ராஜன் குறை
ஒன்றிய அரசில் பத்தாண்டுகளுக்கு முன் பாஜக ஆட்சி செய்யத் தொடங்கியதிலிருந்து மாநிலங்களில் எதிர்க்கட்சிகளின் ஆட்சிகளும், எதிர்க்கட்சி தலைவர்களும் சந்தித்த நெருக்கடிகள் கணக்கற்றவை. ஆளுநர்கள் மூலமும், ஒன்றிய அரசின் புலனாய்வுத் துறை, அமலாக்கத்துறை என்று பல்வேறு அமைப்புகள் மூலமும் தரப்பட்ட பல்வேறு வகையான இடையூறுகளின் பட்டியல் மிக நீண்டது. உச்ச நீதிமன்றத்திற்குச் சென்ற வழக்குகளும் ஏராளமானவை. தேசத்தின் கூட்டாட்சி தத்துவமும், பல கட்சி மக்களாட்சியும் வரலாறு காணாத நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளன என்றால் மிகையாகாது.
அவை அனைத்திலும் டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின்மீது செலுத்தப்பட்ட அழுத்தங்கள், கொடுக்கப்பட்ட நெருக்கடிகள் தனித்துவமிக்கவை. டில்லி பிற மாநிலங்கள் போலன்றி தேசத்தின் தலைநகரமாகவும், ஒன்றிய பிரதேசமாகவும் இருப்பதால், காவல்துறையே மாநில அரசின் வசம் இல்லை என்பதால் அது ஒன்றிய அரசின் நேரடி அழுத்தத்திற்கு ஆட்பட்டது.
கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் டில்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வென்றாலும், அடுத்த ஆண்டு 2020இல் நடந்த சட்டமன்ற தேர்தலில் 70 சட்டமன்றத் தொகுதிகளில் 62 தொகுதிகளில் பெருவாரியாக வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது ஆம் ஆத்மி. ஒன்றிய அரசு இயங்கும் தலைநகரின் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் இருப்பது பாஜக-விற்கு கடும் எரிச்சலைத் தந்தது.
தொடர்ந்து டில்லியின் உள்ளாட்சி அமைப்புகளையும் பாஜகவிடமிருந்து ஆம் ஆத்மி வெற்றிகரமாக கைப்பற்றியது. அது மட்டுமன்றி ஆம் ஆத்மி பஞ்சாபில் ஆட்சி அமைத்ததும், குஜராத்திலேயே தனக்கான தளத்தை உருவாக்கியதும் கண்ணில் விழுந்த தூசி போல பாஜக-வை தொந்தரவு செய்திருக்கும் என யூகிக்கலாம்.
இந்தப் பின்னணியில்தான் ஆம் ஆத்மி கட்சிக்கு அடுக்கடுக்காக தரப்படும் நெருக்கடிகளையும், மதுபான கொள்கையில் ஊழல் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் முதலில் துணை முதல்வர் மனிஷ் சிசோடியாவையும், கடைசியில் சென்ற மாதம் முதல்வர் கேஜ்ரிவாலையும்கூட கைது செய்ததைக் காண வேண்டும்.
நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் கேஜ்ரிவால்
நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து இந்தியா அணியின் அங்கமானது அடுத்த பெரும் திருப்பம் எனலாம். டில்லியில் நான் கு தொகுதிகளில் ஆம் ஆத்மியும், மூன்றில் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. இது பாஜக-விற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது.
அமலாக்கத்துறை அர்விந்த் கேஜ்ரிவால் டில்லி நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலில் பிரசாரம் செய்ய விடாமல் முடக்க நினைத்தது. அதனால் மதுபான கொள்கை ஊழல் நடந்ததாகக் கூறப்படும் காலத்திற்கு மூன்றாண்டுகளுக்குப் பின் அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்துள்ளது. கேஜ்ரிவால் பிணை கோராமல் தன்னை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டப்படி செல்லாது என வாதிட்டார். தேர்தலில் பிரசாரம் செய்யாமல் தடுக்கவே தான் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
அமலாக்கத்துறை தேர்தலில் பிரசாரம் செய்வது அடிப்படை உரிமை இல்லை என்று கூறியது. ஆனால், கேஜ்ரிவாலை காவலில் வைக்க வேண்டிய அவசியம் என்ன என்பதை அதனால் விளக்க முடியவில்லை. உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜூன் 1 வரை தேர்தலில் பிரசாரம் செய்ய பிணையில் விடுதலை அளித்துவிட்டது. டில்லியில் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் மே 25 நடக்கிறது. ஆம் ஆத்மி ஆளும் பஞ்சாபில் ஜூன் 1ஆம் தேதி நடக்கிறது.
இந்த நிலையில் பலருக்கும் பலவித ஐயங்கள் தோன்றலாம். தவறு செய்தவர்களை கைது செய்யக்கூடாதா? பிணை வழங்குதல் என்றால் என்ன? குற்றம் சாட்டப்பட்டாலே அவர் குற்றவாளிதானா? அரசியல்வாதிகள் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டால் அவர்களுக்கு பிணையில் வர உரிமை கிடையாதா? ஆட்சியில் இருப்பவர்கள் யார் மீதும் குற்ற வழக்குகளே இல்லையா?
குற்றம் செய்தவர்கள் என்று கருதப்படுபவர்களை விசாரணைக்காக கைது செய்யலாம். அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்ட பிறகு அதில் குற்றவாளி என்று தீர்ப்பு வரும் வரை அவர்களுக்கு பிணை வழங்கப்படுவது அவர்களது அடிப்படை உரிமை. ஆனால், குற்றங்களின் தன்மை, அவர்களுக்கு எதிராக உள்ள சாட்சியங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில சமயங்களில் பிணை வழங்கப்படாமல் போகலாம். கொலைக்குற்றம் போன்றவற்றில் பிணை வழங்கப்படாமல் இருக்க வலுவான காரணங்கள் இருக்கும். அப்படியான சந்தர்ப்பங்களில் வழக்கு விரைந்து விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட வேண்டும்.
வழக்கு விசாரணையை நீடித்துக் கொண்டே குற்றம் சாட்டப்பட்டவரை தொடர்ந்து காவலில் வைத்திருப்பது தீர்ப்புக்கு முன்னரே அவரை தண்டிப்பதாகும். ஒருவேளை அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்றால், அவர் குற்றமற்றவர் என்றால், அவர் காவலில் வைக்கப்பட்ட நாட்கள் அவருக்கு அநீதியாக வழங்கப்பட்ட தண்டனை ஆகிவிடும்.
தேசிய பாதுகாப்புக்காக என்று இயற்றப்படும் கறுப்புச் சட்டங்களின் கீழ் தீவிரவாதிகளாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்படிப் பல ஆண்டுகள் சிறையில் இருப்பதும், பின்னர் குற்றம் எதுவும் நிரூபிக்கப்படாமல் விடுவிக்கப்படுவதையும் பார்க்கிறோம். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சந்திக்கும் அரசியல்வாதிகள் பொதுவாக கைது செய்யப்பட மாட்டார்கள். அப்படியே செய்யப்பட்டாலும் பிணையில் வெளிவந்து அரசியல் நட த்திக் கொண்டுதான் இருப்பார்கள். தேர்தலில் போட்டியிடுவார்கள். பதவி வகிப்பார்கள்.
முன்னுதாரணமான ஜெயலலிதா வழக்கு
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர் முதல்வராக இருந்த 1991-1996 வருடங்களில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும், சசிகலா உள்ளிட்டோருடன் சதி செய்து, தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாகவும் வழக்கு தொடரப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
அந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்னமே அவர் மீண்டும் முதல்வரானார். அவர் குற்றவாளி என்று தீர்ப்பு வந்ததும் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். ஆனால், மேல்முறையீட்டில் அந்தத் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டதால் மீண்டும் முதல்வரானார். தொடர்ந்து அரசியலில் இயங்கினார். உயர் நீதிமன்றத்தில் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு வந்தது. வழக்கு உச்ச நீதிமன்றம் சென்றது.
அவர் 2016ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று பதவி ஏற்றபோது உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான தீர்ப்பு எழுதப்பட்டுவிட்டது என்று பின்னாளில் ஒரு நீதிபதி கூறினார். அந்தத் தீர்ப்பு வழங்கப்படாததால் அவர் தடையின்றி முதல்வரானார். அடுத்த ஆண்டே பதவியில் இருக்கும்போதே மரணம் அடைந்தார். அதன் பிறகு அவர் இறந்துவிட்டதால் அவர் மீதான குற்றச்சாட்டு காலாவதியானாலும், அவருடன் சேர்ந்து சதி செய்த சசிகலா உள்ளிட்டவர்கள் தண்டிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தார்கள்.
அது போலத்தான் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒன்றிய, மாநில மந்திரிகள் பலர் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுகளும், வழக்குகளும் உள்ளன. அவர்கள் அனைவரும் பொதுவாழ்க்கையில் தடையின்றி ஈடுபடுகிறார்கள், பதவிகளை வகிக்கிறார்கள். அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. இறுதியாக உச்ச நீதிமன்றத்தில் குற்றம் உறுதி செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டால்தான், அதற்கு மேல்முறையீடு செய்ய வழியில்லை என்றால்தான் அவர்கள் பதவி விலக நேரும்.
அமலாக்கத்துறை, PMLA சட்டம், வாஷிங் மெஷின் அரசியல்
ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அரசியல்வாதிகள் கைதாவதும், பிணை வழங்கப்படாமல் பல மாதங்கள், ஆண்டுகள் கூட சிறையில் இருக்கும் நிலை ஏற்படுவதும் உருவாகியுள்ளது. அதற்குக் காரணம் 2002ஆம் ஆண்டு இயற்றப்பட்ட Prevention of Monely Laundering Act என்ற சட்டம். அதாவது சட்ட விரோதமாக ஈட்டப்படும் வருவாய், பலவிதமான பரிமாற்றங்கள் மூலம், சட்டரீதியான சொத்தாக, முதலீடாக மாற்றப்படுவதைத் தடுக்கும் சட்டம்.
இந்தச் சட்டம் இயற்றப்பட முதன்மைக் காரணம் போதைப்பொருள் கடத்தலை தடை செய்வதுதான். சர்வதேச கிரிமினல் வலைப்பின்னல்கள் போதைப்பொருட்களை கட த்துவதையும், அதில் ஈட்டப்படும் பணத்தை பல்வேறு போலி கம்பெனிகள் மூலம் முதலீடாக மாற்றுவதையும் தடுப்பதுதான். இவை சமூகத்திற்கு பெரும் தீங்கு விழைவிக்கும் குற்றங்கள் என்பதால் இந்தச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவருக்கு வழக்கமான குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் உரிமைகள் கொடுக்கப்படவில்லை. அதனால் பிணை கிடைப்பது கடினம். குற்றவாளிதான், தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும் என்பது போல கடினமான, மனித உரிமைகளுக்கு எதிரான அம்சங்கள் கொண்ட கறுப்புச் சட்டம்.
இந்தச் சட்டத்தைப் பயன்படுத்தி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கும் சில தலைவர்களை கைது செய்து நீண்ட நாள் சிறையில் வைக்கத் தொடங்கியுள்ளது அமலாக்கத்துறை. குறிப்பாக ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக இயங்குபவர்கள் மேல் பி.எம்.எல்.ஏ சட்டம் ஏவப்படுவதும், அமலாக்கத்துறை அவர்களைச் சிறையில் அடைப்பதும் கடந்த சில ஆண்டுகளில் பரவலாக நடக்கிறது. தமிழ்நாட்டில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு ஓராண்டு ஆகப்போகிறது. டில்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா ஓராண்டுக்கும் அதிகமாக சிறையில் இருக்கிறார்.
அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்தில் வரும் சிலர் கட்சி மாறி பாஜக-வில் சேர்ந்துவிட்டால் அவர்கள் கைது செய்யப்படுவதில்லை. அவர்கள் மீதான வழக்கும் உறங்கப்போய்விடும் அல்லது முடித்து வைக்கப்படும். ஹேமந்த பிஸ்வாஸ், சுவேந்து அதிகாரி, அஜித் பவார் எனப் பல அரசியல்வாதிகள் இப்படி விடுவிக்கப்படுவதற்கு முக்கிய உதாரணங்களாக விளங்குகிறார்கள். பாரதீய ஜனதா கட்சியின் இவ்வாறான பாரபட்சமான அணுகுமுறையை வாஷிங் மெஷின் கலாச்சாரம் என்று எதிர்க்கட்சிகள் வர்ணிக்கின்றன. அதாவது ஊழல் கறை படிந்தவர்கள் என்று பாஜக குற்றம் சாட்டுபவர்கள் அந்தக் கட்சியில் சேர்ந்தால் கறை நீங்கி பதவிகளை வகிக்கலாம் என்பதுதான் வாஷிங் மெஷின்.
டில்லி மதுபான விற்பனைக் கொள்கை வழக்கு
டில்லியில் மாநில அரசே நேரடியாக மது விற்பனை செய்து வந்தது. நல்ல கடைகளில் விற்பனை செய்து வந்தது. இந்த முறையை மாற்றி தனியாருக்கு நேரடியாக விற்க உரிமை தரும் கொள்கையை ஆம் ஆத்மி அரசு செப்டம்பர் 2021இல் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.
இதன் மூலம் அரசுக்கு வருவாய் கூடும் என்றும், விற்பனையாளர்களுக்குள்ளான போட்டியில் அவர்கள் விலைகளைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டது. அவ்வாறே நடக்கவும் செய்தது. அரசுக்கு அதிக வருவாய் கிடைத்தது. மதுபான விற்பனையாளர்களுக்கும் அதிக வருமானம் கிடைத்தது. குடிமக்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். இந்தக் கொள்கைக்கு லெஃப்டினண்ட் கவர்னரும் ஒப்புதல் அளித்தார் என்பது முக்கியமானது.
இதைத் தொடர்ந்து இந்த கொள்கை மூலமாக ஆம் ஆத்மி கட்சி மதுபான முதலாளிகளிடம் பணம் பெறுகிறது என்று குற்றம் சாட்டப்பட்டது. பல்வேறு சர்ச்சைகள் பொதுவெளியில் உருவாயின. குடிப்பழக்கம் அதிகரிப்பதாகக் கூறப்பட்டது. அவற்றைத் தொடர்ந்து பத்து மாத காலத்தில் இந்தக் கொள்கை திரும்பப் பெறப்பட்டது. பழையபடி அரசு விற்பனையே அமலுக்கு வந்தது.
புதிய கொள்கையை அமல்படுத்தியதில் ஆம் ஆத்மி கட்சி ஆதாயமடைந்ததாக எழுந்த புகாரில் விசாரணை தொடங்கியது. சில மதுபான தயாரிப்பாளர்கள் அப்ரூவராக மாறினர். அதில் ஒருவரின் தந்தை முகுந்த சீனிவாச ரெட்டி என்பவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸிலிருந்து விலகி தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்து இப்போது பாஜக கூட்டணியில் ஓங்கோல் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக உள்ளார். மற்றொருவர் கைதான பிறகு பாஜக கட்சிக்கு தேர்தல் பத்திரம் மூலம் நிதியளித்துள்ளார். அவர் அப்ரூவராக மாறி விடுதலையானார்.
பாஜக கட்சிக்குத் தேர்தல் பத்திரம் மூலம் நிதியளிப்பது சட்டபூர்வமானது, ஆனால், அதே நபர் ஆம் ஆத்மிக்கு நிதியளித்திருந்தால் அது ஊழல் என்றும் கூறுவது சற்றே விநோதமானது. சரி, இதில் கறுப்புப் பணம் கைமாறியுள்ளது என்றால் அதனை உடனடியாக சாட்சியங்கள் மூலம் நிரூபிக்க வேண்டும். ஆனால், மனிஷ் சிசோடியாவை கைது செய்து ஓராண்டுக்கு மேலாகியும் அவர் மீதான வழக்கில் சாட்சியங்களை தாக்கல் செய்து தண்டனை பெற்றுத் தர முடியவில்லை. அவரை பிணையில் விடுவிக்கவும் மறுக்கிறது அமலாக்கத்துறை.
இதே மதுபான வழக்கில் கைதான நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இப்படி என்றோ நடந்த ஒரு பணப் பரிவர்த்தனையை நிரூபிக்க முடியாமல் இருக்கும் அமலாக்கத்துறை ஒரு மாநில முதல்வரும், கட்சி தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவாலை கைது செய்து பிணையின்றி தேர்தல் நேரத்தில் சிறையில் அடைக்க முயல்வது ஒடுக்குமுறை என்றுதான் புரிந்து கொள்ளப்படும். அதனால்தான் சர்வதேச அரங்கிலும் கண்டனக் குரல்கள் எழுந்தன. அயல்நாட்டு பத்திரிகைகளும், அரசுகளும் கூட கேஜ்ரிவால் கைதை கண்டித்தன.
சுவாதி மாலிவால் குற்றச்சாட்டு
விடுதலையான பிறகு கடந்த சில நாட்களாக அர்விந்த் கேஜ்ரிவால் சந்திக்கும் அடுத்த சிக்கல் சுவாதி மாலிவால் குற்றச்சாட்டு. சுவாதி மாலிவால் இருபதாண்டுகளாக அர்விந்த் கேஜ்ரிவால், மனிஷ் சிசோடியா ஆகியோருடன் பணியாற்றி வந்ததாகக் கூறப்படுகிறது. அன்னா ஹசாரேவின் 2012 – ஊழல் எதிர்ப்பு கிளர்ச்சியில் தீவிர பங்கு கொண்டவர். ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்ததும் அவரை டில்லி மகளிர் ஆணையத்தின் தலைவியாக நியமித்தது. இந்த ஜனவரி மாதம் அந்தப் பணியிலிருந்து விலகி ஆம் ஆத்மி கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தான் கடந்த மே 13ஆம் தேதி காலை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இல்லத்திற்கு சென்றதாகவும், அங்கே அர்விந்த் கேஜ்ரிவாலின் உதவியாளர் விபவ் குமார் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒரு காணொலி வெளியிட்டு இவர் பாஜக கட்சியால் தூண்டப்பட்டு பொய் புகார் அளிப்பதாக கூறியுள்ளது. அமைச்சர் இந்த குற்றச்சாட்டை கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து முதல்வரின் உதவியாளர் விபவ் குமார் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ஐந்து நாள்கள் நீதிமன்றத்தால் விசாரணைக்காக சிறை வைக்கப்பட்டுள்ளார்.
இந்த கைதினை சுட்டிக்காட்டிய முதல்வர் கேஜ்ரிவால் மே 19 அன்று தன் கட்சி தலைவர்கள் அனைவருடனும் பாஜக அலுவலகத்திற்கு வருவதாகவும் அங்கு யாரை வேண்டுமானால் கைது செய்துகொள்ளலாம் என்று கூறினார். ஆனால் 144 தடை உத்தரவு போடப்பட்டதால் அவர்களால் பாஜக அலுவலகத்திற்கு செல்ல முடியவில்லை. சாலையிலேயே போராட்டம் நட த்திவிட்டு கலைந்து சென்றுவிட்டனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஆம் ஆத்மி கட்சியையும் குற்றவாளியாக சேர்க்கப்போவதாக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் வழக்கு மே 20 டெல்லி நீதிமன்றத்தில் விசாரிக்கப்படப் போகிறது. அடுத்த வாரம் மே 25 டெல்லி தொகுதிகளில் தேர்தல் நடப்பதற்கு முன் எத்தனை கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரியாது.
அர்விந்த் கேஜ்ரிவால் எதற்கும் துணிந்துதான் தேர்தல் களத்தில் இயங்குகிறார். “சிறைக்கான பதில் வாக்குகளே” என்று ஆம் ஆத்மி பிரசாரம் செய்கிறது. என்னை சிறைக்குச் செல்லாமல் உங்கள் வாக்குகள்தான் காப்பாற்றும் என்று கூறி பிரசாரம் செய்கிறார் கேஜ்ரிவால். மக்கள் மன்றத்தின் தீர்ப்பு எப்படியிருக்கும் என்பது ஜூன் 4 அன்று தெரிந்துவிடும். நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மேலும் காத்திருக்க வேண்டியிருக்கும்.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சிறப்புக் கட்டுரை: கமல், ரஜினி கட்டமைக்கும் அரசியல் எது?
முஸ்லீம்களை எதிரியாக்காமல் இந்து அடையாளத்தை உருவாக்க முடியுமா?
அரசாட்சியும், தேர்தலும்: விரைந்து சிதையும் மக்களாட்சி விழுமியங்கள்
நாடாளுமன்றத்திற்குத் தேர்தல்! அது நடப்பதோ மாநில அரசியல் களங்களில்தான்!