கோவி.லெனின் Govi Lenin japan travel story 14
ஜப்பான் பயணப் பதிவுகள் -14
ஆன்சென் என்கிற இயற்கையான வெந்நீரோட்டம் கொண்ட ஜப்பான் நாட்டின் எரிமலைப் பகுதிகளில் உள்ள குளங்களில் ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் குளிக்கிறார்கள். ஆண்களுக்கு தனி ஏரியா. பெண்களுக்கு தனி ஏரியா. ஒரு சில இடங்களில் பாரம்பரிய வழக்கப்படி, இரு பாலினத்தவரும் சேர்ந்து குளிப்பது போன்ற குளங்கள் இருந்துள்ளன. தற்போது அப்படிப்பட்ட குளங்களுக்கு அங்கீகாரமில்லை என்றனர்.
வெந்நீர்க் குளியல் சிகிச்சை என்பதே இரத்த ஓட்டத்தை சீர்ப்படுத்தும் வகையில், நரம்பு மண்டலத்தைத் தூண்டிவிட்டு களைப்பைப் போக்குவதற்காகத்தான். ஆணும் பெண்ணும் ஜோடியாகக் குளித்து, ஜலக்கீரிடை நடத்தி, களைப்புடன் திரும்ப வேண்டாமே என்ற நல்ல எண்ணத்தில்கூட அனுமதிக்காமல் இருந்திருக்கலாம் என மனதை ஆறுதல்படுத்திக் கொண்டு வெளியே வந்தோம்.
கணவன், மனைவி, குழந்தைகள் என்று குடும்பமாக வந்தால் முன்பதிவு செய்து ஒரே குளத்தில் குளிக்கும் வசதி ஓரிரு இடங்களில் உண்டு என்ற விவரமும் கிடைத்தது.
தொழில்நுட்ப மயமான பரபரப்பான வேலைச் சூழலிலும் ஜப்பானியர்கள் பொறுமையுடன் ஒவ்வொன்றையும் அணுகுவதையும், தங்களின் இயல்பு மாறாமல் இருப்பதையும் பார்க்க முடிந்தது. புத்த மதம் பரவிய நாடு என்பதால் இந்த அமைதியும் பொறுமையும் அவர்களின் வாழ்க்கை முறையாக மாறியிருக்கிறதா எனக் கேட்டபோது, “புத்த மதத்துக்கு முன்னோடியாக இங்கே ஷின்ட்டோ மதம் உண்டு” என்றார் கமலக்கண்ணன்.
டோக்கியோவில் உள்ள அசாகுசா பகுதியில் ஷின்ட்டோ வழிபாட்டிற்கான கோயில் உள்ளது. மூன்று தெய்வங்களுக்கான கோயில் என்றழைக்கப்படும் இது 1649ல் கட்டப்பட்டது. ஜப்பானின் முக்கியத்துவம் வாய்ந்த பண்பாட்டு அடையாளமாகக் கருதப்படும் அசாகுசா ஷின்ட்டோ கோயில், இரண்டாம் உலகப் போரின் போது, இப்பகுதியில் வெடிகுண்டுத் தாக்குதல்களை எதிர்கொண்டு தப்பிய இரண்டு கட்டடங்களில் ஒன்றாகும்.
தலைநகரம் முழுவதும் தொழில்நுட்ப வளர்ச்சியில் அசத்தும் நிலையில், அசாகுசா ஷின்ட்டோ கோயிலைச் சுற்றிப் பாரம்பரிய அடையாளங்களைக் காண முடிகிறது. அதில் ஒன்று, கை ரிக் ஷா. மனிதனை மனிதனே இழுத்துச் செல்லும் இந்த வகை கை ரிக் ஷாக்கள் மனிதமாண்புக்கும் சுயமரியாதைக்கும் இழுக்கு என்பதால் தமிழ்நாட்டில் 1973லேயே கை ரிக் ஷாக்களை ஒழித்து, அதற்குப் பதிலாக சைக்கிள் ரிக் ஷாக்களை வழங்கியவர் அப்போதைய முதல்வர் கலைஞர். மோனோ-மெட்ரோ ரயில்கள், விதவிதமான கார்கள் ஓடும் ஜப்பானில் இன்னமும் கை ரிக் ஷாவா?
“இல்லை.. இது பாரம்பரியத்தின் ஓர் அடையாளமாக இந்தக் கோயில் பகுதியில் மட்டும் கடைப்பிடிக்கப்படுகிறது. அத்துடன், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையிலும் கை ரிக் ஷா சவாரி உள்ளது. பாருங்கள்.. இளைஞர்கள் எவ்வளவு ஆர்வமாகவும் வேகமாகவும் இழுத்துச் செல்கிறார்கள்” என்று காட்டினார் கமல். அந்தத் தெருவில் ஓடிய அதிநவீனக் கார்களுடன் கை ரிக் ஷாக்களும் சிக்னலில் காத்திருந்தது. பச்சை எரிந்ததும் கார்களுக்குப் போட்டியாக, ரிக் ஷா இழுக்கும் இளைஞர்கள், தங்கள் கால்களை எடுத்து வைக்கும் வேகம் கண்களைக் கவர்ந்தது.
ஷின்ட்டோ கோயிலுக்கான முகப்பு வளைவிலிருந்து கோயிலுக்குச் செல்லும் வரை பாரம்பரியப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் இருபுறமும் வரிசையாக இருந்தன. ஜப்பானியப் பெண்கள் சிலர் ‘கிமோனோ’ என்ற உடையில் வந்திருந்தனர். பட்டுத் துணியில் பளபளப்பாகவும் பலவண்ணங்களிலும் அமைந்துள்ள இந்த உடை, தோள்பட்டை முதல் பாதம் வரை நீண்டிருக்கும். அந்நாட்டுப் பெண்களின் தேசிய உடையாகக் கருதப்படும் கிமோனோ உடையை, இதுபோன்ற இடங்களுக்கு வரும்போது அணிந்துகொண்டு, அதற்கேற்ற அலங்காரத்துடன் வருகிறார்கள். (திருமணம் மற்றும் சில சிறப்பு நிகழ்வுகளுக்குப் பட்டுப்புடவைக் கட்டிக்கொள்ளும் நம்ம ஊர் பெண்கள் போல). சிறப்பு நாட்களில் அணிவதற்கேற்ப கிமோனோ உடைகள் வாடகைக்கும் கிடைக்கின்றன.
ஜப்பானிய ஆண்களுக்கு பாரம்பரிய தேசிய உடை எது என்று கேட்டால், அதுவும் கிமோனாதான். ஆனால், அது பெண்கள் உடுத்துவது போன்ற ஒரே நீளமான உடையல்ல. ஹஓரி (கோட்), ஹக்கம்மா (கால்சட்டை) என இரண்டு பகுதிகளாக உள்ளன. அந்த உடையிலான ஆண்களை கோயில் பக்கமாகப் பார்க்க முடியவில்லை (அல்லது கண்கள் பெண்கள் பக்கமே இருந்திருக்கலாம்)
இரவு நேர ஒளியில் மின்னின ஷின்ட்டோ கோயிலும் அதன் கோபுரமும். ஜப்பானியர்கள் மணி அடித்து, கடவுளுக்குத் தங்களின் வருகையைத் தெரியப்படுத்துகிறார்கள். அதன்பிறகு 5 யென் மதிப்புள்ள நாணயத்தை உண்டியலில் போட்டு, காணிக்கை செலுத்தியதை உறுதிப்படுத்துகிறார்கள். உடலை முன்புறமாக வளைத்து நிமிர்கிறார்கள். இதனை இரண்டு முறை செய்து கடவுளை வணங்குகிறார்கள். அதன்பிறகு கைத்தட்டுகிறார்கள். கடவுளுடனான சந்திப்புக்கு வெளிப்படுத்தும் மகிழ்ச்சி இது. அதன்பிறகு, கைக் குவித்து வேண்டுகிறார்கள். பிறகு, ஒரு முறை உடலை வளைத்து குனிந்து நிமிர்கிறார்கள். வழிபாடு நிறைவடைகிறது.
வேண்டுதல், நேர்த்திக்கடன், பரிகாரம் போன்றவையும் ஜப்பானின் ஷின்ட்டோ மத வழிபாட்டில் இடம்பெற்றுள்ளது. திருவுளச் சீட்டு, தூபம் போடுதல் உள்ளிட்டவை ஜப்பானிய ஸ்டைலில் அமைந்துள்ளன. இந்தியா உள்ளிட்ட ஆசிய கண்டத்து நாடுகளின் மரபுகள்-பாரம்பரியங்களை ஜப்பானியர்களின் வழிபாட்டு முறைகளில் காண முடிகிறது. ஷின்ட்டோ மதம் வலியுறுத்துவது தூய்மை, நல்லிணக்கம், இயற்கை வழிபாடு, குடும்ப மரியாதை, கொடுத்து உதவுதல் உள்ளிட்டவையாகும்.
ஜப்பானியர்கள் ஆர்வத்துடன் கோயிலுக்கு வருகிறார்கள். அமைதியாக வழிபட்டுவிட்டு திரும்புகிறார்கள். மதம் அவர்களுக்கு நம்பிக்கையே தவிர, அரசியல் அல்ல. நெறிப்படுத்திக் கொள்வதற்கான இடமாக வழிபாட்டுத்தலம் இருக்கிறது. வெறியூட்டும் இடமாக அல்ல. புனிதத்தைவிட நடைமுறையை கடைப்பிடிக்கிறார்கள். இயல்பான உணர்வுகளுடன் வாழ்கிறார்கள்.
உணர்ச்சிகளுக்கான வடிகால்களும் இரவு நேர ஜப்பானில் ஏராளம் உண்டு.
(விரியும் வரும் ஞாயிறு அன்று)
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கட்டுரையாளர் குறிப்பு
கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசகராக இருக்கிறார்.
உதயசூரியன் நாடு: வெட்ட வெளி! வெந்நீர்க் குளம்! ஒட்டுத் துணியில்லாக் குளியல்! 13
உதயசூரியன் நாடு: வியக்க வைக்கும் இயற்கை – ஜப்பான் பயணப் பதிவுகள் 12
உதயசூரியன் நாடு: இன்னும் அடங்காத எரிமலைகள்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 11
உதயசூரியன் நாடு: அதிர்ந்து சிரிக்கும் பூமி – ஜப்பான் பயணப் பதிவுகள் 10
சூரியன் உதிக்கும் நாடு: சுற்றிப் பார்க்கும் இடமெல்லாம் கத்திப்பாராதான்! -ஜப்பான் பயணப் பதிவுகள் 9
உதயசூரியன் நாடு : குப்பையும் இல்லை .. தொப்பையும் இல்லை … ஜப்பான் பயணப் பதிவுகள்-8
உதயசூரியன் நாடு : நாட்டு சரக்கு… நச்னு இருக்கு – ஜப்பான் பயணப் பதிவுகள் 7
உதயசூரியன் நாடு : பாம்புக்கறியும் பச்சை மீனும் -ஜப்பான் பயணப் பதிவுகள் -6
கல்யாணம் கசக்கும் கட்டில் இனிக்கும்! உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள் -5
‘ல்..த..கா.. செய்’ உதயசூரியன் நாடு!-4
உதயசூரியன் நாடு: ஜப்பான் ஜெயில் எப்படி இருக்கும்?-3
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்! – 2
உதயசூரியன் நாடு : ஜப்பான் பயணப் பதிவுகள்!-1
Govi Lenin japan travel story 14
“கோவி. லெனின் மூத்த பத்திரிகையாளர், எழுத்தாளர், பேச்சாளர். திராவிட இயக்க சிந்தனைகளை எழுத்துகள், பேச்சுகள் மூலம் பரப்பி வருபவர். தற்போது திமுக தகவல் தொழில்நுட்ப இருக்கிறார்.””. எதுக்கு இவருக்கு இவ்வளவு பெரிய built up? Ore வார்த்தையில் கோல்மால் புர கொத்தடிமை என்று சொல்லிவிட்டு போகலாம்