சத்குரு
ஒரு வருடத்தில் 365 நாட்கள் இருக்க, மஹாசிவராத்திரி அன்று மட்டும் இரவில் கண்விழித்திருக்க வேண்டும் என்று வழங்கப்பட்டது ஏன்? மஹாசிவராத்திரி என்றால் என்ன? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?
சிவன் – என்றுமே நிரந்தர Fashion
மஹாசிவராத்திரி இரவு என்பது பல வாய்ப்புகள் நிறைந்திருக்கும் ஓர் இரவு.
நிலவின் சுழற்சிக் கணக்கில், ஒரு மாதத்தின் 14வது நாள், அதாவது அமாவாசைக்கு முந்தின நாள், சிவராத்திரி. இதுதான் அந்த மாதத்திலேயே மிகவும் இருளான நாள். ஆன்மீகப் பாதையில் இருப்பவர்கள் இந்த இரவில் குறிப்பிட்ட சில ஆன்மீக சாதனாவில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வர். ஒரு வருடத்தில் வரும் 12 சிவராத்திரிகளில், மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரி, மற்ற சிவராத்திரிகளை விட சக்தி வாய்ந்தது. இது தான் மஹாசிவராத்திரி என்று வழங்கப்படுகிறது.
அன்று இருக்கக்கூடிய கோள்களின் அமைப்பு இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தியை மேல்நோக்கி எழும்பச் செய்கிறது. அதனால் அன்றிரவு முழுவதும், ஒருவர் விழிப்புடன், முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால் அவருக்குள் இயற்கையாகவே சக்தி மேல்நோக்கி நகர்ந்திடும். இந்தியக் கலாச்சாரத்தில் பல யோகிகள், முனிவர்கள் இந்நாளை பயன்படுத்தி முக்தி அடைந்திருக்கிறார்கள். ஈஷாவிலும் இந்நாள், இதே காரணத்திற்காக அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
மஹாசிவராத்திரி அனைவருக்குமே உகந்த நாள். என்றாலும், யோகக் கலாச்சாரத்தில் சிவனை கடவுளாகப் பார்ப்பதில்லை. அவரை ஆதியோகியாக, யோகப் பாரம்பரியங்களை நமக்கு வழங்கிய ஆதிகுருவாகவே ஆராதிக்கின்றனர். ‘ஷிவா’ என்றால் ‘எது இல்லையோ, அது’. உங்களில் ‘நான்’ என்ற சுவடின்றி, அங்கே சிவன் குடியிருக்க நீங்கள் வழிசெய்தால், வாழ்வை முற்றிலுமொரு புதிய கோணத்தில், என்றும் இல்லா தெளிவுடன் காணமுடியும்.
இதை நோக்கியே நம் ஈஷா யோகா மையத்தின் மஹாசிவராத்திரி கொண்டாட்டங்கள் அமைகின்றன. இன்னும் சொல்லப்போனால், ஈஷா யோகா மையத்தை பொருத்தவரை, ஒவ்வொரு வருடமுமே, மஹாசிவராத்திரியை எதிர்பார்த்து, எதிர்நோக்கி காத்திருப்பது போலாகி விட்டது. இந்நாள், இந்த இரவு, ஒரு வாய்ப்பு. நம் உள்வாங்கும் திறனை சிறிதளவேனும் உயர்த்திக் கொள்வதற்கான வாய்ப்பு இது. எண்ணங்கள், உணர்வுகள், முன்முடிவுகள் போன்றவற்றின் இடையூறின்றி வாழ்வை அணுகுவதற்கான வாய்ப்பு.
வெறும் கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்க வேண்டும் என்பதே எங்கள் ஆசையும் அருளும். ‘ஷிவா’ எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் எல்லோரும் உணர்வீர்களாக!
மஹாசிவராத்திரி: குறுந்தகவல்கள்
#1 இயற்கையாகவே உங்கள் உயிர்சக்தி மேல்நோக்கி எழும்புகிறது
யோகப் பயிற்சிகளும் பிற ஆன்மீக செயல்முறைகளும் ஒரு மனிதனின் உயிர்சக்தியை உயரச் செய்வதற்காகவே செய்யப்படுகிறது. மஹாசிவராத்திரி அன்று இயற்கையே இவ்வழியில் நமக்கு உதவுவதாக அமைகிறது. அதனால் சிவராத்திரி, அதிலும் மஹாசிவராத்திரி மிக மிக முக்கியமான நாள்.
#2 ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதம்
இல்லற வாழ்வில் இருப்பவர்களுக்கு இது, சிவனின் திருமண நாள். அவர் சதியையும், பின்னர் பார்வதியையும் இந்த நாளிலேதான் மணந்தார். லட்சியவாதிகளைப் பொருத்தவரை இது சிவன் தன் எதிரிகளை அழித்த நாள். ஆனால் யோகியருக்கும், முனிவர்களுக்கும் இந்நாள் ‘நிச்சலனத்தின்’ சாரம். பல்லாயிரம் ஆண்டுகால தவத்திற்குப் பின், ஆதியோகி சிவன் ‘அச்சலேஸ்வரராக’, கைலாய மலையுடன் கலந்து, தான் அறிந்த அனைத்தையும் கைலாய மலையில் பதித்த நாள் இது.
# 3 இரவெல்லாம் விழிப்போடு, முதுகுத்தண்டை நேராக வைத்திருந்தால், அதிகளவில் பலன்கள்
புராணக்கதைகள் கூறும் காரணம் எதுவாகினும், இந்நாளின் முக்கியத்துவம் அன்று இயற்கையாகவே நம் உயிர்சக்தி மேலெழும்புகிறது என்பது. அதனால் இந்த இரவை விழிப்போடு, விழிப்புணர்வோடு, முதுகுத்தண்டை நேர்நிலையில் வைத்திருந்தால், அதிக அளவில் பலன் பெற்றிடுவோம். அன்று நாம் செய்திடும் ஆன்மீக சாதனாவிற்கும் பலன் அதிகமாக இருக்கும்.
#4 இரவெல்லாம் நீடிக்கும் இசை நிகழ்ச்சிகள்
பிரம்மாண்டமாய், ஆனந்தமாய், இரவெல்லாம் நீடிக்கிறது நம் ஈஷா யோகா மஹாசிவராத்திரித் திருவிழா. சக்திவாய்ந்த தியானங்கள், புகழ்பெற்ற இசைக்கலைஞர்களின் அற்புதமான இசைநிகழ்ச்சிகள், ஈஷாவின் சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா இசைக் குழுவின் இசை, இரவெல்லாம் நம்மோடு உடனிருக்கும் சத்குரு என, விசேஷமான அந்நாளின் மகத்துவத்தை நாம் உணர்ந்திட நமக்குப் பல உறுதுணைகள் உருவாக்கப் பட்டுள்ளன.
#5 தியானலிங்கத்தில் நிகழும் பஞ்சபூத ஆராதனா
நம் உடலின் இந்த ஐந்து அடிப்படைக் கூறுகளும் நமக்குள் எப்போது நன்றாக ஒருங்கிணைந்து செயல்படுகிறதோ அப்போது நமக்கு ஆரோக்கியமும் நல்வாழ்வும் நிச்சயம் உண்டாகும். இதற்கென யோகத்தில், ‘பூத ஷுத்தி’ என்ற தனி விஞ்ஞானப் பிரிவவே இருக்கிறது.
இந்த ஆழ்ந்த விஞ்ஞானத்தின் பலனை நாமும் பெற, ‘பஞ்சபூத ஆராதனா’ எனும் செயல்முறையை சத்குரு நமக்கு வழங்குகிறார். ஒவ்வொரு சிவராத்திரி அன்றும், தியானலிங்க வளாகத்தில் பஞ்சபூத ஆராதனா நடக்கிறது. மஹாசிவராத்திரி அன்று நடக்கும் பஞ்சபூத ஆராதனாவில் சத்குருவும் உடன் இருப்பார்.
நமச்சிவாய என்ற ஒலிக்குப் பின்னால் ஏதாவது விஞ்ஞானம் உள்ளதா?
சிவனை அழிக்கும் சக்தி என்பார்கள். அதாவது உங்கள் அகங்காரத்தை அழிப்பவர், உங்கள் எல்லைகளைத் தகர்ப்பவர் என்று பொருள்.
‘ஷிவா’ என்ற வார்த்தையில், ‘ஷி’ என்பது மிகச் சக்தி வாய்ந்த ஒலிக் குறிப்பு. அதைச் சமன்படுத்த, ‘வா’ என்ற ஒலி பின்னால் சேர்க்கப்பட்டுள்ளது. தகுந்த சூழ்நிலையை உருவாக்கி ‘ஆஉம் நம ஷிவாய’ என்ற மந்திரத்தை உச்சரித்தால், அது எல்லையில்லாததை நோக்கிப் பயணப்பட மிக அற்புதமான கதவுகளைத் திறந்திடும்!
மீண்டும் சனிக்கிழமை சந்திப்போம்…
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கல்கி படத்தில் பிரபாஸின் கேரக்டர் பெயர் தெரியுமா?
சென்னையில் இன்று எங்கெங்கு போக்குவரத்து மாற்றம்?
பாலையாவின் வேட்டை ஆரம்பம்: NBK 109 வீடியோ இதோ!