக்கிறார்கள் ஆண்களும் பெண்களும்.
டோக்கியோ சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில், எழுத்தாளர் சாருவின் புல்லட் ரயில் பயண டிக்கெட் பதிவுக்காகக் காத்திருந்த நேரத்தில், ரயில்வே படிக்கட்டுகளில் விறுவிறுவென ஏறி இறங்கும் ஜப்பானியர்களை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.
எல்லா இடங்களிலும் லிஃப்ட், எஸ்கலேட்டர்கள் என இத்தனை தொழில்நுட்ப வசதிகள் அற்புதமாக இருக்கும்போது எதற்காக இவர்கள் ஏறி, இறங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள நேரமானது.
உடல்நிலை காரணமாக கட்டாயமாக லிஃப்ட்டில் போயாக வேண்டும் என்கிற நிலையில் இருப்பவர்கள் மட்டுமே அவற்றைப் பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலான ஜப்பானியர்கள் படிக்கட்டுகளில்தான் ஏறி இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
பார்வை மாற்றுத்திறனாளியான நடுத்தர வயது பெண்மணி ஒருவர், தனக்கான ஊன்றுகோலை தட்டியபடியே மெட்ரோ ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருந்தார். கூலர்ஸ், ஹேண்ட்பேக் சகிதமாக அவர் வருவதைப் பார்த்தபோது, ஏதோ ஒரு நிறுவனத்தில் பணியாற்றுகிறவர் போலத் தெரிந்தார். எவருடைய துணையுமின்றி விறுவிறுவனெ படிகளில் இறங்கி, மெட்ரோ ரயிலில் ஏறி, தான் செல்ல வேண்டிய இடத்திற்குப் பயணித்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
பார்வை மாற்றுத் திறனாளிகள் நடப்பதற்கேற்ற ஒலிக் குறிப்புகள்-அவர்களின் உதவிக்கான சமிக்ஞைகள் ஆகியவை ஜப்பானின் நடைபாதைகள், சாலைகளின் ஸீப்ரா கிராசிங், ரயில் நிலையங்கள் எனப் பொது இடங்கள் பலவற்றிலும் உள்ளன. அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் மஞ்சள் நிறத்திலான சொரசொரப்பான கோட்டுப் பாதை பார்வை மாற்றுத் திறனாளிகளின் பணிகளை எளிதாக்குகிறது.
அந்தப் பெண்மணி கடந்து செல்வதையே கவனித்துக் கொண்டிருந்த என்னிடம் சாருநிவேதிதா, “தன்னம்பிக்கையுடன் வேலைக்குப் போகக் கூடியவராக தெரிகிறார். இவரைப் போன்றவர்களுக்கேற்ற கட்டமைப்பு வசதிகள் இந்த நாட்டுல இருக்கு. இதே வயதில், இதே நிலைமையில் நம்ம நாட்டில் இந்தப் பெண்மணி இருந்திருந்தால், பிச்சை எடுக்க விட்டிருப்பாங்க” என்று வேதனைக் குரலில் சொன்னார்.
அந்தப் பெண்மணி எங்கள் கண்ணில் இருந்து மறைந்தபிறகு, மீண்டும் படிக்கட்டு பக்கம் திரும்பினோம். 60 வயது, 70, 80 வயது ஆண்களும், பெண்களும் படிக்கட்டுகளில் ஏறி-இறங்கி சென்று கொண்டிருந்தார்கள். பார்க்கும் இடமெல்லாம் நீக்கமற நடந்து கொண்டிருந்தார்கள். நடப்பது அவர்களின் இயல்பு என்றால், சைக்கிள் ஓட்டுவது அவர்களின் விருப்பமான வாழ்வு.
வீட்டில் ஆளுக்கொரு கார் வைத்துக் கொள்ளக் கூடிய வசதி உள்ளவர்வர்களிடம்கூட, ஆளுக்கொரு சைக்கிள் நிச்சயம் இருக்கும். சாலைகளின் இடது ஓரத்தில் சைக்கிளுக்கான லேன் உண்டு. நடைபாதைகளிலும் சைக்கிளை ஓட்டிச் செல்லலாம். ப்ளாட்பாரத்தில் ஆட்கள் குடியிருப்பதில்லை. கடைகள் போடுவதில்லை. குப்பையும் இல்லை. அதனால் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு வசதியாக இருக்கிறது.
பக்கத்தில் உள்ள இடங்களுக்கு செல்ல வேண்டுமென்றால், சைக்கிளை ஓட்டியபடியே சென்று விடுவார்கள். “பக்கம் என்றால் அதிக தூரமில்லை, 15 அல்லது 20 கிலோ மீட்டர்கள்தான்” என்றார் நண்பர் கமல். சட்டென அவரை ஏறிட்டுப் பார்த்தேன்.
“ஆமாங்க.. இங்கே பல ஆபீஸ்களில் பார்க்கிங் ஏரியா கம்மியாத்தான் இருக்கும். அதனால, சைக்கிளில் ஆபீசுக்கு வந்திடுவாங்க. 15 கிலோ மீட்டர் வரை வந்துவிட்டு, திரும்பிப் போவதெல்லாம் சர்வசாதாரணம்” என்றார். நான், சைக்கிள் டியூபில் இருந்து காற்று இறங்குவதுபோல பெருமூச்சு விட்டேன்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உணவுப் பழக்கமும், நடந்து செல்வதும், சைக்கிள் ஓட்டுவதும் ஜப்பானியர்களின் உடலமைப்பை நல்ல முறையில் பராமரித்து, வாழ்நாளை அதிகரிக்கச் செய்கிறது. நான் பார்த்த ஜப்பானிய ஆண்களில் பெரும்பாலானவர்களுக்கு தொப்பை என்பதே இல்லை. சட்டையை அயர்ன் செய்ததுபோல வயிறும் அமைந்திருந்ததைப் பார்க்கையில் எனக்குப் பொறாமை.. லைட்டா!
ஜப்பானிய ஆண்களின் சராசரி வயது 82. ஜப்பானிய பெண்களுக்கு 85. சராசரி வயதை விட கூடுதலாக வாழ்பவர்கள் அதிகம். “உலகின் வயதான மூதாட்டி மரணம். 105 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்தவர்” என்று டி.வி.யிலும் பேப்பரிலும் செய்திகள் பார்ப்போம். இரண்டாண்டுகளுக்கு ஒரு முறையாவது இத்தகைய செய்தி நம் கண்களைக் கடந்து செல்லும். அதை உற்று நோக்கினால், அந்த வயதான மூதாட்டி பெரும்பாலும் ஜப்பான் நாட்டில் ஏதோ ஓர் ஊரில் வாழ்ந்தவராக இருப்பார். ஜப்பானியர்களில் வயதில் செஞ்சுரி அடிப்பவர்கள் அநேகம்.
அதிநவீனத் தொழில்நுட்ப வசதிகளை, தங்கள் வேலைகளை எளிதாக்கிக் கொள்ளப் பயன்படுத்தும் ஜப்பானியர்கள், தங்கள் சொந்த வாழ்க்கைக்கும் உடல் நலனுக்கும் ஏற்ற இயல்பான நடைமுறைகளைப் பின்பற்றக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.
அன்றைய நாளின் பெரும்பாலான நேரத்தை டோக்கியோவின் பல பகுதிகளுக்கும் செல்லும் மெட்ரோ ரயில்களில் கழிக்கும்படி செய்திருந்தார் நண்பர் கமல்.
ஒன்றின் கீழ் ஒரு தளமாக, 5 அடுக்குகள் வரை மெட்ரோ ரயில் பாதைகள் உள்ளன. உள்ளங்கையில் ஓடுகின்ற ரேகைகள் போல டோக்கியோவின் குறுக்கும் நெடுக்குமாக ஏராளமான மெட்ரோ சர்வீஸ்கள். எல்லா ரயில் நிலையங்களும் பரபரப்பாக இயங்குகின்றன.
டோக்கியோ சென்ட்ரலில் இருந்து மெட்ரோ ரயிலில் பயணிக்கும்போது, ஒரு பெண்மணி புத்தகம் படிப்பதைப் பார்த்து ஆச்சரியமும் மகிழ்ச்சியும் கொண்டார் எழுத்தாளர் சாரு. காரணம், ரயிலில் இருந்த பலரும் நம்ம ஊரைப் போல செல்போனை நோண்டிக் கொண்டுதான் இருந்தனர். இந்தப் பெண்மணி மட்டும் புத்தகம் படிப்பதைப் பார்த்ததும் எழுத்தாளர் தன் மகிழ்ச்சியை பத்திரிகையாளருடன் பகிர்ந்து கொண்டதில் ஆச்சரியமில்லை.
“இங்கேயும் நம்ம ஊர் போல இன்னும் புத்தகம் படிக்கிறவங்க இருக்காங்க” என்றார் சாரு.
“இந்த ஊரில் நம்ம ஊர் போல இருக்கிற இன்னொன்றை கவனிச்சீங்களா..? என்றேன்.
“என்ன?”
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin Japan Travel Story 8