’சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ – இந்த டைட்டிலை சொல்லி முடிப்பதற்குள் நாக்கு சுளுக்கிக் கொள்ளும்.
’சுரேஷ் – சுமலதாவின் இதயப்பூர்வமான காதல் கதை’ என்பதே இதன் அர்த்தம். இந்தப் பெயரே இக்கதை யாரைப் பற்றியது, எதைக் குறித்தது என்பதைச் சொல்லிவிடும். ரதீஷ் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த மலையாளத் திரைப்படமானது, திரைக்கதைக்கென்று வகுக்கப்பட்டிருக்கும் இலக்கணத்தை ‘அசால்டாக’ மீறி நமக்கு வித்தியாசமானதொரு காட்சியனுபவத்தைத் தருகிறது. அதோடு, ‘ஒரு ஒரிஜினல் ட்ரெண்ட்செட்டர்’ என்ற எண்ணத்தையும் உருவாக்குகிறது.
அதெல்லாம் சரி, அது நமக்குக் களிப்பினைத் தருமா என்று நீங்கள் கேட்பது புரிகிறது.
சுரேஷும் சுமலதாவும்..!
சுரேஷ் (ராஜேஷ் மாதவன்), சுமலதா (சித்ரா) இருவரும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். பொதுவாக, ஒரு ஆணும் பெண்ணும் காதலிக்கும் முன்பும் பின்பும் என்னவெல்லாம் நிகழுமோ, அச்சம்பவங்கள் யாவும் அவர்கள் வாழ்விலும் நிகழ்கின்றன.
சுரேஷின் நண்பனான பகவதி (சரத் ரவி), அவர்களது காதல் புகைக்குத் தூபம் போடுகிறார். சுமலதாவின் தந்தை நாஹரின் (சுதீஷ்) நாடக ஆர்வத்தைத் தங்களுக்குச் சாதமாக்கிக் கொண்டு, அவரது வீட்டுக்கு சுரேஷ் அடிக்கடி செல்ல ஒரு ஐடியா தருகிறார். அவரை முதன்மையாகக் கொண்டு ஒரு நாடகத்தை இயக்குமாறு கூறுகிறார்.
சுரேஷின் தந்தை ஒரு நாடக நடிகர் என்பதைத் தவிர, அவருக்கும் நாடகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், தந்தையின் நண்பரான ஒரு நாடக ஆசிரியரின் நாடகப் பிரதியை அவரது சம்பந்தம் இல்லாமலே எடுத்துக் கொண்டு வருகிறார்.
அந்த நாடகத்தைத் தான் இயக்கப் போவதாகவும், அதில் நீங்கள் நடிக்க வேண்டுமெனவும் நாஹரிடம் கூறுகிறார். அந்த கிராமத்தில் நாடக ஆர்வம் கொண்ட பலர் உண்டு. அவர்களில் பலர் தங்களது வேலையை ஒதுக்கி வைத்துவிட்டு, ஒத்திகையில் பங்கேற்கின்றனர்.
குடி போதையில் மூழ்கியிருக்கும் தந்தையைத் திருத்துமாறு சுரேஷிடம் கூறுகிறார் சுமலதா. அவரும் நள்ளிரவில் குடிபோதையில் தள்ளாடும் நாஹரை மறைந்திருந்து தாக்கி, அது நிகழக் காரணமாகிறார்.
சுரேஷ், சுமலதா மட்டுமல்லாமல், அவர்களைச் சார்ந்த பலரது வாழ்விலும் அந்த நாடக ஒத்திகை மாற்றங்களை நிகழ்த்துகிறது.
நாடகம் வளர வளர, சுமலதா உடனான சுரேஷின் காதல் வளர்கிறது. ஒருநாள் அது நாஹருக்குத் தெரிய வருகிறது. சாதியைக் காரணம் காட்டி, அவர் அவர்களைப் பிரிக்க முயல்கிறார்.
இந்த நிலையில், அந்த நாடகம் அரங்கேறுகிறது. அப்போது, இயக்குனரான சுரேஷ் திடீரென்று ஒரு பாத்திரத்தில் நடிக்க வேண்டியதாகிறது.
அவரைத் தாக்கும் ஒரு காட்சியொன்றில் நிஜமாகவே தாக்குகிறார் நாஹர். மகளை விட்டுவிடுமாறு மிரட்டுகிறார். அது அவரது மனதில் பயத்தை ஏற்படுத்துகிறது.
அதனைத் தொடர்ந்து பலமான காயங்களுடன் நாடக மேடையை விட்டு அகல்கிறார் சுரேஷ். நேராகச் சென்று சுமலதாவைக் காண்கிறார்.
தங்களை ஒன்றுசேர சாதீய சமூகம் அனுமதிக்காது என்றெண்ணும் இருவரும் தற்கொலை செய்ய முடிவெடுக்கின்றனர். மலையுச்சிக்கு இருவரும் செல்கின்றனர்.
ஆனால், ‘புன்னகை மன்னன்’ படம் போலே சுமலதா கீழே இருக்கும் நீரில் குதிக்க, செய்வதறியாது பயத்தில் அங்கிருந்து நழுவியோடுகிறார் சுரேஷ்.
அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்தக் கதையை வித்தியாசமானது என்று சொன்னால், படிக்கும் பலர் நாக்கைத் துருத்தி கோபத்தை வெளிப்படுத்தக் கூடும்.
ஆனால் சாதியையும் மதத்தையும் இனத்தையும் இன்னபிற வேறுபாடுகளையும் காரணம் காட்டி இந்தப் பூமியில் காதல் காலம்காலமாகச் சிதைக்கப்பட்டு வருகிறது என்பதை இதில் சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன்.
அதற்காக அறுபதுகள், தொண்ணூறுகள், 2020இல் நிகழ்வதாக இப்படத்தின் காட்சிகளை அமைத்திருக்கிறார். அதனால் சுரேஷ், சுமலதாவாக நடித்தவர்கள் மட்டுமல்லாமல் அனைத்து பாத்திரங்களுமே கெட்டப் மாற்றங்களைக் கொண்டுள்ளன. காட்சிகள் நிகழும் களங்களும் மாறுகின்றன என்பது இப்படத்தின் இன்னொரு சிறப்பு.
உடைக்கப்பட்ட இலக்கணம்!
ஒரு திரைக்கதையில் அடுத்தடுத்த காட்சிகளில் களமும் காலமும் மாறுபடும். அதுவே ஒரு திரைப்படத்தைச் சீரிய முறையில் உருவாக்குவதற்கான இலக்கணம். அது ‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ படத்தில் மீறப்பட்டிருக்கிறது. அதனை இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் நிகழ்த்தியிருக்கும் விதம் சக இயக்குனர்களை பொறாமைப்பட வைக்கும்.
காட்சிகளின் தன்மை பொதுவானதாக இருக்க, அதன் காட்சியாக்கம் மட்டும் மாற்றம் பெறும். அதாவது, ஒரு காட்சி அறுபதுகளில் நடைபெறுவதாகக் காட்டப்பட்டால், அடுத்த காட்சி எண்பதிலும், அதற்கடுத்தது 2020லும் நிகழ்வதாகக் காட்டப்படும்.
உதாரணமாக ஹிட்லர் மீசையுடன் அறுபதுகளைச் சேர்ந்தவராக வரும் சுரேஷ், அடுத்த காட்சியில் பின்னந்தலையில் மயிர்க்கற்றை புரள பேகி பேண்ட் அணிந்து நண்பனுடன் சுமலதாவை ‘சைட்’ அடிப்பார். அடுத்த ஷாட்டில், கையில் மொபைல் போனுடன் அவர் உடன் ‘சாட்’ செய்து கொண்டிருப்பார்.
காலம் மாறினாலும், ஒரு ஆணும் பெண்ணும் காதலை மனதுக்குள் வளர்த்துக் கொள்வது மாறாது எனும் நோக்கில் இதனை இயக்குனர் படைத்திருக்கும் விதம் அருமை.
ஒருகட்டத்தில் அடுத்தடுத்து வெவ்வேறு கெட்டப்களுடன் நடிப்புக் கலைஞர்களும், காட்சிகள் நிகழும் களங்களும் மாறி மாறிக் காட்டப்படுகையில் நாம் பிரமிப்பின் உச்சத்திற்கே செல்வது நிகழ்கிறது. கிளைமேக்ஸ் காட்சி அதன் சிகரம். அதுவே ‘சுரேஷிண்டயும் சுமலதாயுடேயும் ஹ்ருதயஹாரியாய பிரணயகதா’ படத்தின் யுஎஸ்பி.
இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன் இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டுள்ளார்.
டான் வின்சென்ட் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உருகி உருகிக் காதலில் திளைப்பது, நாடகத்தில் பித்து கொண்ட ஒரு கிராமத்தினரைக் கொண்டாடுவது, கூடவே அவர்களது அறியாமைகளை நகைச்சுவையாகச் செல்வது என்று இயக்குனர் கொடுத்திருக்கும் ‘அசைன்மெண்ட்’களை கவனமுடன் பின்னணி இசையில் பிரதிபலித்திருக்கிறார்.
’நாடகே நாடகம்’, ’பிரேமலோலா’, ’சங்குரிச்சாலு’, ’சுண்டலானு’, ‘போண்டா’ பாடல்களில் பழைய பாடல்களின் சாயலை ஏற்றி, ‘கிளாசிக்’ அந்தஸ்தை உருவாக்கியிருக்கிறார் டான் வின்செண்ட். இந்த ஆண்டின் சிறப்பான ஆல்பங்களில் ஒன்றாக இது அமைந்துள்ளது.
படத்தொகுப்பாளர் ஆகாஷ் தாமஸின் பணி இதில் சிறப்புக்குரியது. ‘மாநாடு’ படத்தில் இடைவேளைக்குப் பிறகு சிம்புவின் சண்டைக்காட்சி எப்படி பிரமிப்பை ஏற்படுத்தியதோ, அதனைப் படம் முழுக்க நிகழ்த்தியிருக்கிறார்.
சபின் உரலிகண்டி இதன் ஒளிப்பதிவாளர். நாடக ஒத்திகை, அதன் அரங்கேற்றம் மற்றும் நாயகன் நாயகி காதலில் திளைக்கும் காட்சிகளில் அவரது ஒளிப்பதிவு அழகியலை வாரி இறைத்திருக்கிறது.
தயாரிப்பு வடிவமைப்பாளர் கே.கே.முரளிதரன், கலை இயக்குனர்கள் ஜித்து செபாஸ்டியன், மிதுன் சலிசேரி உருவாக்கிய பிரமிப்பை உணர, படத்தைக் காண்பதே சரியான வழி.
இவர்கள் தவிர்த்து ஒலி வடிவமைப்பைக் கையாண்டிருக்கும் அனில் ராதாகிருஷ்ணன், சினு ஜோசப், ஆடை வடிவமைப்பாளர் சுஜித் சுதாகரன், ஒப்பனையாளர் லிபின் மோகனன், ஸ்டண்ட் கொரியோகிராபர் மாபியா சசி என்று ஒவ்வொரு தொழில்நுட்பக் கலைஞரும் இதில் குறிப்பிடத்தக்க அளவில் பங்களித்துள்ளனர்.
ராஜேஷ் மாதவன் இதில் நாயகன். சித்ரா இதில் நாயகி. இவர்கள் ஏற்ற சுரேஷ், சுமலதா பாத்திரங்கள், இயக்குனரின் முந்தைய படமான ‘ன்னா தான் கேஸ் கொடு’ படத்தில் சிறிய அளவில் வந்து போயிருக்கும்.
அந்த காரணத்தால், அதில் நாயகனாக நடித்த குஞ்சாக்கோ போபன் இத்திரைக்கதையின் ஆரம்பத்திலும் தொடக்கத்திலும் வந்து போயிருக்கிறார்.
ராஜேஷ், சித்ரா இருவரது நடிப்புத் திறமையையும் சிகரத்தில் ஏற்றி அழகு பார்த்திருக்கிறார் இயக்குனர்.
வெறுமனே காதலை மையப்படுத்திய காட்சிகள் என்றபோதும், வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்த மனிதர்களின் இயல்புகளைப் பிரதிபலிப்பதாக அவர்கள் நடித்திருப்பது மிகச்சிறப்பான விஷயம்.
குடி போதையை விட்டுவிட்டு, நாடகத்தில் கவனம் செலுத்துவதாக ஒரு காட்சியில் நடித்திருக்கிறார் சுதீஷ். அதில் அவர் நடித்தவிதத்தைப் பார்த்தவுடன் நமக்கு கைதட்டத் தோன்றும்.
சரண்யா ராமச்சந்திரன் இதில் இன்னொரு நாயகியாக வருகிறார். இவர்கள் தவிர்த்து சுரேஷின் சகோதர்கள், அவர்களது மனைவிமார்கள், பாட்டி, தாய், தந்தை, சுதீஷின் மனைவி, நாடகப் பித்து கொண்ட எம்டி எனும் நபர், அவரது குடும்பத்தினர், கிராமத்தைச் சேர்ந்தவர்களாக நடித்த இதர நபர்கள் என்று இப்படத்தில் பெருங்கூட்டமே இடம்பெற்றிருக்கிறது. அவர்களது நடிப்பு அபாரம் என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
இயக்குனரின் விமர்சனம்!
சாதி உட்படப் பல்வேறு வேற்றுமைகளைக் காரணம் காட்டி காதலர்கள் இச்சமூகத்தில் பிரிக்கப்படுகின்றனர் என்பதை விமர்சித்திருக்கிறார் இயக்குனர் ரதீஷ் பாலகிருஷ்ணன். ‘நாஹர்’ என்ற பாத்திரப் பெயர் கூட குறிப்பிட்ட சாதியைச் சுட்டும் வகையிலேயே உள்ளது. இன்னும் பல உள்ளரசியல்கள் இதில் பொதிந்திருப்பதைக் கேரளத்தைச் சேர்ந்த ரசிகர்கள் சுட்டிக்காட்டக் கூடும்.
எல்லா காலகட்டத்திலும் வளர்ச்சி என்பது ஒரு சமூகத்தில் வெளிப்புறமாக மட்டுமே நிகழ்வதாகத் திரைக்கதையில் காட்டியிருக்கிறார் இயக்குனர். மனிதர்களின் எண்ணவோட்டத்தில் பெரிய மாற்றமில்லை என்று உணர்த்தியிருக்கிறார். கட்சி அரசியலையும் கொஞ்சம் வம்புக்கு இழுத்திருக்கிறார்.
ஒரு காட்சியில் நாயக பாத்திரமான சுரேஷ் தனது காதல் பிரிவை நினைத்து ஏங்குகையில், அவரது பின்னணியில் இன்றைய கேரள முதலமைச்சர் பினுராயி விஜயனின் உருவம் கொண்ட விளம்பரப் பலகை காட்டப்படும். இன்னொரு காலகட்டத்தை உணர்த்த, கை சின்னம் வரைந்த வெள்ளைச்சுவரொன்று காட்டப்படும். இது போலப் பல விஷயங்கள் இதிலுண்டு. அது நிச்சயம் படத்தின் கதை குறித்த விவாதங்களைப் பெருக்கெடுக்க வைக்கும்.
இந்த படம் பார்க்கும்போது, நாம் இருக்கையில் நெளிய வேண்டியிருக்கும். காரணம், காதல் திகட்டத் திகட்டத் திரையில் சொல்லப்படுவதுதான். அது மட்டுமல்லாமல் நாடக ஒத்திகை, பிரதி வாசிப்பு, பாத்திரத் தேர்வு போன்றவற்றை மையப்படுத்திய காட்சிகள் கொஞ்சம் போரடிக்கின்றன என்பது உண்மை.
ஆனால், அவற்றையெல்லாம் மீறி ஒரு அசாதாரணமான காட்சியனுபவத்தை இப்படம் நிச்சயம் தரும். அதனைக் காண விரும்புபவர்களும், காவியத்தனமான காதல் படைப்புகளை ரசிப்பவர்களும் தாராளமாக இந்த ‘SSHP’ படத்தைக் காணலாம்!
உதய் பாடகலிங்கம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
விமர்சனம் ; ’குருவாயூர் அம்பலநடையில்’!
ஹெலிகாப்டர் விபத்து – இரான் அதிபர் பலி : பிரதமர் மோடி இரங்கல்!
அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ஃபர்ஸ்ட் லுக் எப்படி?
Share market: இன்று விடுமுறை… இந்த வாரத்துக்கான பங்குகள் என்னென்ன?