தமிழகத்தில் இன்று (மே 9) 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுத்தொடர்பாக சென்னை வானிலை மையம் இன்று (மே 9) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (மே 9) தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ. முதல் 40கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தேனி, தென்காசி, தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதையடுத்து மே 10 முதல் மே 14ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே, மே 12ஆம் தேதி, குறிப்பாக தமிழகத்தின் கோவை மாவட்டத்தின் மலை பகுதிகள், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
வெப்பநிலை முன்னறிவிப்பு:
இன்று (மே 9) முதல் மே 13ஆம் தேதி வரை அடுத்த 5 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழக உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் பொதுவான இயல்பை ஒட்டியும், ஓரிரு இடங்களில் 2-3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் சமவெளி பகுதிகளின் ஓரிரு இடங்களில் 40-41 டிகிரி செல்சியஸ், இதர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 37-39 டிகிரி செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 33-37 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
ஈரப்பதம்
இன்று (மே 9) முதல் மே 13ஆம் தேதி வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 45-55 சதவீதமாகவும், மற்ற நேரங்களில் 60-85 சதவீதமாகவும் மற்றும் கடலோரப் பகுதிகளில் 55-85 சதவீதமாகவும் இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அசெளகரியம் ஏற்பட வாய்ப்புள்ளது.
சென்னைக்கான வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவுமில்லை” என வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிகரிக்கும் வெப்பம்: சென்னையில் செயல்பாட்டிற்கு வந்த பசுமை பந்தல்!
ஜெயக்குமார் தோட்டத்தில் 4வது முறையாக தடவியல் நிபுணர்கள் ஆய்வு!