Guruvayoor Ambalanadayil Movie Review

விமர்சனம் ; ’குருவாயூர் அம்பலநடையில்’!

சினிமா

இந்த ஆண்டு தொடங்கி தொடர்ந்து பல பிளாக்பஸ்டர்களையும், மாஸ்டர் பீஸ்களையும் நமக்கு அளித்து வரும் மலையாள சினிமாவில் கடந்த வாரம் வெளியாகியுள்ள ஒரு மென்மையான பொழுதுபோக்குப் படம் ‘குருவாயூர் அம்பலநடையில்’.

சில நாட்களுக்கு முன்பு வெளியான ’கோட் லைஃப்’ திரைப்படத்தில் தனது அசாத்திய நடிப்பால் நம்மை கலங்க வைத்த பிரித்விராஜ் . இந்தப் படத்தில் அதற்கு அப்படியே மாறான ஒரு காமெடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஒன்லைன்:

சவுதியில் பணிபுரியும் பாசில் ஜோசப்பிற்கு வீட்டாரால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனால், தன் வருங்கால மனைவியிடம் பாசத்தை பொழிவதை விட வருங்கால மச்சானான பிரித்விராஜிடமே அதிகப்படியான அன்பைக் கொட்டித் தீர்க்கிறார் பாசில் ஜோசப்.

அதேபோல பிரித்விராஜும் இவரிடம் மிகுந்த அன்பை செலுத்தி வருகிறார். ஆனால், இடையில் தெரிய வரும் ஒரு உண்மையால் இந்த இருவரின் உறவுக்குள் விரிசல் விழுகிறது.

பாசில் ஜோசப்பின் திருமணமும் கேள்விக்குறியாகிறது. இப்படி இருவரின் பிரிவிற்கும் காரணமான அந்த உண்மை என்ன? கடைசியில் பாசில் ஜோசப்பின் திருமணம் நடந்து ’சுபம்’ போடப்பட்டது என்பதே ’குருவாயூர் அம்பலநடையில்’ திரைப்படத்தின் கதை.

அனுபவ பகிர்தல்

பல நாட்களுக்கு பிறகு பிரித்விராஜை ஒரு முழு நேர நகைச்சுவை கதாபாத்திரத்தில் கண்டது சுவாரஸ்யமாக இருந்தது. அவர் செய்யும் சில காமெடி சேட்டைகள், மச்சானைக் கண்டதும் அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன், கிளைமாக்ஸ் காட்சியில் வரும் ஒரு ஃபைட் சீன் என அனைத்திலும் தனது கமர்சியல் அவதாரத்தை மீண்டும் ஒரு முறை காட்டியுள்ளார் பிரித்விராஜ்.

தமிழ் சினிமாவின் புகழ்பெற்ற பாடலான ’அழகிய லைலா’ பாடல் இடம்பெற்ற இடம், அது ரீமிக்ஸ் செய்யப்பட்டிருந்த விதம் அத்தனையும் பிரமாதம். தியேட்டரில் அனைவரையும் சிரிக்க வைத்த ஒரு சிறந்த தியேட்டர் மொமெண்ட்.

பாசில் ஜோசப்பின் நடிப்பு. குறிப்பாக ஒரு முக்கிய உண்மை தெரியாமல் இருக்கும் வரை அவரது குழந்தைத் தனமான சில ரியாக்‌ஷன்கள், உண்மை தெரிந்ததும் முகத்தில் நீடிக்கும் பதற்றம் என கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்து முடித்துள்ளார் பாசில்.

படத்தின் முக்கிய ட்விஸ்ட்-ஐ மிக சீக்கிரமே நமக்கு தெரிவித்துள்ளார் இயக்குநர் விபின் தாஸ். ஆனால், அது படத்தின் சுவாரஸ்யத்தை எந்த விதத்திலும் குறைக்கவில்லை( முதல் பாதி வரை). ஏனெனில் அந்த ட்விஸ்ட் என்ன என்பது பார்வையாளர்களுக்கு மட்டுமே தெரியப்படுத்தப்படும் தவிர கதாபாத்திரங்களுக்கு அல்ல.

அன்கித் மேனனின் பின்னணி இசை பல இடங்களில் காட்சிகளைத் தூக்கி நிற்க வைக்கிறது. அதைத் தாண்டி படத்தில் இடம்பெற்ற ‘திரிஷ்யம்’, ‘நந்தனம்’ போன்ற பழைய மலையாள படங்களின் ரெஃபெரன்ஸ் சிறப்பு.

இரண்டாம் பாதியில் எழுதப்பட்ட,  பல காட்சிகள் நமக்கு தமிழ் சினிமாவால் மிகவும் பழக்கப்பட்ட காட்சிகள் என்பதால் அதில் எந்த ஒரு சுவாரஸ்யத்திற்கான கூறுகள் இல்லை.

’ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ போன்ற ஒரு படத்தைக் கொடுத்த விபின் தாஸ், படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான இரண்டு பெண் கதாபாத்திரங்களை சரியாக எழுதாமல் விட்டது சற்று அதிர்ச்சியையே ஏற்படுத்தியது.

விரிவான விமர்சனம்

இந்தக் கதையே ஒரு முழு நேர காமெடி திரைப்படத்திற்கு போதுமான கதை தான். அதை படத்தின் முதல் பாதி வரை சரி வர கையாண்டுள்ளார் இயக்குநர் விபின் தாஸ்.

பாசில் ஜோசப் – பிரித்விராஜின் ஒரு போன் உரையாடல் காட்சி தொடங்கி, அவர்கள் இருவரும் அன்பிற்கே சலிப்படையும் அளவிற்கு மிகுதியாக பரஸ்பரம் அன்பை பகிர்ந்து தீர்க்கும் சில காமெடி காட்சிகள், தற்கால திருமண கலாசாரத்தில் உள்ள சில மாடர்ன் நிகழ்வுகளை அனஸ்வரா ராஜன் கதாபாத்திரத்தைக் கொண்டு பகடி செய்யும் சில காட்சிகள், பிரித்விராஜ் கதாபாத்திரம் நிகிலா விமல் கதாபாத்திரத்தை சமாதானப் படுத்தும் ஒரு காட்சி என முதல் பாதி வரை தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்திய காட்சிகள் ஏராளம்.

முன்னே சொன்னது போலவே படத்தின் முக்கிய ட்விஸ்ட்-ஐ மிக முன்னரே பார்க்கும் நமக்கு தெரிவித்துவித்து விட்டு கதாபாத்திரங்களுக்கு மட்டும் அது சஸ்பென்ஸாக இருந்தது பல ஹியூமர் காட்சிகளுக்கு வழி வகுத்தது.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான பாசில் ஜோசப், பிரித்விராஜ் ஆகியோரின் நடிப்பு பல காட்சிகளில் அட்டகாசம். குறிப்பாக இருவரும் முதன் முதலில் சந்திக்கும் காட்சி, அதில் இடம்பெற்றிருந்த பாடல் என அனைத்தும் சிறப்பு.

‘ஆனந்தேட்டா, ஆனந்தேட்டா…’ என பாசில் ஜோசப் தனது மச்சானான பிரித்விராஜை ‘தெய்வ மச்சானாகவே’ பாவிக்கும் சில காட்சிகள் அந்த ட்விஸ்ட்டிற்கு பிறகு கூடுதல் நகைச்சுவையை ஏற்படுத்துகிறது. ரொம்ப நாட்களுக்கு பிறகு பிரித்விராஜை இது போன்ற ஒரு நகைச்சுவையான கதாபாத்திரத்தில் கண்டதும் புதிதாக இருந்தது.

ஆனால், அதைத் தாண்டி கணவன் – மனைவிக்கும் இடையேயான உறவுமுறை சிக்கல், தங்களின் முன்னாள் காதலிகளைக் குறித்த ஆண்களின் பார்வை, குடும்பத்தில் சொந்தக்காரர்கள் எனும் போர்வையில் இருக்கும் சில வன்மவாதிகள், போன்ற பல விஷயங்களை பேசுவதற்கான பல இடங்கள் இருந்தும் அதை இயக்குநர் முழுதாக பேசாமல் இருந்தது ஏன் எனத் தெரியவில்லை.

அதிலும் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான இரு பெண்களின் கதாபாத்திரங்கள் சரியாக எழுதப்படாமல் இருந்ததால் நம்மால் அவர்களுடன் பொருத்திப் பார்க்கவோ, கவனிக்கவோ முடியவில்லை. அதில் கொஞ்சம் சரியாக கவனித்திருந்தால் படத்தின் இரண்டாம் பாதியில் நிகிலா விமல் பேசும் ஒரு வசனம் இன்னும் சிறப்பாக பார்வையாளர்களுக்கு கடத்தப்பட்டிருக்கும்.

யோகி பாபுவின் கௌரவ தோற்றத்தை பொறுத்தவரை, அவரது அறிமுக காட்சியில் ஏற்பட்ட நகைச்சுவை, இரண்டாம் பாதியில் அவர் வரும் காட்சிகளில் ஏற்படுத்தவில்லை. அவராகவே டப்பிங்கில் போட்ட சில ஒன்லைனர்கள் லேசாக புன்னகைக்க வைத்தது.

மற்றபடி கிளைமாக்ஸில் சுந்தர்.சி படத்தில் வருவது போல் ஒரு திருமணம், அதைச் சுற்றி அதைத் தடுக்கவும், நடத்தவும் நினைக்கும் பல கதாபாத்திரங்கள், அவைகளுக்குள் நடக்கும் நகைச்சுவை என எடுக்கப்பட்டது கொஞ்சம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. ஆனால், இதே போன்ற கதைகளை கொண்ட ‘தெனாலி’ போன்ற பல தரமான படங்களை நாம் தமிழிலே கண்டுவிட்டதால் நமக்கு புதிதாக எதுவும் தோன்ற வாய்ப்பில்லை.

ஆனால், நிச்சயம் இந்தத் திரைப்படம் நம்மை சலிப்படையவும் செய்யவில்லை. மொத்ததில் இந்த ‘குருவாயூர் அம்பலநடையில்’ மலையாள சினிமாவில் ஒரு ’குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி’த் திரைப்படம்.

– ஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Share market: இன்று விடுமுறை… இந்த வாரத்துக்கான பங்குகள் என்னென்ன?

வேலைவாய்ப்பு: மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் பணி!

சென்னையில் பேருந்துகள் வருகையைக் குறிக்கும் டிஜிட்டல் பலகைகள்

பியூட்டி டிப்ஸ்: அழகை மேம்படுத்தும் ஆளா நீங்கள்..? இதையெல்லாம் செய்யாதீங்க!

+1
0
+1
0
+1
0
+1
3
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *